கொவிட்-19க்குப் பரிகாரமாகாத அமைச்சரவை மாற்றங்கள்

எம்.எஸ்.எம். ஐயூப்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த 16 ஆம் திகதி அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தார்.

அந்த நிலையில், அமைச்சரவையில் மேலும் ஒரு மாற்றம் இடம்பெற இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார். “நாடு முன்னேற வேண்டுமானால், வருடாந்தம் இவ்வாறான மாற்றங்கள் இடம்பெற வேண்டும்” என்றும் அவர் கூறியிருக்கிறார். அது எவ்வாறு என்று, அவர் விளக்கவில்லை.

திங்கட்கிழமை (16) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துக்கான காரணத்தை,  ஜனாதிபதியையும் சிலவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவையும் தவிர, எவரும் அறிந்திருப்பார்கள் எனக் கூற முடியாது.

உலகளாவிய தொற்று நோயொன்றை, நாடு எதிர்நோக்கி இருக்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்ட அந்த மாற்றத்தை, நாட்டில் எவரும் பெரிதாகக் கணக்கில் எடுத்தாகவும் தெரியவில்லை. அதை மக்கள், மறுநாளே மறந்துவிட்டார்கள்.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, அதுவரை சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி, போக்குவரத்து அமைச்சராகவும், அதுவரை ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஊடகத்துறை அமைச்சர் பதவி, அதுவரை மின்சக்தி அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெருமவிடம் வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சராக இருந்த காமினி லொக்குகே, இப்போது மின்சக்தி அமைச்சராக இருக்கிறார். கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸூம் வெளிநாட்டமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தனவும் தத்தமது அமைச்சுகளை மாற்றிக் கொண்டுள்ளனர். அத்தோடு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, அந்தப் பொறுப்புகளுக்குப் புறம்பாக அபிவிருத்தி இணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொவிட்-19 பெருந்தொற்றுக் கொடுமைக்கு மத்தியில், சுகாதார அமைச்சராக கெஹெலியவை நியமிக்க, அவரிடம் என்ன விசேட திறமை இருக்கிறது என்பது, நாடே அறியாத இரகசியமாகும்.

ஆளும் கட்சிக்குள் மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும் சமூக சுகாதாரத்துறையில் பட்டம் பெற்ற சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் வைரொலொஜி என்றழைக்கப்படும் வைரஸ்களைப் பற்றிய அறிவியலைக் கற்ற பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் இருக்கிறார்கள்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண, 22 வருடங்களாக மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் வைரஸ்துறைப் பிரிவின் அதிபராகக் கடமையாற்றி அனுபவம் பெற்றவர். அதே போல், அவர் உலக சுகாதார நிறுவனத்தின் வைரஸ்துறை ஆலோசகராகப் பல ஆண்டுகளாகக் கடமையாற்றியவர். இவ்வாறானவர்களை விட, சுகாதார அமைச்சராக நியமிக்க கெஹெலிய பொருத்தமானவர் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்களால் பரவும் நோய்களைத் தடுப்பதில், சமூக சுகாதாரத்துறையும் வைரொலொஜியும் தான் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறிருக்க, இந்த விடயத்தில் சுதர்ஷனியையும் திஸ்ஸ விதாரணவையும் புறக்கணிக்க, ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது விளங்கவில்லை.

கொவிட்-19 நோய் மிக வேகமாகப் பரவி, நாடு பெரும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதால், சுகாதார அமைச்சராக இருந்த பவித்ராவை அப்பதவியிலிருந்து நீக்கியதாகக் கருத முடியுமா? கொவிட்-19 நோயைத் தடுப்பதற்கான நடவடிக்கைளைப் பற்றிய முடிவுகளை, பவித்ரா எடுக்கவில்லை என்பது சகலருக்கும் தெரியும். அது தொடர்பான சகல முடிவுகளும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் தலைமையிலான ஒரு செயலணியாலேயே எடுக்கப்படுகின்றன. அந்தச் செயலணி, நேரடியாகவே ஜனாதிபதியின் ஆலோசனைப் படியே இயங்குகிறது.

அவ்வாறாயின், பவித்ராவை ஏன் சுகாதார அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்? ஜனாதிபதியின் ஆலோசனைப் படி இயங்கும் செயலணியின் மூலமே, இனி மேலும் கொவிட்-19 நோய் தடுப்புப் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுமாயின், புதிய சுகாதார அமைச்சர் கெஹெலியவால் என்ன செய்ய முடியும் என்பதும் கேள்விக்குறியே?

இலங்கை மின்சாரத்துறை, எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் ஊழல்களின் இருப்பிடமாகவே செயற்படுகிறது. காரணம், அத்துறையைப் புரிந்து கொள்ள விஞ்ஞான அறிவு இருக்க வேண்டும். மின்னியல் பொறியியலாளரான சம்பிக்க ரணவக்க மட்டுமே, இலங்கை மின்சார சபைக்குள் இடம்பெறும் ஊழல்களை அடையாளம் கண்டு இருந்தார். ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அவரை அப்பதவியிலிருந்து நீக்கினார்.

இந்த நிலையில், டலஸை நீக்கிவிட்டு லொக்குகேயை மின்சாரத்துறை அமைச்சராக நியமிப்பதில் என்ன பயன் இருக்கிறது? அநாவசியமாக எதிர்த் தரப்புகளை ஆத்திரமூட்டும் வகையில் எப்போதும் கருத்துத் தெரிவிக்கும் கெஹெலியவைப் பார்க்கிலும், டலஸ் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டமை அரசாங்கத்தின் நன்மைக்கு உகந்ததாக அமையலாம். அதை விடுத்து, அந்த மாற்றத்தாலும் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை, புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் தீர்க்க முடியாது என்பது, மிகவும் தெளிவான விடயமாகும்.

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள அபிவிருத்தி இணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சின் பொறுப்பு என்ன? அவர், ஏனைய அமைச்சுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்யப் போகிறார் போலும். அவ்வாறாயின், அந்த அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களை நீக்கிவிட்டு, அவருக்கே அந்த அமைச்சுகளையும் கொடுத்திருக்கலாமே!

உண்மையிலேயே, , சகல அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் எந்தவொரு சிறிய காரியத்தைச் செய்தாலும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆலோசனைப் படியேதான், தாம் அதைச் செய்ததாக பகிரங்கமாக கூறத் தவறுவதில்லை.

அவ்வாறு சகல விடயங்களையும் ஜனாதிபதியின் ஆலோசனைப் படி செய்ய வேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதாயின், சுகாதார அமைச்சினதோ வேறு எந்தவோர் அமைச்சினதோ வெற்றிக்கோ தோல்விக்கோ, அந்த அமைச்சர்கள் பொறுப்பானவர்கள் எனக் கூற முடியாது.

இதற்கிடையே, இப்போது நாட்டுக்கு அவசியமாக இருப்பது, அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்றுவதல்ல; விஞ்ஞான அடிப்படையிலான அமைச்சரவையொன்றே என அத்துரலியே ரத்தன தேரர் கூறியிருக்கிறார். அது உண்மைதான். ஆனால், 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர், நாட்டில் எப்போதாவது விஞ்ஞானபூர்வமான அமைச்சரவை இருந்ததில்லை.

சம்பந்தப்பட்ட சகல துறைகளையும் ஒன்றிணைத்து, அவற்றின் பொறுப்பை அமைச்சர்களிடம் கையளிப்பதையே, விஞ்ஞான ரீதியிலான அமைச்சரவை எனக் கூறப்படுகிறது. 1977 ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஓரளவுக்கு விஞ்ஞான பூர்வமான அமைச்சரவைகள் இருந்தன.

அக்காலத்தில், நிதி, திட்டமிடல் துறைகள் ஒருவரிடமும் கல்வி, உயர் கல்வி துறைகள் ஒருவரிடமும் காணி, விவசாயம், நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் ஒருவரிடமும் பெருந்தெருக்கள், போக்குவரத்து துறைகள் ஒருவரிடமும் என்ற வகையில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜயவர்தன காணி அமைச்சை காணி, காணி அபிவிருத்தி என்றும் கல்வித் துறையை கல்வி, உயர் கல்வி மற்றும் கல்விச் சேவைகள் என்றும் கைத்தொழில் துறையை கைத்தொழில், கிராமியக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி என்றும் அமைச்சுகளைப் பல கூறுகளாக பிரித்து, அமைச்சர்களுக்கு வழங்கி, அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். அவர்தான் முதன்முதலாக, பிரதி அமைச்சர்களுக்குப் புறம்பாக இராஜாங்க அமைச்சர்களையும் நியமித்தார். அத்தோடு 25 மாவட்டங்களுக்கும் மாவட்ட அமைச்சர்கள்  25 பேரை நியமித்தார். இவ்வாறு அமைச்சர்களின் எண்ணிக்கை முதல் முறையாக நூறுக்கும் அதிகமாகியது. 1960 களில் ஒரு கட்டத்தில், இலங்கையின் அமைச்சரவையில் 12 அமைச்சர்களே இருந்தனர். அவர்களின் கீழ் 12 பிரதி அமைச்சர்களும் இருந்தனர்.

விஞ்ஞானபூர்வ அமைச்சரவை என்ற பதம் 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் பெரிதாக பேசுபெருளாகியது. தாம் பதவிக்கு வந்தால் விஞ்ஞானபூர்வ அமைச்சரவையை நியமிப்பதாக மைத்திரியும் ரணிலும் கூறினர்.

ஆனால், அவர்கள் பதவிக்கு வந்ததன் பின்னர், சில நகைப்புக்குரிய விடயங்களும் இடம்பெற்றன. நிதி அமைச்சு ஒருவரிடமும் மத்திய வங்கி மற்றொருவரிடமும் கையளிக்கப்பட்டது. அதேவேளை, வெளிநாட்டமைச்சரிடம் இரண்டு லொத்தர் சபைகளும் கையளிக்கப்பட்டன.

பொதுவாக, எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகள் பொறுப்புகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவை அரசியல்வாதிகளுக்கு சலுகை வழங்கும் ஒரு கருவியாகவே நோக்கப்பட்டு வந்துள்ளன.

ஓர் அமைச்சரைப் பராமரிக்க அரசாங்கம் மாதமொன்றுக்கு 75 இலட்சம் ரூபாய் செலவிடுவதாக அண்மையில் ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு இருக்கத் தான் அவர்கள் கொவிட்-19 நிதியத்துக்கு தமது இந்த மாதச் சம்பளத்தை நன்கொடையாக வழங்கப் போவதாக பெரிதாகக் கூறிக் கொள்கிறார்கள். அவர்களது சம்பளம் ஒரு இலட்சம் ரூபாய்க்குக் குறைந்ததாகும்.

இன்றைய நிலையில், கொவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதும் பொருளாதார நெருக்டியை சமாளிப்பதுமே அரசாங்கத்தின் பிரதான கடமையாக இருக்கிறது. அதற்கு இந்த அமைச்சரவை மாற்றத்தால், எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.