இருண்ட உள்ளங்கள்

”அல்லாஹீ அக்பர்….. அல்லாஹு அக்பர்….” இந்த ஒலியைக் கேட்டது தான் தாமதம் மனது பதறியது.” அல்லா, ஏதாவது நடந்துட்டா…?” என மனதில் கேட்ட படியே கடிகாரத்தைப் பார்க்கிறேன். மணி இரவு 10.30 தைக் காட்டியது எனக்கு என்ன, ஏது என்று புரியவில்லை. இந்த நேரத்தில் உம்மா வந்து ”ஹனா தம்பீகள எழுப்பு அவசரமா சிங்களவனுக வந்தாம்” அவரது முகம் அச்சத்தால் வாடியதைக் கண்ட நான் ஓடிப் போய் உறக்கத்திலிருந்த தம்பிகளை எழுப்பலானேன்.
”தம்பி… எழும்பு சிங்களவனுக வந்தாம்……” என்னால் அதற்கு மேல் பேச வார்த்தை வரவில்லை. ஏதோ தொண்டையை அடைப்பது போல உணர்ந்தேன். உடனே உள்ள பலத்தையொல்லாம் கூட்டி அவனைத் தட்டி எழுப்பினேன்.

அக்கம் பக்கத்தினர் பள்ளிக்கு ஓடுவதாக கேள்விப்படும் நம்மால் போக முடியவில்லை. பின் எம் பக்கத்து உறவினரின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே இன்னும் பலர் வந்திருந்தனர் . அனைவர் முகத்திலும் பீதி….. நானும் ஏதும் செய்ய முடியாதவளாய் ஓர் ஓரமாய் நிற்கிறேன். இன்று பகல் முதல் நடைபெற்ற சம்பவங்களை மனத்திரையில் ஓட விட்டேன்.

பகல் ஜும்ஆ தொழுகையின் பின் எமது ஊரினூடாக கடும் போக்கு வாதிகள் ஊர்வலம் செல்வதைக் கேள்விப்பட்ட பலர் ஊர் எல்லைக்கு விரைந்தனர். சிறிது நேரத்தில் சின்ன மாமா வந்து ”எகடாள்களுக்கு கண்ணீர் பொஹ அடிச்சிய. பெரிய பள்ளீகிட்ட. அவனுக பொல்லு, அது, இதெல்லம் எடுத்து கொண்டு..” என அவர் கூறக் கூற மனது பதறியது. ”அல்லா, அவனுகளுக்கு குடுக்கோணும்.” உமும்மா கூறிக் கொண்டிருந்தார் நான் வீட்டுக்கு ஓடினேன். உம்மா ஓதிக் கொண்டிருந்தார் ”எந்தேன் உம்மா ஓதிய?” நான் கேட்டேன். என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு ”ஸுரதுன் நூஹ். எதிரிகள்டீந்து அல்லா பாதுகாக்கிய” என்றவர் ஸுரதுல் பகராவிலிருந்தும் ஓர் வசனத்தை கற்றுத் தந்தார். அவரது முகத்தில் கவலையின் ரேகைகள்.

மாலையில் திடுக்கிடும் தகவலை சாச்சி சொன்னார். ”தாத்தா அதிகாரகொட, சீனாவத்த எல்லெடத்துலயும் நெருப்பு வெச்சாம். பள்ளீகள்ளேம் கை வெச்சாம் அந்த நாய்க…..” அவர் பதறிய படியே கூறினார். ”அப்ப அவனுக இங்கேக்கும் வரும்” நான் கூறியதும் ”அல்லா காப்பாத்தணும் சும்மா பேசாத…” உம்மா கோபப்பட்டார். எல்லோரிடமிருந்தும் ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது. ”வரும் நாங்களும் போபர்லேன் ஈச்சிய. கவனமா நிச்சோணும்” சாச்சி கூறியதுமே எனதுடல் லேசாக நடுங்கியது. கேட்டின் வெளியே பார்க்கிறேன் அனைவரும் வீதியில் முகங்களில் அச்சத்துடன்…….

இரவானதும் ”உம்மா….. வாப்பா எப்டி வார கே( f )பீ போட்டே” என நான் வெளியூரில் பணிபுரியும் வாப்பாவைப் பற்றிக் கேட்டதும் ”அவரு வாப்மூட்டுகு பெய்த்த.” எனக் கூறியவரின் முகம் சற்று மலர்ந்தது. நான் உமும்மா வீட்டுக்குச் செல்கையில் ”ஹனா…. எங்கேன் போற. ஆம்புள மாய் வா உள்ளுக்கு… ”உம்மா சீறினார்.” எனக்கு சோம்பற” என்ற படியே நான் ஓடினேன். ”ஹனா….. ஹனா….” உம்மாவின் குரல் ஓங்கி ஒலித்தது. வீதியெங்கும் பச்சை மற்றும் கறுப்பு உடையணிந்த இராணுவ வீரர்கள். அவர்களின் கண்களில் படாது ஆயுதம் சேகரிக்கும் நம் இளைஞர் படை. எனக்கு எல்லாமே விசித்திரமாகப் பட்டது. நான் இவ்வருடம் க. போ.த சாதாரண தரப் பரீட்சை எழுதத் தயாராகிக் கொண்டிருந்தேன். சிலர் கூறுவது காதில் விழுந்தது. ”அவனுக வந்தா உடப்படாது.” நான் திரும்பிப் பாராது உமும்மா வீட்டுக்கு சென்றேன். அங்கும் இதே கதை தான் ‘நமக்கு மட்டும் ஏன் இப்படி ‘ எனக்குப் புரியவில்லை.

”டுமீல்….. டுமீல்……” என்ற சப்தத்தைக் கேட்டு மீண்டும் விளிப்படைந்தேன். ”அல்லா அவனுக எகடாள்கள சூட் பண்ணியாம்……. அல்லா……” யாரோ சப்தமிட்டுக் கூறியவுடன் அனைவரும் அழத் தொடங்கினர். எனக்கும் நெஞ்சு அடைத்து விட்டது. 15 நிமிடங்கள் வரை துப்பாக்கி சூட்டுச் சப்தம் காதைப் பிளந்தது. அந்த நேரத்தில் மின்சாரம், தொலைபே‌சி கவரேஜ் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டது. யாதுமற்ற இக்கட்டில் மாட்டினோம். சில நிமிடங்களில் அறியக்கிடைத்த தகவல் அனைவரின் வயிற்றில் புளியைக் கரைத்தது. நம்மவரில் பல பேருக்கு தோட்டாக்கள் தாக்கியிருந்தது.

நான் அழுதபடி உம்மாவைத் தேடி ஓடினேன். அவர் ஓதிக் கொண்டிருந்தார் அவர் அழும் ஓசை என் நெஞ்சைப் பிசைந்தது. ”ரவூப் எங்கேன்?” உமும்மா கேட்பது விளங்கியது. ”ஓ….. அவனும் சண்ட நடக்கியொடத்துல” உம்மா சொல்லிய படியே அழத்தொடங்கினார். சின்ன மாமாவை எண்ணியபடி நானும் அழுதேன். அனைவரும் அழும் காட்சியை என்னால் சகிக்க முடியவில்லை. உள்ளம் பிளந்து விடும் படியாக கவலை ஏறியது. எங்கு பார்த்தாலும் அழுகை, கூக்குரல் எனத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இரவு முழுவதும் ஊரில் சலசலப்பு. ‘ஓ…… இந்த அமைதியான இரவில் இத்தனை கலவரங்களா?’ என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. விடிந்த பின்னர் தான் தெரிந்தது. இருவர் ஷஹுதானர் என்று. எந்நாவு மெதுவாக ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ என்றது…..

பாத்திமா ரிப்தா
தர்ஹா நகர்.
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

Leave a Reply

Your email address will not be published.