சிரிக்கும் முகங்களும் அழும் உள்ளங்களும்

அது பல வீடுகளைக் கொண்ட பகுதி. அந்த வீடும் கணவன், மனைவி, இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் வாழும் சிறியதொரு வீடு. அந்த வீட்டில் வாழ்வாதாரம், வருமானக் குறைவு போன்றவற்றின் காரணமாக கணவனுக்கும் மனைவிக்குமிடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதுண்டு. ஒருநாள் பிரச்சினை கடுமையாகவே வெடித்தது. தொடர் பிரச்சினையைத் தாங்கிக் கொள்ளமுடியாத மனைவி வீட்டை விட்டும் வெளியேற முடிவு செய்து இரவை எதிர்பார்த்திருந்தாள்.

கணவனும் பிள்ளைகளும் தூங்கியதன் பின் ரகசியமாக வெளியேறினாள். யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் தாண்டிச் செல்லும்போது ஒருசில வீடுகளில் நடைபெறும் விடயங்களை இரவின் நிசப்தம் அவள் காதுகளுக்கு கொண்டுவந்து சேர்த்தது.

நோயுற்றிருக்கும் தன் பிள்ளையின் சுகத்துக்காக அழுது பிரார்த்தனை செய்யும் ஒரு தாயின் அழுகை ஒரு வீட்டில்,
“வீட்டு வாடகை செலுத்த வேண்டும். உரிமையாளர் வந்து சென்றார்” என்று தன் மனைவியிடம் கவலையுடன் கூறும் கணவனின் குரல் இன்னொரு வீட்டில். குழந்தைக்காக ஏங்கித் தவிக்கும் குழந்தையற்ற தம்பதியொன்றின் ஏக்கம் நிறைந்த குரல்கள் மற்றுமொரு வீட்டில்.

மரணித்த தன் தாயை நினைத்து அழுதுகொண்டேயிருக்கும் திருமணமே ஆகாத யுவதியின் அழுகைச் சத்தம் இன்னுமொரு வீட்டில்.

பிறருடன் புன்னகைத்து, சந்தோஷமாக இருப்பதைப் போன்று வெளியே காட்டிக் கொள்ளும் பலர் தம் உள்ளங்களில் எத்தனை வலிகளையும் வேதனைகளையும் சுமந்து கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையை அப்போதுதான் அந்தப்பெண் உணர்ந்தாள். உடனடியாக வீட்டுக்கு வந்து அருளாகக் கிடைத்த தன் கணவன், பிள்ளைகளுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றாள்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் பல பிரச்சினைகளும் கஷ்டங்களும் உள்ளன. ஒருவரின் சிரிப்பு அவர் சந்தோஷமாக வாழ்கிறார் என்பதன் அடையாளமல்ல. சிரித்த முகத்துடனும் சந்தோஷமான தோற்றத்துடனும் இருக்கும் பலரது கவலையுடன் கதறியழும் உள்ளங்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

அவர்களின் முகங்கள்தான் சிரிக்கின்றன. ஆனால் நாம் அறியாத அவர்களின் உள்ளங்கள் தினமும் அழுகின்றன.

நமக்கு முன் சந்தோஷமாக இருக்கும் பலரைப் பார்த்து கொடுத்து வைத்தவர்கள்; எப்படி வாழ்கின்றார்கள். என்று உடனே நினைக்கக் கூடாது. அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் மட்டுமே அறிந்த ஏராளமான துன்பங்கள் இருக்கலாம்.

எந்த அருளுக்காகவும் எவரின் மீதும் பொறாமை கொள்ளாதிருப்போம். சில நேரம் அவர் இழந்தவை ஏராளமானவையாக இருக்கலாம். பாவம் அப்படியானவர்களை வாழ விடுவோம். ஒவ்வொரு நாளும் பலரின் வாழ்க்கை கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரிலேயே முடிகின்றது.

நம் வாழ்வை பிறர் வாழ்வுடன் ஒப்பிடாதிருப்போம். கிடைத்ததைக் கொண்டு நிம்மதியுடன் வாழ்வோம்.

பணம் மட்டும்தான் அருளல்ல. பணத்தால் வாங்க முடியாத அருள்கள் ஏராளம் இருக்கின்றன. அல்லாஹ்வின் அருளே சிறந்தது. அவனின் திருப்தியே உயர்ந்தது.
எப்போதும் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று கூறுவோம். அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளை பிரார்த்தித்தவனாக.

பாஹிர் சுபைர்

Leave a Reply