Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இறந்த பின் PCR பொசிடிவ் ஆகி, எரித்த பின் PCR நெகடிவ் ஆன மரணங்கள் 

இறந்த பின் PCR பொசிடிவ் ஆகி, எரித்த பின் PCR நெகடிவ் ஆன மரணங்கள்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கொவிட் 19 இனால் மரணிப்பவர்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற கேள்வி ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்வதனாலும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் சுகாதார அதிகாரிகளும் வெளியிடும் மாறுபட்ட அறிக்கைகளினாலும் அரசாங்கத்துடன் முரண்படுவதான வினோதமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட் 19 காரணமாக மரணித்த முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ஒத்துக் கொண்டதாகவும், அடக்கம் செய்வதற்காக “வறண்ட நிலத்தை” தேடுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் திடீரென அறிவிக்கப்பட்டது. சுகாதார அதிகாரிகள் இதனை உடனடியாக மறுத்தனர். அதன் பின்னர் நிலக்கீழ் நீருடன் கலக்காத வகையில் எங்காவது ஒரு தொலைவில் கொண்டு போய் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்போது சுகாதார அதிகாரிகள் தான் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று தெரிகிறது.

இந்தக் கூக்குரல்களுடன் சேர்த்து இனவெறிக் கூறுகளை அம்பலப்படுத்தும் வகையில் பொதுபலசேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தீவிர முஸ்லிம் குழுக்கள் எரிப்பதை விட அடக்கம் செய்வதை ஊக்குவிப்பதில் ஈடுபடுவதாகக் கூறி சுகாதாரத் துறை மதங்களின் செல்வாக்குக்கு அப்பால் நின்று மக்களுக்குத் தமது கருத்தை முன்வைக்க வேண்டும் எனக் கூறினார். இந்த விவகாரம் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு வழிவகுக்கும் எனவும் அவர் கூறினார்.

அவர்களது நம்பிக்கை அவர்களுக்கு விதித்துள்ளதன்படி தமது உடல்கள் எரிக்கப்படக் கூடாது என முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அடக்கம் செய்வது என்பது உலகெங்கிலுமுள்ள கலாச்சாரம் மட்டுமன்றி பாரம்பரியமும் கூட. தொற்றுநோய்களின் போது கூட உலகம் முழுவதும் 180 க்கு மேற்பட்ட நாடுகளில் இது அனுமதிக்கப்பட்டிருப்பதோடல்லாமல் நடைமுறைப்படுத்தவும்படுகிறது.

உலகெங்கிலும் 52 மில்லியன் கொவிட் 19 பாதிப்புக்களும் 1.2 மில்லியன் இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இலங்கையில் நவம்பர் 11 ஆம் திகதிய நிலவரப்படி 14,759 பாதிப்புக்களும் 45 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இலங்கையில் அதிகாரிகள் காலனித்துவ காலக் கட்டளைச் சட்டங்களின் கீழ் சிக்கித் தவிக்கின்றனர். இது கொள்ளை நோய்களாலும் தொற்றுநோய்களாலும் இறந்தவர்களை குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உடனே அப்புறப்படுத்துவதை கட்டாயப்படுத்துகிறது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டம் (The Quarantine and Prevention of Diseases Ordinance) உடல்களை அப்புறப்படுத்துவதற்கான வழிகளாக அடக்குவதையும் எரிப்பதையும் குறிப்பிடுகிறது. அடக்கம் அல்லது எரித்தல் தொடர்பில் சட்டங்களை உருவாக்குவதற்கும் அது அமைச்சருக்கு அதிகாரமளிக்கிறது. அடக்கம் செய்வதற்காக அல்லது எரிப்பதற்காக உடல்களை அப்புறப்படுத்தும் போது பேணப்பட வேண்டிய விஷேட நடைமுறைகளையும் இந்த ஒழுங்குவிதி சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் ஏப்ரல் 11 ஆம் திகதிய வர்த்தமானி மூலம் இந்த ஒழுங்குவிதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், கொவிட் 19 தொற்றினாலோ அல்லது கொவிட் 19 தொற்று என்ற சந்தேகத்திலோ மரணிப்பவர்கள் “எரிக்கப்பட வேண்டும்” என்பது சேர்க்கப்பட்டது.

கொவிட் 19 இனால் மரணித்தவர்களைக் கையாள்வது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு மார்ச்சில் வெளியிட்ட வழிகாட்டலில் அடக்கம், தகனம் இரண்டுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இறுதிச் சடங்கின் போது உறவினர்கள் உடலைப் பார்க்க முடியும், ஆனால் தொட முடியாது என அந்த வழிகாட்டல்கள் கூறுகின்றன. இறந்தவர்களினதும் அவர்களது குடும்பங்களினதும் மத கலாச்சார மரபுகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் உலக சுகாதார அமைப்பு, உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை, ஆனால் தகனம் அல்லது அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் தமது அன்புக்குரியவர்களைப் பார்க்க முடியும் என்று குறிப்பிடுகிறது.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்தி, தன்னிச்சையானதும் கடுமையானதுமான நடைமுறைகளை அறிமுகப்படுத்தி தனியானதொரு போக்கில் இலங்கை செல்கிறது. கொவிட் 19 இனால் இறந்தவர் அல்லது கொவிட் 19 இனால் இறந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர் அடக்கம் செய்யப்படுவதை அது அனுமதிக்கவில்லை. அடக்கம் செய்வது மறுக்கப்படுவது இலங்கை முஸ்லிம் சமூகத்தை வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது.

விஞ்ஞானபூர்வமான எந்தவொரு நியாயங்களும் இந்தக் கருத்தை ஆதரிக்கவி்ல்லை. எரிப்பது இப்போது முஸ்லிம் சமூகத்தில் அச்சம் மிகுந்ததாக உருவெடுத்துள்ளது.

முஸ்லிம்களின் பல உடல்கள் வீடுகளில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் பொசிடிவ் காட்டப்பட்டதாகக் கூறி எரிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் சில குடும்பங்கள் பலவந்தமாக எரிப்பதற்கான சட்டத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. தொற்று நோய் காரணமாக நீதிமன்றங்கள் அடிக்கடி மூடப்படுவதால் இந்த மனுக்கள் இன்னும் விசாரிக்கப்படவில்லை.

மார்ச் 30 இல் சுகாதார அமைச்சின் இணையத்தளம் கொவிட் 19 இனால் மரணிப்பவர்களுக்கு அடக்கம் செய்யப்படுதலை ஒரு தெரிவாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் மார்ச் 29 இல் மரணித்த முதல் முஸ்லிம் நபரது உடல் அவரது குடும்பத்துக்கும் காட்டப்படாமலேயே அவசர அவசரமாக எரிக்கப்பட்டது. அடக்கம் செய்வதற்கு அனுமதித்து சுகாதார அமைச்சு வழங்கிய வழிகாட்டல் ஒரே இரவில் நீக்கப்பட்டது.

நவம்பர் 10 ஆம் திகதிய நிலவரப்படி, கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட 21 முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. (தேசியப் பட்டியலில் இரண்டு மரணங்கள் சேர்க்கப்படவில்லை) ஒருவருடைய விடயத்தில் பிசிஆர் பரிசோதனை பொசிடிவ் காட்டவில்லை, ஆனால் பாதிக்கப்பட்டவர் எரிக்கப்பட்ட பின்னரே அந்த முடிவு வந்தது.

நாட்டின் சனத்தொகையில் முஸ்லிம்கள் 9 வீதமாக இருந்தாலும் கொவிட் 19 ஆல் இறப்பவர்களின் விகிதாசாரம் அதைவிட அதிகமாகவிருந்தது. எரிப்பதற்கு உத்தரவிடப்பட்ட 21 உடல்களில் 14 உடல்கள் வழக்கமான நோய்களால் இறந்தவர்கள். அத்துடன் அவர்கள் தமது வீடுகளிலேயே மரணித்திருக்கிறார்கள். அவர்களது உடல்கள் சுகாதார அதிகாரிகளின் உத்தரவின்பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்கள் கொவிட் 19 தொற்று பொசிடிவ் ஆனவர்கள் என பரிசோதனைகள் சொல்லுவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கொழும்பு வடக்கிலும் கொழும்பு மத்தியிலும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. இங்குள்ளவர்கள் பொதுவாக ஏழைகள். ஒவ்வொரு உடலையும் தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிசிஆர் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பிரேத அறையில் வைத்திருக்குமாறு இங்குள்ள அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனை முடிவு பொசிடிவ் ஆக இருந்தால் அவர்களது குடும்பங்கள் சுயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றன அல்லது இராணுவத்தினரின் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். உடலை எரிப்பதற்கு குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது.

பொசிடிவ் ஆன உடல்கள் சவப்பெட்டியொன்றில் போட்டு மூடப்படுகின்றன. சவப்பெட்டிக்கென குடும்பத்திடமிருந்து குறைந்த பட்சம் 5000 ரூபா அறவிடப்படுகிறது.  பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எரிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு நபருக்கு மட்டும் பிரார்த்தனை செய்வதற்காக அனுமதிக்கப்படுகிறது. சிலவேளைகளில் அவர்களுக்கு இறந்தவரின் முகத்தைப் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.

ஒக்டோபரில் எழும்பிய கொவிட் 19 இன் இரண்டாவது அலையின் பின்னர் சுகாதார அமைச்சு திடீர் மரணம் என அறிவித்த சில உடல்களையும் கொழும்பு தேசிய வைத்தியசாலை எரிப்பதற்கு உத்தரவிட்டது.

மே 4 ஆம் திகதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதான பாத்திமா ரினோசா ஐடிஎச்சுக்கு மாற்றப்பட்டார். மறுநாள் காலை அவர் மரணித்ததாகவும் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டது. எரிக்கப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்றியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மே 06 இல் அரச தொலைக்காட்சியொன்றில் தோன்றிய அரச மருத்துவர் ஒருவர், அவரது பிசிஆர் பிரிசோதனை முடிவு நெகடிவ் ஆனது என்று அறிவித்தார். அதன் பின்னர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த அவரது குடும்பம் அடுத்த நாள் மீளவும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மே 05 ஆம் திகதி பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 64 வயது அப்துல்ஹமீத் ரபாய்தீன் மரணமடைந்தார். அவரது உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் மரணித்ததாக தனியார் மருத்துவர் ஒருவர் அறிவித்தார். அவரை அடக்கம் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் தயாராகிக் கொண்டிருந்தபோது அவரது உடலை தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு பொலிசார் உத்தரவிட்டனர். அங்கு அவரது உடல்  பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொவிட் பொசிடிவ் எனக் கூறி எரிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணம் கொவிட் தேசிய மரணப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவரது உடல் தவறுதலாக எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல்வேறு காரணங்களுக்காகவும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

ஒக்டோபர் 27 இல், பிறந்ததிலிருந்தே படுக்கையில் இருந்து வீட்டாரினால் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயதான மொஹமட் மின்ஹாஜ், வீட்டில் உறங்கிய நிலையிலேயே மரணமடைந்தார். வழமையாக அவருக்கு மருத்துவம் செய்த வைத்தியர் அவரை அடக்கம் செய்வதற்காக அனுமதியளித்த போதும் அப்பிரதேசம் முடக்கப்பட்டிருந்ததால் அடக்கத்தலத்துக்கு எடுத்துச் செல்ல முன் பொலிசாருக்கு அறிவிக்குமாறு கிராம சேவகர் குடும்பத்தாருக்கு உத்தரவிட்டார். வீட்டுக்கு விரைந்து வந்த பொலிசார் உடலை தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு வற்புறுத்தினர். மருத்துவமனையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கூறி பிரேத அறைக்கு அனுப்பப்பட்டது. அடுத்த நாள் பரிசோதனை முடிவு பொசிடிவ் என்றும் உடல் தகனம் செய்யப்பட்டது என்றும் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது. அவரது மரணம் திடீர் கொவிட் 19 மரணம் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த குடும்ப அங்கத்தவர்களும் உறவினர்களும் கட்டாய இராணுவ தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

நவம்பர் 02 ஆம் திகதி, 78 வயதான அஹமத் ஜமால்தீன் அஹமத் ராசீக் தலையில் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதிக இரத்தப் போக்கு காரணமாக அவர் விபத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின்னர் தனிமைப்படுத்தல் வார்டுக்கு மாற்றப்பட்டார். அடுத்த நாள் அவர் காலமானார். அவரது உடல் பிரேத அறைக்கு அனுப்பப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் அவரைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் வைத்தியசாலை அதிகாரிகள் அவரது பரிசோதனை பொசிடிவ் ஆனது எனக் கூறி அவரது உடலை எரித்து விட்டதாக நவம்பர் 4 ஆம் திகதி குடும்பத்தாருக்கு அறிவித்தனர். அதுவும் ஒரு திடீர் கொவிட் 19 மரணம் என சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனால் பின்னர் அவரது பெயர் கொவிட் தேசிய மரணப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தலையில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட மூளைப்பாதிப்பு தான் அவரது மரணத்துக்குக் காரணம் என குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் யாருக்கும் கொவிட் பொசிடிவ் காட்டப்படவில்லை.

சமூகப் பரவலை அரசாங்கம் மறுத்த போதும் கொவிட் 19 நாடு முழுவதும் பரவியுள்ளது. ஆனாலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தான் பல முஸ்லிம்கள் இறந்த பின்னர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதோடு, எரித்ததன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் அவர்களுக்கு வேறு நோய்கள் இருந்ததும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கட்டாய பிசிஆர் பரிசோதனை குறிப்பாக ஏழை முஸ்லிம்களைப் பாதிக்கிறது. அவர்கள் தனியார் சுகாதார சேவைகளுக்குப் பணம் செலுத்த முடியாமல் அரசாங்க வைத்தியசாலைகளில் கிடைக்கும் இலவச சேவைகளை நம்பியிருக்கிறார்கள். பலர் நாள் கூலியை நம்பியிருப்பவர்கள். இவர்களால் சவப்பெட்டிகளை வாங்க முடியாது. கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள பல ஏழை முஸ்லிம்கள், பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி எரித்து விடுவார்கள் என்று பயந்து மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தவிர்த்து வருகிறார்கள்.

எரிப்பது தான் ஒரே வழி எனக் கூறும் ஏப்ரல் 11 ஆம் திகதிய வர்த்தமானி வாபஸ் பெறப்பட வேண்டும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்ற வேண்டும். கொவிட் 19 அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் வழியாகப் பரவலாம் அல்லது நிலக்கீழ் நீரை மாசுபடுத்தலாம் என்ற இலங்கையின் சில நிபுணர்களின் கூற்றை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்ற அடிப்படையில் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் அடக்கம் செய்வதை அனுமதித்திருக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்று நோய் வெடித்ததில் இருந்து உலகளவில் இலட்சக்கணக்கான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்தப் பாதிப்புக்களும் பதிவாகவில்லை. ஆகவே முஸ்லிம் சமூகத்தையும் இறந்தவர்களை அவர்களின் மத நம்பிக்கைகளின் கலாச்சாரங்களின்படியும் நடைமுறைகளின்படியும் அடக்கம் செய்ய விரும்பும் மற்றவர்களையும் அவ்வாறு செய்ய அனுமதிப்பதுதான் தார்மீகமானதும் மனிதாபிமானதுமாகும்.

ஷெரீன் அப்துல் சரூர்
மினோலி டி சொய்ஸா

இக்கட்டுரையின் மூல ஆக்கம் மீள்பார்வை இணையதளத்தில் இருந்து பெறபட்டது. தலைப்பு மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது.

கொவிட் 19 இனால் மரணிப்பவர்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற கேள்வி ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்வதனாலும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் சுகாதார அதிகாரிகளும் வெளியிடும் மாறுபட்ட அறிக்கைகளினாலும் அரசாங்கத்துடன் முரண்படுவதான வினோதமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்…

கொவிட் 19 இனால் மரணிப்பவர்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற கேள்வி ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொள்வதனாலும், அரசாங்கத்தின் அமைச்சர்களும் சுகாதார அதிகாரிகளும் வெளியிடும் மாறுபட்ட அறிக்கைகளினாலும் அரசாங்கத்துடன் முரண்படுவதான வினோதமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *