Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றம் - இனி அடுத்த கட்டம் என்ன? 

ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றம் – இனி அடுத்த கட்டம் என்ன?

  • 18

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஜெனிவாத் திருவிழா – மஹோற்சவம் முடிவடைந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 22இற்கு 11 என்ற அடிப்படையில் நிறைவேறி விட்டது.

பெளத்த, சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்தி, அதனை மேலாண்மை வெறியாக வெளிப்படுத்தி, அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பேரினவாதிகள், தமது அந்த மேலாதிக்கக் கொள்கைப்போக்கையே சர்வதேச ஊடாட்டத்திலும் பின்பற்றிய போது இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அது நடந்தேறியிருக்கின்றது. அவ்வளவுதான். சரி, தீர்மானம் நிறைவேறியாகிவிட்டது. இனி என்ன என்பதுதான் கேள்வி.

2015, 2017, 2019ஆம் ஆண்டுகளிலும் 30/01, 34/01, 40/01 இலக்கத் தீர்மானங்களும் இதேபோலத்தானே – இதே மனித உரிமைகள் பேரவையில்தானே நிறைவேற்றப்பட்டன. இந்த ஆறு ஆண்டுகளிலும் ஏதேனும் மாற்றம் களத்தில் அல்லது புலத்தில் நடந்து விட்டதா? இனித்தானும் ஏதேனும் நடக்க வாய்ப்புண்டா?

இதுதான் இத்தீர்மானம் போதிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பரபரப்புடனும் பதற்றத்துடனும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த தமிழர் தரப்பின் பிரதான கேள்வி.

ஒருவாறு தீர்மானம் நிறைவேறி விட்டது. இனி என்ன? நிச்சயமாக மிக உறுதியாக முன்னர் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமைக்கும் இப்போது நிறைவேற்றப்பட்டமைக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது இலங்கையில் ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசு இராஜதந்திரமாக நடந்து கொண்டது. அதனால் இராஜதந்திர நெருக்குவாரத்தில், சிக்கலில் நாட்டை மாட்ட விடாது காப்பாற்றிக் கொண்டது. ஆனால் கோட்டாபய அரசு, பேரினவாதத் திமிருடன் சர்வதேசத்துடன் முட்டி மோதி நடந்து கொண்டமை மூலம் சர்வதேச சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டது.

முன்னைய மூன்று தீர்மானங்களும் இலங்கையும் சேர்ந்து அனுசரணைப் பணி வகிக்க நிறைவேற்றப்பட்டன. அதனால் தீர்மான வாசகங்களை நடைமுறைப்படுத்தி, செயற்படுத்தும் பொறுப்பு இலங்கையிடம் வீழ்ந்திருந்தது.

தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட காலம் வரை, பெரும்பாலும் இரண்டு வருடங்கள் வரை, அவ்விடயங்களை இலங்கை நடைமுறைப்படுத்த விட்டு விட்டு, பார்த்திருக்கும் பொறுப்பு மட்டுமே சர்வதேசத்தினுடையதாக இருந்தது.

வழங்கப்பட்ட காலம் முடிந்து மீண்டும் அதே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவகாரம் திரும்பவும் பரிசீலனைக்கு வரும்போதே சர்வதேச சமூகம் களத்துக்கு வரும். அதுவரையில் பந்து இலங்கைக் களத்துக்குள்தான்.

இலங்கை அந்தப் பந்தை விளையாடாமல், ஏன் எதுவும் செய்யாமல், சும்மா இருந்தால் (பெரும்பாலும் 2015 முதல் 2020 வரையான அந்த ஆறு வருடங்களும் அப்படித்தான் இலங்கை இருந்தது) கேட்பதற்கு யாரும் இல்லை என்பதுதான் நிலைமையாக இருந்தது.

இப்போது கள யதார்த்தம் அப்படியல்ல. இலங்கை தொடர்பான பிரேரணை வந்தபோதே அதனை எதிர்ப்பதாக இலங்கை அறிவித்து விட்டது.

இப்போது அந்த எதிர்ப்பையும் மீறி, சர்வதேச சமூகம் இலங்கைக்கு எதிரான பிரேரணையை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.

எனவே, இப்போது பிரேரணை வாசகத்தில் உள்ள விடயங்களை தீர்மானமாக நிறைவேற்றி விட்டு சர்வதேச சமூகம் சும்மா இருக்க முடியாது. பந்து அதன் களத்துக்குள். பந்தை ஆக்கபூர்வமான முறையில் விளையாடவேண்டிய பொறுப்பு சர்வதேசத்தின் கைகளில்.

தீர்மானத்தில் உள்ள விடயங்களை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுப்பதும், அந்த திசையில் தனது கடப்பாடுகளை நிறைவு செய்யும் விதத்தில் இலங்கையை உந்தித் தள்ளுவதும் சர்வதேசத்தின் கடமையாகின்றது.

ஆக, 2015, 2017, 2019ஆம் ஆண்டுகளில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் இலங்கை சர்வதேசத்தின் கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டிருந்தது.

இப்போதைய தீர்மானம் சர்வதேச கண்காணிப்புக்குள் இலங்கையை வைத்திருப்பது மட்டுமன்றி, அதையும் தாண்டி அது தொடர்பில் இலங்கையின் செயலின்மைக்கு எதிராக சர்வதேசம் தனது அழுத்த நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்கும் கட்டாயத்தையும் உருவாக்கியிருக்கின்றது.

அதன் விளைவுகளை சந்திக்கும் போதுதான் இவ் விடயத்தைக் கையாள்வதில் தான் இழைத்த இராஜதந்திர முட்டாள்தனம் இலங்கைக்கு புரிய ஆரம்பிக்கும்.

Tamilwin

ஜெனிவாத் திருவிழா – மஹோற்சவம் முடிவடைந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 22இற்கு 11 என்ற அடிப்படையில் நிறைவேறி விட்டது. பெளத்த, சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்தி, அதனை…

ஜெனிவாத் திருவிழா – மஹோற்சவம் முடிவடைந்து விட்டது. எதிர்பார்க்கப்பட்டபடி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 22இற்கு 11 என்ற அடிப்படையில் நிறைவேறி விட்டது. பெளத்த, சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்தி, அதனை…