நீ யார் மனிதா ?

  • 10

மனித உடம்பு மிக நுணுக்கமாகச் தொகுக்கப்பட்ட அல்லாஹ்வின் ஒரு அற்புத படைப்பாகும். அது போல் ஒன்றை உருவாக்க யாராலும் ஒருநாளும் முடியாது. அதைப் பழுதுபார்க்கும் பணியைத்தான் இன்று உச்சைத் தொட்ட வைத்திய உலகம் செய்துகொண்டிருக்கின்றது. அதில் பலதில், பல போது படு மோசமான தோல்வியைக் கூட சந்தித்துள்ளது, இன்னும் சிக்கெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது. இதன் அர்த்தம் வைத்தியத் துறையின் பலவீனமல்ல. அல்லாஹ்வே பலமானவன், அவனை மிகைத்த எந்த ஆற்றலும் கிடையாது என்பதேயாகும். இந்த உடம்பு அல்லாஹ்வின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் எந்த நிபுணத்துவமும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்த எதார்த்தைப் புரியாத பலர் தலைகால் தெரியாமல் ஆடி, அட்டகாசம் செய்துகொண்டிருக்கின்றனர்.

நோயற்ற வாழ்வு இறைவன் தரும் பெரும் வரம், இதைப் பலர் புரிவதில்லை, அதைப் புரியவைக்க Dr. Arshath Ahamed அவர்கள் தன் அனுபவத்தை அற்புதமாக வார்த்தையால் செதுக்கி மனித மனங்களில் செலுத்த முயற்சித்துள்ளார். மனிதர்கள் தன்னிலை உணர்ந்து வாழ அவரின் வார்த்தைகள் உரமாய் அமையும். இனி நீங்கள் Dr. ன் அனுபவத்துக்குள் நுளையலாம்.

2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் வாரம் திங்கள் இரவு. கடும் குளிரில் கண்டி நகர் முழுவதும் தலை மட்டும் பெட்சீட்டை இழுத்து போர்த்தி தூங்கி கொண்டிருக்கின்ற நேரம். நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே பயிற்சி வைத்தியராக சேர்ஐரி வாட்டிலே இருந்த நானும் மெழுகுவர்த்தியும் சீச்சீ இல்லை இல்லை தாதியர்கள் இருவரும் தூக்கத்தை தொலைப்பதற்காய் ஐலன்ட் ஜிஞ்சர் கோப்பியை அருந்திக் கொண்டு பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்த போது நேரம் 11.55

நள்ளிவிரவின் நிஷப்த அலைகளை கிழித்துக்கொண்டு நான்கு வீல்களில் ஒன்று மட்டுமே ஒழுங்காக உருளுகின்ற, பாதிக்கால்கள் துருப்பிடித்த ட்ரொலி ஒன்றிலே 60 வயது மதிக்கத்தக்க முதுமையின் சாயலே இல்லாத ஒருவர் தள்ளிக்கொண்டு வரப்படுகிறார். ஆஜானுபாகுவான உடல், கட்டுமஸ்தான புஜங்கள், முறுக்கேறிய மீசை, அயன் குழையாத நீற்றான ஆடை. ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினன்ட் என்பது உங்களுக்குப் புரிந்தது போலவே ஒற்றைப் பார்வையிலே எனக்கும் புரிந்து விட்டது.

அந்த மனிதர் தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். எவ்வளவு அடக்கியும் முடியமால் அழுகை வெடித்து சிதறிக் கொண்டிருந்தது. கண்கள் விழி நீரைச் சாரை சாரையாக சொரிந்து கொண்டிருந்தன. அவர் பற்களை இறுகக் கடித்து அழுகையை விழுங்கி கொண்டிருந்தது தெளிவாகவே தெரிந்தது. “ஐயோ என்னை காப்பாற்றுங்கள்! என்னால் யூரின் போக முடியவில்லை டாக்டர்… ஐயகோ … எனக்கு வயிறு வலிக்கிறதே!” என்று புலம்பிக் கொண்டிருந்த அவரது கைகளையும் தலையையும் தடவி ஆறுதல் படுத்திக் கொண்டிருந்த அவரது மகளின் கண்களில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்த ஏக்கம் மங்கலாகத் தெரிந்தது. “Dr please do something to alleviate his suffering….” என்று கரகரத்த தொனியிலே வெளி வந்த அவளது காந்தக் குரல் எல்லா சௌபாக்கியங்களோடும் வாழ்ந்த அவர்கள் இப்போது அநாதரவாய் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளார்கள் என்பதையும் சேர்த்தே சொல்லியது.

லெப்டினன்ட் சில்வா சிறுநீர் அடைப்பு வரும் புரஸ்டேட் கேன்சர் (Prostate Cancer) நோய் உள்ள ஒருத்தர். கொஞ்ச நாட்களாக சிறுநீர் போவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று வைத்தியரிடம் சென்று பரிசோதித்த போதுதான் இந்த நோய் இருப்பது தெரியவந்தது. கடந்த இரண்டு வாரங்களாக அவருக்கு சிறுநீர் போவது முற்றாகவே தடைப்பட்டிருந்ததது. அதனால் யூரினை வெளியேற்றுவதற்காக வேண்டி ஏற்கனவே அவருக்கு கதீடர்(Urinary Catheter) ஒன்று போடப்பட்டிருந்தது. அவரது துரதிஷ்டம் அன்றைய நாள் பின்னேரம் ஆடை மாற்றும் போது தவறுதலாக அந்த கதீடர் இழுபட்டு கழட்டப்பட்டு வெளியே வந்து விடுகிறது. அந்தக் கணப் பொழுதிலிருந்து அவருக்கு சிறுநீர் கழிக்க முடியவில்லை. அப்படியே மூத்திரப்பை(Bladder) வீங்கிப் பருத்து இனி விரிவடைய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டது. இதனால் தாங்க முடியாத வலியை அது கொடுத்துக் கொண்டிருந்தது. இது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒரு கஷ்டம். தாளாத வேதனை. சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருக்கும் ஆனால் எவ்வளவு முக்கியும் சிறுநீர் வெளியேறாமல் அடி வயிற்றிலே தேங்கி நிற்கும். யூரின் பாதை அடைக்கப்பட்டு இருக்கிறது. வயிறு வெடித்து விடும் போலிருக்கிறது. இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி ஒரு கஷ்டம்! அப்படி ஒரு வேதனை!. கொஞ்ச நேரம் யூரினை அடக்கிப் பார்த்தால் தெரியும் இந்த வேதனை.

தாங்கொண்ணா துயரத்தில் உழன்று கொண்டிருந்த அவர் ஏதாவது செய்து தனது வேதனையை நீக்குமாறு மன்றாடினார். கை இரண்டையும் கூப்பினார். கும்பிட்டார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவருக்கு கதீடர் போடுவது என்பது மிகச் சிரமமான காரியம். ஏற்கனவே போடப்பட்ட கதீடர் கூட விஷேட வைத்திய நிபுணரினால் சிஸ்டர்ஸ்கொபி மூலமாகத்தான் போடப்பட்டது. அப்படி திரும்பவும் கதீட்ரல் போடுவதென்றால் நாளை காலை 8மணிக்கு பிறகுதான் இவைகளை செய்ய முடியும். இப்போது இந்த நள்ளிரவிலே என்ன செய்வது. ஒரு வீரனாய் வாழ்ந்தவர் அழுதழுது கைகூப்பி உதவி செய்யுமாறு மன்றாடியது என்னை உடைத்து போட்டுவிட்டது. இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டுமே, இவருக்கு உதவ வேண்டுமே என்ற எண்ணமே மூளை முழுக்க ஓடித்திரிந்து. நிறைந்திருக்கும் சிறுநீரை ஒரு வழியாக வெளியேற்றினால் அவர் இந்த நரக வேதனையில் இருந்து விடுதலை அடைந்துவிடுவார். மாற்றுத் திட்டம் தயாரானது.

ஊசி மூலமாக வலி நிவாரண மருந்துகளை கொடுத்து விட்டு ஒரு முயற்சிக்காக பச்சிளம் குழந்தைகளில் மூக்கு மூலமாக பால் ஊட்டுவதற்காக பாவிக்கின்ற அந்த NG feeding tube இல் மிகச்சிறிய ( 5 French ) ஸைஸ் உள்ள ஒன்றை தெரிவு செய்து நன்றாக லுப்ரிகண்ட் பூசி சிறுநீர் வழியினூடாக மெதுவாக செலுத்தி மூத்திர பையிலே இருக்கிற யூரினை வெளியேற்றலாமா என்பதுதான் திட்டம். எடுக்கலாம் என்று சொன்னது மனசு. முயற்சி செய்தோம். திரு வினையானது. அவரது அதிர்ஷ்டம்! அந்தோ அந்த சிறிய குழாய் அடைப்பையெல்லாம் தாண்டி அப்படியே மூத்திரப்பை உள்ளே சென்று லேண்ட் ஆனதற்கு அறிகுறியாய் மடை திறந்த வெள்ளம் போல் யூரின் அந்த குழாயிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. அதுபோலவே அவர் முகத்திலும். யூரின் முழுக்க வெளியேறி வேதனையும், வலியும் இல்லாமல் போன போது அவர் அடைந்த சந்தோசம் இன்றும் என் கண்களில் நிழலாடுகிறது. தாளமுடியாத மகிழ்ச்சியினால் எனது கைகளை கையுறைகளை கழற்றுவதற்கு முன்னமே அள்ளி எடுத்து முத்தமிட்டார். கட்டிப்பிடித்து அழுதார். கடைசியில் காலில் விழுந்து வணங்கினார். வாழ்க்கையில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய உதவியாக இதை கொண்டாடினார். அவர் வோர்டில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி போகும் வரை காலையில் எழுந்ததும் என்னை தேடி வந்து முதல் குட் மார்னிங் சொல்வதும் அவராகத்தான் இருந்தது.

என்ன தான் ஆஜானுபாகுவான ஆளாக இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போகிற போது நாமெல்லாம் ஒன்றுமில்லாதவர்கள் என்பது அப்போது தான் எனக்கும் தெரிந்தது. நீ என்னதான் பெரிய அப்பாடக்கராக இருந்தாலும் ஒருநாள் மற்றவர்களுக்கும் முன்னில் சாதாரண மனிதனாய் வாழத்தான் வேண்டுமென்பதும் புரிந்துபோனது.

அதே வருடம். அதே வோட். காலை நேர வோட் ரவுண்டை கென்சல்டன்ட் உடன் போய்க்கொண்டிருக்கின்ற நேரம். எங்களோடு வேலைசெய்த சீனியர் “அய்யா” (அண்ணன்) ஒருத்தர் வோட் ரவுண்டின் மத்தியிலே சம்பந்தமே இல்லாமல் ஹாஹஹா என சிரிக்கிறார். கென்சல்டனும் முறைத்துப் பார்க்கிறார். அப்படியே ஓரிரு நிமிடங்களில் மீண்டும் சிரிக்கிறார் சத்தம் போட்டு கூ போடுகிறார், கத்துகிறார். எங்களுக்கெல்லாம் தூக்கிவாரிப்போட்டது. “இவனுக்கென்ன பைத்தியமா என்று நாங்கள் எல்லாம் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தோம். “Are you mad or druken Dr Saman? என்று நெருப்பாய் சீறினார். திருவாளர் தீப்பொறி ஆறுமுகமாய் மாறினார் Dr பிரசன்ன ஆராச்சி MBBS MS FRCS(Lon) . நாங்களெல்லாம் பல்லியாய் அஞ்சி ஒடுங்கி பதைபதைத்து நின்றபோது தான் அந்த சம்பவம் நடந்தது. Dr சமனுக்கு கை கால்கள் உதறத் தொடங்கியது. வாயிலிருந்து வீணி வடிந்தது, கண்களிரண்டும் அப்படியே மேலே சொருகிக் கொண்டது. கீழே மயங்கி விழுந்தார். துடிதுடித்து மூர்ச்சை ஆகினார். அவரை அறியாமலே சிறுநீரும் கழித்துக் கொண்டிருந்தார். இந்த நிமிடம்-வரை வைத்தியராக இருந்த நண்பர் மறுவினாடியே வலிப்பு நோயாளியாக மொத்தமாகவே மாறிப்போனார். அவரை அலாக்காக அப்படியே தூக்கி கட்டிலில் கிடத்தி வலிப்பு நிவாரணி மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஏன் வலிப்பு வந்தது? எப்படி வலிப்பு வந்தது? என்பதை ஆராய்வு செய்வதற்காக CT ஸ்கான் எடுக்கப்படுகிறது. ரிப்போர்ட்க்கு பதிலாக ஆச்சரியமே அசால்ட்டாக வந்தது. ரிப்போர்ட் ஐ பார்த்ததும் எனக்கும் தலை சுற்றுவது போல் இருந்தது. Dr சமனின் மூளையின் உள் நடுப்பகுதியில் Glioblastoma எனப்படும் கேன்சர் கட்டி வளர்ந்து கொண்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

Dr சமன் அவரது குடும்பத்திலேயே படித்து பட்டம் பெற்ற ஒரே ஒருத்தர். நிறைய கனவுகளோடும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையோடும் இருந்த முயற்ச்சியாளான். மூன்று ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள விவசாய குடும்பத்தில் பிறந்த தலைமகன். அவர் மருத்துவ பீடத்தக்கு தெரிவுசெய்யப்பட்ட போது முழு ஊரே விழாவெடுத்து கொண்டாடியதை அடிக்கடி சொல்லிக் கொள்வார். நல்ல நகைச்சுவையாக பேசுவார். ஐந்து வருடங்கள் மருத்துவப் படிப்பை கஷ்டப்பட்டு படித்து முடித்து வைத்தியராகி வெளியேறுவதற்கு காத்துக்கொண்டிருக்கிற அந்த தருணத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்து விடுகிறதே என்பதுதான் அவருக்கு மிகவும் கவலையை அளித்தது. அந்தக் கவலை முழு வைத்திய சாலையும் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறது. எல்லோரும் சேர்ந்து பணம் திரட்டினோம். பல இலட்சங்கள் சேர்ந்தது. அவர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே உள்ள ஸ்பெஷலிஸ்ட்டினால் சர்ஜரி செய்யப்படுகிறது. எல்லாமே நன்றாக நடந்து முடிகிறது. இவர் இந்த கேன்சரில் இருந்து மீண்டு வருவார். மீண்டும் வேலை செய்வார். ஊருக்கும் நாட்டிற்கும் சேவை செய்வார் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் துளிர் விடுகிறது. எல்லோருக்கும் சந்தோஷம். நாட்டிற்கு திருப்பி வந்தவர் இரண்டு மாதங்கள் மட்டுமே நன்றாக இருந்தார். அதன்பின் விதியின் விளையாட்டு மீண்டும் தொடங்குகிறது. அதே அநு பல்லவி. வெட்டிய கட்டி மீண்டும் அதிக அளவில் வளரத் தொடங்குகிறது. நாளடைவில் அவருக்கு நடக்க முடியாமல் போகிறது .உணவு சாப்பிட முடியாமல் போகிறது. ஏன் உமிழ்நீரைக் கூட விழுங்க முடியாது போகிறது. கண்கள் கூட பார்வை இழந்து போகிறது. எல்லாமே கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் கடைசியில் அவரது நிலைமை மோசமாகிப் போனது தான் மிச்சம். இவருக்கு இந்த சர்ஜரியை செய்யாமல் விட்டு இருந்தால் நன்றாக இருக்குமோ என்று நாங்கள் எல்லாம் எண்ணுகிற அளவுக்கு நிலைமை மாறியிருந்தது.அந்த அளவுக்கு அவர் கஷ்டப்பட்டார். துன்பப்பட்டார். ஒரு சில வாரங்களில் ஐசியூவில் இருந்து என் கண் முன்னேயே மரணித்துப் போனார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

என்னதான் நீ மருத்துவனாக இருந்தாலும், பணம் இருந்தாலும், தொழில்நுட்பம் இருந்தாலும், செல்வாக்கு இருந்தாலும் உனது கைகளையும் மீறி நிறைய விஷயங்கள் இந்த உலகத்திலே உண்டு என்பதை பொட்டில் அடித்தாற் போல் சொல்லி சென்றது அவரது மரணச் செய்தி.

வாழ்கை என்பது இவ்வளவுதான். எழுதப்பட்ட மரணம் இன்றோ நாளையோ என்பது யாருக்குமே தெரியாமல் இருப்பது தான் இந்த வாழ்க்கையின் ட்விஸ்ட். இப்படிப்பட்ட உத்தரவாதம் இல்லாத இந்த வாழ்கைக்கு தான் இவ்வளவு போட்டியும் பொறாமையும், குத்து வெட்டுக்களும். ஆக நாம் யாருமே இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என்ற உண்மை தினம் தினம் நமக்கு இவ்வாறான சம்பவங்கள் மூலம் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது எவ்வளவு யதார்த்தமானது?

பிற் குறிப்பு-
இது போன்ற நிறைய கதைகள் உண்டு. வாழ்வியல் படிப்பினை தரும் நிறைய சம்பவங்களும் உண்டு. நேரம் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் எழுதலாம்.

மனித உடம்பு மிக நுணுக்கமாகச் தொகுக்கப்பட்ட அல்லாஹ்வின் ஒரு அற்புத படைப்பாகும். அது போல் ஒன்றை உருவாக்க யாராலும் ஒருநாளும் முடியாது. அதைப் பழுதுபார்க்கும் பணியைத்தான் இன்று உச்சைத் தொட்ட வைத்திய உலகம் செய்துகொண்டிருக்கின்றது.…

மனித உடம்பு மிக நுணுக்கமாகச் தொகுக்கப்பட்ட அல்லாஹ்வின் ஒரு அற்புத படைப்பாகும். அது போல் ஒன்றை உருவாக்க யாராலும் ஒருநாளும் முடியாது. அதைப் பழுதுபார்க்கும் பணியைத்தான் இன்று உச்சைத் தொட்ட வைத்திய உலகம் செய்துகொண்டிருக்கின்றது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *