Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முதுமையின் தள்ளாட்டத்துடன் பிளாட்டினம் விழா கொண்டாடும் சுதந்திரக் கட்சி 

முதுமையின் தள்ளாட்டத்துடன் பிளாட்டினம் விழா கொண்டாடும் சுதந்திரக் கட்சி

  • 5

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வரலாறு காணாத பின்னடைவுகளுக்கு மத்தியில் நாளை 70 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது சுதந்திரக்கட்சி!

இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றி நடைபோட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தேசிய மட்டத்தில் உதயமான பிரதான அரசியல் கூட்டணிகளுக்கு தலைமைத்துவம் வழங்கி ‘தலைமை’க் கட்சியாக வலம் வந்த சுதந்திரக்கட்சி இன்று மொட்டு கட்சியிடம் சரணடைந்து, பங்காளிக்கட்சியாக மாறியுள்ள நிலையிலேயே நாளை (02) 70ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியுடன் கொள்கை ரீதியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறி 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அமரர் எஸ்.டபிள்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க உருவாக்கினார். அவரின் பின்னால் மேலும் பலர் அணிதிரண்டனர்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, சிங்கள மொழி, தேசிய பொருளாதாரம் உட்பட தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் பயணத்தை ஆரம்பித்ததால் மக்கள் மத்தியில் ஆதரவலை உருவாகியது.

1952 இல் நடைபெற்ற இலங்கையின் 2 ஆவது பொதுத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 15.52 சதவீத வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களுடன் பிரதான எதிர்க்கட்சியானது. அதன்பின்னர் 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 39.53 சதவீத வாக்குகளுடன் 51 ஆசனங்களை வென்று ஆட்சியையும் கைப்பற்றும் அளவுக்கு அரசு வளர்ச்சி கண்டது.

அதாவது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி 5 ஆண்டுகளுக்குள் பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார்.1959 செப்டம்பர் 26 ஆம் திகதி பண்டாரநாயக்க (60 வயது) சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பின்னர் தற்காலிக தலைவராக பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த சி.பி.டி. சில்வா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவி பண்டாரநாயக்கவின் பாரியாரான ஶ்ரீமாவிடம் கையளிக்கப்பட்டது. அவரும் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

இலங்கையில் 5ஆவது பொதுத்தேர்தல் 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.

ஐந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1960 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்றது. உலகின் முதல் பெண் பிரதமராக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவியேற்றார்.

1970 இல் நடைபெற்ற இலங்கையின் 6ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெற்றிபெற்றது.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் 1982 ஆம் ஆண்டே முதலாவது தேர்தல் நடைபெற்றது. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் சுதந்திரக்கட்சியின் சார்பில் கை சின்னத்தில் கொப்பேகடுவவே போட்டியிட்டார்.1988 இல் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக்கட்சி கை சின்னத்தில் களமிறங்கியது.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டார். 1989 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் கை சின்னத்திலேயே சு.க. போட்டியிட்டது. 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கூட்டணி அமைத்து கதிரை சின்னத்தில் போட்டியிட்டது. பிரதம வேட்பாளராக சந்திரிக்கா களம் கண்டார். இறுதியில் ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.

2000 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சு.கவின் தலைவர் சந்திரிக்கா தலைமையிலான கூட்டணியே கதிரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது. 2001 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

2004 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டதால் அவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பிறகு 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்கீழ் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கியது. சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

‘கதிரை’ மற்றும் ‘வெற்றிலை’ சின்னங்களின்கீழும் சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தல்களை எதிர்கொண்டிருந்தாலும் – கூட்டணியின் தலைமைப் பதவி, ஜனாதிபதி வேட்பாளர் ஆகியவற்றை பங்காளிகளுக்கு விட்டுக்கொடுத்தில்லை.

எனினும், 37 ஆண்டுகளுக்கு பிறகு 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மேற்படி இரு விடயங்களையும் விட்டுக்கொடுத்தது மட்டுமல்லாது, ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்தாது, கூட்டணி என்ற போர்வையில் ‘மொட்டி’டம் கடந்தாண்டு சரணடைந்து சுதந்திரக்கட்சி.

கடைசியாக நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் மூன்று மாவட்டங்களில் அக்கட்சி தனித்து போட்டியிட்டிருந்தாலும் யாழ். மாவட்டத்தில் மாத்திரமே ஒரு ஆசனம் கிடைத்தது. களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்கவ்வ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனைய வேட்பாளர்கள் மொட்டு கட்சியின் பட்டியலின்கீழ்தான் போட்டியிட்டனர்.

ஆக இன்று 70 ஆவது ஆண்டில் காலடி வைக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டெழுமா அல்லது மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கி பலத்தை நிரூபிக்குமா?

பண்டாரநாயக்க, ஶ்ரீமா, சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமைத்துவத்தின்கீழ் எழுச்சி பெற்றிருந்த சுதந்திரக்கட்சி மைத்திரியின் தலைமையின் கீழ்தான் பெரும் சரிவை சந்தித்துள்ளது. எனவே, அவர் கட்சியை மீட்டெடுப்பாரா அல்லது மேலும் பலவீனப்படுத்துவாரா? என்பதற்கு காத்திருந்து பார்ப்போம் என்பதே தற்போது வழங்கக்கூடியதாக உள்ள பதில்.

ஆர்.சனத்

வரலாறு காணாத பின்னடைவுகளுக்கு மத்தியில் நாளை 70 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது சுதந்திரக்கட்சி! இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி…

வரலாறு காணாத பின்னடைவுகளுக்கு மத்தியில் நாளை 70 ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது சுதந்திரக்கட்சி! இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *