உயிரை பணயம் வைத்து போதைப்பொருள் வியாபாரியை பிடிக்க போராடிய பொலிஸ் அதிகாரி

  • 16

ஒரு சில ஊழல் மோசடிகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வது தமது உயிரையும் பணயம் வைத்தாகும். அவ்வாறான துணிச்சலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய செய்திகள் வரலாற்றிலும் காணப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்னர் சீசீடிவியில் பதிவான அவ்வாறான துணிச்சல் மிக்க பொலிஸ் ஹீரோ ஒருவரின் செயலை முழு நாடுமே பார்த்தது.

கடந்த 20ம் திகதி காலை 9.00 மணியளவில் நுகோகொடை பொலிஸ் பிரிவின் மோசடி ஒழிப்பு பிரிவினது அதிகாரிகள் ஐவர், தமக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து போதைப் பொருள் சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்காக வெலிக்கடை பொலிஸ் பிரிவின் ராஜகிரிய ஒபேசேகரபுர சந்தியைக் கடந்து பொரளையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அந்த பொலிஸ் குழுவில் இருந்த சார்ஜன்ட் வசந்தகேவின் பார்வையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீல நிற முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கிய நபர் ஒருவர் அதற்கருகில் நின்றிருந்த விட்ஸ் வகை காரின் பின்புற ஆசனத்தில் ஏதோ இரண்டு பொதிகளை கொண்டு சென்று வைத்த காட்சி சிக்கியது. இதில் சந்தேகம் கொண்டு பொலிஸ் சார்ஜன்ட் இது தொடர்பில் அக்குழுவில் இருந்த உயர் பொலிஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார்.

“சேர்! இரண்டு பார்சல்களை காரினுள் போட்டதைக் கண்டேன். அந்த பார்சல் ஹெரோயின் தூளாக இருக்குமோ தெரியாது.”

இதனையடுத்து சிவில் உடையில் இருந்த பொலிஸ் குழுவினர் உடனடியாக தாம் பயணித்த வாகனத்தைத் திருப்பிக் கொண்டு குறித்த முச்சக்கர வண்டிக்கு அருகில் சென்றுள்ளனர். அங்கு சென்ற பொலிஸார் முச்சக்கர வண்டியின் சாவியினைத் தம்வசம் எடுத்துக் கொண்டு அம்முச்சக்கர வண்டியில் இருந்த நபரிடம் கேள்விகளைத் தொடுத்துள்ளனர். விசாரணைகளிலிருந்து அந்நபர் மாளிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை பொலிஸார் அறிந்து கொண்டனர்.

அதேநேரம் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரைச் சுற்றியவாறு அக்கார் பயணிக்க முடியாதவாறு பாதையை மறித்துக் கொண்டனர். அத்துடன் அக்காரினுள் இருந்தவர்களை வெளியில் இறங்குமாறும் பொலிஸார் உத்தரவிட்டனர். எனினும் காரின் கதவுகளைப் பூட்டிக் கொண்ட காரின் சாரதி காரை ஸ்டார்ட் செய்து காரை வழிமறித்து நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களையும் மோதிக் கொண்டு தப்பிச் செல்லும் நோக்கில் வேகமாகப் பயணிப்பதற்கு முயன்றுள்ளார். எனினும் ஒரு பொலிஸ் அதிகாரி காருக்கு வழிவிடாமல் குறுக்காவே நின்றுள்ளார். கார் வேகமாகப் பயணிப்பதற்கு ஆயத்தமான போதிலும் வழிவிடாமல் நின்றிருந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக காரின் பொனட்டின் மீது பாய்ந்து அதில் தொங்கியுள்ளார். எனினும் அந்த பொலிஸ் அதிகாரியையும் சுமந்து கொண்டு அக்கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பயணிக்கத் தொடங்கியது. மிக வேகமாகப் பயணித்த காரில் அந்த பொலிஸ் அதிகாரி முன்புற பொனட்டில் தொங்கி நின்றது மேற்கத்தேய திரைப்படக் காட்சியில் தோன்றும் காட்சியை ஒத்ததாக அமைந்திருந்தது. இவ்வாறு அந்த பொலிஸ் அதிகாரி தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மேற்கொண்ட இந்த துணிச்சலான செயற்பாடு அருகிலிருந்த சீசீடிவி கெமராக்களில் பதிவானது.

காரின் பொனட்டின் மீது தொங்கியவாறு ஒபேசேகரபுர வீதியில் சுமார் 500 மீற்றர் தூரம் வரையில் பயணித்த பொலிஸ் அதிகாரி, கார் சாரதி காரின் பிரேக்கை திடீரென மிதித்ததையடுத்து காரிலிருந்து கீழே விழும் காட்சியும் மற்றொரு சீசீடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி அவ்விடத்தில் வீழ்ந்த முறையினைப் பார்க்கும் போது அவர் உயிர் பிழைத்தது ஆச்சரியமானதாகும்.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போதைப் பொருள் விற்பனையாளர்களைப் பிடிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டது 54478 இலக்க சார்ஜன் டப்ளிவ். ஏ. வசந்த புஷ்பகுமார என்ற பொலிஸ் அதிகாரியாகும்.

காரிலிருந்து கீழே விழுந்த உடனேயே வசந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகளால் நாரஹென்பிட்ட பொலிஸ் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவரது தலை மற்றும் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததோடு, இரண்டு கைகள் மற்றும் முதுகிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தது. எனினும் தற்போது அவரது உடல் நிலை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அவரிடம் நலன் விசாரிப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்று திரும்பிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

வசந்தவினால் அவ்வாறு போதைப் பொருளை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்வதற்கு இடமளிக்காமல் தடுப்பதற்கு முயன்ற கார் CBK 3981 இலக்க விட்ஸ் வகை கார் என்பதை அருகிலிருந்து சீசீடிவி கெமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ் அதிகாரிகள் இனங்கண்டு கொண்டனர். வசந்தவின் அந்த சாகசச் செயலினை அது ஒரு சிறிய சம்பவம் எனக் கருதி முதலில் பொலிஸ் அதிகாரிகள் அந்தளவுக்கு கண்டு கொள்ளவில்லை. குறைந்தது வசந்தவின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயணித்த காரின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தையாவது மேற்கொள்வதற்குக் கூட கையில் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தைரியம் இல்லாமல் போனது ஆச்சரியமான ஒன்றாகும்.

எவ்வாறாயினும் அவ்விடத்திலிருந்து பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் வசந்தவின் மீது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அங்கிருந்து முச்சக்கர வண்டியில் வந்திருந்த நபர் தனது முச்சக்கர வண்டியின் சாவி இல்லாதிருந்தாலும் முச்சக்கர வண்டியை ஸ்டாா்ட் செய்து கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளான். அந்த முச்சக்கர வண்டி மற்றும் அதில் வந்த நபரைத் தேடி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன லியனகே, தப்பிச் சென்ற காரைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு விஷேட புலனாய்வு குழுக்களுடன் ஆறு குழுக்களை நியமித்தார். அந்த குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த காரைச் செலுத்திச் சென்றது தலபத்பிட்டியவைச் சேர்ந்த விபுல என்பவனே என்றும், அக்காரினுள் மூவர் இருந்துள்ளனர் என்பதையும் கண்டறிந்து கொண்டுள்ளனர். அத்துடன் அக்கார் புஷ்பகாந்தி போபேகமகே என்பவருக்குச் சொந்தமானது என்றும், அக்கார் இலக்கம் 20/11B, நுகோகொடை, மிரிஹான, உடஹமுல்ல என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொண்டுள்ளனர்.

அந்த முகவரியை பொலிஸ் குழுவினர் தேடிச் சென்றபோது அங்கு சொகுசு மூன்று மாடி வீடு நிர்மாணிக்கப்பட்டு வருவதைக் கண்டு கொண்டனர். அங்கு இரு பெண்கள் இருந்துள்ளனர். தமது சகோதரர் 19ம் திகதி இரவு மனைவியுடன் குறித்த காரில் சென்றதாக அப்பெண்கள் இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் சென்றதன் பின்னர் அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும், அவர்களது தொலைபேசியும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

அவன் பல்வேறு போதைப் பொருள் வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் வழங்கல் போன்ற விடயங்களின் ஊடாக தற்போது ஒரு கோடீஸ்வரராகியிருப்பதையும் பொலிஸார் அறிந்து கொண்டனர். குறித்த முகவரியில் அவனே புதிதாக சொகுசு வீட்டையும் நிர்மாணித்து வருகின்றமை பொலிஸாருக்குத் தெரிய வந்தது. அத்துடன் விபுல என்பவன் 2013ம் ஆண்டில் டி56 ரக துப்பாக்கி ஒன்றுடன் கோட்டை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தான்.

எப்படியோ அக்கார் தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேறாக, தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் ஊடாக தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நலின்த தில்ருக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையினையடுத்து கடந்த 22ம் திகதி மாலை தலங்கம, பட்டபொத்த, தேவாலய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அக்கார் மீட்கப்பட்டுள்ளது.

காரின் இலக்கத் தகடும் அகற்றப்பட்டே அக்கார் அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. காருடன் அவ்வீட்டிலிருந்த விபுலவின் உறவு முறை சகோதரர் மற்றும் போதைப் பொருள் விற்பனைக்காக காரில் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

விபத்து ஒன்று ஏற்பட்டதாகக் கூறியே விபுலவினால் குறித்த காரை தனது வீட்டில் நிறுத்தி விட்டுச் சென்றதாக அவ்வீட்டின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

விபுல என்பவன் இன்னமும் தலைமறைவாகி உள்ள போதிலும் அவன் சில காலமாகவே மாளிகாவத்தையைச் சேர்ந்தவர்களோடு இணைந்து மேற்கொண்ட போதைப் பொருள் விற்பனையின் அனைத்து விபரங்களும் பொலிஸாரினால் கண்டறியப்பட்டுவிட்டது. இவ்வாறு இந்த போதைப் பொருள் விற்பனை தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றது சாஜன்ட் வசந்தவின் துணிகரச் செயற்பாட்டினாலேயாகும்.

42 வயதுடைய சாஜன்ட் வசந்த, ஹோமாகம, கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். எட்டு சகோதர சகோரிகளைக் கொண்ட குடும்பத்தில் நாலாவது பிள்ளை இவராகும். திருமணமான வசந்தவிற்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

பன்னிப்பிட்டி தலல்கொடை பிரதமர் வித்தியாலயத்திலும், பெலவத்தை வித்யாவர்தன வித்தியாலயத்திலும் கல்வி கற்றதன் பின்னர் இவர் பொலிஸ் சேவையில் இணைந்தது 2002ம் ஆண்டிலாகும். தமுத்தேகம, பஹலகம பொலிஸ் பயிற்சி கல்லூரியில் ஆரம்ப பயிற்சியைப் பெற்ற வசந்த, முதலில் சேவையில் இணைந்திருப்பது புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பணியாற்றுவதற்காகும்.

யாழ்ப்பாணத்தில் 9 வருடங்கள் சேவையாற்றியதன் பின்னர் மஹரகம மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றிய வசந்த, 2019ம் ஆண்டிலிருந்து நுகேகொடை பிரிவின் மோசடி ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றார்.

யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிய நாளிலிருந்து வசந்த, மோசடி ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிக் கொண்டு போதைப் பொருள், சட்டவிரோத மதுபானம் உள்ளிட்ட மோசடிகள், ஊழல்காரர்கள் மற்றும் பாதாள உலகத்தினரைத் தேடி மேற்கொண்ட நூற்றுக்கணக்கான நடவடிக்கைகளில் இணைந்து கொண்ட ஒரு மிகத் திறமையான பொலிஸ் அதிகாரியாகும்.

அவ்வாறான அனேக சுற்றிவளைப்புக்களுக்கான புலனாய்வுத் தகவல்கள் வசந்தவினதாகும். புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் மோசடி ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் போது அப்போதைய அந்த மோசடி ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் நிஷான் பெத்தும் உள்ளிட்ட தரப்பினர் வசந்தவின் தகவல்களுக்கு அமைய ஏராளமான சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.

அதேபோன்று வசந்த 2011ம் ஆண்டில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது போதைப் பொருள் வியாபாரி ஒருவரை மடக்கிப் பிடிப்பதற்கு ஆயத்தமாக இருந்த போது அந்நபரைக் கைது செய்ய வேண்டாம் எனக் கூறி மற்றொரு நபரால் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வசந்தவிற்கு வழங்குவதற்கு முயற்சி செய்யப்பட்டது.

எனினும் சாஜன்ட் வசந்த அந்தப் பணத்தை வாங்க மறுத்துள்ளதோடு, அவ்வாறு பணம் வழங்க முயன்ற நபரை​ை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் அளவுக்கு நேர்மையாக தனது கடமைகளுககைாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி என்பது எமக்கு அறியக் கிடைத்தது. இச்செயற்பாட்டைப் பாராட்டி வசந்தவிற்கு பொலிஸ் திணைக்களத்தினால் பணப்பரிசுடன் விசேட விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்குப் புறம்பாக அண்மையில் நுகேகொடை பிரிவின் மோசடி பிரிவினால் ஒன்றரை கிலோ எடையுடைய ஹெரோயினைக் கைப்பற்றுவதற்கும் சாஜன்ட் வசந்தவும் ஒத்துழைத்துள்ளார். அதேபோன்று கடந்த காலத்தில் நுகேகொடை பிரிவின் மோசடி ஒழிப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்ட 20 கிலோ கேரள கஞ்சா, கொட்டாவ பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட 18 கிலோ கேரள கஞ்சா மற்றும் மீகொடை பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட 20 கிலோ கேரள கஞ்சா போன்றன சாஜன்ட் வசந்தவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களினாலேயே கைப்பற்றப்பட்டிருந்தன.

இவ்வாறு திறமையான அதிகாரியான வசந்தவின் துணிச்சலான செயற்பாட்டினால் இதுவரை பொலிஸாருக்குத் தெரியாமல் நீண்டகாலமாகவே இடம்பெற்று வரும் மற்றொரு பாரியளவிலான போதைப் பொருள் வியாபாரத்தின் முழு விபரங்களும் தற்போது வெளிவந்திருக்கின்றது.

இவ்வாறான திறமைான பொலிஸ் அதிகாரிகளின் சேவையினைப் பாராட்டி அனைத்து பொலிஸ் அதிகாரிகளினும் மனஉறுதியை வளர்க்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிளது பாரிய பொறுப்பாகும் என்பதை நாமும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தினகரன்

 

ஒரு சில ஊழல் மோசடிகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வது தமது உயிரையும் பணயம் வைத்தாகும். அவ்வாறான துணிச்சலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய செய்திகள்…

ஒரு சில ஊழல் மோசடிகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்வது தமது உயிரையும் பணயம் வைத்தாகும். அவ்வாறான துணிச்சலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய செய்திகள்…