நோயாளிகளை இலக்கு வைத்து புதிய திருட்டு

இர்ஷாத் இமாமுதீன்

இருபத்தைந்து வயது கணனி மென்பொருள் பொறியியலாளர் செய்த நவீன திருட்டே நாடளாவிய ரீதியில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சிங்கப்பூரில் உயர் கல்வியை கற்ற ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் 10 மில்லியனுக்கு மேற்பட்ட தொகையை புற்று நோயாளர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களிடமிருந்து திருடி இருக்கிறான் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்திருட்டில் சிக்கிய அனைவரும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்வாறானவர்களை இலக்கு வைத்தே இத்திருட்டு நடவடிக்கைகளை மேற்படி நபர் மேற்கொண்டு வந்திருக்கிறான். புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கொழும்பு பழைய சோனகர் தெரு விடுதியொன்றில் தங்கியிருந்த போது கொழும்பு வெல்லவீடிய பொலிஸார் கடந்த திங்கட்கிழமை (12) கைது செய்துள்ளனர்.

கைது செய்யும் போது அந்நபர் தங்கியிருந்த அறையில் ஐஸ் போதைப் பொருள் பாவித்த கருவிகள், வயாக்ரா பாலியல் மாத்திரை (Viagra Timing Tablets) , ஒரு மடிக்கணனி, நான்கு ஸ்மார்ட் போன்கள், ஐந்து சிம்கார்ட்கள் என்பன இருந்துள்ளன.

விடுதியில் குறித்த சந்தேக நபர் வழமையாக அறையெடுத்து தங்கி வருவதாக அந்த விடுதியில் இருந்த சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

ஏறாவூரில் ஊரின் நன்மதிப்பைப் பெற்ற குடும்பத்தில் பிறந்த சந்தேக நபர், குடும்பத்திற்கு ஒரே பிள்ளையென்பதால் மிக செல்லமாக வளர்க்கப்பட்டு மேற்படிப்புக்காக சிங்கபூர் சென்று கணனி மென்பொருள் பொறியியல் துறையில் பட்டம் முடித்துவிட்டு நாடு திரும்பிய பின்னரே இந்தத் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளான் என தெரிவிக்கப்படுகிறது.

இவனுடைய இத்திருட்டு வேலைகளுக்கு ஓட்டமாவடியைச் சேர்ந்த காதலி உடந்தையாக இருந்ததாகவும் ஒன்லைனில் திருடப்பட்ட பணம் அனைத்தும் காதலியின் கைவசமே இருப்பதாகவும் தான் செல்லும் அனைத்து இடங்களுக்கும் காதலியையும் அவன் அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் போதை வஸ்துப் பாவனை இருந்ததால் அதற்காக இவர்களுக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டதால் இவ்வாறான திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர் என்றும் தகவல் கிடைக்கப்பெற்றது. சந்தேக நபரின் காதலி ஏற்கனவே பல திருமணங்கள் முடித்து விவாகரத்து பெற்றவர் என்ற தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத ஏறாவூர் பிரதேசவாசி ஒருவர் குறிப்பிட்டார்.

நாளிதழ்கள் மற்றும் சமூக வளைத்தளங்களில் வெளியான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளிகளின் வங்கிக் கணக்கு போன்றவற்றைப் பெற்று மிகத் திட்டமிட்ட முறையில் கனகச்சிதமாக நோயாளர்களை ஏமாற்றி இந்த திருட்டை சந்தேக நபர் செய்துள்ளான்.

பெரியமுல்லையைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தன்னுடைய மனைவிக்காக வட்சப் குழுமத்தினூடாக நிதி திரட்டியிருக்கிறார்.

அந்த சந்தர்ப்பத்தில், “நான் றிஸ்வான் ஹாஜியார். ஒரு பிஸ்னஸ் மேன். உங்கள் மனைவிக்காக இரண்டு இலட்சம் ரூபா வைப்பிலிட இருக்கிறேன். நான் பணத்தை வைப்பிலிட உங்கள் கணக்கிலக்கத்திற்கு முயற்சிக்கிறேன். நான் வங்கியில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். அவசரமாக உங்கள் போனுக்கு வந்திருக்கும் நான்கு இலக்கங்களையும் அனுப்புங்கள்.” என பரபரப்பாக அவன் கூற இவரும் மிக அவசரமாக. அவருடைய தொலைபேசிக்கு வந்த அந்த நான்கு OTP இரகசிய இலக்கங்களை அனுப்பியுள்ளார்.

தனது வங்கிக் கணக்கிற்கிற்கு யாரோ புண்ணியவான் இரண்டு இலட்சம் ரூபா அனுப்பியிருக்கிறார் அவர் நல்லா இருக்க வேண்டுமென மனசுக்குள் பிரார்த்தித்து சாந்தோசப்பட்டவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா இழக்கப்பட்டதற்கான குறுஞ் செய்தி வர அவர் ஆடிப் போய்விட்டார்.

இவ்வாறான வழிகளின் மூலமே இவனுடைய அனைத்து திருட்டு வேலைகளும் நடைபெற்றிருக்கின்றன. நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு உதவியைக் கோருகின்றவர்களே இவனால் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றனர். ஏனெனில், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனவந்தர்களின் உதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களின் வங்கிக் கணக்கில் எப்படியும் பணம் இருக்கும் என்ற அடிப்படையிலேயே இவன் இவ்வாறானவர்களை குறிவைத்து செயல்பட்டிருக்கிறான்.

அதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் அவ்வளவாக புதிய தொழிநுட்பங்களை அறியாதவர்கள் என்பதும், இவனுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்பதை புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவன் பேசி அனுப்பிய குறுஞ் செய்திகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களால் சேமிக்கப்பட்டுள்ள அதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒன்றுபட்டு ஒரு வட்ஸப் குழுமத்தை உருவாக்கியிருக்கின்றனர். அதேநேரம், இவன் அழைப்பையெடுத்து பேசும்போது அவசரமாகவும் பதற்றமாகவும் பேசுவதாகவும் இவன் பண உதவி செய்வது போன்றே உரையாடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூரைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பத்து வயதுச் சிறுவனின் அறுபதாயிரம் ரூபாவை இவ்வாறு இணைய பணப்பரிவர்த்தனை மூலமாக திருடியதாகவும் அந்தச் சிறுவன் தற்போது மரணித்துவிட்டதாகவும் சற்றும் இரக்கமின்றி இவன் தன் கைவரிசையைக் காட்டியிருப்பதாக கண்ணீர் மல்க பாதிக்கப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதிகமான திருட்டு வேலைகள் Just pay என்ற அப்பினூடகவே நடைபெற்றுள்ளன. இந்த அப்பில் முக்கிய விடயம் என்னவென்றால் ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புவதற்கு வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் கணக்கிலக்கமும் அடையாள அட்டை இலக்கமும் பெயரும் தொலைபேசி இலக்கமும் போதுமானது எனச் சொல்லப்படுகிறது.

இணையத்தினூடாக பணப்பரிமாற்றங்கள் செய்யும்போது வங்கிக் கணக்கிற்குச் சொந்தமானவரின் தொலைபேசி இலக்கத்துக்கு OTP இலக்கமொன்று அனுப்பப்படும். அதனை கொடுத்து உறுதி செய்யும்போது பணப்பறிமாற்றம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். எனவே இலகுவில் ஏமாற்றம் செய்யக்கூடிய பலவீனமான பாதுகாப்பற்ற செயலிகள் தொடர்பில் நிதி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பில் வங்கியொன்றுக்கெதிராக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இவ்வாறாக தனது வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை ஏன் எடுப்பதில்லை என பலர் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். பல மாதங்களுக்கு முன்னர் மற்றுமொரு தனியார் வங்கியிலிருந்து சமூக சேவையாளரான வியாங்கொடையைச் சேர்ந்த மௌலவி ஒருவர் வங்கியிலுள்ள தனது பணம் திருடப்பட்டுள்ளதாக தன்னுடைய முகநூல் லைவ் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். சமூக சேவைக்காக இவருக்கு வந்த பணமே வங்கியிலிருந்து காணாமல் போயிருக்கிறது. ஒன்பது இலட்சம் ரூபா பணம் இணைய பணப்பரிவர்த்தனையூடாக திருடப்பட்டிருக்கிறது.

ஒரு தடவை இவருடன் மேற்படி சந்தேக நபர் பேசியதாகவும் பணம் வைப்பிலிடுவதாகச் சொல்லியே பணத்தை திருடியிருக்கிறான். நான்கு மாதங்களின் பின் இத் திருட்டுக்குக் காரணமானவன் தான் பொலிஸாரிடம் தற்போது சிக்கியிருக்கும் இளைஞன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சமூக சேவை செய்கின்ற பலரும் இவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். பல சமூக சேவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் சில தனவந்தர்களிடமிருந்தும் நிதி உதவிகள் கிடைப்பதால் இவனது வலையில் பல சமூக சேவையாளர்கள் சிக்கி இருக்கின்றனர். இந்நபர் வட்ஸப்பில் புரபைல் போட்டோவாக ஆஷிப் அஸ்லம் எனும் சமூக செயற்பாட்டாளரின் புகைப்படத்தையே வைத்திருப்பதாகவும் அதிகமானவர்கள் இத்திருட்டுச் செயலை தான்தான் செய்வதாக நினைத்து அவருக்கு அழைப்பெடுத்து தெரிவிப்பதாகவும் ஆஷிப் அஸ்லம் எனும் சமூக சேவகர் வருத்தத்துடன் தெரிவித்தார். அதேநேரம், தனக்குத் தெரிந்த நோயாளியொருவரும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னரும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு இவன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியே வந்துவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கு கடந்த வியாழக்கிழமை நீதிபதி சமிந்த வெலிகொட தலைமையில் கெஸ்பாவ நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு பதினைந்து இலட்சப் பணப் பிணை மற்றும் சரீரப் பிணையில் அந்நபர் விடுவிக்கப்பட்டான்.

சந்தேக நபர் இந்தத் திருட்டு நடவடிக்கைகளை தனியாகச் செய்ய வாய்ப்பில்லை என்றும் இவனுக்குப் பின்னால் ஒரு குழு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவனைப் பிணையில் எடுப்பதற்காக ஐந்து பேர் நீதிமன்றத்திற்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

உலகின் நீதி வக்கீலின் வாதத்திலும் பணத்திலுமே தங்கியிருக்கிறது. அதிகமான அப்பாவிகள் சந்தர்ப்ப வசத்தால் தான் செய்யாத பிழைக்காக அநியாயமாக உள்ளே இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது இவ்வாறான மனிதகுல எதிரிகள் வெளியே விடப்படுவது ஆபத்தானது என்ற கருத்தை பல சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இவனும் இவனின் காதலியும் கைதுசெய்யப்பட்டபோது இவன் அனைத்து உண்மைகளையும் சொல்லியதாகவும் பாதிக்கப்பட்ட சிலருக்கு பணத்தை திருப்பி வழங்கியதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கருத்துத் தெரிவித்தார். இவனும் இவன் காதலியும் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணைகள் அளுத்கட நீதிமன்றில் (வழக்கு இலக்கம் B55802) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ம் திகதி வழக்கு விசாரணைகள் இடம்பெற இருக்கின்றன.

அதேநேரம், இவனது திருட்டு நடவடிக்கைகள் அனைத்தும் நைஜீரிய இணையத் திருடர்களின் சாயலை ஒத்ததாக காணப்படுவதாக உயர் பதவி வகிக்கும் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிடுகிறார். தங்களுடைய வங்கி கணக்குககளிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக ஏழு முறைப்பாடுகள் பதியப்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர் பிரசாத் ரணசிங்க, கணினி குற்றப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனிய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயநேதி சிறி, பிரதிப் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ஆகியோரின் வழிகாட்டலின் கீழ். சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி, இன்ஸ்பெக்டர் இஷார தயாஸ்ரீ தலைமையில் சார்ஜன்ட் வூ குமார (64160), அருண சாந்த (18513), காவலர்கள் சஞ்சீவ (93399), விரங்க பண்டார (68813), மகேஷ் சந்திரகுமார (71191) ஆகியோரே இவ்விணைய பணப்பரிவர்த்தனை திருட்டுத் தொடர்பான புதைந்து கிடக்கும் மர்மங்களை வெளிக்கொணரும் செயற்திட்டத்தை முன்னெடுத்தனர்.

சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகள் என்றவகையில் நீங்கள் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அதேநேரம் யாராவது உங்கள் தொலைபேசிக்கு வரும் OTP இலக்கத்தை அனுப்பச் சொல்லி கேட்டால் அதனை யாருக்கும் அனுப்பாதீர்கள். இவ்வாறான விடயங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.