அவசரகால நிலைமை பிரகடனத்தின் இலக்கு பொருளாதாரமா, வாழ்வாதாரமா?

லக்ஸ்மன்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில் பிரகடனப்படுத்து வதற்கானதாகவே அவசரகால நிலைமைப்பிரகடனத்தைக் கொள்ளலாம். ஆனால், நமது நாட்டில் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவதற்காக இது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை , கடந்த சில மாதங்களாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  சீனி, பால்மா, அரிசி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு நிலவி வருகின்றது.  விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் பல மடங்காக அதிகரித்துள்ளன.

வர்த்தகர்கள் தம்மிடம்  பொருட்கள் இல்லாத நிலைமை காரணமாகத்தான் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு  தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும் ஏற்படுகிறது என்றே சொல்கின்றனர். உண்மை என்ன என்பது வெளிப்படவே இல்லை.

அன்றாட உணவுக்காக எவ்வளவு விலையையேனும் கொடுக்கத் தயாராக வசதி படைத்தவர்கள் என்ற ஒரு சிறிய சமூகம் இருக்க, இருக்கின்ற பணத்துக்குள் வாழ்க்கையை எப்படி நடத்துவதென்று நடுத்தர வர்க்கத்தினர் சிந்திக்கின்றனர். ஆனால், அதற்குக் கூட வழியில்லாத அடிமட்ட மக்களின் நிலை மிகமிக மோசமாகவே இருக்கிறது.

ஓகஸ்ட்  30 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அவசரகால விதிமுறைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பு செப்டெம்பர் 1ஆம் திகதி வெளியிடப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் உத்தரவுக்கு அமைய, இந்த அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது சரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய உணவு விநியோகத்துடன், தொடர்புப்பட்ட அவசரகால விதிமுறைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கையில் அந்நிய செலாவணி நெருக்கடி, கையிருப்பு இல்லாத நிலையில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, உணவு பொருட்கள் பற்றாக்குறை தொடர்பான அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

‘ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம்’  எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும்  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், நாடு பூராவும் வெகுசீக்கிரமாகப் பரவிகொண்டிருக்கும் கொவிட்-19 நிலைகளின் பிரகாரம், இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலைமை ஏற்பட்டிருப்பதை கருத்தில்கொண்டு, மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நிலைமையை பாதுகாப்பதற்காக, மக்களின் வாழ்க்கைக்குத் தேவையானதை  விநியோகிப்பதற்காக, சேவைகளை வழங்குவதற்காக, இது முக்கியமான தருணமாகும். ஜனாதிபதியாகிய எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் மற்றும் கட்டளையின் பிரகாரம், அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வதற்காக அவசர கால நிலைமை நாடளாவிய ரீதியில் ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைப் பலரும் பல விதமாக விமர்சித்திருக்கின்றனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அவசரகால நிலைமையின் ஊடாக, ஜனாதிபதி ஆட்சியே நடக்கும். ஜனாதிபதி தான்விரும்பிய படி அவசரகால விதிமுறைகளை வகுக்கமுடியும். இச்செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நுகர்வோர் சட்டத்தின் ஊடாக பல செயற்பாடுகளை செய்யக்கூடிய ஒன்றுக்கு, அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தும் போர்வையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரகால சட்டம், அரசாங்கத்தின் தவறு மற்றும் இயலாமையை மூடி மறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட தன்னிச்சையான செயற்பாடாகும் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

நாட்டில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டதிலிருந்து அதிகம் உழைத்தவர்கள் அல்லது வருமானமீட்டியவர்கள் என்ற பட்டியலில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாறிவிட்டன. ஒவ்வொருவர் வீட்டிலும் எது இருக்கிறதோ இல்லையோ, ஒன்றுக்கு இரண்டு திறன்பேசிகள், டப்கள், மடிக்கணினிகள் வந்துவிட்டன. அதற்குக் காரணம் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற பெற்றோரின் எண்ணமாகும். அதற்காக அவர்களிடமிருந்து அனைத்து நிறுவனங்களும் பணத்தையும் கடன்களையும் சேர்த்துக் கொண்டன. இப்போது யாரிடமும் கையில் பணமில்லை என்ற நிலைதான்.   ‘யார்குடிகெட்டாலும் பரவாயில்லை நமக்கு ஏதோ ஆனால் சரி’ என்பதே இதற்குக்காரணம்.  இதிலிருந்து வறிய அடிமட்ட மக்களை நாம் ஒதுக்கி வைத்துவிடவேண்டும்.

முதல் தடவை நாடு முடக்கப்பட்ட பின்பு, நாம் ஏதோ மீண்டுவிட்டோம் நிலைப்பாட்டிலேயே எல்லாமும் நடந்து முடிந்தது. ஆனால், அதன் பின்னர் நடைபெறுகின்றவைகள் கவலைக்கிடத்தை ஏற்படுத்திவிட்டன. மக்களின் வாயிலும் வயிற்றிலும் அடிக்கும் செயற்பாடு காரணமாக நடைபெறும் கொடுமைகள் சொல்லில் அடங்காதவைகளாக இருக்கின்றன.

ஆரம்பத்தில் மஞ்சள், உழுந்து போன்ற பொருள்கள் இறக்குமதி தடைக்குள்ளாகின. அதனால் நாட்டுக்குள் மக்கள் கட்டாயமாகப்பயன்படுத்தும் இவற்றின் விலை மலைபோல் ஆனது, பின்னர் சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கை அறிவிப்பு மூலம் நாட்டு மக்களின் விவசாய உற்பத்திகள் குறைக்கப்பட்டன. பின், பெற்றோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருள் விலைஅதிகரிப்பு.  படிப்படியாக சீனி, பருப்பு, மீன்ரின், தேங்காய் எண்ணை, கோழி இறைச்சி, பாண்,  புளி என்று  பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நீளத்திற்கு யார் காரணம்?

சட்டியில் இருக்கும் போதுதான் அகப்பையில் கிடைக்கும். ஆனால் நம்நாட்டில் சட்டியில் இல்லாதபோதே நாம் கொடும்போம் என்று சொல்கின்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இறக்குமதி நிறுத்தப்படுகிறது. ஆனால் ஏற்றுமதிக்கான நடவடிக்கைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது. எனக்கு வரவு மாத்திரமே வேண்டும் செலவல்ல என்பது எவ்வாறான சமன்பாடாக இருக்கும் என்பதே நகைப்புக்கானது.

நாட்டைக் கட்டியெழுப்பும் சமன்பாடு எல்லோருக்கும் பிடித்ததுதான், பல தசாப்தங்களை உள்நாட்டு யுத்தத்தில் நாம் இழந்துவிட்டோம். அதனை மீட்பதாக இருந்தால் அனைவரையும் அரவணைக்கும் நிலைப்பாடு ஒன்று மூலமே சாத்தியப்படுத்த முடியும். ஒருமிப்பு, அரவணைப்பு இல்லாத வேளையில் எதுவுமே சாத்தியமில்லை. கொவிட் நிலைமையில் சுகாதார, வைத்தியத்துறையினரின் சேவையை நாம் அனைவரும் கைகூப்பி  பாராட்ட வேண்டும். ஆனால் அதற்கு நம் எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம். அது முழுமையாக இல்லாமையாலேயே நாடு சிவப்பு எச்சரிக்கை வரை சென்றிருக்கிறது.

கடந்த நல்லாட்சி ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்றத்தின் ஒருமிப்பு இல்லாமையால் வீணே போனது. இப்போதும் எல்லாமும் ஜனாதிபதி ஒருவரின் முடிவுகளிலும், உத்தரவுகளிலும் தனியே ஒருபக்கம் நடைபெறுவதாகவே எதிர் அரசியல் தரப்பினர்  அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்தநிலைமை நாட்டை ஆபத்திலேயே தள்ளிவிடும்.

செல்வந்தரை மேலும் செல்வந்தராக்கும், வறியவர்களை மேலும் மேலும் வறுமைக்குள் தள்ளும் முதலாளித்துவம் வேண்டாமென்றே சமூகத்தில் வாழும் நாம் எதிர்பார்க்கிறோம், வேண்டிக்கொள்கிறோம். ஆனால் நாடுகளில் நடைபெறும் அரசியலும் அதனையே செய்து கொண்டிருக்கிறது. அவசரகாலப்பிரகடனமும் அதனையே செய்யும் செய்யத் தொடங்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர்,  பாரியளவிலான நெல்லைப் பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து வெறுமனே விட்டுச் செல்லக்கூடிய ஒன்றல்ல. இதனைப்படிப்படியாக ஆராய்ந்தால் நாட்டிலுள்ள சாதாரண விவசாயிகள் மாத்திரமல்ல ஏனையவர்களின்  நிலைமையும் இதுவாகத்தான் இருக்கிறது.

வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில், மக்களின் கண்ணீரிலும் பிரச்சினைகளிலும் ஏறி இருந்து கொண்டு அரசியல் செய்யாமல் அவர்களின் கண்ணீரையும்,  பிரச்சினைகளையும் துடைக்கும் கரங்களாக அரசியல்தலைவர்கள் இருப்பார்கள். ஆனால் இலங்கையில், அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தவுடன் சம்பாதிப்பதிலேயே அக்கறை காட்டுவார்கள்.

பொருளாதாரத்தினை நாடு மீட்குமா அல்லது அன்றாடம் வாழ்க்கைச்செலவையே தூக்கமுடியாது தவிக்கும் மக்கள் மீட்கப்படுவார்களா, மீள்வார்களா என்பது நம்மிடமில்லை. இருந்தாலும் பல்வேறு விமர்சனங்களுக்குள் சிக்கித் தவிக்கும் அவசரகால நிலைப்பிரகடனம் மீளப்பெறப்படுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ஆரோக்கியமானதும் பயனுள்ளதுமான பிரஜையை உருவாக்குதல், நஞ்சற்ற உணவு வேளையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளல், இலங்கையின் விவசாயத்துறையானது, எதிர்வரும் தசாப்தங்களில் முற்றுமுழுதாகச் சேதனப் பசளையைப் பயன்படுத்தி, மேற்கொள்வதற்கு வழிவகுத்தல் போன்ற நடைமுறைகளை நாம் அனுபவிப்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும்வரையில் காத்திருப்போம்.

ஏதோ இலங்கையில் பட்டிணிச்சாவு வராதிருந்தால் சரியென்று எண்ணிக்கொள்வோம். எல்லா அஸ்திரங்களையும் பிரயோகித்து நிராயுதபாணிகளானாலும் ஞானம் வருகிறதா எனப் பார்ப்போம்.