உலமாக்களை திட்டுபவர்கள் யார்?

  • 26

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் உலமாக்களை திட்ட வேண்டாம்.  உலமாக்களை திட்ட வேண்டாம். பதுவாக்களை தேடிக் கொள்ள வேண்டாம் என்ற குரல்களையும் வீடியோக்களையும் அடிக்கடி கேட்கவும் பார்க்கவும் முடிகின்றது. இதன் உண்மை நிலவரம் என்ன?

இது சம்பந்தமாக தானும் சில கட்டுரைகளை எழுதியதால் குற்றச் சாட்டுக்களுக்கும் இந்த ஒலிப்பதிவுகளுக்கும் ஒரு பதிலாகவே இந்த கட்டுரையை எழுதவேண்டி இருக்கிறது.

அதாவது நான் அறிந்தவரை சமூக வலைத்தளங்களில் நம் சகோதரர்கள் எந்த உலமாக்களினதும் தனிப்பட்ட விடயங்களை அல்லது அவர்களின் குடும்பங்களை அல்லது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நடவடிக்கைகளை எந்த ஒரு முஸ்லிம் சகோதரர்களும் விமர்சிக்கவில்லை. இது நூறுவீதம் உண்மை. அவ்வாறு இருந்தால் பயமில்லாமல் சுட்டிக் காட்ட முடியும்.

அவ்வாறு ஒரு நபரின், அல்லது ஒரு உலமாவின் தனிப்பட்ட வாழ்க்கை குடும்ப விடயங்கள் விமர்சிக்கப்படல் கூடாது. அவ்வாறு விமர்சித்தவர் கட்டாயம் சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிக்கும் வரை அல்லாஹ் அவரை மன்னிக்க மாட்டான். அதில் மாற்றுக் கருத்தில்லை. அநியாயமாக ஒருவரை பேசி அவர் பாவத்தை சுமக்க வேண்டியதில்லை.

அதேவேளை ஒரு முக்கிய உலமா, சமூகத்தின் ஒரு முக்கிய பதவியை வகிக்கும் போது, அவர் சமூகம் சார்பான பொது ரீதியிலான ஒரு தவறை செய்யும் போது அதை சுட்டிக்காட்ட அந்த சமூகத்தின் ஒரு உறுப்பினருக்கு தாராள அனுமதி உண்டு. இதற்கு மார்க்க அடிப்படையிலும் அனுமதி உண்டு.

ஆரம்பகால இஸ்லாமிய ஆட்சியில் நபியவர்கள் சமூகத்தின் தலைவராக இருந்த போது, சில முடிவுகளை எடுக்கும் வேளையில் ஸஹாபாக்கள் கேட்டார்கள்.

“யாரஸூலுல்லாஹ் இது அல்லாஹ்வின் வஹியா, அல்லது உங்களது ஆலோசனையா. இது உங்களது ஆலோசனையாக இருந்தால் இதைவிட ஒரு நல்ல வழிமுறை என்னிடம் உள்ளது” என ஸஹாபாக்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் ரஸுலுல்லாஹ்வினாலும் கலீபாக்களினாலும் நியமிக்கப்பட்ட பிராந்திய ஆட்சியாளர்கள் பற்றிய புகார்கள் வந்தபோது அது பற்றி நபியவர்களும் கலீபாக்களும் விசாரணை செய்தார்கள்.

இன்னும் கலீபாக்கள் பதவிகளை ஏற்கும் போது மக்களிடம் சொன்னார்கள். நாம் தவறு செய்யும்போது சுட்டிக் காட்டுங்கள். நான் திருந்தாவிட்டால் என்னை விட்டு விலகிச் செல்லுங்கள். இதுவே இஸ்லாமிய வழிமுறை. ஆகையால் தவறை சுட்டிக்காட்ட பூரண அனுமதி மார்க்கத்தில் உண்டு.

மாறாக நபியவர்களால் அனுப்பப்பட்ட ஆட்சியாளர் கலீபாவினால் அனுப்பப்பட்ட ஆட்சியாளர் அவரை விமர்சிக்க வேண்டாம். பதுவாவை தேட வேண்டாம் எனக் கூறவில்லை. மார்க்கத்தை சரியாக விளங்க வேண்டும். இன்று சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கு காரணம் உலமாக்களே.

இவர்கள் உலமாக்களை திட்ட வேண்டாம் என்ற மந்திரம் ஓதியே மக்கள் வாயை மூடினார்கள். மக்களுக்காக வந்த கோடிக்கணக்கான பணங்கள் பலரால் கையாளப்பட்டன. மறுப்பார்களாயின் ஆதாரத்துடன் தர முடியும்.

நபியவர்களின் வாழ்க்கை முறையினை போதிக்கும் இவர்களின் வாழ்க்கை முறையும். இவர்களின் பல கோடிகள் பெறுமதியான சொத்துக்கள், பல கோடி பெறுமதியான கட்டடங்கள், மாளிகைகள் வாகனங்கள்.

இந்நிலையில் பட்டினியால் வாடும் மக்கள் ஒரு வேளை பசிக்காக மாளிகாவத்தையில் மிதிபட்டு வபாத்தான தாய்மார். அதிலும் உதவிய தனவந்தருக்கு எதிராக அரசாங்கத்திற்கு வால்பிடித்து வெளியிப்பட்ட கண்டன அறிக்கை.

உங்களிடம் இருப்பதை கொடுக்கவும் மாட்டீர்கள். கொடுப்பவனுக்கு எதிராக அரசுடன் சேர்ந்து போர் கொடி தூக்குவீர்கள். அந்த தனவந்தர் பேசாமல் மொத்தமாக இதைபங்கீடு செய்யுங்கள் என உலமாக்கள் கையில் கொடுத்திருந்தால், ஒரு கண்டன அறிக்கையும் வெளிவந்திருக்காது.

மக்களுக்கு சத்திய மார்க்கத்தை வழி காட்டும் ஒரு தலைமை உலமா என்னவென்று, குண்டுத் தாக்குதலில் மரணித்தவர்களது அஞ்சலியில் விளக்கு ஏந்தி நிற்பார்.

அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக மக்களை சமாதானப்படுத்த எப்படி சாம்பலை அல்லது அதன் ஒரு பகுதியை தாருங்கள் என கேட்பார்.

ஜனாதிபதி விசாரணைக் குழுவிற்கு வட்டிலாப்பம் கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்பட்ட விடயம். இதற்கு எந்த மறுப்பும் இல்லை. இவை அனைத்தும் இவரின் தனிப்பட்ட விஷயமா? இதை சுட்டிக் காட்டுவது உலமாக்களை திட்டுவதா? இது பதுவாவா?

முடிந்தால் அலாஹ்வின் மீது சத்தியமிட்டு, தான் செய்யவில்லை என சமூகத்திற்கு சொல்லட்டும். அவ்வாறாயின் பொய்பரப்பிய ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இதை பேசினால் உலமாக்களை ஏசுவதா? உலமாக்களை திட்டுவதா?

முதலில் ஒன்றை சிந்திக்க வேண்டும். ஒரு சமூகத்தின் தலைவர் ஒரு தவறை செய்யும் போது, அவர் செய்யும் தவறு முழு சமூகத்தையும் பாதிக்கும் என்பதை விளங்க வேண்டும். அதிலும் விஷேடமாக ஆன்மீக தலைவர்.

முப்தி ஒரு சாதாரண தனி மனிதனாக விசாரணைக் குழுவிற்கு செல்லவில்லை. ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே அங்கு சென்றார்.

அங்கு சமூகத்தின் கௌரவத்தையும் மதிப்பையும் காத்துக் கொள்ள அவர் தெரிந்திருக்க வேண்டும். காரியாலயங்களில் பணிபுரியும் எமது உறவுகளும் அந்நிய மக்களை அயலவர்களாகக் கொண்டு வாழும் பலர், வட்டிலாப்பக் கதையோடுபட்ட அவமானங்களும் வெட்கங்களும், இதை பேச யாரும் இல்லை. பேசினால் திட்டுவதா? இதை பேசினால் பதுவாவா? இவை சமூகத்தில் அக்கறையுள்ள ஒரு முஸ்லிமுக்கு தவறை சுட்டிக் காட்டுவது, தன் கடமை. இது காதோடு காது வைத்துப் பேச தனிப்பட்ட விடயமல்ல. சமூகப்பிரச்சினை சமூகத்தின் முன் நிலையில் விமர்சிக்கப்பட வேண்டும். இது தான் இல்லாமிய வழிமுறை.

இப்படி நடந்திருக்கலாம். அப்படி நடந்திருக்கலாம். என தமக்கு தாமே மக்கள் ஆறுதல் சொல்லிக் கொண்டார்களே, தவிர பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் இன்னும் மௌனம்.

ஊடகங்கள் இனவாதம் என்பது உண்மை. தாம் நிரபராதியாக இருந்தால் உடனே மறுப்புத் தெரிவித்து ஊடகங்களின் பொய்யை மக்கள் மையப்படுத்தி சமூகத்தின் மானத்தை காக்க முடியாமல் போனது ஏன்?

சாம்பல் பத்வாவுக்கு ஆதாரம் கேட்டால் பதுவாவா? உலமாக்களை திட்டுவதா? இவர் அல்லாஹ்வால் முன் பின் பாவம் மன்னிக்கப்பட்டவரா? இல்லை

“வஹியை தவிர எதையும் இவர் பேசமாட்டார்” என அல்லாஹ் உத்தரவாதம் கொடுத்தானா?

முன்வரிசை உலமாக்கள் பெரும் பெரும் கோடீஸ்வரர்கள். இவர்களின் Audit reportகள் இவர்களின் மூக்கில் விரல் வைக்கும் personal income tex.

இவர்களை தலையில் தூக்கி வைத்து பூஜிக்கும் அளவிற்கு சமூகத்திற்கு ஒன்றும் நடக்க வில்லை. வந்த காசுகளுக்கு இவர்களது பாரம் அதிகரித்ததே தவிர, இவர்கள் வரும் பணத்தில் கடந்த இருபது வருடத்தில் சமூகத்துக்கு எத்தனை படித்தவர்களை எத்தனை கல்விமான்களை எத்தனை தலைவர்களை சமூகத்திற்கு உருவாக்கினார்கள்? சவால் விடுகிறேன் முடியுமாயின் இதற்கு பதில் தரட்டும். கைநீட்டும் தூரத்தில் உள்ள மாளிகாவத்தையில் எத்தனை பிள்ளைகளுக்கு படிப்பிற்காக செலவழித்தார்கள். இவர்களுக்கு மனச்சாட்சி ஒன்று இருந்தால் பதில் சொல்லும்.

இவர்கள் பின்னால் இவர்களை காப்பாற்ற சில சில்லறைகள். இவர்களால் செய்யப்படும் சிறு சிறு உபகாரங்களுக்காக இவர்களை காப்பாற்ற குரல் பதிவுகள் போடுவது. அல்லது ஒரு மிம்பர் மேடையில் தான் செய்த குற்றத்திற்கு ஏற்றாற் போல் ஒரு பயானை செய்து, அதற்கு ஏற்றால் போல் ஒரு குர்ஆன் வசனத்தை அதற்கு ஏற்றாற் போல் வளைத்து, பிரசங்கம் நிகழ்த்தி மக்களின் வாயை மூடுதல் இது இன்று வழமையாகிவிட்டது. இந்நிலை மாற வேண்டும், சிறந்த சிந்திக்கும் படித்த சமுதாயமாக மாறவேண்டும்.

இது அழகான மார்க்கம். சிந்திக்கச் சொல்லும் மார்க்கம். சிந்தனையை தூண்டும் மார்க்கம். மக்களை கண்மூடித்தனமாக ஈமான் கொள்ளாமல் உலகில் அத்தாட்சிகளை வைத்து தொடக்கம் முதல் முடிவு வரை சிந்தனைக்கு சவால் விடும் மார்க்கம். பிரச்சினைகள் வந்தால் அழகான முறையில் விவாதம் செய்யுங்கள் என சிந்திக்கச் சொல்லும் உலகில் ஒரே ஒரு மார்க்கம்.

எனவே செய்யும் தவறுகளையும் தப்புக்களையும் செய்துவிட்டு உலமாக்களை திட்ட வேண்டாம் என்று பாமர மக்களின் தலையை கழுவுவதை இவர்கள் நிறுத்த வேண்டும். காலத்துக்கு காலம் பிழையை செய்வது அத்தோடு உலமாக்களை திட்ட வேண்டாம் என சிலர் வக்காலத்து வாங்குவது. மக்களின் மனதில் குருட்டு பக்தி ஏற்படுத்தி அத்தோடு அதை மறக்கவிட்டு கொஞ்சம் காலத்திற்கு சத்தமில்லாமல் இருப்பது. இதுவே பழக்கமாகி போய் விட்டது.

இலங்கை வரலாற்றில் உலமாக்களின் தவறுகள் விமர்சிக்கும் தற்காலம் போல் ஒரு காலம் வந்ததில்லை. ஏன் இது சிந்தியுங்கள்.

காலத்தின் கொடுமையா இல்லை. சமூகத்தின் மடமையா இல்லை குற்றவாளிகள் யார்?

ஒரு கட்டுரையை எழுதி முடிப்பது எவ்வளவு கஷ்டமான விடயம் என்பதை எழுதுபவர்களுக்கு தெரியும் காலத்தையும் நேரத்தையும் செலவழித்து சிரமப்படும் பாவத்தை தேட வேண்டியதில் அவசியம் இல்லை. இதை எழுதுவதில் எந்த இலாபமும் இல்லை. சமூகத்தில் கஷ்டப்படும் மக்களின் நிலை கருதியே மன வருத்தத்தினால் எழுதுகிறேன். அல்லாஹ் என் உள்ளத்தை அறிவான். யாருடனும் எனக்கு தனிப்பட்ட பகைமை கிடையாது.

உண்மையைச் சொல்ல யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. பயம் படைத்தவனுக்கு மட்டுமே தவிர, படைப்புக்களுக்கு அல்ல. அல்லாஹ் எழுதி வைத்த என் முடிவு ஒரு செக்கன் அதிகரிக்கவும் செய்யாது குறையும் செய்யாது. என் முடிவு அவன் கையில்.

படித்தவர்கள், பண்புள்ளவர்கள், மேதைகள், பதவிகளுக்கு முன் வந்து சமூகத்தின் உரிமைகளையும், மானத்தையும் மரியாதையையும், வறிய மக்களின் வாழ்க்கையையும் படிப்பை இடையில் நிறுத்தும் நம் வறிய கெட்டித்தனமான மாணவர்களின் எதிர்காலத்தையும் ஒளிர வைக்க அல்லாஹ்வுக்காக முன்வாருங்கள்.

பேருவளை
ஹில்மி.

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் உலமாக்களை திட்ட வேண்டாம்.  உலமாக்களை திட்ட வேண்டாம். பதுவாக்களை தேடிக் கொள்ள வேண்டாம் என்ற குரல்களையும் வீடியோக்களையும் அடிக்கடி கேட்கவும் பார்க்கவும் முடிகின்றது. இதன் உண்மை நிலவரம் என்ன? இது…

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் உலமாக்களை திட்ட வேண்டாம்.  உலமாக்களை திட்ட வேண்டாம். பதுவாக்களை தேடிக் கொள்ள வேண்டாம் என்ற குரல்களையும் வீடியோக்களையும் அடிக்கடி கேட்கவும் பார்க்கவும் முடிகின்றது. இதன் உண்மை நிலவரம் என்ன? இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *