ஆசிரியர் போராட்டம் நியாயமானது ஆனால் பொருத்தமற்றது

  • 24

பஸீம் இப்னு ரஸுல்

அண்மைக்காலமாக இலங்கையில் போராட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பஞ்சமில்லை..

இதில் கடந்த சில வாரங்களாக நம் அறிவுப் பொக்கிஷங்களான அதிபர் ஆசிரியர்களின் போராட்டங்களும் அடங்கும்.

உண்மையிலே ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அதில் மாற்றுக்கருத்து கிடையாது.

என்றாலும் ஒரு நடுநிலையாக சிந்திப்பவன் என்ற அடிப்படையில் சில விடயங்களை அன்பின் ஆசிரியர்களோடும் சில முகநூல் போராளிகளோடும் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

இந்த பிரச்சினை தொடர்பாக நான் சற்று அதிகமாகவே அலசினேன். அமைதி காத்து தக்க சான்றுகளுடன் ஆதாரங்களை கைவசம் வைத்து பேச வேண்டும் என்பதற்காக.

23 வருடகால ஒரு வாக்குறுதி. ஏதோ ஒரு முரண்பாட்டின் காரணமாக ஆசிரியர் சம்பளப் பிரச்சினையாக இன்று வரை இருந்து வருகிறது. இந்நிலையில் அண்மைக்காலமாக இலங்கையில் நடந்து வரும் ஆசிரியர் போராட்டம் நியாயமானதா?

இந்த கேள்வி பலர் மனதில் எழுந்த ஒன்றாக இருக்கலாம். ஆசிரியர்களின் போராட்டம் 100% நியாயயமானது. இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. அவர்களின் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே தான் நானும் இருக்கிறேன்.

என்றாலும் அரச சேவையாளர்களின் ஆகக்குறைந்த நேர வேலை நிர்ணயிக்கப்பட்டவர்கள் யார் என்ற கேள்வியை நாம் ஆராய வேண்டும். ஆசிரியர் சேவை தவிர ஏனைய பெரும்பாலான அரச நிறுவன சேவையாளர்களது சேவை நேரம் காலை 8.00மணி முதல் மாலை 4.00மணிவரை. ஆனால் ஆசிரியர்களது சேவை காலை 7.00மணி முதல் மாலை 1.30மணிவரை.

அதே போன்று விடு முறை. மூன்று தவணை முடிவிலும் மூன்று விடுமுறைகள். சித்திரைப் புத்தாண்டு விடுமுறை. ரமழான் விடுமுறை. அது தவிர சொந்த விடுமுறை 40 நாட்கள். குறுகிய விடுமுறை. இவ்வாறு ஒரு வருடத்திற்கு ஒரு ஆசிரியர் சேவை புரியும் நாட்கள் கிட்டத்தட்ட 200 நாட்களை விட குறைவு.

இந்த சலுகை வேறு எந்த அரச சேவையாளர்களுக்கும் நான் அறிந்த வகையில் கிடைப்பதில்லை. அதே போன்று தனியார் வகுப்புகள் நடாத்தக் கூடிய வாய்ப்பு. இதுவும் ஆசிரியர்கள் தவிர வேறு அரச சேவையாளர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு.

ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பள அளவுத்திட்டத்தை எல்லாம் இங்கே பேச விரும்பவில்லை. காரணம் அடிப்படை சம்பளம் அண்ணளவாக 35,000.00 ரூபாய் என்று வைத்து பார்த்தால் கூட ஒரு நாளைக்கு 1400.00க்குட்பட்ட சம்பளம் ஒன்று கிடைக்கிறது. சாதாரண கூலி தொழிலாளிக்கு கூட இதை விட சம்பளம் கிடைக்கிறது என்பது ஆசிரியர்கள் வாதம். அது சரியா தவறா என்பது பற்றி பேசுவது எனது நோக்கமல்ல.

இது ஒரு புறமிருக்க ஈஸ்டர் தாக்குதல் முதல் இன்று வரை கிட்டத்தட்ட 08 மாதங்களுக்கு அதிகமாக ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சேவை பெறாமலே சம்பளம் வழங்கி இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

இணையவழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது இந்த இரண்டு மாதங்களுக்குள் தான். ஆனால் ஆசிரியர் சங்கத்தினால் கொரோனா தடுப்புப் பணிக்காக இரண்டு மாத சம்பளங்களிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகை தவிர வேறு எந்த வகையிலும் ஆசியர்களது மற்றும் அரச சேவையாளர்களது சம்பளத்தில் இலங்கை அரசு எந்த ஒரு குறையும் வைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

எனவே இத்தனை விடயங்களுக்கு பின்னரும் நான் உறுதியாக கூறுகிறேன் ஆசிரியர்கள் போராட்டம் நியாயமானது. ஆனால் இந்த சூழ்நிலைக்கு பொருத்தமற்றது. இது தான் எனது வாதம்.

ஒரு வருடத்திற்கு அதிகமாக மாணவர்கள் கல்வியின்றி வீடுகளில் முடங்கி இருந்து ஏதோ இணைய வகுப்புகள் ஆர்ம்பிக்கப்பட்டு மாணவர்கள் அறிவை சற்று புதுப்பித்து வரும் சந்தர்ப்பத்தில் இப்படியான ஒரு பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படுவதே எம் பாடசாலை மாணவர்களே. பாடசாலை பாடங்களை கற்பிக்காது தனியார் வகுப்புகள் மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களது மனநிலை எனக்கு புரியவில்லை.

அத்தோடு பொருளியல் பாட ஆசிரியர்களுக்கு நன்றாக புரியும் ஒரு விடயம் தான் இலங்கை பொருளாதாரம் விழுந்து விழுந்து விழுவதற்கு இனி இடமில்லாமல் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், கொரோனாவால் கோரத்தனமாக உயிர்கள் பலியாகிக்கொண்டு இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், பரீட்சைகள் எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் அரசியல் தலைமைகள் செய்வதாறியாது திக்கு முக்காடிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், திறைசேரி கடனுக்கு மேல் கடனில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், ஆசிரியர்களின் போராட்டம் பொருத்தமற்றது.

ஒவ்வொரு ஆசிரியர்களையும் அன்போடு அழைக்கிறேன். நாட்டில் அறிவு வளர்ச்சிக்கு பாரிய சேவை புரிபவர்கள் நீங்கள். நாளைய சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியவர்கள் நீங்கள். தியாகமும் சேவைமனப்பாங்கும் கொண்ட மனிதாபிமான உத்தம புருஷர்கள் நீங்கள்.

உங்கள் வியர்வை எதிர்கால சந்ததியினருக்கான நீர்பாய்ச்சல். அதை அரசியல் தேவைக்காக பயண்படுத்த முயலுபவர்களின் வளர்ச்சிக்காக விரயமாக்காதீர்கள்.

முதலில் நாடு என்ற வகையில் நிலைமை சீராகும் வரை எமது பொறுப்புகளை நிறைவேற்றுவோம்.

போராட்டம் செய்ய வேண்டாம் என்று கூறவில்லை.. இப்போதைக்கு வேண்டாம் என்கிறேன். இறுதியாக மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்.ஆசிரியர்கள் போராட்டம் நியாயமானது. ஆனால் தற்போதைய நிலைமைக்கு பொருத்தமற்றது.

பஸீம் இப்னு ரஸுல் அண்மைக்காலமாக இலங்கையில் போராட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பஞ்சமில்லை.. இதில் கடந்த சில வாரங்களாக நம் அறிவுப் பொக்கிஷங்களான அதிபர் ஆசிரியர்களின் போராட்டங்களும் அடங்கும். உண்மையிலே ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அதில் மாற்றுக்கருத்து…

பஸீம் இப்னு ரஸுல் அண்மைக்காலமாக இலங்கையில் போராட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் பஞ்சமில்லை.. இதில் கடந்த சில வாரங்களாக நம் அறிவுப் பொக்கிஷங்களான அதிபர் ஆசிரியர்களின் போராட்டங்களும் அடங்கும். உண்மையிலே ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். அதில் மாற்றுக்கருத்து…