தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்கலைக்கழக நூலகம் சமூக நலத் திட்டத்தின் கீழ் (Community outreach programme) பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தற்கால நவீன சவால்களை எதிர்நோக்கக்கூடிய வினைத்திறன்மிக்க சேவைகளை வழங்கவேண்டுமென்ற நோக்கில் ஒரு நாள் வலுவூட்டல் நிகழ்ச்சி ஒன்றினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) றமீஸ் அபூபக்கர் அவர்களின் பணிப்புரையின் பேரில் பல்கலைக்கழக நூலகர் எம் எம் றிபாயுடீன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது 17.02.2020 வியாழக்கிழமை பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக நூலகர் மற்றும் சிரேஷ்ட உதவி நூலகர்கள் இதில் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.
ஜனாதிபதி அவர்களுடைய “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை அமுல்படுத்தும், உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுடைய எண்ணக் கருவில் உருவான பல்கலைக்கழகங்களுக்கும், சமூக கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பினை இணைத்தலின் (10ம்) அங்கமாக. நூலகர் எம். எம். றிபாயுடீன் தலைமையில் நடைபெறும் இவ் பயிற்சி பட்டறை ஆரம்ப நிகழ்வு முற்பகல் பல்கலைக்கழக நூலக கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
உபவேந்தர் கருத்து தெரிவிக்கையில்: சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்க வேண்டுமென்றும், தற்கால நவீன சவால்களை எதிர்நோக்க கூடிய வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்க வேண்டுமென்றும், பல்கலைக்கழகத்தை சமூகங்களில் தொடர்புபடுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் துறைசார்ந்த இவ்வாறான பயிற்சிப் பட்டறைகள் கருத்தரங்குகள், வழிகாட்டல்கள், ஆலோசனைகள் போன்றவை சமகாலத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் M.M றிபாயுடீன் அவர்கள் உரையாற்றுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார். நூலக வரலாற்றின் ஆரம்பமானது மொசபதேமியா, யூப்பிரதீஸ் தைக்கிரீஸ் போன்ற வரலாற்று நாகரிகங்களை அடிப்படையாகக் கொண்டதாகும் என்றும், கிறிஸ்துக்கு முன் 3000ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் Royal Library of Ashurbanipal என்ற நூலகம் தோற்றம் பெற்றது. இது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் தன்னகத்தே கொண்டதோடு அதற்குப் பிற்பாடு இறைத்தூதர் ரசூல் ஸல்லல்லாஹூ (அலை), அவர்களுக்குப் பின்னரான காலங்களில் நூல்கள் பாரிய பங்களிப்பினை வழங்கியது. மக்கா, மதினா, பஸரா, கூபா போன்ற இடங்களில் அறிவின் பொக்கிஷங்களாக இருந்த அப்பிரதேச பண்பாடு மொழி கலாசார விழுமியங்களும் அறிவோம் பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றி இருக்கின்றன.
பல்கலைக்கழக நூலகமானது மாணவர்களின் கல்விக்காக மாத்திரமன்றி பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் போன்றவர்களையும் தற்காலத்துக்கு பொருத்தமானவர்களாக வளப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு இன்நூலகத்துக்கு இருக்கின்றது என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற பல நிகழ்வுகளை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு உள்ளோம் என்ற செய்தியையும் குறிப்பிட்டார். மேலும் நூலக அபிவிருத்தியில் சமூகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் M.H. அப்துர் ரஹீம் அவர்கள் பொத்துவில் பிரதேசத்தில் காணப்படும் நூலகங்கள் பற்றியும் அதனை அபிவிருத்தி செய்வதற்கான தேவைகள் இருப்பதனையும் சுட்டிக்காட்டினார். அத்தோடு நூலகத்தின் தேவைகளை நிறைவேற்ற பல்கலைக்கழகங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த நிகழ்வாக, பொத்துவில் பிரதேச நூலகங்களுக்கு தேவையான சிறுவர் நூல்களை உபவேந்தரும் நூலகரும் இணைந்து தவிசாளருக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொது நூலக சேவைகள் மற்றும் கற்றல் அமைப்புகளை மாற்றியமைத்தல் எனும் எண்ணக்கருவில் நூலகர் விரிவுரை ஆற்றினார். அதில் நூலக அமைப்பு, அதனை எவ்வாறு அபிவிருத்தி செய்தல், தொழிநுட்பம மற்றும் சமூக மாற்றங்கள் பற்றியும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கட்டம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து M.C.M அஸ்வர்அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களுக்கு வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் எனவும் வழிகாட்டல் நிகழ்வுகளையும் நடத்தினார்.
இந்நிகழ்வினை அடுத்து நூலகத்தில் கிடைப்பதற்கு அரிதான நூல்கள் பற்றியும் அதிலுள்ள வளங்களான இலத்திரனியல் வளங்கள், விசேட தொகுப்புகள் பற்றியும் M. சஜீர் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இணையத்தள வளங்களின் பயன்பாடுகள் பற்றியும், அதில் மாணவர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் பயன்தரும் இணைய தள முகவரிகளை M.J.A சாஜித் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
நூலகத்தின் பிரதான விடயமான வாசகர்களை வரவேற்றல், அவர்களை வழிநடத்தல், தற்கால மாணவர்களின் செயற்பாடுகள், அவர்கள் வாசிப்பதற்கு பொருத்தமான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் போன்ற வழிகாட்டல்களை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட உதவி நூலகரான கலாநிதி M.M மஸ்ரூபா அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து நிகழ்விற்கு வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்கள் கௌரவ உபவேந்தர் மற்றும் நூலகரின் மூலம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதி நிகழ்வாக தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தின் Reference section, Sri Lankan collection, University archive, Administration, Information desk, Schedule section, long-term section போன்ற பிரிவுகளை விளக்கங்களுடன் பார்வையிட்டனர்.
அந்த வகையில் பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் தற்கால நவீன சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு சிறப்பாக நடாத்தப்பட்டது.
SEUSL Library,
Media group.