ஊடகவியலாளர்களை CIDக்கு அழைக்கும் முறை – ஊடக அமைப்புகள் கண்டனம்

  • 9

ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கும் போக்கைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் 6 ஊடக அமைப்புக்கள்,

இந்த நடவடிக்கை ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பதுடன் அத்தகைய சம்பவங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது என்றும் விசனம் வெளியிட்டிருக்கின்றன.

‘ஊடகவியலாளர்களை வேட்டையாடி ஊழல் வாதிகளைப் பாதுகாக்கும் முயற்சியைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்’ என்ற தலைப்பில் ஊடகத்தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகிய 6 ஊடக அமைப்புக்கள் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிலிருந்து பதவி விலகிய முன்னாள் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தனவினால் வெளிப்படுத்தப்பட்ட ச.தொ.ச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூடு மோசடி மற்றும் வேறு மோசடிகளை அறிக்கையிட்ட லங்காதீப, திவயின மற்றும் த ஐலன்ட் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்கள் விசாரணை என்ற போர்வையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டமையைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.

இந்த நடவடிக்கை ஊழல்மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பதுடன் அத்தகைய சம்பவங்கள் தொடர்பான உண்மைத்தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது. உரியவாறான சட்ட அடிப்படைகள் பின்பற்றப்படாத நிலையிலும் கூட, தமது அரசியல் ரீதியிலான நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் காவல்துறையைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஊடகவியலாளர்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்க வேண்டாம் என்ற பிரதமரின் அறிவுறுத்தலையடுத்து, தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினமான 28 ஆம் திகதியன்று அதிகாரிகள் குழுவினர் குறித்தவொரு பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். இவ்வாறு ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதற்குக் காவல்துறையினரைப் பயன்படுத்துவது கடுமையான குற்றமாகும்.

இச்சம்பவம் தொடர்பில் வெகுசன ஊடக அமைச்சர் மன்னிப்புக் கோரியிருந்தாலும், வெறுமனே அவ்வாறான அறிக்கைகளால் மாத்திரம் திருப்தியடைந்து விடமுடியாது. ஊழல் மோசடிகள் தொடர்பான உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகங்களுக்குரிய முக்கிய பொறுப்பாகும்.

அதன் பிரகாரம் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் தகவல்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதனை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதானது கருத்துச் சுதந்திர மீறலுக்கும் அப்பாற் சென்று ஊழல் வாதிகளுக்குப் பாதுகாப்பளிப்பதுவரை விரிவாக்கமடைகின்றது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கும் போக்கைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் 6 ஊடக அமைப்புக்கள், இந்த நடவடிக்கை ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பதுடன் அத்தகைய சம்பவங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது…

ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கும் போக்கைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் 6 ஊடக அமைப்புக்கள், இந்த நடவடிக்கை ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களைப் பாதுகாப்பதுடன் அத்தகைய சம்பவங்கள் தொடர்பான உண்மைத் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது…