சமூகத்தை மயக்கவோர் உம்றா

திருப்பு முனை
பாகம் 13

திடீர்ன்னு இவர்க்கு என்னாச்சு? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தாரு? இவருக்கு ஒவ்வாரு time கு என்னா ஆகுதுன்டே புரீதில்ல.

லீனா மனதுக்குள் புலம்பினாள். பல மணி நேர பயணம் இரவு 8 மணியோடு நிறைவுக்கு வந்தது. அவள் முகம் கை கால் கழுவி  விட்டு வுழூவுடன் வந்து மஃரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுதாள்.

அவளுக்கு அசதியாக இருந்தது. சற்று நேரம்  கட்டிலில் சாய்ந்திருந்தாள். மறுபக்கம் தலையும் மனமும் கனமாக வலித்தது. சிறிது நேரத்தில் எழுந்து சென்று கணவரிடம்,

“இன்டக்கி நைட்கு என்ன சரி கடையில எடுக்குறீங்களா? எனக்கு கஷ்டமா இரிக்கி please”

“ஏன் கல்லா ஒடச்சீங்க கஷ்டப்பட இல்லயே”

அவனை முறைத்து பார்த்து விட்டு லீனா குசினிக்குள் சென்றாள்.

‘என்ன மனுசன்டா இது? கல்லு மனசு. மத்த நாளக்கி மூனு நேரமும் செய்றேன் தானே. இன்டக்கி ஒரு நாளக்கி வெளியால எடுத்தா என்னவாம்? கொஞ்சம் சரி அடுத்தவங்கட நெலமய பாக்குறல்ல. ச்சே. என்ன வாழ்க்க ரப்பே இது.’

எப்படியோ இரவுணவை தயாரித்து விட்டு அவனுக்கு அதை பரிமாறி விட்டு அவள் அறைக்குள் சென்று சாய்ந்து கொண்டாள். அவளுக்கு முன்பை விட தலைவலி அதிகமாக இருந்தது.

மறுநாள் அவளுக்கு ஜூரம் அடித்தது. அவளால் எந்திருக்க கூட முடியவில்லை. அப்படி ஒரு வலி அவளுக்கு. அவனோ எதையும் கண்டு கொள்ளவில்லை. மெது மெதுவாக வீட்டு வேலைகளை செய்து முடித்தாள்.

உடம்பு சூட்டுக்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அப்படியே தரையில் சாய்ந்து அழுதாள்.

‘அல்லாஹ் பாரு ஏன்ட நெலமய. எனக்கு சொகமில்லயா என்டு கேக்க சரி ஒரு நாதியும் இல்ல ரப்பே. இதே ஊட்லயா இருந்தா எனய எப்படி எல்லாம் பாத்திருப்பாங்க.’

லீனா தனது நிலையை  நினைத்து நினைத்து அழுதாள். சிறிது நேரத்தில் ஷரீப் வீட்டுக்கு  வந்தான்.

“என்னா உடுப்ப கழுவி காயப்போடாம வெச்சி இரிக்கிறீங்க?”

“இல்லவா. எனக்கு சரியான வருத்தமா இரிக்கி. இன்ன கொஞ்சத்துல காய போடுறேன்வா”

“என்னா  பெரிய வருத்தம் ஒங்களுக்கு?பெனடோல குடிங்க சரி ஆகிடும். முடிச்ச பொறகு வருத்தம் எல்லாம் பாக்க ஏலா லீனா. வேல தான்  முக்கியம்.”

அவனது பொடுபோக்கான இந்த வார்த்தைகள் அவளை ரணப்படுத்தியது.

‘உண்மயிலயே இவர் மனுசனா? இல்லாட்டி மிருகமா. ச்சே. இப்படி இரிக்கிறாரு. நா செத்தாலும் இவர்க்கு கணக்கில்ல போல.’ லீனாவின் புலம்பல் இது.

இப்படியே வாரங்களும் ஓடியது. இவர்கள் உம்றா செல்வதற்கான நாளும் கிட்டியது. ஆனால் அவளுக்கு மட்டும் இந்த பயணம் திருப்தி அளிக்கவில்லை. அவளது உள்ளுணர்வு இந்த பயணத்தை அவளுக்கு எச்சரித்துக் கொண்டே இருந்தது. முதலில் குழம்பி இருந்தவள் பிறகு வேறு வழி அறியாது உடன்பட்டாள்.

எல்லோரிடம் விடைபெற்று உம்றாவை நிறைவேற்ற   இவர்கள் சஊதி சென்றனர். பல காயங்களுக்கும் கண்ணீருக்கும் மத்தியில் லீனா உம்றா கடமையை நிறைவேற்றினாள்.

அங்கு இரண்டு அறைகள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஒன்றில் ஷரீப்பின் சாச்சா சாச்சியும் கடைசி இரு பிள்ளைகளும். மற்றையதில் லீனாவுக்கும் சாச்சாவின் முதல் மூன்று பிள்ளைகளுக்குமாக ஒதுக்கப்பட்டிருந்தது.

ஷரீப் லீனாவுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருப்பதை விட சாச்சாவின் அறையிலேயே மொத்த நேரத்தையும் செலவழித்தான். இதனால் லீனா தனிமரமாகிப் போனாள்.

அந்த புனித மண்ணில் ஷரீப் செய்யாத கூத்துகள் இல்லை. தொழுகையில்லை, அமல்கள் இல்லை, வார்த்தையில் பொய்யும் கேளிக்கையும் வாயில் சிகரட்டுமாக தான் வந்த நோக்கம் மறந்து செயல்பட்டான்.

ஒரு நாள் எல்லோரும் சேர்ந்து சாமான்கள் வாங்க கடைக்குச் சென்றனர்.அவளும் சென்றாள். ஷரீப்பை பின் தொடர்ந்தவளை பார்த்த அவன்.

இது என்னா ஏன்ட பின்னுக்கே வாறீங்க. நா தான் சாச்சிக்கி உடுப்புகள select பண்ணி குடுக்கனும். நீங்க கடய சுத்தி பார்த்துட்டு இரிங்க.

லீனா உடைந்து போனாள். அந்த பெரிய கடையில் எல்லாக் கதவுகளும் ஒரே மாதிரி இருந்தது. எங்கு செல்வதென்றே அவளுக்கு தெரியவில்லை. லீனாவுக்கு கத்தி அழ வேண்டும் போலிருக்க, யாருமற்ற ஒரு பகுதியில் நின்று மௌனமாக அழுதாள் அவள்.

சாமான்கள் சுமக்க, அதை வண்டியில் ஏற்றி இறக்க மட்டுமே லீனா தேவைப்பட்டாள் ஷரீப்பிற்கு.

மனைவி என்ற பெயரையும் தாண்டி வேலைக்காரி என்ற சொல்லப்படாத பெயருடன் ஒடுக்கப்பட்டாள் லீனா.

இத்தனைக்கும் அவன் அவளுக்கென்று ஒரு துணி மணி கூட அந்த புனித சஊதி மண்ணில் இருந்து வாங்கிக் கொடுக்கவில்லை. ஆனால் அவனுக்கு  விதம் விதமாக ஆடைகளை வாங்கிக் குவித்தான். என்றாலும் அவனிடம் அவள் எதையுமே எதிர்ப்பார்க்கவும் இல்லை.

இப்படி பல அவமானங்கள், அலட்சியங்களுடன் தாய் நாடு வந்து சேர்ந்தனர்.

நீங்கள் யோசிக்கலாம்! லீனாவை உம்றா யாத்திரைக்கு கூட்டி சென்று வந்ததால் அவளுக்கு கிடைத்த வாழ்க்கை வரம் தான் என்று, ஆனால் உண்மை அதுவல்ல. திடீரென்று முடிவான இந்த பயணம் ஓர் தந்திர முயற்சியே.

காரணம் லீனா திருமணம் செய்ய முன்பிருந்தே இந்த திருமணத்திற்கு தெரிந்தோர் தெரியாதவர் என்று பலரது எதிர்ப்பையும் மீறியே திருமணம் நடந்தது. அவர்களுக்கு முன் லீனா நன்றாக செழிப்பாக வாழ்கிறாள் என்பதை சமுகத்திற்கு காட்டி மயக்கவே இந்த புதிய ஏற்பாடு.

ஷரீப் ஒரு சதம் கூட செலவழிக்காமல் அவனது சாச்சா அவனது முழு செலவையும் ஏற்று இப்படி ஒரு பயண ஏற்பாடு செய்ய காரணம் என்ன? இதற்கான பதிலை எதிர்ப்பார்த்து காத்திருங்கள்.

Noor Shahidha.
SEUSL.
Badulla
தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.
Author: admin