அம்மா நீ எங்கே?

  • 14

என் உயிரோடு உயிராகக் கலந்து
என் உணர்வுகளோடு உறவாடி மகிழ்ந்து
என் உடலுக்குள் ஊடுருவிச்சென்று
என் உணர்வுகளை உரசிச்செல்லும்
உன் நினைவுகளை
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
அம்மா நீ எங்கே!

உன் விரல் பிடித்து நடந்த நாட்கள்!
உன் கரம் பிடித்து கடந்த பாதைகள்!
உன் முந்தானைச் சேலைக்குள்
முகம் மறைத்த நிமிடங்கள்!
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
அம்மா நீ எங்கே!

கருவோடு என்னைச் சுமந்து
கண்ணிமைக்காது காத்து வளர்த்து
தூளியிட்டு தாயாகி
தோளிலிட்டு தாலாட்டி
உன் இரத்தத்தை பாலாக்கி
என் உயிர் காத்தாயே அம்மா!
இருக்கும் பிடி சோறும்
எனக்கென தந்து
என் பசி தீர்த்து
உன் பசி மறந்து
கண்ணை இமைக் காப்பது போல்
காத்து நின்றாயே!
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
அம்மா நீ எங்கே!

பஞ்சணையில்லாத போதும்
உன் நெஞ்சணையில் சுமந்தாயே!
பாலும் பழமும் இல்லாத போதும்
பாசத்தையும் நேசத்தையும்
ஊட்டி ஊட்டி வளர்த்தாயே!
தோளில் சாயும் போதெல்லாம்
தாங்கிய கைகள் எங்கே!
வாடிய முகம் கண்டு
பதறிய கண்கள் எங்கே!

சத்தமின்றி மனதும் துடிக்குதம்மா!
சித்தமும் கொஞ்சம் சிதறுதம்மா!
புத்தியும் கொஞ்சம் கலங்குதம்மா!
உன் பக்தியால் கண்களும் கலங்குதம்மா!
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
அம்மா நீ எங்கே!

நிலை மாறும் உலகில்
நீ மட்டும் நிஜமென நினைத்தேன் அம்மா!
இன்று நிழலாய்ப் போன
மாயம் தான் என்ன அம்மா!
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகிறேன்!
உன் நினைவுகளோடு போராடுகிறேன்!
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்.
அம்மா நீ எங்கே!

என் கண்களுக்குள் கனவாக
என் கற்பனைக்குள் கவியாக
என் கவிக்குள் கருவாக
என் வாழ்வுக்குள் வசந்தமாக
என்றும் என் நினைவுகளில்
நிலைத்திருப்பாய் அம்மா!

நான் மட்டும் தனியாக
நாளெல்லாம் உன் நினைவுகளோடு
ஊர்க்கோடியில் நிற்கும்
ஒற்றை பனை மரமாய்
ஓலையில்லா மொட்டை மரமாய்
விதியின் கையில் விளையாட்டு பொம்மையாய்
விம்மி அழுகிறேன்!
உன் அரவணைப்பை
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்.
அம்மா நீ எங்கே?

மின்மினிகள் வாழ்க்கை பாதைக்கு வழி வகுப்பதில்லை!
வேதாந்தம் வேதனை தீர்ப்பதில்லை!
விதியின் பாதை விழிகளுக்குத் தெரிவதில்லை!
வறுமை தேடி உறவுகள் வருவதில்லை!
ஆதரவில்லா வாழ்க்கையிலே
ஆயிரம் உறவுகள் வந்து நின்றாலும்
அம்மா உனக்கு ஈடாகுமா!

மண்ணில் என் நாட்கள் அழகானது!
என் கனவுகள் சுகமானது!
ஆனால் நான் மட்டும் பூமியில்
தனியாக உணர்கிறேன்!
நீ விட்டுச் சென்ற சேலை தானம்மா
இன்றும் எனக்கு நெஞ்சணையாக உள்ளதம்மா!
உன் வாசணை இன்றும் எனக்கு
மறக்க வில்லையம்மா!
உன் ஆராரோ தாலாட்டு
இன்றும் என் காதுகளில் கேட்குதம்மா!
என் தனிமையும் தொடருதம்மா!
அம்மா நீ எங்கே!
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்.
என் பேனாவும் எழுத மறுக்குதம்மா!
அம்மா நீ எங்கே!

Nifra Nijam
Daluwakotuwa,
Kochchikade,
Negombo.

என் உயிரோடு உயிராகக் கலந்து என் உணர்வுகளோடு உறவாடி மகிழ்ந்து என் உடலுக்குள் ஊடுருவிச்சென்று என் உணர்வுகளை உரசிச்செல்லும் உன் நினைவுகளை எண்ணி எண்ணிப் பார்க்கிறேன் அம்மா நீ எங்கே! உன் விரல் பிடித்து…

என் உயிரோடு உயிராகக் கலந்து என் உணர்வுகளோடு உறவாடி மகிழ்ந்து என் உடலுக்குள் ஊடுருவிச்சென்று என் உணர்வுகளை உரசிச்செல்லும் உன் நினைவுகளை எண்ணி எண்ணிப் பார்க்கிறேன் அம்மா நீ எங்கே! உன் விரல் பிடித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *