இயற்கையுடன் சில பொழுதுகள்

  • 5

ஆரம்ப காலத்தில் இயற்கையுடன் ஒன்றரக் கலந்து வாழ்ந்த மனிதன் ‘பழையன கழிதல் புதியன புகுதல் ‘ என்ற நியதிக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியவனானான். இவ்வாறே இந்த உலகும் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனது அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கேற்ப ஒவ்வொரு மனிதனும் அடுத்த கட்ட நகர்வுக்காக தன்னை தயார் படுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளான். தன்னை மறந்து, தன்னை சுற்றியுள்ளவர்களை மறந்து உழைத்துக் கொண்டிருக்கின்றான்.

இதன் போது ஏற்படுகின்ற மனவழுத்தம், கவலை, பதற்றம், பகை என்பவற்றை தன்னகத்தே ஏற்றுக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இன்று மனிதன் அடைந்துள்ளான்; இதன் மூலம் இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நீண்டகால நோய்களுடன் வாழப் பழகிக் கொண்டான் மனிதன்.

இவற்றிலிருந்து மனிதனை மீட்க கவலைகளை, மறக்கச்செய்ய, புத்துணர்ச்சியை வழங்க இறைவன் நமக்கழித்த கொடைகளில் ஒன்றே இந்த இயற்கை.

நம்மில் எத்தனை பேர் குயிலின் பாட்டை ரசித்திருப்போம்; மயிலின் ஆடலைக் கண்டிருப்போம்; எத்தனை பேர் காடுகளில் உள்ள குரங்குகளின் மரத்தாவல்களை, முயல்களின் பாய்ச்சல்களை கண்டிருப்போம்; வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்களை ரசித்திருக்கின்றோமா?; வண்டுகளின் ரீங்காரங்களை கேட்டதுண்டா?; இரவில் வெளிவரும் ஆந்தைகளின் கண்களைக் கண்டிருக்கின்றோமா?; பழந்தின்னி வௌவால்களை பார்த்ததுண்டா?; ஆற்றில் துள்ளித்தாவும் மீன், தவளைகளை கண்டிருப்போமா?; ஆட்காட்டியின் கூச்சலை கேட்டிருக்கின்றோமா?; புல்வெளிமேல் பனித்துளியின் அழகை ரசித்திருக்கின்றோமா?; மரங்களின் அசைவில் எழும் ஓசை, நெல் வயல்களின் இசையை எத்தனை பேர் கேட்டிருக்கின்றோம்?

இவ்வாறு இயற்கையுடன் நமது மூதாதைகள் கொண்டிருந்த தொடர்புகளுடன் நாம் எந்த உறவும் இல்லாமல் இருப்பது மிகவும் ஆபத்தான விடயமாகும்.

இந்த அவசர உலகில் இயற்கையுடன் சில பொழுதுகளை கழிப்பது என்பது சாத்தியமற்றதாக தோன்றலாம்; இருப்பினும் இவைகளும் நமது வாழ்வின் ஒரு பகுதியே என்பதை மனதில் கொள்ள வேண்டும். இயற்கையுடன் சில பொழுதுகள் எனும் போது; இயற்கையான சரணாலயங்களுக்குச் செல்லலாம், நடைப்பயணங்கள் செல்லலாம், பாதுகாப்பான கடல் மற்றும் நீர்நிலைகளுக்கு குளிக்க செல்லலாம், பாதுகாப்பான பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லலாம், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் வயல்வெளிகள்/ ஆற்றங்கரை பகுதிகளுக்கு ஒன்றுகூடல்களுக்கு செல்லலாம், பாதுகாப்பான மலைகளில் ஏறலாம் (Mountaining), காட்டுப்பயணங்கள் செல்லலாம், வீட்டுத்தோட்டமொன்றை அமைத்து பராமரிக்கலாம்: இவ்வாறு இன்னும் பல வழிகளில் இயற்கையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அடிக்கடி இல்லாவிடினும் வாரத்திற்கு ஒரு தடவை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை அல்லது மாதத்திற்கு ஒரு தடவை என்ற வகையில் இவ் வெளிக்கள செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளலாம்.

இவற்றின் மூலம் எமக்கு கிடைக்கின்ற அனுபவங்கள், சந்தோஷங்கள் மற்றும் சுவாரஷ்யங்கள் எண்ணற்றவை, வாழ்க்கையை அர்த்தமாக்கக்கூடியன; அத்துடன் இவ்வாறான இயற்கைப்பயணங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல நன்மைகளை பெற்றுத்தரக்கூடியன. கவலைகள் மறக்கச் செய்வதற்கும் மனவழுத்தங்களை விட்டு வெளியில் வருவதற்கும், மன அமைதி ஏற்படுவதற்கும், இயற்கையான தூய காற்றை சுவாசிப்பதற்கும் ,உடலுக்கான புத்துணர்ச்சியைப் பெற்றுக் கொள்வதற்கும், புதிய சிந்தனைகள் பெற்றுக்கொள்வதற்கும், ஆக்கத்திறன்களை (Creative) வளர்த்துக்கொள்வதற்கும் இந்த இயற்கையுடனான தொடர்பு பெரிதும் உதவுகின்றது; அத்துடன் இந்த காலகட்டத்தில் அதிகரித்து வருகின்ற இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்ப்பதிலும் இந்த இயற்கையுடனான தொடர்பு பெரிதும் பங்கு வகிக்கின்றது என்கிறது இன்றைய மருத்துவ உலகு.

A.A.M.Aiyas
University of Peradeniya
Mutur, Trincomalee

ஆரம்ப காலத்தில் இயற்கையுடன் ஒன்றரக் கலந்து வாழ்ந்த மனிதன் ‘பழையன கழிதல் புதியன புகுதல் ‘ என்ற நியதிக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியவனானான். இவ்வாறே இந்த உலகும் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனது அடுத்த…

ஆரம்ப காலத்தில் இயற்கையுடன் ஒன்றரக் கலந்து வாழ்ந்த மனிதன் ‘பழையன கழிதல் புதியன புகுதல் ‘ என்ற நியதிக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியவனானான். இவ்வாறே இந்த உலகும் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனது அடுத்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *