மலையக மக்களின் வாழ்க்கை

Advertisements

மலையகம் நோக்கி வருவீக
கொட்டும் பனியில் நனைவீக
உல்லாச பவணி போவீக
ஊர்வலமாய் நடப்பீக

கடுங்குளிரில் உறைவீக
எரிக்கும் நெருப்பில் கரைவீக
நாட்கள் பல கழிப்பீக
செலவும் பல செய்வீக

குதிரை, கப்பல், கழுதையிலும்
சவாரியும் தான் செய்வீக
ஆடு, மாடு, முயலுடனும்
புகைப்படந்தான் எடுப்பீக

வெள்ளைக்காரன் கிட்ட வந்தா
வழிந்து சென்று சிரிப்பீக
புரியாத பாஷையிலே
சம்பாஷணைக்கு போவீக

மலையகம் தான் வந்தீரே
எங்க நிலை கண்டீரோ
மலையகம் வாழ் மக்களின்
துயர நிலை உணர்ந்தீரோ

பளிங்கு வீடு கண்டதில்ல
பட்டாடை உடுத்ததில்ல
லயத்து வாழ்க்கை ஒன்றைத்தவிர
சுகபோகம் கண்டதில்ல

சில்லென்ற குளிரும்
நச்சென்ற பச்சையும்
ரசிக்க எமக்கு நேரமில்ல
ரசணைகள் உணர்ந்ததில்ல

அதிகாலை வேளையிலே
கண்விழிச்சு நாமெழுந்தா
இராத்தூக்கம் காணும் வரை
ஓய்வென்று ஏதுமில்ல

அறுசுவை உணவு வகை
ஒருபோதும் உண்டதில்ல
ஆறுவேளை ஓருணவு
பசியாற்றும் மருந்தாகும்

கூடை சுமந்த எம் முதுகு
கூன் விழுந்து போனாலும்
கூலிக்கணக்கு கூடியதா
சரித்திரங்கள் ஏதுமில்ல

வாழ்நாள் இலட்சியங்கள்
பசிதீர்ப்பதென்றான பிறகு
குளிரும் வெயிலும்
ஒன்றாகிப் போனதெமக்கு

வறுமைதான் வாட்டினாலும்
கோடீஸ்வரன் வந்து சென்றாலும்
திருட்டு கொள்ளை களவென்று
தரமிறங்கிப் போனதில்ல

கொழுந்து பறித்த கைகளின்
கறைகள் கரைந்து போகல
கறை பிடித்த வாழ்க்கையின்
குறையும் தீர்ந்து போகல

நாளெல்லாம் தோட்டத்திலே
ஒயாமல் உழைத்தாலும்
கங்காணி துறைமாரின்
கங்கணம் ஓயாதே

போதாக் குறையென்னு
நச்சுப்பாம்பு தேள் தேனீ
சீண்டிப் பார்க்க வருகையில்
உசிரக் கையில் பிடிச்சிருப்போம்

உயர்ந்து நின்ற மரங்களில்
வாழ்ந்திருந்த குளவிக் கூட்டம்
உடம்போட உயிரையும்
பதம் பார்த்துப் போயிடும்

ஒன்றா இரண்டா எத்தனை உயிர்கள்
இன்றுடன் தொலைத்தோம்
உயிருக்கு உத்தரவாதம்
யாரிடம் கோரி நிற்போம்

அப்பாவி மக்களாய்
அடிமையாய் வாழுறோம்
நீதி கேட்டு நின்றாலும்
நியாயம் எங்குமில்ல

Muneera Ghani
Hemmathagama

Leave a Reply

%d bloggers like this: