Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வலயங்கள், மாகாணங்களை தரப்படுத்துவதில் புதியதொரு அணுகுமுறை அவசியம் 

வலயங்கள், மாகாணங்களை தரப்படுத்துவதில் புதியதொரு அணுகுமுறை அவசியம்

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பரீட்சைத் திணைக்களமானது நவீனமயப்படுத்தப்பட்ட பல புதிய நுட்பமுறைகளை அறிமுகப்படுத்தி, வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு வலயங்களையும், மாகாணங்களையும் தரப்படுத்தும் விடயத்தில் புதியதோர் அணுகுமுறையினை அறிமுகப்படுத்தும் தேவையேற்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தால் பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 99 வலயங்களும், 09 மாகாணங்களும் தரப்படுத்தப்படுவது வழமை. இத்தரப்படுத்தல் முறைமையினால் வலயங்களும் மாகாணங்களும் பல்வேறு பொறுப்புக்களைக் கூற வேண்டியவையாகக் காணப்படுவதோடு, அகில இலங்கைரீதியில் தனது நிலையினை அடுத்து வரும் வருடங்களில் முன்னேற்றிக் கொள்வதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டக் கூடியதாகவும் அமைகின்றன.

ஆனாலும், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பல பாடசாலைகளும், வலயங்களும் அடுத்தடுத்த வருடங்களில் தமது முன்னேற்றம் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் சற்று சோர்வடையும் நிலையே காணப்படுகின்றது. அதற்கான காரணங்களை ஆராய்கையில், பரீட்சைத் திணைக்களத்தின் தரப்படுத்தல் முறைமையும் ஒன்றாகக் காணப்படுகின்றது.

அதாவது சிறந்த சித்தி வீதங்களைப் பெற்றாலும் கூட பாடசாலைகளையும் வலயங்களையும் தரப்படுத்தி ஒவ்வொருவருக்கும் நிலைகள் வழங்கப்படுவதால், தரப்படுத்தலில் முன்னிலையிலுள்ள பாடசாலைகளும், வலயங்களும், மாகாணங்களுமே சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதோடு, ஏனையோர் சிறந்த கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்ற எண்ணப்பாட்டை சமூகத்தின் மத்தியில் தோற்றுவிக்கின்றது.

இதனால் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் என்போருக்கு உளவியல் ரீதியிலான பல தாக்கங்கள் ஏற்படுகின்றன. இவ்விடயங்கள் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தலை மேற்கொள்வதில் ஒரு புதிய அணுகுமுறையின் தேவைப்பாட்டை உணர்த்துவதாய் அமைகின்றன.

அந்த வகையில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றை எடுத்துக் கொண்டால், 99 வலயங்களில் 94 வலயங்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான சித்தி வீதத்தினைப் பெற்றிருப்பதோடு, 05 வலயங்கள் மாத்திரமே 75 சதவீதத்திற்கும் குறைவான சித்தி வீதத்தினைப் பெற்றிருக்கின்றன. அவ்வாறே 09 மாகாணங்களிலும் 08 மாகாணங்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான சித்தி வீதத்தினைப் பெற்றிருப்பதோடு, ஒரு மாகாணம் மட்டுமே 79.76 சதவீதத்தினைப் பெற்று சகல மாகாணங்களும் 75 சதவீதத்திற்கும் அதிகமான சித்தி வீதத்தினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ‘ஏ’ சித்தி வழங்கப்படுவதோடு 74-65 புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு ‘பி’ சித்தி வழங்கப்பட்டு மாணவர்கள் தனிமைப்படுத்தப்படாது தொகுதிப்படுத்தப்படுகின்றனர்.

அதாவது 100 புள்ளிகளைப் பெற்ற மாணவனும் 75 புள்ளிகளைப் பெற்ற மாணவனும் 25 புள்ளிகள் வித்தியாசப்பட்ட போதும், இருவரும் ஒரே தரத்தில் ‘ஏ’ சித்தி பெற்றவர்களாகக் கணிக்கப்பட்டு சகல தரப்பினராலும் பாராட்டப்படும் அதேவேளை, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 86.74 சதவீதம் சித்தி வீதத்தினைப் பெற்ற வலயத்தினை முதலாமிடம் என்றும், வெறும் 06 சதவீதம் குறைவாகப் பெற்று 80.09 சதவீதம் சித்தி வீதத்தினைப் பெற்ற வலயத்தினை 87ஆம் இடம் என்றும், 75.90 சதவீதம் சித்தி வீதத்தினைப் பெற்ற வலயத்தினை 94ஆம் இடம் என்றும் சொல்லுவது எந்தளவிற்குப் பொருத்தமானதெனச் சிந்திக்க வைக்கின்றது.

தனியாள் வேறுபாடுகளைக் கொண்ட மனிதனை ஒப்பீடு செய்வது பொருத்தமற்றது என்ற உளவியல் தத்துவத்தின் அடிப்படையில் தேர்ச்சி மையக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு குறித்ததொரு விடயத்தைச் செய்வதற்குத் தேவையான ஆகக் குறைந்தளவு தேர்ச்சியையாவது சகல மாணவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படும் கலைத் திட்டத்திலும், எந்தவொரு போட்டிப் பரீட்சையிலும் 40 புள்ளிகள் அல்லது 35 புள்ளிகளைப் பெற்ற சகலரையும் சித்தி எனக் கருதி நாடளாவிய சேவைகள் மற்றும் ஏனைய அரச துறைகளுக்கு நியமனங்களை வழங்கும் பரீட்சை முறைமையிலும் உள்ள நாம் 80 சதவீதமான மாணவர்களைக் குறித்த பரீட்சையில் சித்தி பெற வைத்த வலயங்களையும் மாகாணங்களையும் தரப்படுத்தல் செய்வதன் மூலம் அவர்கள் பெற்றுக் கொண்ட 80 சதவீதமான வெற்றியையும் பெறுமதியற்றதாக்காது புதியதோர் அணுகுமுறையினைக் கையாழ்வதன் மூலம் பெறுமதியுள்ளதாக்க முயற்சிப்பது பொருத்தமானதாகும்.

அந்த வகையில் மாணவர்களது பெறுபேறுகளைக் கொண்டே வலயங்களும் மாகாணங்களும் தரப்படுத்தப்படுவதனால், அத்தரப்படுத்தலை மாணவர்களது புள்ளிகளைத் தரப்படுத்தும் அதே முறையில் மேற்கொண்டு ‘ஏ’ தரம், ‘பி’ தரம்,’சி’ தரம் மற்றும் ‘எஸ்’ தரம் கொண்ட பாடசாலை, வலயம், மாகாணம் என்று தரப்படுத்தும் போது சகல பாடசாலைகளும், வலயங்களும் மாகாணங்களும் ‘ஏ’ தரத்தினுள் வருவதற்கு முயற்சிப்பதோடு, ஏற்கனவே ‘ஏ’ தரத்திலுள்ளவர்கள் அதனைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள சோர்வின்றி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் மனநிலைகளையும் தோற்றுவிக்கும்.

இதனடிப்படையில் 2020ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி 94 வலயங்கள் ‘ஏ’ தரத்திலும் 03 வலயங்கள் ‘பி’ தரத்திலும், 02 வலயங்கள் ’சி’ தரத்திலும் உள்ளன. எனவே ‘சி’ தரத்திலுள்ள 02 வலயங்களையும் அடுத்த வருடம் ‘பி’ தரத்திற்குக் கொண்டு வருவதற்கும், ‘பி’ தரத்திலுள்ள 03 வலயங்களையும் அடுத்த வருடம் ‘ஏ’ தரத்திற்குக் கொண்டு வருவதற்குமான முயற்சிகளை இலகுவாக மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதோடு, 99 வலயங்களையும் ‘ஏ’ தரத்திலுள்ள வலயங்களாகவும், 09 மாகாணங்களையும் ‘ஏ’ தரத்திலுள்ள மாகாணங்களாகவும் மாறும் முயற்சியிலீடுபடுவதனால் சகல பாடசாலைகளையும் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் ‘ஏ’ தரம் வாய்ந்தவைகளாக மாற்றவும் முடியும்.

ஏ.முகம்மது நௌஸாத்
(பிரதிக் கல்விப் பணிப்பாளர் – கல்வி அபிவிருத்தி)
வலயக் கல்வி அலுவலகம்
சம்மாந்துறை

பரீட்சைத் திணைக்களமானது நவீனமயப்படுத்தப்பட்ட பல புதிய நுட்பமுறைகளை அறிமுகப்படுத்தி, வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு வலயங்களையும், மாகாணங்களையும் தரப்படுத்தும் விடயத்தில் புதியதோர் அணுகுமுறையினை அறிமுகப்படுத்தும் தேவையேற்பட்டுள்ளது.…

பரீட்சைத் திணைக்களமானது நவீனமயப்படுத்தப்பட்ட பல புதிய நுட்பமுறைகளை அறிமுகப்படுத்தி, வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு வலயங்களையும், மாகாணங்களையும் தரப்படுத்தும் விடயத்தில் புதியதோர் அணுகுமுறையினை அறிமுகப்படுத்தும் தேவையேற்பட்டுள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *