அடையாள அட்டை

  • 14

“இதென்ன மகன் இஸ்லாமிய புக் நிறைய இருக்கு”

“வாப்பா இதெல்லாம் தீவிரவாதத்தை போதிக்கிற புக் அல்ல. நீங்க எதற்கும் பயப்பட வேண்டாம். நாளைக்கு பொலிஸ் வந்த அவனுக்கே வாசிக்க கொடுக்குறன். இதுல ஏதும் தீவிரவாதம் இருக்க என பார்க்க” இது இஸ்லாமிய்ய கலாபீடத்தில் உயர்கல்வியை தொடர்ந்த அக்ரமின் மறு மொழி.

“மகன் இதென்ன பழைய மோட்டர் பைக் இன்ஜின் எல்லாம் சேர்த்தி வைத்திருக்கு”

“வப்பா நான் அதெல்லாம் போம்ப செய்ய ஐஸ் காரணுக்கு விக்கிறல்ல, நா ஏஜி ஒப்பிஸ்ல ரெஜிஸ்டராகித்தான் கராஜ்ஜ தொரந்த சோ பயமில்ல” இது இரண்டாம் மகன் இக்ராமின் மறு மொழி

தாயும், தந்தையும் இவர்களின் பேச்சுக்கு மறு மொழி தெரிவிக்காமல் எந்த நேரம் வீட்டை இராணுவத்தால் பரிசோதிக்குமோ தெரியாது என்ற பயத்தினால் இரவு நேரத்திலும் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். ரமழானை நெருங்கியுள்ள இந்நேரத்தில் இராணுவம் பரிசோதிக்க வருவதால் முஸ்லிம் வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாகுவதை எண்ணி சந்தோசமடைந்தவனாக அக்ரம் நித்திரைக்கு சென்றான்.

அப்போது அவனது கைபேசி சிணுங்கியது. இந்த இரவில் யார் கோல்? எங்காவது குண்டுகள் வெடித்து விட்டதா என்ற சந்தேகத்துடன் கைபேசியை பார்த்தான். அவனுடன் ஒன்றாக இஸ்லாமிய கலாசாலையில் கற்ற அவனது கொழும்பு நண்பரான ரிழ்வானிடம் இருந்தே அழைப்பு வருகிறது. இந்த இரவு நேரத்தில் ஏன் என எண்ணியவனாக அழைப்பிற்கு “அஸ்ஸலாமு அலைக்கும்” என பதிலளித்தான்.

“வாலைக்குமுஸ்ஸலாம், ஊர் நிலவரம் எப்படி”

“பள்ளி கிட்டயெல்லாம் ஆமியால போட்டிருக்கு,

கொழும்புல எப்படி”

“இங்கேயும் அப்படித்தான், வீடுகள செக் பண்ண சொல்லிருக்கு, உங்க வீட்ட செக் பண்ணிண”

“இல்ல, நேத்து மாதறய்ல செக் பண்ணியதாக சொன்ன, அங்க யாரோ பொலிஸ் வராத கண்டு பழய பாஸ்போர்டையும், அரபு பேப்பர் ஒன்டயும் பதவச்சி அவன அரஸ் பண்ணி, அத மாமி வாப்பாட சொல்லி வாப்பா பயந்து நான் வாங்கின புக் எல்லாத்தையும் இப்ப ராவேல பத்தவைக்க போற, நான்தான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேண்டாம் என்ற”

“அதுதான் இந்த அமெரிக்காவுடைய கூலிப்படை ஐஸ் ஆல எங்களுக்கே நாட்டுல நிம்மதியாக நிக்க எலவே”

“நாட்டில ஜfப்னாவுல எல்.ரீ.ரீ.ஈ அடிச்சதும், திகனாயில அடிச்சதும் அவங்கட சின்ன தீவிரவாத குழுவாம், எங்கடயும் 300 பேருக்குள் உள்ள சிறு குழு செய்ற வேல, ஆனா முழுச் சமூகத்தையும் சந்தேகத்துல பார்க்கிற”

“ஒரு மாடு வேலி ஒடச்சி, ஒம்பது மாடு சிக்கின கததான்”

“நாட்டு நடப்ப பத்தி பேசின, ஆன இந்த ராவுல ஏன் கோல் எடுத்தன்டு சொல்லவே இல்ல”

“அதுதான் உனக்கு தெரியுமா இப்ப ஐடின்டி இல்லாதவங்களயும் பிடிக்கிற உங்கட ஊர் ஆயிஷா தாத்தா எங்கட ஊட்லதான் வேலய செய்ற, அவட ஐடின்டி கார்ட்அ கொண்டுவந்தில்ல, அத கொண்டுவர யாருமில்லாயாம், எழுமென்டால் அத கொண்டுவந்து தார” என ரிழ்வான் தான் அழைத்தமைக்கான காரணத்தை கூறினான்,

போகவும் வேண்டும் என்றாலும் இதக்காக நான் போகவும் வேண்டுமா? வீட்டு வேலைக்கு சேரும் போது இதயல்லாம் பார்த்து எடுக்க தெரியாத?, ஆனாலும் அவசரகாலத்துல அவசரகால சட்டத்தால் பாதிக்காமல் இருக்க அவசரமாக உதவி கேட்குற இந்நிலையில் உதவாமல் இருக்கவும் முடியுமா? என எண்ணியவனாக

“ஒகே நாளக்கி நான் வாரேன்”

“ஒரு வேலயும் இல்லதானே!”

“இல்ல இல்ல, இப்ப யார்ட கையில ஐடின்டி?”

“அவங்கட ஊட்ல கேட்டால் தருவது”

“ஓகே நாளக்கி மீட் பண்ணுவோம்”

“ஒகே, இன்ஷா அல்லாஹ்” எனக் கூறியவனாக தொலைபேசி வைத்தான் அக்ரம். “உம்மா நாளக்கி கொழும்பு போகனும்” எனக் கூறிவிட்டு தாயின்பதிலையும் எதிர்பார்க்காமல் தூங்கிவிட்டான்.

மறுநாள் காலை கொழும்புக்கு செல்ல தயாராகியவனாக அக்ரம் ஆயிஷா தாத்தா வீட்டிற்கு செல்ல முற்பட்டான். அப்போது பக்கத்து வீடுகளுக்கு இராணுவத்தினர் வந்து பரிசோதித்து கொண்டிருந்தனர். அக்ரம் அவசரமாக தன் கைபேசியில் இருந்த VPN software ஐ uninstall பண்ணிவிட்டான்.

அக்ரம் வெளியேறுவதைக் கண்ட இராணுவ வீரனொருவன்,

“කොහෙද යන්නෙ, දැන් කොහෙවත් යන්න බෙ”

“Sir, මම කොළඹ යනව”

“IDD පෙන්නප්පග්”

“මෙන්න” என சட்டை பையில் இருந்த அடையாள அட்டை மற்றும், வங்கி அட்டைகளை காட்டினான் பரிசோதித்துக் கொண்டிருந்த இராணுவ வீரன் திடிரென

“පොන් එකෙ VPN දාලා තියනවද”

“නේ sir”

“හරි යන්න”

வீட்டிலிருந்து வெளியேறியதும் இப்படி விசாரணை என்றால், கொழும்புக்கு போவற்குள் எத்தனை தடவை விசாரணை செய்வார்கள் அங்கு போகும் போதும் எத்தனை மணியாகும் என எண்ணியவனாக ஆயிஷா தாத்தாவின் வீட்டை அடைந்தான்.

“வஹாப் நானா அஸ்ஸலாமு அலைக்கும்”

“வாலைக்குமுஸ்ஸலாம், என்ன மகன் காலயில இந்தப்பக்கம், ஊரேல்லாம் ஆமியால செக் பண்ற உங்க வீட்டுக்கும் வந்த”

“இல்ல ஆமிட ஐடின்டி எல்லாம் காட்டிட்டு வந்த,ஆயிஷா தாத்தாட ஐடின்டி எங்க அத எடுத்திட்டு வரசொன்ன கொழும்புல ரிழ்வான்” என தான் வந்தமைக்கான காரணத்தை அக்ரம் அவசரமாக கூறி முடித்தான்.

“ஜஸகல்லாஹ், மகன் இந்த அவசர டைம்ல உதவ வந்ததற்கு, ஆன நா காலயில ஆறு மணிக்கு போற பஸ் டிரைவர்ட ஐடின்டிய கொடுத்தனுப்பின, இருங்க மகன் ஏதாவது குடிச்சிட்டு போக”

“இல்ல இப்ப இவடத்துக்கு ஆமியால வருவது நான் போறேன்” எனக் கூறியவனாக வஹாப் நானாவின் வீட்டிலிருந்து வெளியேறினான். என்றாலும் அவனுக்கு நாட்டில் கத்தி போன்ற ஆயுதங்களை விற்கும் முஸ்லிம் வியாபாரிகளையும் தீவிரவாத நடவடிக்கைக்காக ஆயுதம் விற்பனை செய்பவர்களாக சித்தரித்து கைது செய்யும் காலத்தில் கொழும்புக்கு செல்வதாக கூறிவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றால்… என்னையும் சந்தேகத்தில் கைது செய்வார்களோ என எண்ணியவனாக திடிரென தீர்மானமொன்று எடுத்து மாத்தறைக்கு செல்ல எதிரில் வந்த பஸ்ஸில் ஏறினான்.

எதற்கும் வீட்டில் கூறுவோம் என எண்ணியவனாக பல முறை வீட்டிற்கு கைபேசியில் அழைத்து பார்த்தான். பதிலில்லை. அப்போது அக்ரமின் எதிர் பக்க ஆசனத்தில் தீவிரவாதிகள் பயன்படுத்திய அதே மாதிரி பை (bag) ஒன்றுடன் சிங்கள இளைஞன் ஒருவன் வந்தமர்ந்தான். அவனுக்கு பின்னால் அவனின் மனைவியும் பிள்ளையும் அருகில் வந்தமர்ந்தனர்.

இந்த பையிலும் குண்டு இருக்குமா? என எண்ணியவன், இருக்காது அவனுக்கு சிறு குழந்தை உள்ளது. இவன் தீவிரவாதியாக இருக்க மாட்டான். என எண்ணியவனது சிந்தனையை சிதறடிக்கும் விதமாக அவனது கைபேசி சிணுங்கியது. அவனது அம்மாவின் தொலைபேசி இலக்கமே காட்டியது. எனவே கைபேசிக்கு பதிலளித்தான்.

“உம்மா ஏன்ட கொழும்பு பயணம் கென்ஸெல் நா மாத்தறக்கி போற” என்று கூறியதும் கைபேசி துண்டித்துவிட்டது. ஆமை வேகத்தில் செல்லும் பஸ்ஸில் அக்ரம் தூங்கிவிட்டான். சிறிது நேரம் சென்றிருக்கும்,

“නගිටපග්, නගිටපග්” என சத்தம் கேட்கவே திடுக்கிட்டு எழுப்பினான் அக்ரம்

“කොහෙද යන්නෙ” என அதட்டினான் தீடிர் சோதனைக்கு வந்த இராணுவ வீரன்

“Sir, මාතරට යනව,”

“ගෙදරින් එනකොට කිව්ව කොළඹ යනව කීල, දන් මාතරට යනව, ඔයත්      ත්‍රස්තවාතියක් ද” எனக் கூறியவனாக அக்ரமை பஸ்ஸில் இருந்து பிடித்துக்கொண்டு சென்றான் இராணுவ வீரன். தாயின் தொலைபேசி மூலம் உரையாடியது இன்னொரு இராணுவ வீரன் என்பதை அக்ரம் அப்போதுதான் உணர்ந்தான்.

Ibnuasad

“இதென்ன மகன் இஸ்லாமிய புக் நிறைய இருக்கு” “வாப்பா இதெல்லாம் தீவிரவாதத்தை போதிக்கிற புக் அல்ல. நீங்க எதற்கும் பயப்பட வேண்டாம். நாளைக்கு பொலிஸ் வந்த அவனுக்கே வாசிக்க கொடுக்குறன். இதுல ஏதும் தீவிரவாதம்…

“இதென்ன மகன் இஸ்லாமிய புக் நிறைய இருக்கு” “வாப்பா இதெல்லாம் தீவிரவாதத்தை போதிக்கிற புக் அல்ல. நீங்க எதற்கும் பயப்பட வேண்டாம். நாளைக்கு பொலிஸ் வந்த அவனுக்கே வாசிக்க கொடுக்குறன். இதுல ஏதும் தீவிரவாதம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *