18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பிரதான 18 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும 24 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்கள் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்.

எதிர்வரும் 24 மணிநேரத்தில் வடமேல், மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் வட மாகாணத்திலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் ஒருசில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றர் மழைவிழ்ச்சி பதிவாகுமென வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்பட கூடிய தற்காலிகமான கடும் காற்று மற்றும் மின்னல் என்பவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பை குறைத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கோரியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் பொருட்டு, மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைப் பிரிவுகள், 35 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளன. இந்தக் குழுவில் 35 கப்பல்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 200 பேர் இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. வெள்ள அபாயத்துக்கு முன்னாயத்தமாக, மேற்கு கடற்படை கட்டளை பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று அனர்த்த நிவாரண குழுக்களை நிலைநிறுத்தியுள்ளது. அதேவேளை, உடனடி நிவாரணத்திற்காக 24 மேலதிக நிவாரண குழுக்கள் மேற்கு கடற்படை கட்டளைப் பிரிவில் நிறுத்தப்பட்டுள்ளன. உடுகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உடலமட்ட பிரதேசத்திலும் தென் கடற்படைக் கட்டளைப் பிரிவின் நிவாரணக் குழுவொன்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு, தேவையான போது நிவாரண குழுக்களை நிவாரண குழுக்களை அனுப்ப கடற்படை எப்போதும் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களு கங்கை மற்றும் குடா கங்கையின் தாழ்வு நிலப்பகுதிகளில் எதிர்வரும் சில மணித்தியாளங்களில் சிறிய அளவில் வௌ்ள நிலமை ஏற்படலாம் என நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது. அதனடிப்படையில் புளத்சிங்கள, பதுரலிய, பாலிந்தநுவர, மில்லனிய, ஹொரண, தொடங்கொட மற்றும் களுத்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுனர்களும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று மதியம் (08) திறக்கப்பட்டுள்ளது என பிரதான பொறியியலாளர் ஆர்.எம். வத்சல தெரிவித்தார். நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் தலா 15 செ.மீற்றர் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக வினாடிக்கு 69 கனமீற்றர் வீதம் நீர் வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார். கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியா பிளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டிருந்தது. பின்னர் பொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர்.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று (08) மாலை 3 மணியளவில் நுவரெலியா பிளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மரமும் சரிந்து விழுந்துள்ளது. மழை தொடர்ந்ததால் மீட்பு பணியும் தாமதித்தே ஆரம்பமானது.

இந்த மண்சரிவு காரணமாக சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடதக்கது.

மேலும் புத்தளம் பலாவி பிரதேசத்திலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.