மாட்டிறைச்சியின் விலையை அதிகரிக்க முடியாது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மாட்டிறைச்சியை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாயால் அதிகரித்து விற்க மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் அனுமதி கோரியிருக்கின்றார்கள் என்றும் எனினும், மக்களின் சமகால கொருளாதாரக் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு விலையை மேலும் அதிகரிக்க அனுமதிக்க முடியாதென ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் 42ஆவது மாதாந்த சபை அமர்வு, நகர சபையின் சபா மண்டபத்தில் (28.09.2021) நடைபெற்றது.

நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால், வாழ முடியாது மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்ற அதேவேளை இந்த நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகளும் கொள்ளை இலாபம் அடித்துக் கொண்டிருப்பதாக அவர் சாடினார்.

இவ்வாறு நகர சபை நிர்வாக கட்டுப்பாட்டு விலையை மீறி கொள்ளை இலாபம் அடிக்கும் வர்த்தகர்களை அவதானித்து தக்க நடவடிக்கை எடுக்க மக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.