திருமணத்திற்கான வயதெல்லையைத் தீர்மானித்தல் ஷரீஆவிற்குட்பட்டதா?ஷரீஆவிற்கு முரணானதா?

  • 10

இந்த தலைப்பில் 02 விடயங்கள் காணப்படுகின்றன.

  1. திருமணம்
  2. திருமணத்திற்கான வயதெல்லையைத் தீர்மானித்தல்

இந்த இரண்டிலும் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன.

  1. மனித ஆய்விற்கு இடம் கொடுக்காத, கால, சூழ, இட மாற்றங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்ய முடியாத பகுதி.
  2. மனித ஆய்விற்கு இடம் கொடுக்கின்ற, கால, சூழ, இட மாற்றங்களுக்கேற்ப மாற்றங்களை செய்ய முடியுமான பகுதி.

திருமணத்தைப் பொருத்த வரை உலகில் மனிதன் தன்னுடைய காம உணர்வை நெறிப்படுத்திக் கொள்வதற்காகவும், மனித இனம் உலகில் அல்லாஹ்வின் நாட்டம் வரை தொடர வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நியதியாகும். எனவே இந்த நியதியைத் தடுப்பதற்கு, மாற்றுவதற்கு உலகில் யாருக்கும், எந்த அதிகாரமும் கிடையாது.

அது போல் அத்திருமணம் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தான் நடைபெற வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் திட்டவட்டமான முடிவாகும். அதிலும் யாருக்கும் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்வதோ, ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதோ, மனிதன் மனிதன் அல்லாத வேறொரு படைப்பை திருமணம் செய்வதோ இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. இதில் யாரும் மனித அறிவைப் பிரயோகித்து மாற்றங்கள் செய்ய முடியாது. அவ்வாறு யாராவது வித்தியாசமான ஒரு முடிவை எடுப்பாராயெனில் அவர் ஷரீஆவுக்கு முரணாகச் செயற்பட்டு விட்டார்.

அடுத்தது திருமணத்திற்கான வயதெல்லையை தீர்மானித்தல்.

இது மனித அறிவைப் பிரயோகித்து கால, சூழ, இட மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய முடியுமான பகுதி.

திருமணத்திற்கான வயதெல்லையை தீர்மானித்தல் என்பது இஸ்லாமிய ஷரீஆவில் மனித ஆய்விற்கு விடப்பட்ட பகுதி. மனித நலனை, திருமணத்தின் இலக்கு, நோக்கம் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு கால, சூழ, இட மாற்றங்களுக்கு ஏற்ப தீர்மானங்களைப் பெற முடியுமான பகுதி.

இப்பகுதியில் மனித நலன், திருமண வாழ்வின் இலக்கு நோக்கம் என்ற அம்சமே பிரதான இடம் வகிக்கும். எந்த முடிவில் மனித நலன் இருக்குமோ, திருமணத்தின் நோக்கம், இலக்கு அடையப்பெறுமோ, அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்.

திருமணத்திற்கான வயதெல்லையை தீர்மாணிப்பதில் தான் மனித நலன் இருக்கிறது, திருமணத்தின் இலக்கு, நோக்கம் என்பன அதன் மூலம்தான் அடையப் பெறும் எனில் கண்டிப்பாக திருமணத்திற்கான வயதெல்லையை தீர்மானிக்க வேண்டும்.

திருமணத்திற்கான வயதெல்லையை தீர்மானிக்காமல் விடுவதில்தான் மனித நலன் இருக்கிறது, திருமணத்தின் இலக்கு, நோக்கம் என்பன அதன் மூலம்தான் அடையப் பெறும் எனில் கண்டிப்பாக திருமணத்திற்கான வயதெல்லையை தீர்மானிக்கக் கூடாது.

மனித நலனை (மஸ்லஹா முர்ஸலா), திருமணத்தின் இலக்கு (மகாஸித்) என்ற சட்டமூலாதாரங்களைக் கொண்டு பெறப்படும் சட்டங்கள் ஷரிஆவுக்குட்பட்டது, அதற்கு முரணானதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே திருமண வயதை திர்மானிப்பதும் சரி தீர்மானிக்காமல் விடுவதும் சரி மனித நலன், திருமண வாழ்வின் இலக்கு, நோக்கம் என்ற அடிப்படையில் நடைபெறுமாக இருந்தால் அது ஷரிஆவுக்குட்பட்டதே.

எனவே யாரும் சலிம் மர்சுப் குழுவினரை ஷரீஆவுக்கு முரண்பட்டவர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. மாறாக நாம் பார்க்க வேண்டியது எந்த குழுவின் முடிவில் மனித நலன் கூடுதலாக இருக்கிறது, திருமணத்தின் இலக்கு, நோக்கம் பூரணமாக அடையப்பெறும் என்பதைத்தான். எந்தக்குழுவின் முடிவில் தீங்கு இருக்கின்றதோ, திருமணத்தின் இலக்கை, நோக்கத்தை அடைந்து கொள்ள முடியாதோ அதனை நிராகரிக்க வேண்டும். மற்றயதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எனவே இது ஷரீஆத் துறை அறிஞர்கள் மட்டும் கூடி தீர்மானிக்கின்ற விடயம் கிடையாது. மாற்றமாக இதில் வைத்தியர்கள், சமூகவியல் ஆய்வாளர்கள், உளவியலாளர்கள், குடும்ப வாழ்வு, ஆண் பெண் உறவு போன்ற விடயங்களை ஒரு துறையாக எடுத்துக் கற்றவர்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டிய ஒரு விடயம். இப்போது நபி (ஸல்) அவர்களின் நடத்தை இது விடயத்தில் எவ்வாறு உள்ளது எனப் பார்ப்போம்.

திருமணம் சம்பந்தமாக நாம் குர்ஆனை, சுன்னாவை வாசித்துப் பார்க்கும் போது திருமணம் செய்து கொள்ளுமாறும், திருமணம் செய்து வைக்குமாறும் மனிதர்களை அவை தூண்டுவதைப் பார்க்கலாம்.

நபி ஸல் அவர்களின் முக்கியமான சுன்னாக்களில் ஒன்றாக திருமணம் காணப்படுகின்றது. நியாயமான காரணங்களின்றி திருமணத்தை புறக்கணிப்பவர்களைப் பார்த்து யார் எனது சுன்னாவைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்று சொல்லுமளவு அவரிடம் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

எனவே நபி [ஸல்] அவர்கள், அவருடைய திருமணத்திலும், பிற ஸஹாபாக்களுக்கு திருமணம் செய்து வைப்பதிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றார்கள். அவர் திருமணம் முடிக்கும் போதும், பிறருக்கு முடித்துவைக்கும் போதும் வயதை ஒரு தடையாக அவர் கண்டதாக விளங்கவில்லை. ஏனெனில் அவரும் சிறு வயதில் திருமணம் செய்துள்ளார். வேறு சில சஹாபாக்களுக்கும் சிறு வயதில் திருமணம் செய்து வைத்துள்ளார்.

பாத்திமா பிந்த் கைஸ் ரழி அறிவிக்கின்றார்கள்; நபி (ஸல்) உஸாமாவைத்த திருமணம் செய்து கொள்ளுமாறு என்னிடம் கூறினார்கள். எனவே அவரை நான் திருமணம் செய்து கொண்டேன். அல்லாஹ் அதில் நலவுகளை ஏற்படுத்தித் தந்தான். (முஸ்லிம்-கிதாபுத்தலாக்.பாகம் 04. பக்கம் 195)

நபி ஸல் அவர்கள் உஸாமாவுக்கு திருமணம் செய்து வைக்கும் போது உஸாமா பதினாறு வயதைத் தாண்டாதவராக இருந்தார். அப்துல் ஹலீம் அபூ ஷுக்கா. தஹ்ரீருல் மர்ஆ பீ அஸ்ரிஸ் ரிஸாலா.பாகம் 05.பக்கம் 19.

நபி (ஸல்) அவர்களின் திருமண ஒழுங்கைப் பார்க்கும் போது ஆயிஷா (ரழி) அவர்களை ஆறு வயதில் திருமணம் செய்துள்ளார்கள். ( பதினாறு வயதில்தான் நபி (ஸல்) ஆயிஷா (ரழி) திருமணம் முடித்தார்கள் என்று இன்று சில அறிஞர்கள் நிறுவி உள்ளனர்). ஜுவைரியா பிந்த் ஹாரிசை (ரழி) அவருக்கு கிட்டத்தட்ட பதினைந்து வயதாக இருக்கும் போது நபி (ஸல்) திருமணம் செய்திருக்கின்றார்கள். ஏனைய மனைவிமார்களை பல வயதினராக இருக்கும்போது திருமணம் செய்துள்ளார்கள்.

நபி [ஸல்] அவர்கள் சிறுவயதில் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். அவர்களும் சிறு வயதில் திருமணம் செய்துள்ளார்கள். எனவே இதிலிருந்து எமக்கு புரிகின்ற ஒரு விடயம் நபி(ஸல்) திருமணத்திற்கு ஒரு வயதெல்லையை தீர்மானிக்கவில்லை. சிறு வயது முதல் பெரிய வயது வரை அன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இப்போது இங்கு எமக்குத் தோன்றுகின்ற கேள்வி நபி (ஸல்) அவர்கள் திருமணத்திற்கான வயதெல்லையை தீர்மானிக்காத போது நாங்கள் எப்படி தீர்மானிப்பது? உண்மையில் இது ஒரு நியாயமான கேள்வி.

இதனை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் எனில் வணக்கவழிபாடுகள் அல்லாத விடயங்களில் நபி (ஸல்) அவர்களின் செயல் மட்டும் காணப்பட்டால் அது கூடும், ஆகும் என்பதை மட்டுமே குறிக்கும்.

எனவே இவ்வாறான விடயங்களில் பின்னால் வரும் ஆட்சியாளர்கள் மனித நலனைக் கவனித்து, ஷரிஆவின் உயர் இலக்குகளை (மகாஸிதுஷ் ஷரீஆ)க் கவனித்து அதில் மாற்றங்களை கொண்டு வர முடியும்.

இதனை பின்வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகின்றது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّـهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். (நிஸா-59)

அல்லாஹ்வுக் கட்டுப்படுங்கள், அவனது தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்பவற்றுடன் சேர்த்து உங்களினால் உங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளருக்கு கட்டுப்படுமாறும் கூறுகின்றது.

காரணம் இஸ்லாத்தை மறுமை நாள் வரை கடைபிடிக்க வேண்டும் எனில் குர்ஆன், சுன்னா என்பவற்றுடன் அவை இரண்டையும் அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்ட மனித ஆய்வு, இஜ்திஹாதும் அவசியமாகும். அதனால்தான் அல்லாஹ், ரஸூல் ஆகிய இருவருடனும் இனைத்து ஆட்சியாளருக்கு கட்டுப்படுமாறும் இவ்வசனம் போதிக்கின்றது.

மீண்டும் இங்கு ஒரு கேள்வி வரும். உங்களால் எப்படி இப்படியான விளக்கம் ஒன்றைச் சொல்ல முடியும் என்று. இதற்கான் பதில், இக்கருத்தை சொன்னதற்குப் பின்னால் ஸஹாபாக்களின் நடத்தை காணப்படுகிறது. அந்த முன்மாதிரியின் மூலம்தான் நாம் இப்படியான ஒரு விளக்கத்தைப் பெற்றோம்.

இப்போது அவற்றிலிருந்து தேவையான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

  • மதுபானம் அருந்தியவர்களுக்கான தண்டனையை வரையறுத்தமை.

நபி ஸல் அவர்கள் மதுபானம் அருந்தியவர்களுக்கான ஒரு வரையறுத்த தண்டனையை சொல்லவில்லை. அடிக்குமாறு சொல்லியுள்ளார்கள். சில சந்தர்ப்பங்களில் அடிக்காமலும் விட்டிருக்கின்றார்கள். ஆனால் உமர் [ரழி] அவர்கள் அவரது கிலாபத்தின் இறுதிக்காலப்பகுதியில் 40 கசையடிகள் என்றும், பின்னர் 80 கசையடிகள் என்றும் தீர்மானித்தார்கள்.

சாஇப் பின் யஸீத் கூறுகின்றார். நபி [ஸல்] அவர்களின் காலத்திலும், அபூபக்கர் ரழி காலத்திலும், உமர் ரழி அவர்களது ஆட்சியின் ஆரம்பப்பகுதியிலும், மது அருந்துபவர் எம்மிடம் கொண்டுவரப்படுவார். நாம் அவருக்கு எமது கைகளாலும், போர்வைகளாலும், செருப்புக்களாலும், அடிப்போம்.

உமர் [ரழி] அவர்களது கிலாபத்தின் இறுதிக்காலப்பகுதியில் மது அருந்தியவனுக்கு 40 கசையடிகள் வழங்கினார்கள். மக்கள் தொடர்ந்தும் அத்துமீறிச்சென்ற போது பாவச்செயல்களில் ஈடுபட்டபோது மது அருந்துபவனுக்கு 80 கசையடிகளை தண்டனையாக வழங்கினார்கள். (புகாரி:6779)

எனவே நபி [ஸல்] அவர்கள் எண்ணிக்கையை வரையறுக்காத போதும் மனித நலனைக்கவனித்து, நபி (ஸல்) அவர்கள் மதுபானம் குடித்தவர்களுக்கு அடித்ததற்கான நோக்கத்தை, இலக்கை கவனித்து எண்ணிக்கையை வரையறுத்தார்கள்.

இது போன்று அதிகமான உதாரணங்கள் இருக்கின்றன. விரிவஞ்சி தவிர்ந்து கொள்கின்றேன். விரிவாக வாசிக்க விரும்புவர்கள் யூசுப் அல் கர்ளாவி எழுதி, ஷேய்க் அப்பாஸ் நளீமி அவர்கள் மொழிபெயர்த்த இஸ்லாமிய ஷரீஆவின் விசாலத்தன்மையும், நெகிழும் தன்மையும் என்ற புத்தகத்தை வாசிக்கவும்.

எனவே மனித நலன் கருதி, திருமணத்தின் இலக்கு, நோக்கம் என்பவற்றைக் கவனித்து வயதெல்லையை தீர்மானிப்பது குற்றமில்லை, அவ்வாறு தீர்மானிப்பது ஷரீஆவிற்கு முரணில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

எனவேதான் இமாம் இப்னு ஷுப்ருமா, உஸ்மான் அல்பத்தி போன்ற ஆரம்ப கால அறிஞர்கள் சிறுபிள்ளைத் திருமணத்தைத் தடை செய்தார்கள். நவீன காலத்தில் சிரியா தனியார் சட்டம், எகிப்து தனியார் சட்டம் போன்றன சட்ட அறிஞர்களின் அனுமதியுடன் பதினெட்டு வயது எனத் தீர்மானித்தது. சிறுபிள்ளைத் திருமணத்தை தடை செய்தது.

ஷேய்க் முஸ்தபா சிபாய் அவர்கள் இப்பிரச்சினையை ஆராய்ந்து பின்வருமாறு முடிவு சொன்னார்கள்.

  1. பருவ வயதை அடைய முன்பு திருமணம் முடிப்பதை தடை செய்ய வேண்டும். அதாவது சிறுபிள்ளைத் திருமணம் தடை செய்யப்பட வேண்டும். அவ்வாறு திருமணம் செய்து வைப்பவர்களை சட்டம் தண்டிக்க்க வேண்டும்.
  2. பதினெட்டு வயது என தீர்மானித்தாலும், அதற்கு முன்பு திருமணம் செய்வதை முற்றாக தடை செய்யக் கூடாது. அதாவது பருவ வயதை அடைந்த பின் காழியின் அனுமதியுடன் திருமணம் முடித்துக் கொடுக்க சட்டம் அனுமதிக்க வேண்டும். பதினெட்டு என்பது மேறகத்தைய உலகுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் அது பொருந்தும் என்று சொல்ல முடியாது.

உண்மையில் வயது விடயத்தில் ஷேய்க் முஸ்தபா சிபாய் உடைய இந்தக் கருத்து அழகானதொரு கருத்து. இதனை எமது தனியார் சட்டத்தில் பயன்படுத்தலாம்.

பருவ வயதை அடைந்த பின், பதினெட்டு வயதிற்கு முன்பு காழியின் அனுமதி இன்றி திருமணம் செய்து வைத்தால் திருமணம் செல்லுபடியாகும். செல்லுபடியாகாது என்று சொல்வது பொருத்தமில்லை. ஆனால் திருமணம் செய்துவைத்தவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும்.

இறுதியாக வயதெல்லையைத் தீர்மானிப்பது ஷரீஆவுக்கு முரணல்ல. அது ஷரீஆவிற்குற்பட்டதே. எனவே எமது நாட்டில் தற்போதைய நிலமையைக் கவனித்து வயதெல்லையைத் தீர்மானிப்பதுதான் மிகப் பொருததமானது. பாதுகாப்பானது. நலன் பயக்கக் கூடியது.

வயதில் மட்டுமல்ல மற்ற விடயங்களிலும் தனியார் சட்டத்தில் சீர் திருத்தங்கள் செய்வதுதான் முஸ்லிம்களுக்கும் நலன் பயக்கும். ஷரீஆ சட்டத்திற்கும் நலன் பயக்கும். மாற்றமாக சீர் திருத்தத்தில் பிடிவாதம் பிடிப்பது, சீர் திருத்தம் செய்யுமாறு வேண்டுபவர்களை குற்றம் பிடிப்பது ஆபத்தானது. எதிர்காலத்தில் ஷரீஆ சட்டம் என்ற ஒன்றே இலங்கையில் இல்லாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அது முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் அவமானம் என்பதில் சந்தேகமில்லை. எனவே இவ்விவகாரங்களை உணர்ச்சிவசப்பட்டு அனுகாமல், குறுகிய வட்டத்திற்குள் சிந்திக்காமல் தூர நோக்கு சிந்தனையோடு, எமது நாட்டு நிலையைக் கவனித்து நிதானமாக அனுக வேண்டும்.

எனவே தனியார் சட்டத்தில் சீர் திருத்தங்களை மேற்கொண்டு எமக்கிருக்கும் இம்மிகச் சிறந்த சலுகையை பாதுகாத்துக் கொள்வோம். இஸ்லாம் பிற்போக்கான மார்க்கம், இஸ்லாத்தின் சட்டங்கள் அநீதியானது, நவீன காலத்திற்கு பொருத்தமற்றது என்ற மனப் பதிவை இல்லாமல் செய்வோம். உலக மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த நாகரீகமடைந்த சட்டங்களை, வழிகாட்டல்களைக் கொண்ட ஒரு மார்க்கம் என்பதை உலகிற்குச் சொல்வோம்!

முஹம்மத் அலி நளீமி
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

இந்த தலைப்பில் 02 விடயங்கள் காணப்படுகின்றன. திருமணம் திருமணத்திற்கான வயதெல்லையைத் தீர்மானித்தல் இந்த இரண்டிலும் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. மனித ஆய்விற்கு இடம் கொடுக்காத, கால, சூழ, இட மாற்றங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்ய முடியாத…

இந்த தலைப்பில் 02 விடயங்கள் காணப்படுகின்றன. திருமணம் திருமணத்திற்கான வயதெல்லையைத் தீர்மானித்தல் இந்த இரண்டிலும் இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. மனித ஆய்விற்கு இடம் கொடுக்காத, கால, சூழ, இட மாற்றங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்ய முடியாத…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *