போர்வையின் பூர்விகம்

நினைவலைகள் நிகழ்வில் முன்னால் அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் நஸீர், M.H.பௌதுல் அமீன், சகோதரர் நுஸைர் ஆகியோரால் எடுத்துறைக்கப்பட்ட போர்வையின் வரலாற்றின் தொகுப்பு

முஸ்லிம் மக்களால் போர்வை என்றும், சிங்கள மக்களால் கொடபிடிய என்றும் அழைக்கப்படும் இக்கிராமம் அகுரெஸ்ஸ தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இவ் ஊரில் சுமார் 600 குடும்பங்கள் உள்ளன. இவ் ஊரின் முக்கியத்துவம் என்னவெனில், ஊரைச் சுற்றி பௌத்த மக்கள் வாழ்கின்றனர். எனினும் இங்கு மக்கள் ஒற்றுமையுடன் கௌரவமாக வாழ்கின்றனர்.

இங்கு 1000 வருடங்களுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையில் வந்த நல்லடியார் ஸெய்யித் ஸதாத் பக்கீர் முஹியத்தீன் அவர்களின் அடக்கஸ்தலம் அமையப் பெற்றதன் விளைவாகவே இக் கிராமத்தில் முஸ்லிம் மக்கள் வாழலாயினர். அன்று தொடக்கம் முஸ்லிம்களும், சிங்கள மக்களும் இங்கு வந்து இவ் அடக்கஸ்தலத்தை தரிசித்து செல்கின்றனர்.

வரலாற்றுத் சான்றுகள் படி இலங்கைக்கும், அரேபியாவிற்குமிடையேயான வர்த்தகத் தொடர்பு சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது. அதேபோல் இஸ்லாம் மதம் உலகிற்கு அறிமுகமாகி சுமார் 1400 ஆண்டுகள் பழமையானது.

பண்டைய காலம் தொட்டே வணிக நோக்கத்திற்காகவும், முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்களின் கால்தடத்தை தரிசிப்பதற்காகவும் அரேபிய மக்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். இங்கிருந்து சிவனொளி பாத மலைக்கான நீர் வழிப் பாதை நில்வள நதியினூடாக தெனியாய, இரத்தினபுரி, அங்கிருந்து சப்ரகமுவ மாகாணத்திற்கூடாக செல்வதாக உள்ளது. பிரதானமாக காலி,பேருவளை, வெலிகம போன்ற பகுதி முஸ்லிம் வியாபாரிகள் நில்வள நதிக் கரையோர பாதையூடாக (தவளம) பயணிக்கையில் சாதிக்காய், வசாவாசி மற்றும் இரத்தினக்கற்கள் என்பவற்றை வியாபார பொருட்களாக கொண்டு சென்றனர். மேலும் இப் பகுதி இரத்தினக்கல் காணப்படும் இடமாகும். அன்று இங்கு இரத்தினக்கல் அகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இவ்வடிப்படையில் சுமார் 1000வருடங்களுக்கு முன்னர் வணிக நோக்கத்திற்காகவும், முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதம் நபியின் கால்தடத்தை தரிசிப்பதற்காகவும் பக்தாதில் இருந்து இலங்கைக்கு வந்தவரே (இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள) ஸெய்யித் ஸதாத் பக்கீர் முஹியத்தீன் வொலியுல்லாஹ் ஆவார். இவர் நபியவர்களின் 24வது பரம்பரையில் வந்தவர் என நம்பப்படுகிறது. இவர் நில்வள நதிக் கரையோர பாதையூடாக (தவளம) தனது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கையில் தனது தங்குமிடமாக இவ்விடத்தைக் அமைத்துக் கொண்டார்.

இவர் அவ்வாறு தங்கிய காலப்பகுதியில் இப் பகுதியில் மக்களின் வசிப்பிடங்கள் காணப்படவில்லை. வெறும் காடுகளால் சூழ்ந்த பகுதியாகவே காணப்பட்டது. ஆரம்பத்தில் அன்னார் மாத்திரமே இங்கு இருந்துள்ளார். பிற்பட்ட காலங்களிலே ஏனைய மக்கள் இவ்விடத்தை தமது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டனர். அவ்வாறு வசிப்பிடமாகக் கொண்ட மக்கள் சிங்கள மக்களாவார். அன்னார் மாத்திரமே முஸ்லிமாக இருந்துள்ளார். எனினும் அவருடைய நன்னடத்தை, நம்பிக்கை, நாணயம் போன்ற நற்குணங்களால் ஈர்க்கப்பட்ட சிங்கள மக்கள் இவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். சில காலங்களின் பின் அன்னார் இவ்விடத்திலேயே இறையடி சேர்ந்து இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

காலங்கள் கடந்து ஒருநாள் காலியைச் சேர்ந்த முஸ்லீம் வியாபாரிகள் இருவர் வியாபார நோக்கில் இங்கு தங்கிய வேளை, அவர்களில் ஒருவர் கனவு ஒன்று கண்டார். அக்கனவின் மூலம் காண்பிக்கப்பட்டது என்னவெனில் இப்பகுதியில் நல்லடியார் ஒருவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமையும், அன்னாரின் அடக்கஸ்தலத்தை தேடித் சென்றால் (அடக்கஸ்தலத்தில் உள்ள மீஸான் கல் கனவில் காண்பிக்கப்பட்டது). அங்கே  இரத்தினக்கல் பை ஒன்று உள்ளதாகவும், அதைப் பெற்று உங்கள் வியாபாரத்தை முன்னேற்றிக் கொள்ளலாம் என்பதாகும். இதன் பின்னர் அவ்வியாபாரிகள் அடக்கஸ்தலம் உள்ள இடத்தை தேடிக் கண்டுபிடித்து அவ்விடத்தைச் சுத்தம் செய்து தற்காலிகமான கூரை அமைத்து அடையாளப்படுத்தி விட்டு மீண்டும் காலிக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் இங்கு உள்ள நல்லடியாரின் அடக்கஸ்தலம் பற்றியும் அவ்விடத்தை பாதுகாப்பது நமது கடமை என்றும் எடுத்துக்கூறினர். அதன் பின்னர் மக்கள் இவ்விடத்திற்கு வந்து அவ்வடக்கஸ்தலத்தை போர்வையினால் (புடவை) போர்த்தினர். இதனால் தான் கொடப்பிடிய எனும் இக்கிராமம் முஸ்லீம் மக்களிடையே போர்வை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

(நினைவலைகள் நிகழ்வில் முன்னால் அதுரலிய பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் நஸீர், பௌதுல் அமீன், சகோதரர் நுஸைர் ஆகியோரால் எடுத்துறைக்கப்பட்ட போர்வையின் வரலாற்றின் தொகுப்பு)

Ibnuasad