Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இரசாயன களை நாசினிகளுக்கான தடை அரசியலா அக்கறையா?  

இரசாயன களை நாசினிகளுக்கான தடை அரசியலா அக்கறையா? 

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உலக மக்களுக்குக் கிடைக்கும் உணவுப்பொருட்களில் 95 வீதமானவை மண் ஊடாக உற்பத்தி செய்யப்படுபவை. நாகரிகமடைந்த  மனிதனின் முதலாவது தொழிலே   விவசாயம் என்று தான் கூறப்படுகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த மண்ணானது மனிதனுக்கு உணவு வழங்கும் பணியை அமைதியாக செய்து வருகின்றது.

எனினும் நாகரிக வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம், உலகமயமாக்கல் போன்றன விவசாய மண்ணை உயிர்ப்போடும் அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையிலும் பேணி பாதுகாத்து வருவதிலிருந்து தவறி விட்டது. இதன் காரணமாக இன்று உலகின் பல பாகங்களிலும் மண் வளம் பாதிக்கப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டின் உலக மண் வள பாதுகாப்பு அறிக்கைகளின் பிரகாரம் சூழல் பாதிப்பில் பிரதான இடத்தை மண் மாசடைதல் பெற்றுள்ளது. இது நேரடியாக மனிதனின் உணவில் தாக்கம் செலுத்தக் கூடியதாகும்.

மண் மாசுறுதலில் பிரதான இடத்தை இரசாயன களை நாசினிகள் பெறுகின்றன. இன்று நவீன விவசாய நடவடிக்கைகளில் முக்கிய இடத்தை அதிக வீரியம் கொண்ட இராசாய களை நாசினிகள் பிடித்துள்ளன. தொடர்ச்சியான இரசாயன களை நாசினிகளின் பாவனையே விவசாய மண்ணை மலடாக்கியுள்ளதாக உலகின் பெரிய விவசாய நாடுகளில் ஒன்றான இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர்.

அந்த வகையில் மிகச்சிறிய விவசாய நாடான இலங்கையும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. மண் வளம் பாதிக்கப்பட்ட பிரதான நாடாக தெற்காசியாவில் இலங்கை விளங்குவதாக உள்ளூர் ஆராய்ச்சியாளர்களே உறுதி செய்துள்ளனர். விவசாய நடவடிக்கைகளுக்கு அதிக பொசுபேட் மற்றும் ஆர்சனிக் கலந்த இரசாயன உரங்களை பயன்படுத்தி வருவதால் நாட்டின் வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் தகவல்களின் படி இவ்வகை சிறுநீரக நோயால் (Chronic Kidney Disease) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,479 ஆகும். இரசாயன களை நாசினிகள் விளை நிலங்களில் ஊடுருவப்பட்டு நீரில் கலப்பதால் அந்நீரை அருந்துபவர்களுக்கு இத்தாக்கம் அதிகம் என்கின்றது ஆய்வு.

அதிர்ச்சி தரும் வகையில் அடுத்த ஆண்டே (2015) இந்த எண்ணிக்கை 20,828 ஆக அதிகரித்தது.

மட்டுமன்றி  இலங்கையில் மாதமொன்றுக்கு பார்வை குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 30 ஆக உள்ளதாகவும் சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய்களின் தாக்கம் எப்போதுமில்லாது அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் அச்சம் வௌியிட்டுள்ளனர். இவை அனைத்துக்கும் தீர்வாகவே திடீரென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் இரசாயன களை நாசினி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளார். அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட காரணங்களை முன்வைத்து அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இது எந்தளவுக்கு நடைமுறைக்கு சாத்தியப்படப்போகின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியாவானது தற்போது இரசாயனமற்ற இயற்கை உரங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டது. அதற்கான சகல வளங்களும் அங்குள்ளன.

இலங்கையில் அவ்வாறில்லை. மேலும் இந்த திடீர் மாற்றங்களுக்கு விவசாயிகள் பழகி வருவதை விட, இத்தனை நாட்களாக இராசாயன உரங்களுக்குப் பழகிப்போன எமது நாட்டின் மண் மற்றும் கலப்பின பயிர் விதைகள் அதற்கேற்றவாறு தமது தன்மையை மாற்றிக்கொள்ளுமா என்பது முக்கிய விடயம். இரசாயன களை நாசினி என்பது நாட்டின் முக்கியமான வர்த்தக துறைகளில் ஒன்றாக விளங்குகின்றது.

பெருந்தோட்டப்பயிர்ச்செய்கையிலிருந்து உள்ளூர் பயன்பாட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும்  ஏற்றுமதி செய்யப்படும் தாவர உணவுப்பொருட்கள் வரை இதில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த அனைத்துத் தரப்பினரையும் ஈடு செய்யக்கூடிய இயற்கை சேதன உரங்கள் பயன்பாட்டில் இருக்கின்றனவா, இதற்கு முன்பு பெற்ற விளைச்சளை இதன் மூலம் பெற முடியுமா, இரசாயன களை நாசினி வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், அவற்றை இறக்குமதி செய்யும் விநியோகிக்கும் நிறுவனங்கள் இத்துறையோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்திருக்கும் இலட்சக்கணக்கானோரின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் யோசித்து தான் இந்த முடிவை எடுத்ததா போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

எமது அடுத்த தலைமுறைக்கு இரசாயன கலப்படமற்ற உணவுகளை வழங்க வேண்டும் என்ற உறுதியான சிந்தனை நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது. அதை மறுப்பதற்கில்லை. எனினும் எந்தவித தயார்ப்படுத்தல்களும் இல்லாத இந்த திடீர் அறிவிப்பு பலருக்கு திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக களை நாசினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே தம்மிடம் பொருட்கள் கைவசம் உள்ளதாகவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

இரசாயன களை நாசினிகளுக்காக எமது நாடு வருடந்தோறும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவளிக்கின்றது என்கிறார் ஜனாதிபதி. அது உண்மையும் கூட. ஆனால் இரசாயன உரங்களுக்கு மாற்றீடான  இயற்கை உரங்கள் தயார் நிலையில் இல்லை என்பதையும் சிந்திக்க வேண்டும். மட்டுமன்றி எமது நாட்டில் காய்கறி, பழ உற்பத்திக்கு மட்டுமின்றி பெருந்தோட்ட பயிர்களான தேயிலை, இறப்பர், தென்னைக்கும் இரசாயன களை நாசினிகளே பாவிக்கப்படுகின்றன. இவற்றுக்கு மாற்றீடாக உடனடியாக வேறு எதையும் பயன்படுத்த முடியாத சவால்களே  உள்ளன.

மிக முக்கியமாக எமது நாட்டில் பயன்படுத்தப்படும் கலப்பின விதைகள் இரசாயன உரங்களுக்கு ஈடு கொடுப்பதற்கேற்ப கண்டு பிடிக்கப்பட்டவையாகும்.   அடுத்த 3 வருடத்துக்குள் இரசாயன உர பயன்பாட்டை 30 வீதமாக குறைப்பதற்கும் அதற்குப்பதிலாக இயற்கை உரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கும் ஆலோசித்திருப்பதாக விவசாய அமைச்சு கூறுகின்றது. இதன் காரணமாகவே சுமார் 18 ஆயிரம் தொன்  இரசாயன உரவகைகளை ஏற்றி வந்த சீன கப்பல்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இயற்கை பசளைகளை கொண்டு எல்லா தாவர உணவு உற்பத்திகளையும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒரு   திட்டத்தை ஆரம்பித்து பெறுபேற்றை அரசாங்கம் பெற்றிருக்க வேண்டும். அதன்  மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம் என்பது பொதுவான அபிப்பிராயமாக உள்ளது. ஏனென்றால் இவ்வாறான திடீர் முடிவுகள் நாட்டில் மண் சார்ந்த உணவு உற்பத்தி பொருட்களுக்கான தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தக் கூடிய அபாயமும் உள்ளது.

சி.சிவகுமாரன்

உலக மக்களுக்குக் கிடைக்கும் உணவுப்பொருட்களில் 95 வீதமானவை மண் ஊடாக உற்பத்தி செய்யப்படுபவை. நாகரிகமடைந்த  மனிதனின் முதலாவது தொழிலே   விவசாயம் என்று தான் கூறப்படுகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த மண்ணானது மனிதனுக்கு உணவு வழங்கும்…

உலக மக்களுக்குக் கிடைக்கும் உணவுப்பொருட்களில் 95 வீதமானவை மண் ஊடாக உற்பத்தி செய்யப்படுபவை. நாகரிகமடைந்த  மனிதனின் முதலாவது தொழிலே   விவசாயம் என்று தான் கூறப்படுகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த மண்ணானது மனிதனுக்கு உணவு வழங்கும்…