25 நாட்களில் பத்து எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு

நாடளாவிய ரீதியில் இன்று (28.11.2021) நான்கு எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும் நவம்பர் 4 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கடந்த 25 நாட்களில் மொத்தமாக பத்து எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கல்முனை வட்டவிதான பிரதேசம் மற்றும் கேகாலையில் இன்று காலை இரு எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்விரு வெடிப்புச் சம்பவங்களிலும் உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தென்பகுதியைச் சேர்ந்த அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணவகம் ஒன்றின் எரிவாயு தாங்கியில் பொருத்தப்பட்டிருந்த குழாயில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக இன்று (28) பிற்பகல் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.

ஹோட்டலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்த போது பலத்த சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் சுன்னாகம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கந்தரோடைப் பிரதேசத்திலும் சமையல் எரிவாயு அடுப்பு  ஒன்று வெடிப்புக்குள்ளாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.

கந்தரோடை,  பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேநீர் அருந்துவதற்காக நீரைச் சூடாக்குவதற்கு அடுப்பை இயக்கிவிட்டு வீட்டின் உரிமையாளர் இன்னுமொரு அறைக்குச் சென்ற சந்தர்ப்பத்திலே சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

சமையலறையில் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் அங்கு யாரும் இருக்காததால் உயிர்ச் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின்போது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெளியிலிருந்தமையால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

இன்று இடம்பெற்றுள்ள நான்கு சம்பவங்களுடன் நவம்பரில் (28) இதுவரை மொத்தம் பத்து வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.

நவம்பர் 16 ஆம் திகதி, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

நவம்பர் 20 ஆம் திகதி, கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 25 ஆம் திகதி பன்னிப்பிட்டி-கொட்டாவ பிரதேச வீடொன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நவம்பர் 26 ஆம் திகதி நிக்கவெரட்டிய, கந்தேகெதர  மற்றும் அம்பாறை – சாய்ந்தமருது என இரு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நவம்பர் 28 ஆம் திகதி கல்முனை, கேகாலை, யாழ் கந்தரோடை, அஹங்கமை என் நான்கு சம்பசங்கள் பதிவாகியுள்ளன.

அடுத்தடுத்து நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி வருகின்றமையால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் இதுவரை ஒரு யுவதி எரிவாயு வெடிப்புத்தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானோர் எரிவாயு அடுப்புக்களை புறக்கணிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. Ibnuasad