தத்தெடுக்கப்பட்ட என் மகன்.!!

  • 23

மழலை உலகில் கால்பதித்து சிட்டாய் சிறகு விரித்து பறந்து திரிந்த என் இரண்டரை வயது மகன் திடீரென சுகவீனமுற்று நள்ளிரவில் தொடங்கிய அவனது கதறல் ஓயாமல் விடியும் வரை இருந்தது.

அவன் முகத்தில் சிரிப்பினை மீட்டி; அவனின் சுகத்தை மீளப் பெறுவதற்காக விடிந்ததும் வைத்தியரிடம் ஓடினோம். அவனுக்கு போட்ட ஊசி பிஞ்சுக்கையை பதம் பார்க்க என் கண்ணிலும் கண்ணீர் வடிந்தது. பிள்ளைக்கு ஒன்றென்றால் துடித்துப்போவது பெற்றோர் தானே!

இதனை அங்கே வயதான கணவன்-மனைவி இருவரும் இருவிளி அகல பார்த்துக் கொண்டிருந்தனர். இருவரின் தோற்றமும் வயது முதிர்நது இருந்தாலும் பார்க்க இளவயது காதல் ஜோடிகளைப் போன்று இருந்தார்கள். அந்த வயது முதிர்ந்த தாயின் கண்கள் கலங்கி கண்ணீர் சொட்ட எங்களைப் பார்த்தவாறு ஏதோதோ சைக்கினைகள் செய்தார். அவருடைய துணை தன் கண்கள் சிவந்தவராய் ஒரு கையால் மனைவியின் கையை இறுக்க பிடித்தும் மற்ற கையால் கண்ணீரை துடத்துக் கொண்டு இருந்தார்.

இது பார்க்க வித்தியாசமாகவும் கொஞ்சம் விசித்திரமாகவும் இருந்தது. தன் மகனின் அழுகை ஓய என் தங்கம் என் தோழிலே தூங்க. அவர்களை நோக்கி சென்று அருகில் அமர்ந்தேன். அவர்கள் தங்களை நோக்கிய பார்வையினதும், அழுகையினதும் இரகசியம் அறியவும் அந்த வயது முதிர்ந்த தாயின் மடியில் கை வைத்து மெல்லியதாய் புன்முறுவல் பூத்து பேசத்தொடங்கினேன்.

அந்தத் தாயும் வயதான தந்தையும் மனம் திறந்தார்கள். பூட்டிய வான் கதவுகளை திறந்தவுடன் பாயும் நீராய் பாய்ந்தது அவர்களின் எண்ண அலைகள். அது கண்ணீரின் கோலமாய் கரைந்தது. தனக்கு ஒரு மகன் இருப்பதாக கூறி அவர் மீது கொண்ட அன்பை இருவரும் விட்டுக்கொடுக்காமல் அவர்களின் பெருமைகளை பாடிக்கொண்டனர்.

தான் கருவுற்றது முதல் தன் கர்ப்பப்பையை தன் மகனுக்கு சிம்மாசனமாய் ஆக்கியது தொட்டு தன் உதிரத்தை பாலாய் ஊட்டியது, தன் மகனுக்கு ஒரு வாய் உணவூட்ட ஆயிரம் கதைகள் சொல்லியும் அவன் பின்னால் ஓடி திரியும் கதையும், அவனின் சிறுநீர் மலத்துக்கு சற்றும் அருவருப்புப்படாமல் ஒட்டி உறவாடியதையும், தலைதடவி தூங்கவைத்து தூங்கியபின் தன் குழந்தை எழும்பும் சிறு சிணுங்கலுக்கும் தான் கண்விழித்து அன்பு சொரிந்தது, அவனின் அர்த்தமற்ற கேள்விகளுக்கு சளிக்காமல் பதில் சொல்லுவது , தன் இளமை மறந்து தன் குழந்தையின் எதிர்காலத்துக்காய் சேர்த்து வைத்த சொத்து சுகம் போன்றவற்றையும், அவனை பார்த்து பார்து வளர்த்தது , அவனுக்காக ஏனையோரிடம் சண்டை போடுவது என; அவர்கள் தம் மகனை கண்ணாய் பார்த்து வளர்த்த கதைகளை சொல்லில் வர்ணித்தார்கள்.

உங்களைப் போலவே நாங்களும் என எங்களின் விம்பமாய் அவர்களை வர்ணித்து தற்போதய சங்கதியை சொன்னார்கள் எங்கள் மகன் நோயுற்றால் துடி துடித்துப்போவோம். நித்திரை தொலைத்து எங்களின் நிலை மறந்து இருப்போம். இதற்கும் அவர்கள் அழுததற்கும் தொடர்பில்லாததால் நாம் பெற்ற எம் மகனுக்கு செய்யத்தானே வேணும் இதற்கு ஏன் அழுகிறீர்கள் என நானும் ஒரு தாயாக கேட்டன்.

அதற்கு அவர்கள் இல்லம்மா…. என ஆரம்பித்து அவர்களின் பதிலினால் என்னையும் நிஜ உலகில் கல்பதிக்கச்செய்து அழ வைத்து விட்டனர் இவ்வளவு தூரம் பெற்று வளர்த்து ஆளாக்கிய என் தங்கம் இன்று எங்களுக்கு வெறும் தகரமாய் மாறிவிட்டது.

27 வயதான அவன் வேலை முடிந்து வீடு வருகின்றான் சமைத்த உணவில் கொஞ்சமாய் கொறிக்கின்றான். நாங்கள் எங்களுடன் சேர்நது உண்ணுவான், சாப்பிட்டீங்களா? என்று கேட்பான் என காத்திருப்போம். அது வெறும் எதிர்பார்ப்பாகவே போய் விட்டது.

அவனது கையில் தொலை பேசி மிகவும் நெருக்கமாக இருக்கும். உலகம் அறிய வைத்த எங்களுடன் பேசமாடான் உலக முழுக்க நண்பர்களுடன் பேசுகிறான்.

எங்களுடன் சிரிப்பான் எங்களுடன் கொஞ்ச மணித்தியாலங்கள் செலவிடுவான் என ஏங்குவோம். அவன் போன் நோண்டியவாரே சிரிப்பான். தூக்கம் தொலத்து நாள் முழுக்க whatsapp Facebook என்று இருப்பான். எங்கள் எதிர்பார்ப்பு கானல் நீராய் போய்விட்டது.

அவன் எங்களை பிரிந்து வெளியே சென்றால் நாங்கள் அழைப்பை ஏற்படுத்தாதவரை அவனாக எங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதில்லை. தலை கோரி, தலை துடைத்த எங்களுடன் கொஞ்சம் கை தொட்டு அன்பாக பேசுவான் என இன்றும் காத்திருக்கிறோம். அவனது கைகளோ இன்னும் விடுதலை பெறவில்லை – அவனின் கையடக்க தொலைபேசியை தொடுவதிலிருந்து,

எங்கள் மகன் சமூகவலைத்தளங்களுக்கு தத்தெடுக்கப்பட்டுள்ளான். அவன் எங்களை விட்டும் தூரமாக்கப்பட்டு விட்டான். நிஜமானதை தொலைத்து நிஜமற்ற வாழ்க்கைக்கு அடிபணிந்து விட்டான். எங்கள் இருவரது வாழ்வும் பிள்ளை இருந்தும் இல்லாதது போல் வெறிச்சோடிப்போய் விட்டது.

இப்படி ஏங்கி பாரங்களை கொட்டினர் அந்த வயதான பெற்றோர். ஆம் இது உண்மையே இது போல எத்தனேயோ பெற்றோர்கள் ஏங்குகின்றனர். இது நிதர்சன உண்மையாகும்.

இன்று சமூக வலைத்தளங்கள் எம்மை சிறைபிடித்துள்ளன. மாய உலகில் மயங்கி எம் எதிர்காலத்தை மண்ணாக்கிக் கொண்டு இருக்கின்றோம். காலத்தை வீணடிக்கின்றோம். பெற்றோரின் ஏக்கத்திற்கும் கண்ணீர்துளிக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றோம். இவை ஆறுதல் படுத்த இயலா உணர்வின் வலிகளாகும்.

“(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறிய போதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங் கள்”.

“அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி ‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!’ என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்”. (17:23,24)

உங்களை பெற்ற தாய் தந்தையரை சீ என்று கூட சொல்வதையும் இறைவன் எச்சரித்து அவர்களின் கண்ணியம் அவர்களை சிறப்பிக்கும் முறை குறித்து இவ் அல்குர்ஆன் வசனம் பறைசாற்றுகின்றன. இன்று பிள்ளைகளாய் இருப்பவர்களே நாளை பெற்றோராய் மாறுகின்றோம்! நாம் செய்யும் இதே நிலை எமக்கும் வரலாம். ஆக எம் பெற்றோரின் மனதை புரிந்து நடக்க வேண்டும்.

நட்பு கொள்ள சிறந்தவர் முதலில் தாயே! அடுத்தது தந்தை. முகம் தெரியா எத்தனையோ நட்புக்காய் Facebook ல் நேரம் செலவிடுகின்றோம், இதை எம் உயர்வுக்காய் உணர்வை மதித்து வாழும் எம் உண்மை நட்பான பெற்றோருக்காய் செலவிடுங்கள். அன்பினால் அவர்களின் முகத்தில் நாம் பிள்ளைகள் எனும் அந்தஸ்த்தில் தோன்ற வைக்கும் சிரிப்பு உலகின் அத்தனை செல்வத்துக்கும் ஈடாகாது.

மருதமுனை நிஜா
( ஹுதாயிய்யா )
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்

மழலை உலகில் கால்பதித்து சிட்டாய் சிறகு விரித்து பறந்து திரிந்த என் இரண்டரை வயது மகன் திடீரென சுகவீனமுற்று நள்ளிரவில் தொடங்கிய அவனது கதறல் ஓயாமல் விடியும் வரை இருந்தது. அவன் முகத்தில் சிரிப்பினை…

மழலை உலகில் கால்பதித்து சிட்டாய் சிறகு விரித்து பறந்து திரிந்த என் இரண்டரை வயது மகன் திடீரென சுகவீனமுற்று நள்ளிரவில் தொடங்கிய அவனது கதறல் ஓயாமல் விடியும் வரை இருந்தது. அவன் முகத்தில் சிரிப்பினை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *