சிங்கராஜ காடழிப்பு பற்றி கதைத்தால் வீடு செல்ல கிடைக்குமா?

  • 41

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனா அவர்களினால் இறுதிச் சந்தர்ப்பத்தில் திருத்தி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிகளில் ஒன்றே காடு பேணல் கட்டளைச் சட்டமாகும்.

அதாவது 2019.11.20 ஆம் திகதி 2150/31 ஆம் இலக்க காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தென் மாகாணம், மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாணங்களை உள்ளடக்கிய சுமார் 11,000 ஹெக்டயர் பரப்பளவினைக் கொண்ட சிங்கராஜ வனம் 36,474.93 ஹெக்டயர் பரப்பளவிற்கு விஸ்தரிக்கப்பட்டது.

என்றாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் குறித்த சிங்கராஜ வனத்திற்கு உரித்தான காணிகளில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெறுவதாக பல முறை பல ஊடகங்களில் பேச்சு பொருளாகியுள்ளது.

உலகிலுள்ள பத்து மழைக்காடுகளில் ஒன்றான சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சப்ரகமுவ, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது.

சிங்கராஜவனம் கடல் மட்டத்தில் இருந்து 300 – 1170 m உயரம் கொண்ட அயனமண்டல மழைக்காடாகும். இது 36,474.93 ஹெக்டயர் பரப்பினைக் கொண்டதாக திகழ்கின்றது. மேலும் உயரமான இராட்சத மரங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இங்கு ஏறத்தாழ 265 இற்கு மேற்பட்ட உயிர்ப் பல்வகைமையினையும் 600 இற்கு மேற்பட்ட தாவரப் பல்வகைமையினையும் காண முடிகின்றது.

இக்காட்டில் உயிரின பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் உலக உரிமை தளமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் நாள், இலங்கை தரிசு நிலச்சட்டத்தின் கீழ் 4046 ஆம் இலக்க அரசியலின் படி சிங்கராஜவனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1988 ஒக்டோபர் 21ஆம் நாள் 528/14இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி 7,648.2 ஹெக்டயர் பரப்பளவு இலங்கையின் தேசிய உரிமை காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டு யுனெஸ்கோ 6,092 ஹெக்டயர் காட்டு ஒதுக்கீடு மற்றும் 2,772 ஹெக்டயர் முன்மொழியப்பட்ட காட்டு ஒதுக்கீடு என்பவற்றை உள்ளடக்கிய 8,864 ஹெக்டயர் பரப்பளவை உலக உரிமைத் தளமாக அறிவித்தது.

மேலும் இறுதியாக, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களினால் இறுதிச் சந்தர்ப்பத்தில் திருத்தி வௌியிடப்பட்ட காடு பேணல் கட்டளைச் சட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி, 2019.11.20 ஆம் திகதி 2150/31 ஆம் இலக்க காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தென் மாகாணம், மேல்மாகாணம், சப்ரகமுவ மாகாணங்களை உள்ளடக்கிய சிங்கராஜ வனம் 36,474.93 ஹெக்டயர் பரப்பளவிற்கு விஸ்தரிக்கப்பட்டது.

இங்கு ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 23.6°c ஆகும். மேலும் மே – செப்டம்பர் வரை தென் மேற்கு பருவக்காற்று மூலமும், நவம்பர் – பெப்ரவரி வரை வடகிழக்கு பருவ காற்று மூலமும் மழையை வீழ்ச்சி கிடைக்கப் பெறுகின்றது. ஆண்டுக்கு சராசரியாக 2500 mm மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.

சுற்றாடல் இயற்கை வள அமைச்சின் கீழ் உள்ள இலங்கை வனத்திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் சிங்கராஜவனம் மனித தலையீடுகள் மிகக் குறைந்த வனமாகவும், தாழ்நில மழைக்காடாகவும் விளங்குகின்றது. இலங்கையின் அரும்பெரும் இயற்கைச் செல்வங்களில் ஒன்றாகிய இது மனித உயிர்க்கோள ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

திப்பொதிகல, மவுலவெல்ல, கொஸ்குவான, சிங்ககல, கொகிலரம்ப, தொட்டலுகல போன்ற சிகரங்களும் வனத்தினுள் காணப்படுகின்றன. களு கங்கையின் கிளை நதியும், ஜின் கங்கையின் கிளை நதியும் இம் மலைத் தொடர்களை ஊடறுத்துப்பாய்கின்றன.

இங்கு காணப்படும் தாவர வகைகள் நாட்டிற்கு தனித்துவமானவையாகவும், சில வகைகள் உலகத்திற்கு தனித்துவமானவையாகவும் இருக்கின்றன.

இலங்கை மலை மைனா, இலங்கை மரப்புறா, பூங்கொத்தி, இலங்கை நீலமக்பி, வெள்ளை தலை ஸ்டார்லிங் உட்பட பல வகையான அரிய பறவையினங்களின் அழகை இவ்வனத்தில் கண்டு மகிழலாம். இவ்வனமானது உயிரினப் பல்வகைமைகளை அதிகம் கொண்டிருப்பதுடன் உலகின் உயிரினப் பல்வகைமை செறிவு மிக்க இடமாகவும் கருதப்படுகின்றது.

மேலும் வனப்பகுதியில் அருவிகள், பள்ளத்தாக்குகள், குட்டைகள் மற்றும் நீர்நிலைகள் காணப்படுகின்றன. வனத்தின் வடக்கில் நபோல, தொல மற்றும் கொஸ்குலன கங்கை தெற்கு மற்றும் தென்மேற்கில் மகாதொல மற்றும் ஜின் கங்கை களுகந்தவ, மற்றும் குடிவளகங்கை, கிழக்கில் பெவர்லி தேயிலைத் தோட்டத்திற்கு பக்கத்தில் புராதன ஒற்றையடிப் பாதை மற்றும் தெறுவமலை ஆகியன அமைந்திருக்கின்றன.

பள்ளத்தாக்குகளிலும் தாழ்ந்த செங்குத்தான பகுதிகளிலும் இயற்கை தாவர வகைகள் காணப்படுகின்றன. இங்கு தாவர அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால் மிருகங்களும், பறவைகளும் இலகுவாகவும் சுதந்திரமாகவும் நடமாட முடிகின்றது. மனிதர்களுக்கு நன்மை பயக்கத்தக்க பல்வேறு மரம், செடி, கொடி வகைகள் இங்குள்ளன. கருப்பட்டி செய்வதற்கு தேவையான கித்துல் மரம், பிரம்பு மரம், வாசனைத் திரவியமாகப் பயன்படும் கறுவா மரம், வார்னிஷ் மற்றும் ஊதுபத்தி தயாரிப்புக்கு உதவும் மரம், வைத்திய தேவைகளுக்கான மரங்கள் என பலவும் இங்கு காணப்படுகின்றன.

பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள், மீன்கள், வண்ணத்துப் பூச்சிகள் ஆகியவற்றின் பூர்வாங்க பட்டியல் தொகுக்கப்பட்டு மாதிரி வனப் பாதுகாப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பல சிறப்பம்சங்களினைக் கொண்டு விளங்குவதினூடாக இவ் வனமானது பல வகையிலும் முக்கியத்துவப்படுகின்றது.

சுதேச பறவையினங்களில் 95% ஆனவை இவ் வனாந்தரத்தில் காணப்படுகின்றன. இவ் வனத்தில் சாம்பூ இன மான்கள் அதிகமாக வாழ்கின்றன. சுண்டெலி மான்களும், குரைக்கும் மான்களும் காணப்படுகின்றன. ஊதா முக இலைக்குரங்குகள், விரியன் பாம்புகள் இவ் வனத்தில் ஆங்காங்கே நடமாடுகின்றன. தவளைகள், தேரைகள் என்பன இங்குள்ள அருவிகளிலும், சேற்று நிலங்களிலும் சுதந்திரமாக இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்கின்றன.

இங்கு வரும் பார்வையாளர்கள் மிகக் குறைவாகும். இயற்கையை இரசிக்கும் ஒரு சிலரே இங்கு விஜயம் செய்கின்றனர். இவ் வனத்திற்கு செல்வதற்கு கொழும்பில் உள்ள வன இலாகாவில் அனுமதி பெற வேண்டும். இலங்கை இயற்கை வள சக்தி மற்றும் விஞ்ஞான அதிகார சபை வனத்தில் நடமாடும் ஆய்வு நிலையம் ஒன்றினை ஆய்வாளர்களுக்கு வழங்குகின்றது.

இவ்வாறாக பல வகையான சிறப்பம்சங்களினைக் கொண்டு விளங்குவதினாலேயே இலங்கையில் மட்டுமன்றி இவ்வனம் உலகிலும் முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது. இருப்பினும் காணி மற்றும் காணி அபிவிருத்தி இலாகாவினால் நிர்வகிக்கப்படுகின்ற இவ்வனத்தினைப் பாதுகாப்பதில் இன்று பல இடர்பாடுகள் உள்ளன. இதனால் அவற்றின் சிறப்பம்சங்கள் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

மேலும் இது தொடர்பாக இடர்பாடுகள் இவ் வனத்தை சார்ந்துள்ள மக்கள் மற்றும் அமைப்புக்கள் சார்ந்ததாக இருக்கின்றன. இங்கு இப் பிரச்சினைகள் பிரதானமானவையாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக சிங்கராஜவனத்தின் தெற்குப் பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் பிரச்சினையாக உள்ளனர். வன எல்லைக்குள் 1.6 ஓட் தூரத்திற்கு மரம் தறிப்பது தடை செய்யப்பட்டிருப்பினும் மரங்களை வெட்டிக் கொண்டு போக ஒப்பந்தக்காரர்கள் வழிகளைத் திறக்கின்றார்கள். இதன் மூலம் மரம் வெட்டும் நடவடிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் அரச மரக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் துஷ்பிரயோகங்கள் வன பரிபாலன இலாகாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளன. வனத்திற்கு அண்மையாக உள்ள தனியார் காணிச் சொந்தக்காரர்கள் வனத்தினுள்ளே மர வளங்களை சட்டவிரோதமாக பாவிக்கின்றனர். அதனால் இவ்வனம் தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது .

காட்டின் மிக முக்கியமான பயன்பாடு விறகாகும். கருப்பட்டி செய்யும் பொருட்டு கித்துல் மரமும், கூடைகள் பின்னும் பொருட்டு வேவல் மரமும், உபயோகிக்கப்படுகின்றன. இவை தற்போது காட்டுச் சுற்றாடலுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காட்டின் கிழக்குப் பகுதியில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது. இவை பெரும்பாலும் செல்வந்தர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறாக பல பிரச்சினைகளைக் கொண்டு இவ்வனம் விளங்கினாலும் இலங்கையின் தேசிய உரிமைக் காடாக பல சிறப்பம்சங்களினைக் கொண்டு முக்கியத்துவம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்க்கக்கூடிய வனமாக சிங்ராஜ வனம் திகழ்கின்றது.

இருந்த போதிலும் உலகின் ஊசியிலை மென்மரக் காடுகளைப் போன்று இலங்கையின் காட்டு மரங்கள் அவ்வளவு தூரம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

  1. இலங்கைக் காடுகள் கலப்புக்காடுகளாக உள்ளன. ஒரே வகையான மரங்கள் உள்ள பெரும் பிரதேசங்கள் இல்லை.
  2. ஈரவலயத் தாழ்நிலக் காட்டு மரங்கள் அடர்த்தியும் ஏறு கொடிகளால் பின்னிப் பிணைந்தும் காணப்படுவதால் இக்காட்டினுள் நுழைவது கடினம்.
  3. ஒரே வகையான தரமும், ஒரேயளவான வளர்ச்சியும் கொண்ட மரங்கள் அரிதாகவேயுள்ளன.
  4. காட்டுப் படுபொருட்களை சுயதேவைக்காக சேகரிக்கும் பண்பே உள்ளது.

இவ்வாறு பல சிறப்பம்சங்களையும் காடழிப்புகளுக்கும் உள்ளானகியுள்ள சிங்கராஜ வனம் பற்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் குறித்த சிங்கராஜ வனத்திற்கு உரித்தான காணிகளில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெறுவதாக பல முறை பல ஊடகங்களில் பேச்சு பொருளாகியுள்ளது.

அதில் இறுதியாக அரச தரப்பையும் ஓரளவு தடுமாற்றமடையச் செய்து பொலிஸ் விசாரணை, சூழலியலாளர்களின் ஆதரவு என்று மீண்டும் பேசுபொருளாக மாறுவதற்கு உடனடிக் காரணம் பாக்யா அபேரத்ன அவர்களின் சிரஸ லக்ஷாபதி நிகழ்ச்சியின் கலந்துரையாடலாகும்.

அன்று இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் சம்பவங்களை அவதானிக்கையில்,

குறித்த நிகழ்ச்சியில் பாக்யா அபேரத்ன என்ற யுவதி சிங்கராஜ வன அழிப்பு பற்றி தெரிவிக்கையில்,

இயற்கை அனைவருக்கும் உரிமையானது. நான் சிங்கராஜ வனத்தைச் சேர்ந்தவன். சரியாக கூறுவதென்றால் சிங்கராஜ வன எல்லைக்கு அடுத்த காணியில் எனது வீடு உள்ளது. ஆனால் நாளுக்கு நாளுக்கு சிங்கராஜ வனம் வௌிச்சமாகுவதை பார்க்க வேண்டியுள்ளது.

அங்கு யானைகள் சஞ்சரிப்பதில் பிரசித்த பெற்ற இடமே அலிமன்கட என்ற பகுதி. இங்கு மூன்று யானைகள் உள்ளது அதில் தற்போது யானையொன்றைப் பற்றிய தகவல் இல்லை. அடுத்த இரண்டும் நீண்ட காலம் வாழ்வதும் நம்பிக்கையில்லை. தற்போது அப்பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுகிறது. இதற்காக நாளுக்கு நாள் மரங்கள் வெட்டப்படுகின்றன. நான் மாத்திரமல்ல இதற்கு எதிராக பெரும்பாலன மக்கள் குரல் எழுப்பிய வண்ணமுள்ளனர்.

சிங்கராஜ வனத்திற்கு மக்கள் வருவது வன விலங்குகள் மற்றும் தாவரங்களை கண்டு இயற்கையை இரசிப்பதற்காகும். ஆனால் தற்போது அங்கு கட்டிடங்களை கட்டினால் கட்டிடங்களைத்தான் பார்க்க வேண்டிவரும். மிருகங்களை எவ்வாறு பார்ப்பது?

மனிதர்களுக்கு வாழ்வதற்கான உரிமையுள்ளது போல மிருகங்களுக்கும் அதற்கான உரிமை காணப்படுகின்றது. அவர்களுக்கு இதற்கான உரிமை வழங்க வேண்டும். இதுபற்றி 1997 என்ற இலக்கம் மூலம் உரிய அதிகாரிகளுக்கு கூறினால் அவர்களும் பார்ப்பதில்லை. ஏன் அதிகாரிகள் இவற்றைத் தடுப்பதில்லை. இது பற்றி விசாரணைகள் மேற்கொள்வதில்லை ஏன்?

தற்போது சிங்கராஜ வனத்தில் மாத்திரமல்ல நாடாளாவிய ரீதியில் இவ்வாறு இடம்பெறுகின்றது. ஏன் மக்கள் இவ்வாறு செய்கின்றனர். மக்களுக்கு வாழ்வதற்கு வீடில்லாமலா இவ்வாறு செய்கின்றனர்.

நான் கூறுவதென்னவென்றால் மனிதர்களைப்போல மிருகங்களுக்கும் வாழ்வதற்கு சுதந்திரம் தேவையென்பதாகும்.

உடன் பாக்யா அபேரத்னேவின் தந்தை,

இவ்வாறு பேசினால் நமக்கு வீட்டுக்கு செல்ல கிடைக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் தனியாக இதற்கு எதிராக போராட முடியாது.

மீண்டும் பாக்யா,

அங்கு காடழிப்பு இடம்பெறுவது பற்றி நாட்டுக்கே தெரியும் பஸ்ஸில் செல்லும் போதும் பார்க்கலாம்.

உடன் நிகழ்ச்சி தயாரிப்பாளர், இடைமறுத்து,

நாடே சொல்கின்றது வாயை பொத்திட்டு இருக்குமாறுதான்.

இறுதியாக பாக்யா,

வாப்ப கூறுவதும் உண்மைதான் எமக்கு வீட்டுக்கு செல்ல கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. எனக்கு இலஞ்சம் வாங்கி பணக்காரனாக வேண்டிய தேவையில்லை. எனக்கு அறிவும் பலமும் இருந்தால் நான் அந்த ஹோட்டல் நிர்மணம் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவவேன். எனது இலட்சியம் இதுவாகும்.

சிறு வயதில் யாரும் அவ்வாறு இல்லை இயற்கையுடன் இணைந்தே வாழ்ந்தனர். ஆனால் அறிவும் பலமும்  வந்த பின்னர் மரங்களை வெட்டுகின்றனர். அவ்வாறு ஆரம்பத்தை மறந்தால் மனிதன் என்று கூற முடியுமா?

மீண்டும் தந்தை,

அங்கு இடம்பெறும் காடழிப்புகள் பற்றி கூறத்தான் இரக்குவானையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தாள். உண்மையிலே அங்கு சூழல் மற்றும் வன விலங்குகள் அழிவடைகின்றது. ஆனால் சொல்வதற்கு யாருமில்லை.

எனக்கு வீட்டில் அனுமதியும் சமூகத்தின் ஆதரவும் கிடைத்தால் தொடர்ந்தும் இதற்காக குரல் எழுப்புவேன் என்று பாக்யா அபேரத்னா தெரிவித்தார்.

குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிய பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பாக்ய அபேரத்ன தெரிவிக்கையில்,

எனது வீட்டுக்கு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வந்தனர்.

இந்த  காணி அரச காணிய தனியார் காணிய என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டனர்.

அந்தக் காணி அரச காணிய தனியார் காணிய என்பது பற்றி எனக்கு தெரியாது.

அங்கு ஏன் மரங்கள் வெட்டப்பட்டது என்று தெரியுமா? என்று கேட்டனர்.

ஹோட்டலொன்றை அமைக்கத்தான் மரங்கள் வெட்டப்பட்டதாக ஆரம்பத்தில் கூறினர். ஆனால் தற்போது அது ஒரு சிலர் வசிக்க வீடு கட்டுவதாக கூறுகின்றனர்.

நான் யானைகள் வசிக்கும் இடம் என்று பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்ட இடத்தில் மரங்களை வெட்டி ஹோட்டலொன்றை அமைப்பது பற்றி ஒர் சூழல் ஆதரவாளர் என்ற அடிப்படையில் அந்த மேடையில் உரையாடினேன்.

நான் அரசியல் கட்சிசார்ந்து உரையாடவில்லை. என்னை அவ்வாறு யாரும் தூண்டவுமில்லை. பிறரின் தூண்டுதலுக்காக உரையாடவுமில்லை.

தற்போது எனது தந்தை மற்றும் அண்ணனின் தொழில் தொடர்பாக விசாரிக்கின்றனர். சிலர் எனது வீட்டை விட்டு நான் வெளியேற வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர்.

எனது அண்ணனோ, தந்தையோ காடழிப்பு, மாணிக்கக்கல் அகழ்தல் போன்ற தொழில்களை மேற்கொள்ளவில்லை. மேலும் எனது வீடு சிங்கராஜ வனத்திற்குள் இல்லை. இக்காணிக்கான காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுத்தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன். என்று பாக்யா அபேரத்ன தெரிவித்தார்.

அரச தரப்பில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சிங்கராஜ வனத்திற்கு  அண்மித்த பகுதியில் மரங்களை வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்குறித்த சம்பவங்கள் தொடர்பாக இரத்தினபுரி பிரதேச சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்கராஜ வனப்பகுதியைச் சுற்றியுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலங்களை, விரைவில் அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாக வனப் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறான சுமார் 400 ஹெக்டேயர் நிலங்கள் உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நிலப்பகுதி காடாக இருந்த போதிலும், தனியார் நிலப்பரப்பாக காணப்படுவதால் அதில் இடம்பெறும் காடழிப்பைத் தடுப்பதற்கு வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லையென அவர் கூறியுள்ளார்.

குறித்த காணிகளைக் கையகப்படுத்துவதன் ஊடாக சிங்கராஜ வனப் பகுதியின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த முடியும் எனவும் வனப் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சூழலிலயாளர்களும் சிங்கராஜ வனத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணணமுள்ளனர்.

கடமுதுன, சூரியகந்த, சிங்கராஜா வனப்பகுதியில் மரநடுகை திட்டத்தை V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி முன்னெடுத்து வருகிறது. இந்த உன்னதமான கைங்கரியத்தில், சுற்றாடல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்  அரச நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.

இங்கு சூரியகந்த கடமுதுன சிங்கராஜ தபோ வன சேனாதிபதி, தெமுவாத சந்தானந்த தேரர்  கருத்து தெரிவிக்கையில்,

அமெரிக்கா இலங்கை மீது எச்சில்வடிப்பதற்கு காரணம் சிங்ராஜ வனத்தில் உள்ள வளங்கள் என்றார். மேலும் அதனை பாதுகாக்க சுற்று நிருபங்களும், அறிக்கைகளும் வெளியிட்டுக் கொண்டிருக்காமல் அனைவரும் சுயமாக முன் வர வேண்டும். மேலும் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளையொன்று பிறக்கும்போது மரக்கன்றொன்றை நட வேண்டும் என தெரிவித்தார்.

இங்கு பாக்யா அபேரத, எனது தலைமுறையைச் சேர்ந்த அதாவது 90 கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் இளம் தலைமுறையை இயற்கையை ஒன்றிணைய வேண்டும். மேலும் நாம் சுவாசிக்கும்போதும் நாம் கட்சி பேதங்கள் பார்ப்பதில்லை என்று தெரிவித்தார்.

Source:

News Media: News1st
Official Website: Department of Government Printing
Book: காட்டுப்பரம்பல் – கலாநிதி எம். ஐ. எம். கலீல்

இப்னு அஸாத்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனா அவர்களினால் இறுதிச் சந்தர்ப்பத்தில் திருத்தி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிகளில் ஒன்றே காடு பேணல் கட்டளைச் சட்டமாகும். அதாவது 2019.11.20 ஆம் திகதி 2150/31 ஆம்…

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனா அவர்களினால் இறுதிச் சந்தர்ப்பத்தில் திருத்தி வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிகளில் ஒன்றே காடு பேணல் கட்டளைச் சட்டமாகும். அதாவது 2019.11.20 ஆம் திகதி 2150/31 ஆம்…