பிரதமரின் தீடிர் மாற்றம் ஏன்?

  • 15

 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன் ஏக வல்லோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

வழமையாக நாட்டு நடப்பை பொருத்து பல்வேறுபட்ட ஆக்கங்களை காலத்திற்கு தகுந்தவாறு சமூக விழிப்புணர்வுக்காக எழுதி வருவது வழக்கம். அந்த வகையிலே தான் இன்றைய இந்த ஆக்கமும் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சமூகத்தின் அதேபோல சில பௌத்த சமூகத்தவரின் கவனத்திற்காக விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது.

இன்றைய தினம் இலங்கை நாட்டின் கௌரவ பிரதமர் அவர்கள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலாக கொரோனா தொற்றால் மரணித்த உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார். உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சியான செய்தி. பல தரப்பினரது நீண்ட நாள் உழைப்பிற்கான கவலைக்கான கண்ணீருக்கான ஒரு பிரதிபலன் எனவும் கூறலாம்.

முக்கியமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஐயா அதேபோன்று சுமந்திரன் ஐயா மற்றும் இன்னோரன்ன தமிழ்-முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் வடகிழக்கில் இணைந்து மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக கூட இந்த செய்தி இருக்கலாம்.

இங்கே என் தரப்பில் சமூகம் என்ற ரீதியில் சிந்திக்க வேண்டிய சில விடயங்களை சிலேடையாக ஞாபகமூட்டி விட்டு செல்ல நினைக்கிறேன்.

ஜனாசா நல்லடக்கம் தொடர்பாக அண்மையில் பிரதமரிடம் வினவப்பட்ட கேள்விக்குக் கூட பிரதமர் தகனம் செய்வது உறுதி நல்லடக்கம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று கூறியிருந்தார். அதேபோன்று அரசு தரப்பிலான பல முக்கிய அமைச்சர்கள் அனுமதிக்கக் கூடாது என்ற கருத்தில் உறுதியாக இருந்தனர். இன்னும் சில முக்கிய பிக்குகள் கூட அந்தகருத்தில் உறுதியாக இருந்தனர். நிலைமை இவ்வாறிருக்க திடீரென பாராளுமன்றத்தில் வீர வசனமாக நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்ற வசனம் முழங்க காரணம் என்ன என ஒட்டுமொத்த சமூகமும் சிந்திக்க வேண்டிய கட்டாய கடமையிலேயே இருக்கிறோம்.

முதலாவதாக இந்த வார்த்தை வெறுமனே வார்த்தையாக இன்றி பழைய வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வசனம் நீக்கப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அத்தோடு சில நியாயமான கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். முடியுமாக இருந்தால் பதில்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.

  1. ஜனாசா நல்லடக்கம் தொடர்பாக எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அது சுகாதார அமைச்சு முடிவெடுக்கும் எனக்கூறி இருக்கும் சந்தர்ப்பத்தில் பிரதமர் திடீரென அவ்வாறானதொரு கருத்தை தெரிவித்து தன் காரணம் என்ன?
  2. முஸ்லிம் தனியார் சட்டம் காதி நீதிமன்றம் அரபு மத்ரஸாக்கள் இன்னும் பல மத இயக்கங்கள் தடை செய்யப்படும் என அண்மையில் சரத் வீரசேகர அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கின்ற நிலையில் அவற்றையெல்லாம் மூடிமறைக்கவா இந்த நல்லடக்க அனுமதி வழங்கப்படுகிறது?
  3. அடுத்து வினா என்னவென்றால் நாட்டில் நான்காயிரம் இடங்களில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் என்றால் யாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படும்?
  4. தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மரணங்கள் அதிகரிக்குமா குறையுமா?
  5. ஏற்கனவே நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுக்கள் பரிந்துரைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க திடீரென இன்று அவ்வாறு தெரிவித்தது ஏன்?
  6. ஐக்கிய நாடுகள் பேரவையில் எம் மீது தொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நாம் சரியான பதிலடி வழங்குவோம் இன்று வீரவசனம் பேசிய அரசு இன்று இப்படியானதொரு வீர வசனத்தை பேசுவதன் மர்மம் என்ன?
  7. பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வருவார் என்று இருக்கும் இந்த நிலையில் பாராளுமன்றத்தில் எதேச்சையாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலை திடீரென வழங்கியதன் பின்னணி என்ன?
  8. இவை எல்லாவற்றுக்கும் மேல் அண்மைய வடகிழக்கு இணைந்த தமிழ் முஸ்லிம் மக்களின் போராட்டம் தான் இந்த முடிவுக்கு காரணமாக இருந்தால் தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் ஒற்றுமைக்கு இந்த அரசு பயப்படுகிறதா?
  9. இவ்வாறு திடீரென ஜனாசா நல்லடக்கத்தில் அனுமதி வழங்கியது தமிழ்-முஸ்லிம் மக்களிடையே பிளவு ஏற்பட வித்திடும் ஒரு ஏவுகணை ஆக இருக்குமா?
  10. அல்லது இதைத் தொடர்ந்து தமிழ் மக்கள்களது பிரச்சினைகளுக்கான தீர்வு வழங்கப்படுமா?
  11. அல்லது மாகாணசபைத் தேர்தல் முன்மொழிவுகளில் ஒன்றாக இருக்குமா?
  12. முக்கிய பல அமைச்சர்கள் குறிப்பாக முஸ்லிம் அமைச்சர்கள் உடனே பிரதமருக்கு நன்றிகளை வாரி வழங்கியதை காணக்கிடைத்தது.. எப்படியும் அனுமதி கிடைக்கும் என்பது அறிந்திருந்த போதிலும் அது எப்போது கிடைக்கும் என்பது தான் அன்றிலிருந்து இன்றுவரை சம்பந்தப்பட்டவர்களின் கேள்வி?? ஆனால் பாராளுமன்றத்தில் எப்போது எவ்வாறு என்ற கேள்விகள் எதற்குமே பதில் இல்லாது வெறுமனே அனுமதி மாத்திரம் வழங்கப்படுகிறது என்பதன் அரசியல் காரணி என்ன? ஏன் எதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் முன்வந்து நன்றிகளை தெரிவிக்க வேண்டும்??

இவ்வாறு இன்னும் பல கேள்விகள் பதில் தேட வேண்டிய கேள்விகள் ஆக இருந்து கொண்டிருக்கின்றன என்பதை நான் சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன்.

என்னைப் பொருத்தவரையில் இதுவும் ஒரு அரசியல் மாய வலையே. முஸ்லிம் சமூகத்தையும் சரி ஏனைய சமூகத்தையும் சரி ஏமாற்றிவிட்டு ஏதோ ஒரு பெரிய திட்டத்தை தீட்ட போகிறது இலங்கை அரசு என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எனவே நல்லடக்கம் கிடைக்கப் பெற்றது என்பது அதற்காகப் போராடிய சிங்கள தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சகலருக்கும் கிடைத்த வெற்றியே. ஆனால் அந்த வெற்றி எம்மை இன்னும் இன்னும் ஒற்றுமைபடுத்துவதற்காக இருப்பதே சிறந்தது மாற்றமாக ஒன்றாக போராடிய நாம் பிரிவு படுவதற்கான காரணியாக அந்த வெற்றி இருந்து விடக்கூடாது என்பதே நான் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

எனவே நான் அன்று முதல் இன்று வரை திரும்பத் திரும்ப என் சமூகத்திற்கு வலியுறுத்திக் கூறுவது என்னவென்றால் ஒரு தடவைக்கு இரண்டு தடவைக்கு நூறு தடவை சிந்தியுங்கள். ஆராயுங்கள். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி விடாதீர்கள்..

பஸீம் இப்னு ரஸுல்

  அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன் ஏக வல்லோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். வழமையாக நாட்டு நடப்பை பொருத்து பல்வேறுபட்ட ஆக்கங்களை காலத்திற்கு தகுந்தவாறு சமூக விழிப்புணர்வுக்காக எழுதி வருவது வழக்கம். அந்த…

  அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன் ஏக வல்லோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். வழமையாக நாட்டு நடப்பை பொருத்து பல்வேறுபட்ட ஆக்கங்களை காலத்திற்கு தகுந்தவாறு சமூக விழிப்புணர்வுக்காக எழுதி வருவது வழக்கம். அந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *