Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆன் ஓதலாமா? 

மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆன் ஓதலாமா?

  • 89

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சம்பந்தமாக மூன்று சிந்தனைகள் உள்ளன.

  1. ஒன்று: மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது.
  2. இரண்டு: மாதவிடாய் பெண்கள் அல்-குர்ஆனை ஓதலாம்
  3. மூன்று: ஒரு ஆயத்தை விட குறைவாக ஓதலாம்
மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது

இது ஷாபிஈ மற்றும் ஹனபி மத்ஹபுகளின் கருத்தாகும். ஆனால் குர்ஆனை கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஓதிக் கொடுப்பதற்கு ஹனபி மத்ஹபினர் அனுமதி கொடுத்துள்ளனர். ஹன்பலி மத்ஹபின் பிரபல்யமனா கருத்து ஓதக் கூடாது என்பதே.

கூடாது என்ற சிந்தனை முகாமை சேர்ந்தவர்கள் பல ஹதீஸ்களை ஆதராமாக முன்வைக்கின்றனர். அதில் மிகவும் பிரபல்யமானது இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். ‘மாதாந்த இயற்கை உபாதைக்குள்ளான பெண்களும் குளிப்புக்கடமையான ஆண்களும் குர்ஆனிலிருந்து எதையும் ஓத வேண்டாம்’ (திர்மிதி) இது பலவீனமான ஹதீஸாகும். இதே கருத்துடைய இன்னும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் ஆதாரம் காட்ட முடியாத பலவீனமான ஹதீஸ்களாகும்.

இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர் வரிசையும் பலவீனமாதே என இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பாரியில் பதிவு செய்துள்ளார்கள். (1/409) மேலும் ‘இது ஹதீஸ் அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்துப்படி பலவீனமான ஹதீஸ்’ என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (21/460) நவீன காலத்தில் அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸ் ‘முன்கர்’ என்ற தரத்திலுள்ள பலவீனமான ஹதீஸ் என கூறியுள்ளார் (அல்இர்வா 495)

குளிப்புக்கடமையானவர் அல் குர்ஆன் ஓதக் கூடாது என்பது பொரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். எனவே ஜனாபத் உடைய சட்டமே மாத விடாய் ஏற்படும் பெண்ணுக்குமாகும் என்று மேற்குறித்த அறிஞர்கள் கூறுகின்றனர். இது குளிப்பது கடமை எனும் விடயத்தில் ஜனாபத் உடையவரும் மாதவிடாய் உடைய பெண்ணும் ஒன்றாவர் என்ற ஒப்பீட்டு அடிப்படையில் கூறப்படும் ஆதாரமாகம்.

மாதவிடாய் பெண்ணையும் குளிப்புக்கடமையானவரையும் சமமாக ஒப்பிடுவது தவறாகும். இருவருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. குளிப்புக்கடமையானவருக்கு உடனே குளித்து விடலாம். அல்லது தொழுகை நேரம் வந்தவுடன் தொடக்கை நீக்கி விடலாம். ஆனால் மாதவிடாய் பெண்கள் குறிப்பிட் நாட்கள் காத்திருக்க வேண்டும். எனவே இருவரையும் ஒப்பிடுவது பிழையாகும். மேலும் குளிப்பு கடமையானவர் குர்ஆன் ஓத முடியும் என்ற சிந்தனையை முன்வைக்கும் அறிஞர்களும் உள்ளனர். உமர் ரழி அவர்கள் ஜனாபத் உடையவர் குர்ஆன் ஓதுவது விரும்பத்தகாதது என்றும் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் குளிப்பு கடமையானவர் குர்ஆன் ஓதுவது பரவாயில்லை என்றும் கூறியுள்ளனர். ழாஹிரி சிந்தனை முகாமில் உள்ளவர்கள் ஜனாபத் உடையவர் குர்ஆன் ஓத முடியும் என்று கூறுவர். எனவே மாதவிடாய் பெண்களையும் குளிகடமையானவரையம் ஒப்பிட்டு ஆதரம் காட்டுவது பொருத்தமற்றதாகும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழு பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல் குர்ஆன் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை கூறும்போது, அல் குர்ஆன் ஓதும் விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது என்றும் மாலிக் மத்ஹபின் கருத்து மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓத முடியும் என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஏனைய மத்ஹப்களின் கருத்துக்களை முன்வைத்ததன் பின்னர் மேற்கண்ட விடயங்களிலிருந்து மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அல் குர்ஆன் ஓதுவது கூடாது என்பது தெளிவாகின்றது என பத்வா வழங்கியுள்ளது. இருப்பினும் பெண்கள் தாம் குர்ஆனில் மனனம் செய்த பகுதி மறந்து போகும் என்பதைப் பயந்தால் மாதவிடாயுடைய காலத்தில் குர்ஆனை மீட்டிக்கொள்வதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம் என நான்கு வழிமுறைகளை தந்துள்ளது. குர்ஆனை அதிகமாகச் செவிசாய்த்தல், தான் ஓதும் சப்தம் தன் காதுகளுக்குக் கேட்காத விதத்தில் உதடுகளை மாத்திரம் அசைத்து ஓதுதல், மனதால் ஓதுதல், குர்ஆனுடைய நிய்யத்திலன்றி, துஆ மற்றும் திக்ருடைய நிய்யத்தில் ஓதுதல் என்பதே அந்த வழிமுறயாகும்.

மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் அல்-குர்ஆனை ஓத முடியும்.

குர்ஆன் ஓதுவதை விட்டும் அவள் ஒருபோதும் தடுக்கப்பட மாட்டாள் என்பதே அநேகமான அறிஞர்களின் சிந்தனையாகும். இந்த சிந்தனையை ஸஹாபாக்கள் காலம் தொட்டு நவீனகாலம் வரை அறிஞர்கள் ஆதரித்தே வந்துள்ளனர்.

மாதவிடாய் பெண்கள் எந்த நிபந்தனைகளுமின்றி குர்ஆனை ஓதலாம் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஈராக்கில் வாழும் காலத்தில் பத்வா வழங்கியுள்ளார்கள். (மஜ்மூஃ 2/387) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ் அவர்களின் ஒரு அறிவிப்பு குர்ஆன் ஓதலாம் என்ற சிந்தனையை ஆதரித்தே வந்துள்ளது. (இஃலாமுல் முவக்கிஈன் 3ஃ25) குர்ஆன் ஓதலாம் என்ற இந்த கருத்தை இமாம் இப்னு ஹஸம் தனது அல்முஹல்லாவில் (1/77) பதிவு செய்துள்ளார்கள்.

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களிடம் அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரழி) அவர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆன் ஓதலாமா? என்ற கேட்டபோது, ஆம் ஓதலாம். யார் தடுக்கின்றாரோ அவர் அது பற்றிய77 அறிவில்லாமல் அதனை செய்கிறார் என்றார்கள். (புகாரியின் விரிவுரை: இப்னு பத்தால் (1/423) இமாம் ஸஈத் இப்னு முஸய்யப் (ரஹ்)அவர்களின் சிந்தனையும் மாதாந்த உபாதைக்குள்ளான பெண்கள் குர்ஆன் ஓதலாம் என்பதேன்.(முஃனி 1/106)

இமாம் இப்னு தைமியா அவர்கள் மாதாந்த உபாதைக்குள்ளான பெண்கள் குர்ஆனை தாரளமாக ஓதலாம் என்ற சிந்தனையையே தனது விருப்பத் தெரிவாக எடுத்துள்ளர்கள். மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனில் மனனம் செய்த பகுதிகள் மறக்கும் என பயந்தால் குர்ஆனை ஓதுவது வாஜிபாகும் என இப்னு தைமியா கூறுகிறார். கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் பெண்களும் பள்ளிவாசல்களும் என்ற தனது ஆய்வு நூலில் மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது சம்பந்தமாக மிக அழகான முறையில் தெளிவாக இமாம் இப்னு தைமியா அவர்கள் கருத்துக்களை தந்துள்ளார் எனக் குறிப்பிடுகிறர். அவ்தா அவர்கள் தனது ஆய்வின் முடிவில் மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவதை தடுப்பதற்கு மிகச் சரியான எந்த ஆதாரமும் இஸ்லாமிய சட்டப்பரப்பில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். (பக்கம் 62) இமாம் ஜவ்ஸி, இமாம் ஷவகானி ஆகியோரும் மாதவிடாய் பெண்கள் அல்குர்ஆனை ஓதுவது ஆகும் என்பதையே உறுதி செய்துள்ளார்கள். இவ்வாறே ழாஹிரி மத்ஹபினர், அறிஞர் அஷ்ஷெய்க் முஹம்மத் உஸைமின் மற்றும் சவுதியை தளமாக கொண்டு இயங்கும் பத்வாவுக்கான நிரந்தர குழுவும் மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாம் என்றே பத்வாக வழங்கியுள்ளனர்.

அவ்வாறே குர்ஆனை பார்க்கலாம், மனனமிட்ட பகுதியை தாரளமாக ஓதலாம் என இமாம் நவவி அர்கள் தனது முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் விரிவுரையில் தெளிவாகவே கூறியுள்ளார். (4/290)

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ‘ஒரு பெண் மாதவிடாயின் போது அல் குர்ஆன் ஓத முடியும் என்றும், அதேநேரத்தில், அப்பெண்ணுக்கு மாதவிடாய் நின்று விட்டால் குளித்து சுத்தமாகும் வரை அல் குர்ஆன் ஓதுவது கூடாது’ என்ற சிந்தனையை கொண்டுள்ளார்.

ஆயிஷா ரழி அவர்கள் ஹஜ் வணக்கத்தில் இருக்கும் போது மாதாந்த உபாதைக்குள்ளானார். அப்போது நபியவர்கள் தவாப் தவிற ஏனைய அனைத்து கிரியைகளையும் செய்யுமாறு ஏவினார்கள். (புகாரி 1/68) பல நாட்கள் தங்கியிருந்து ஹஜ் கடமையை செய்யும் பெண்கள் விடயத்தில் குர்ஆன் ஓதுவது பற்றி நபிகளார் தெளிவான சட்டத்தை கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இருந்தும் தவாப் மாத்திரம் கூடாது என்று அறுதியிட்டு கூறியிருப்பது அல்குர்ஆனை ஓத முடியும் என்பதையே சுட்டுகிறது.

மேற்குறிப்பிட்ட கருத்துக்களை நோக்கம் போது ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், நவீன கால அறிஞர்கள் என பலரும் மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதுவது கூடும் என்ற சிந்தனையை ஆதரித்தே கருத்து வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு பிரதானமான காரணம் மாதவிடாய் பெண்களை குர்ஆன் ஓதுவதை தடுக்கக் கூடிய மிகச் சரியான தெளிவான நேரடியான எந்த ஆதாரங்களும் இஸ்லாமிய சட்டப்பரப்பில் இல்லாமையாகும். அவ்வாறே ஸஹாபக்களின் காலத்தல் மாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது என்பதற்கான எந்தப் பதிவுகளும் கிடையாது. எனவே தான் அதிகமான அறிஞர்கள் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தொழுவது ஹராம் என்றும் குர்ஆன் ஓதுவது ஆகும் என்றும் தேவைப்படும் போது குர்ஆனை தொடுவதும் ஆகும் என்றும் கூறியுள்ளனர்.

மூன்றாவது ஒரு ஆயத்திற்கு குறைந்த பகுதியை ஓதலாம் என்ற சிந்தனையாகும்.

இது இமாம் அபூ ஹனீபாவின் கருத்தாகும். (பதாஇஉஸ் ஸனாஇஉ 1/38)

மேற்கூறிய சிந்தனைகளை அவதானிக்கும் போது மாதவிடாய் பெண்கள் குர்ஆனை ஓதுவது கருத்து வேறுபாடுள்ள ஒரு விடயம் என்பது தெளிவாகிறது. எனவே ஒருவர் தான் விரும்பிய ஒரு கருத்தை தெரிவு செய்யலாம். தான் தெரிவு செய்த சிந்தனைக்கு மாற்றமான கருத்தை கொண்டவருடன் வாதிடுவதற்கு எந்தத் தேவையுமில்லை.

பாடசாலைகளிலும் அறபுக் கலாசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவிகளுக்கு இரண்டாவது சிந்தனையை தெரிவு செய்வதே மிக இலகுவாக அமையும். இஸ்லாம் மக்களை கஷ்டப்படுத்துவதில்லை. மார்க்கம் இலகுவானது. இலகுபடுத்துவதையே அது விரும்புகிறது. அல்-குர்ஆனை மனனம் செய்யும் உயர்வகுப்பு மாணிவகள் மற்றும் மனனம் செய்த ஹாபிழாக்கள் அடிக்கடி ஓத வேண்டிய கட்டாய தேவையுண்டு. தினமும் ஓதுவதன் மூலம் தான் மனனம் செய்த குர்ஆனை தக்க வைத்துக் கொள்ள முடியும். ரமழான் காலங்களில் மாதாந்த உபாதைக்குள்ளாகும் போது குறிப்பிட் ஒரு காலம் ஓதாமல் இருப்பது நிச்சயமாக சங்கடமான ஒரு விடயமாகும். இந்த சர்ந்தர்ப்பங்களில் அறிஞர்களின் கருத்து வேறுபாடு அருளாக உள்ளது.

இங்கு வாசகர்கள் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுள்ள ஒரு விடயம் நெகிழ்ந்து கொடுக்க முடியுமான இடமாகும். அதில் விட்டுக் கொடுத்து நடப்பது பண்பாகும். கருத்து வேறுபாடுடை பிரச்சினைகள் தடுக்கப்பட வேண்டிய தீமையாகாது. சட்டப்பரப்பில் வித்தியாசமான கருத்துக்கு இடம்பாடு இருந்தால் மாற்றுக் கருத்து கொண்டவரை ஒருபோதும் மறுதளிக்க முடியாது.

குறித்த ஒரு மத்ஹபின் வட்டத்தில் மாத்திரம் வெறித்தனமாக பிடிவாதம் பிடிப்பது நிச்சயமாக சமூகத்தில் பேரழிவையே கொண்டுவரும். மார்க்கத்தின் கிளை அம்சங்களில் கருத்து முரண்பாடுகள் இருக்கவே செய்யும். அனைவரும் ஒரு கருத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நிச்சயமாக குழப்பங்கள் உருவாகுவதற்கு வித்திடும். அவ்வாறு செயற்படுவது இறை நியதிகளுக்கும் முரண்பட்ட போக்காகும்.

எனவே ஒருவர் தான் விரும்பிய சிந்தனையை சுதந்திரமாக தெரிவு செய்து பின்பற்றலாம். அதற்காக அடுத்த சிந்தனைகளில் உள்ள நன்மைகளை பெற முடியாமல் கதவடைக்கக் கூடாது. தகுதிவாய்ந்த ஒவ்வொரு அறிஞரின் கருத்திலும் சிந்தனையிலும் அருளும் நலனும் இருக்கவே செய்யும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

முஹம்மத் பகீஹுத்தீன்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சம்பந்தமாக மூன்று சிந்தனைகள் உள்ளன. ஒன்று: மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது. இரண்டு: மாதவிடாய் பெண்கள் அல்-குர்ஆனை ஓதலாம் மூன்று: ஒரு ஆயத்தை விட குறைவாக…

பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சம்பந்தமாக மூன்று சிந்தனைகள் உள்ளன. ஒன்று: மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது. இரண்டு: மாதவிடாய் பெண்கள் அல்-குர்ஆனை ஓதலாம் மூன்று: ஒரு ஆயத்தை விட குறைவாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *