கல்வியியற் கல்லூரிகளை நாளை முதல் திறப்பதற்கு நடவடிக்கை

லோரன்ஸ் செல்வநாயகம்

கல்வியியற் கல்லூரிகளை நாளை 15ம் திகதி முதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது பாடசாலைகளை உயர்தரத்தில் தொழில் நுட்பம் பயிலும் மாணவர்கள் அதற்கான ஆசிரியர் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கு உள்வாங்கப்படும் வகையில் புதிய கல்லியியற் கல்லூரியை ஆரம்பிப்பதை விரைவுபடுத்துமாறும் அமைச்சர் அந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேவேளை, பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசியரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் நில நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்து முழு அளவிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

50 வீத மாணவர்களை உள்வாங்கி கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாணவர்களையும் அழைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கிணங்கவே முழு அளவிலான மாணவர்களுடன் விரைவில் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை பரீட்சைகளை நடத்துதல், இணைய வழி கற்கை நடவடிக்கைகள் மற்றும் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.