Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சீனாவும் இந்தியாவும் இலங்கையும் 

சீனாவும் இந்தியாவும் இலங்கையும்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location).

இலங்கை, ஒரு மிகப்பெரிய உபகண்டத்தின் தெற்கில் அமைந்துள்ள, கடலால் பிரிந்துள்ள நாடு. பட்டுப்பாதை உள்ளிட்ட கடற்பாதைகளின் முக்கிய தொடுபுள்ளி. இந்த அமைவிடம்தான், பல்வேறு நாடுகளும் இலங்கையில் ஆர்வம் கொள்ள முக்கிய காரணம்.

சர்வதேச அளவிலான அதிகாரம், செல்வாக்கு என்பவை, இன்று மாற்றத்துக்கு உள்ளாகி வருவது அனைவரும் உணரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பனிப்போரில் அமெரிக்கா வென்றபோது, சர்வதேச அரங்கின் அதிகாரத்தின் மையமாக அமெரிக்கா இருந்தது. ஆனால், இன்றைய நிலை அதுவல்ல!

இன்று, உலகத்தின் ஒரே அதிகார மையம் அமெரிக்கா அல்ல! மாறாக, உலகத்தின் அதிகார மையங்களுள் அமெரிக்காவும் ஒன்று! மறுபுறத்தில், ஐரோப்பிய ஒன்றியம் இன்னோர் அதிகார மையமாக விளங்கும் அதேவேளை, 1990களின் பின்னரான பொருளாதார ஏற்றத்தின் காரணமாக, உலகின் உற்பத்திச்சாலையாக இந்தியாவும் பொருளாதார இராட்சசனாக சீனாவும் வளர்ந்து, இன்று ஆசியாவின் அதிகார மையங்களாக உருவாகி இருக்கின்றன.

இந்த ஒவ்வோர் அதிகார மையத்துக்கும், சர்வதேச அளவிலான அதிகார அரசியல் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. சர்வதேச அளவில், அமெரிக்க-சீனா போட்டி இன்னொரு பனிப்போராகவே உருப்பெற்றுள்ள அதேவேளை, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரும் இறுக்கமடைந்துவருகிறது. மறுபுறத்தில், ஆசியாவைப் பொறுத்தவரையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இன்னும் இறுக்கமாகி உள்ளது.

தன்னைத் தெற்காசியாவின் தன்னிகரில்லாத ‘ பெரியண்ணன்’ ஆகவே, இந்தியா எப்போதும் கருதிவந்துள்ளது. பாகிஸ்தான் என்ற தனது எதிரி நாட்டைத் தவிர, தன்னைச் சூழவுள்ள நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா சாம, தான, பேத, தண்ட என, எல்லா வழிமுறைகளையும் கையாண்டு இருக்கிறது.

பொருளாதார ரீதியில், இலங்கைக்கு சாதக பலன்களை வழங்கி இருக்கக்கூடிய ‘ஆசியான்’ என்ற தென்கிழக்காசிய நாடுகளின் ஒன்றியத்தில், இலங்கை இணைவதற்கான வாய்ப்பை மறுத்து, ‘சார்க்’ என்ற தெற்காசிய நாடுகளின் ஒன்றியத்தில் இலங்கை இணைந்துகொண்டமை கூட, இந்தியாவின் கைங்கரியம் ஆகும்.

தெற்காசியப் பிராந்தியத்தை, அதாவது, இந்தியாவின் அண்டை நாடுகளை, எப்பாடுபட்டேனும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் அடிப்படை வௌியுறவுக்கொள்கை. இதை, பபானி சென் குப்தா ‘பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான இந்தியக் கோட்பாடு’ என்று விளித்தார். காலவோட்டத்தில், அது ‘இந்தியக் கோட்பாடு’ என்றும் ‘இந்திரா கோட்பாடு’ என்றும் பின்னர், ‘ராஜீவ் கோட்பாடு’ என்றும் குறிக்கப்பட்டது.

இந்தக் கோட்பாடானது, மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாடுகளில் தலையிட, இந்தியாவுக்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது. அதேவேளை, எந்த நாடும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை, இந்தியா கடுமையாக எதிர்க்கும்.

இரண்டாவது, இந்திய நலன்களுக்கு, வெளிப்படையாகவோ உள்ளார்ந்த வகையிலோ எதிராக அமையும் வெளிநாடொன்றின் அணுகுறை, தெற்காசிய நாடொன்றின் உள்ளக முரண்பாட்டில் தலையிடுவதை, இந்தியா சகித்துக் கொள்ளாது. ஆகவே, எந்தத் தெற்காசிய நாடும் இந்தியாவுக்கு எதிராக அமையத் தக்கவகையில், வெளிநாடு ஒன்றிடமிருந்து இராணுவ உதவியைப் பெறக் கூடாது.

மூன்றாவது, ஒரு தெற்காசிய நாட்டுக்குப் பாரதூரமான உள்ளக முரண்பாட்டை எதிர்கொள்ளவோ சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்துக்குச் சகிக்கமுடியாத அச்சுறுத்தல் காரணமாக, வெளியக உதவி உண்மையாகவே தேவைப்படுமானால், அது இந்தியா உள்ளிட்ட அருகிலுள்ள நாடுகளிடம் உதவி கோரலாம். அத்தகைய சூழலில், இந்தியாவைத் தவிர்த்தலானது, குறித்த அரசாங்கத்தின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படும்.

தெற்காசிய நாடுகள், குறிப்பாகத் தனது நெருங்கிய அண்டை நாடுகள் தொடர்பான இந்தியாவின் வௌியுறவுக் கொள்கையின் சுருக்கம் இதுதான். ‘இந்த நாடுகளில் வேறெந்த வௌிநாடும் தலையிடுவதை இந்தியா விரும்பாது’. இந்த இடத்தில் தான், சீனா இன்று இந்தியாவுக்குப் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது.   தெற்காசிய அளவிலான அதிகாரப் போட்டியில் சீனாவும் இந்தியாவும் மும்முரமாக மோதிக்கொள்ளும் ஒரு வகையான பனிப்போர் காலம் இது எனலாம். கடந்த ஒரு தசாப்த காலத்தில், இந்தியாவின் அண்டை நாடுகளைக் குறிவைத்து, சீனா தனது காய்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றிகரமாகவே நகர்த்தி வருகிறது.

இந்தியாவின் ‘எதிரி’ நாடாக உருவகிக்கப்படும் பாகிஸ்தானை, சீனா தன்னுடைய ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துள்ளது என்றால் அது மிகையல்ல. 2013ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுதிமிக்க உட்கட்டமைப்பு அபிவிருத்தி, ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார நடைக்கூட திட்டம்’ என்ற பெயரில், சீனாவின் ‘வார்பட்டியும் பட்டுப்பாதை’ முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், உலகின் பல நாடுகளில் சீனா முதலிட்டு இருந்தாலும், 2018ஆம் ஆண்டு வரையான தரவுகளின் படி, அவற்றில் அதிகளவு முதலீட்டைச் செய்தது பாகிஸ்தானில்தான். இந்தியாவின் வட மேற்கு எல்லையில் அமைந்துள்ள மியன்மாரிலும் சீனா தன்னுடைய முதலீடுகளை பெருமளவுக்கு முன்னெடுத்து வருகிறது.

இராணுவ ஆட்சி நடைபெறும் மியன்மாரில், அண்மையில் ஜனநாயகத் தேர்தல் முடிவுகளைத் தகர்த்தெறிந்து, மீண்டும் இராணும் தன் கோரப்பிடியை இறுக்கியுள்ள நிலையில், சீனாவின் செல்வாக்கு அங்கு மேலும் அதிகரிக்கும்.

இதைப்போலவே, இந்தியாவின் ஏனைய எல்லை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், பலநூறு மைல் தூரம் தாண்டி அமைந்துள்ள மாலைதீவிலும் சீனா தன்னுடைய பொருளாதார இரும்புக்கரத்தின் மூலம், தனது செல்வாக்கை வளர்த்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, இலங்கையில் சீனா முன்னெடுக்கும் முதலீடுகள், வாரி வழங்கும் கடன்கள், முன்னெடுக்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் என்பனவும் பார்க்கப்பட வேண்டும்.

இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளைக் ‘கைப்பற்றுவதன்’ மூலம், சீனா இந்தியாவைச் சூழ்ந்துகொண்டுள்ளது. இதுதான், இந்தியா இன்று எதிர்நோக்கி இருக்கும் பெருஞ்சவால்.

தெற்காசியப் பிராந்தியத்தின் ‘பெரியண்ணன்’ ஆக இந்தியா இருக்க விரும்பினாலும், சீனாவுடன் மல்லுக்கட்டக்கூடிய பொருளாதார பலம் இந்தியாவிடம் தற்போது இல்லை. இந்தியாவின் பொருளாதாரம், மும்முரமாக வளர்கிறது எனினும், சீனாவைப் போன்று கடன்கனை வாரி வழங்கவும், உட்கட்டமைப்பில் முதலீடு செய்யவும் இந்தியாவால் உடனடியாக முடியாது.

மேலும் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. மாநிலங்கள் குறிப்பிட்டளவு சுயாட்சித்தன்மையைக் கொண்ட நாடு. அங்கே ஜனநாயகக் கட்டமைப்புகள் இயங்குகின்றன. சுதந்திர ஊடகத்துறை, நீதித்துறை இயங்குகின்றன. பொறுப்புக்கூறலுக்கான தேவையும் அவசியமும் இருக்கிறது.

ஆகவே, சீனாவின் செயற்படு வேகத்துக்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியாது. இன்று, தெற்காசிய நாடுகளில் சீனாவின் செல்வாக்கைத் தடுக்கவோ, சமன்செய்யவோ இந்தியா தடுமாறுவதற்கான அடிப்படைக்காரணம் இதுதான்.

‘கொவிட்-19’ பெருந்தொற்றின் போது, தடுப்பூசிகள் விநியோகம் தொடங்கியபோது, ‘தடுப்பூசி இராஜதந்திரம்’ என, இந்தியா வௌிநாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி, தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது.

ஆனால், கொரோனா வைரஸின் பரவல், இந்தியாவுக்குள் அதிகரிக்கவே, தடுப்பூசிக்கான உள்ளூர்த்தேவையை சமாளிக்கவே இந்தியா திணறும் நிலையை அடைந்தது. அதனால், ‘தடுப்பூசி இராஜதந்திரம்’ ஸ்தம்பித்துப் போனது. அந்த இடைவௌியையும் தற்போது சீனா பற்றிப் பிடித்துக்கொண்டது. தன்னுடைய சீனத் தடுப்பூசியை வழங்குவதன் மூலம், தடுப்பூசி இராஜதந்திரத்தை சீனா கைப்பற்றிக்கொண்டது.

இந்த இடத்தில், இலங்கை ஒன்றைப் புரிந்துகொள்வது அவசியம். இலங்கை, பாகிஸ்தான் அல்ல. இந்தியாவுக்கோ சீனாவுக்கோ இலங்கை எதிரி நாடல்ல! மாறாக, நட்பு நாடாகும். இதுவே வரலாற்று ரீதியான யதார்த்தமும் கூட.

அந்தச் சமநிலையை, இலங்கை பேணுவதுதான் இலங்கையின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் சிறப்பானது. அதேவேளை, இலங்கை தன்னாட்டு மக்களுக்கு இறுமாப்பாய்ச் சொல்லிக்கொள்ளும் இறைமையை, அந்நிய ஆதிக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதும் அவசியமாகும்.

இந்த இடத்தில்தான், ‘சமநிலை’ பற்றி இலங்கையின் கொள்கைவகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டியது காலத்தின் அத்தியாவசியத் தேவையாகிறது. இலங்கையின் அமைதியான, வளமான எதிர்காலத்துக்கு இலங்கையானது சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுடனும் நட்புறவைப் பேணுதல் அவசியமாகிறது.

இதில் ஒன்றை விடுத்து, இன்னொன்றைப் பற்றிக்கொள்ளுதல், நீண்டகாலத்தில் இலங்கைக்கு பெரும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தோற்றுவிப்பதாகவே அமையும். சீனா, இந்தியா ஆகிய நாடுகள் விடயத்தில், இலங்கை ‘அணிசேராக் கொள்கை’யைப் பின்பற்றும் நாடாக இருப்பதே, இலங்கைக்கு நன்மையானதாகும்.

என்.கே. அஷோக்பரன்

ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location). இலங்கை, ஒரு மிகப்பெரிய உபகண்டத்தின்…

ஆசியாவின் பூகோள அரசியலில், இலங்கைத் தீவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கை இலங்கைங்கு அளித்துள்ள வரமும், சாபமும் அதன் பூகோளத்தந்திரோபாய இடவமைவுதான் (geostrategic location). இலங்கை, ஒரு மிகப்பெரிய உபகண்டத்தின்…