அமைச்சரவை முடிவுகள் – 2021.07.05

  • 8

2021.07.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

  1. மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னக்குடாதுணி உற்பத்திக்காக நிறுவப்படவுள்ள விசேட வலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கருத்திட்டங்களுக்காக 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வரிச்சலுகை வழங்கல்
  2. இலங்கைக்கும் பங்காளதேசத்திற்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தம்
  3. தேசிய கொரிய கப்பல்துறை மற்றும் சமுத்திரவியல் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை
  4. கொவிட் 19 தொற்று நிலைமையால் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலங்களில் வீட்டுமட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  5. உள்ளூர் சந்தை விலைகளை நிலைப்படுத்துவதற்காக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு துறையின் தலையீடுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல்
  6. அடையாளங் காணப்பட்டுள்ள நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக காணி கையகப்படுத்தலைத் துரிதப்படுத்தல்
  7. இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கொண்டச்சி தோட்டத்தை இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து கூட்டாகப் புனரமைத்தல்
  8. கொழும்பு புறக்கோட்டை பலமாடி வாகனத்தரிப்பிடம் மற்றும் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கல்
  9. வன ஆச்சிரமங்கள் பாதுகாப்பு சட்டம்
  10. 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
  11. புதிய வரி யோசனையை நடைமுறைப்படுத்தல்
  12. விசேட பணிகளுக்கான பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை உள்வாங்குவதற்காக 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்தம் செய்தல்
  13. 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்தல்
  14. 2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
  15. எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கான இழப்பீடுகளை செலுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்றை நியமித்தல்

01. மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னக்குடா துணி உற்பத்திக்காக நிறுவப்படவுள்ள விசேட வலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கருத்திட்டங்களுக்காக 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வரிச்சலுகை வழங்கல்

கைத்தொழில் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கமைய மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னக்குடாவில் துணி உற்பத்திக்காக விசேடமான வலயமொன்றை அமைப்பதற்காகவும், அதனை மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டமாகக் கருதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 2020 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. அதற்கமைய, குறித்த சட்டத்தின் 3(2) உறுப்புரைக்கமைய முன்மொழியப்பட்ட வலயத்தில் நிறுவப்படவுள்ள கருத்திட்டங்களுக்காக வழங்கப்பட வேண்டிய வரி மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பாக 2021 ஏப்ரல் மாதம் 20 திகதி இடம்பெற்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • முன்மொழியப்பட்டுள்ள துணி உற்பத்தி வலயம் மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(3) உறுப்புரையின் கீழ் மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டமாக அடையாளங் காணலும் ஏற்றுக்கொள்ளலும்
  • குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த வரி மற்றும் ஏனைய சலுகைகள் வலயத்திற்குள் தாபிக்கப்படும் கருத்திட்டங்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்ளல்
  • அவ்வாறு வழங்கப்படும் வரி மற்றும் ஏனைய சலுகைகளை திட்டவட்டமாகக் குறிப்பிட்டு மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) உறுப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடல்
  • குறித்த சட்டத்தின் 3(5) உறுப்புரைக்கமைய அவ்வாறு வெளியிடப்படும் வரி; மற்றும் ஏனைய சலுகைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

02. இலங்கைக்கும் பங்காளதேசத்திற்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தம்

சுங்க வரி மற்றும் ஏனைய வரிகளை சரியான வகையில் மதிப்பிடல், சுங்க நிர்வாகத்தால் குறிப்பான பொருட்களை தடை செய்தல், மட்டுப்படுத்தல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சரியான வகையில் அமுல்படுத்தல், சுங்கத் தவறுகளுக்கு எதிராக சுங்கச் சட்டத்தை ஆக்கபூர்வமாக அமுல்படுத்தல் போன்ற நோக்கங்களுடன் கூடியதாக இலங்கை மற்றும் பங்காளதேசத்திற்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இருநாடுகளுக்கிடையில் முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. தேசிய கொரிய கப்பல்துறை மற்றும் சமுத்திரவியல் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுதல்

கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பணிக்குழாம் பரிமாற்றல், மாணவர் பரிமாற்றல், கூட்டு ஆராய்ச்சிகள், விரிவுரைகள் மற்றும் மாநாடுகள் தொடர்பான கல்வி ஒத்துழைப்புக்கள் மற்றும் கல்வித் தகவல்கள் மற்றும் பொருட்கள் பரிமாற்றங்கள் போன்ற ஒத்துழைப்புச் செயற்பாடுகளை ஊக்குவித்து தேசிய கொரிய கப்பல்துறை மற்றும் சமுத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுவதற்கு இருதரப்பும் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. கொவிட் 19 தொற்று நிலைமையால் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலங்களில் வீட்டுமட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

கொவிட் 19 தொற்று நிலைமையால் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலங்களில் ‘ஈ தக்சலாவ’, ‘குருகுலம்’ தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் ‘யூ ரியூப்’ அலைவரிசை மற்றும் மாகாண மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் இணையவழியிலான பாடங்கள் போன்ற மாற்று வழிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆயினும், பாடசாலைகள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களை முழுமையாகப் பயன்படுத்தல், கற்பித்தல் செயன்முறையில் பொதுவான முறைகளைப் பேணல், மாணவர் பங்கேற்பு மட்டத்தை கணித்தல் மற்றும் கற்றல் தேர்ச்சியை மதிப்பிடல் தொடர்பாக நடைமுறை ரீதியான பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

அதனால், குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டிகளைப் பின்பற்றி கல்வித் துறையிலுள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் மனித வளத்தை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி ‘வீட்டுமட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்’ எனும் பெயரில் கீழ்வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று 2021 ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • ஒவ்வொரு தரத்திற்கும் எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளுடன் செயற்பாடுகளை நியமப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
  • ஆசிரியர்கள் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்
  • ஆசிரியர்கள் வாராந்தம் பிள்ளைகளின் தேர்ச்சியை மதிப்பீடு செய்து மாணவர் தேர்ச்சி அறிக்கையைப் பேணல்
  • பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் பெற்றார், மாணவர்களையும் இணைத்துக் கொண்டு வீட்டுமட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளல்
  • ஆசிரிய ஆலோசகர்கள் ஆசிரியர் செயலாற்றுகை மதிப்பீடு மற்றும் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளல்
  • முன்மொழியப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், வலய மட்டத்திலும் செயற்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் கூடிய குழுவொன்றை நியமித்தல்

05. உள்ளூர் சந்தை விலைகளை நிலைப்படுத்துவதற்காக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு துறையின் தலையீடுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல்

கொவிட் 19 தொற்று நிலைமையில் உள்ளூர் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களைப் பற்றாக்குறையின்றி வழங்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உள்ளூர் சந்தையில் விசேடமாக சிவப்புப் பருப்பு மற்றும் வெள்ளை சீனி அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறிப்பட்டுள்ளது.

அதற்குத் தீர்வாக இந்தியாவிலிருந்தும் அவுஸ்திரேலியாவிலிருந்தும் சீனி மற்றும் பருப்பு போன்றவற்றை நேரடியாக கூட்டுறவு துறையின் தலையீட்டுடன் இறக்கமதி செய்து லங்கா சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய முடியுமென தெரியவந்துள்ளது.

அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. அடையாளங் காணப்பட்டுள்ள நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக காணி கையகப்படுத்தலைத் துரிதப்படுத்தல்

காணி எடுத்தல் சட்டத்திற்குப் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தும் வரை அரச பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் காணிகளுக்கான இழப்பீடுகளை செலுத்துவதற்காக ‘லார்க்’ மற்றும் ‘சுப்பர் லார்க்’ முறைமையை ஏற்புடையதாக்கிக் கொள்வதற்கு 2021 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, முன்னுரிமைக் கருத்திட்டமாக அடையாளங் காணப்பட்டுள்ள வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன விநியோகக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கையகப்படுத்தப்படவுள்ள  காணிகளுக்கான உரிமையாளர்களுக்கு ‘லார்க்’ மற்றும் ‘சுப்பர் லார்க்’ முறைமையை பின்பற்றி இழப்பீடுகளைக் கணிப்பிட்டு செலுத்துவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கொண்டச்சி தோட்டத்தை இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து கூட்டாகப் புனரமைத்தல்

1979 ஆம் ஆண்டில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்தால் பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவின் கொண்டச்சி கிராமத்தில் 6000 ஏக்கர்கள் நிலப்பரப்பில் மரமுந்திரிகைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இடம்பெற்ற யுத்த சூழ்நிலையால் செய்கை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

தற்போது இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கூட்டாகக் குறித்த காணியில் 935 ஏக்கர்களில் மரமுந்திரிகைச் செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கொண்டச்சி தோட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கைக்காக 125 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியைப் பயன்படுத்தி இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் 1500 ஏக்கர்களில் செய்கையை மேற்கொள்வதற்கும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் தற்போது செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள 935 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக 500 ஏக்கர்களில் மரமுந்திரிகைச் செய்கையை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் செய்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான கன்றுகளை வழங்கல், தொழிநுட்ப உதவிகள் மற்றும் பயிற்சிகள் வழங்கல், கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளவும், செய்கையின் பராமரிப்பு நடவடிக்கைகளை குறித்த திணைக்களத்தால் மேற்கொள்ளவும் இருதரப்பும் உடன்பாடுகளை எட்டியுள்ளன. அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கொழும்பு புறக்கோட்டை பலமாடி வாகனத்தரிப்பிடம் மற்றும் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கல்.

கொழும்பு புறக்கோட்டை பலமாடி வாகனத்தரிப்பிடம் மற்றும் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டமான மேல்நிலைக் கட்டமைப்பை திட்டமிட்டு நிர்மாணிப்பதற்காக தேசிய ரீதியான போட்டி விலைமனுக் கோரல் முறைமையைப் பின்பற்றி விலைமுறி கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறைந்த போட்டி விலைமுறியை சமர்ப்பித்த துடாவே பிறதர்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் இற்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. வன ஆச்சிரமங்கள் பாதுகாப்பு சட்டம்

வன ஆச்சிரமங்களில் வாழும் தேரர்களின் தனித்துவங்களைப் பாதுகாத்தும், வன ஆச்சிரமங்களைப் பாதுகாப்பதற்காகவும் பேணிச் செல்வதற்காகவும் முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

ஏற்றுமதியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏற்றுமதிப் பெறுமதி, இலங்கை சுங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஏற்றுமதித் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இயலுமான வகையில்  இறைவரி திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய 6 மற்றும் 7 ஆம் ஆவணங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதைக் கட்டாயப்படுத்தி 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் அவர்கள் கட்டளைகள் பிறப்பித்து 2021 மே மாதம் 20 ஆம் திகதி 2228/33 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கட்டளைகளை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. புதிய வரி யோசனையை நடைமுறைப்படுத்தல்

வெளிப்படுத்தாத வருமானங்கள் மற்றும் சொத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் முதலிடுவதற்காகவும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் அவ்வாறான முதலீட்டாளர்களின் வரி, தண்டப்பணம் அல்லது வட்டி செலுத்தும் பொறுப்புக்கள் மற்றும் வழக்குத் தொடர்வதிலிருந்த விடுவித்து 1% வீதமான ‘சுய வெளிப்படுத்தலுக்கான வரி’ மாத்திரம் சட்ட ரீதியான ஏற்பாடுகளை விதிப்பதற்கு ஏற்ப  2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்காக 2021 நிதிச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2021 பெப்ரவரி; மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. விசேட பணிகளுக்கான பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை உள்வாங்குவதற்காக 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்தம் செய்தல்

விசேட பணிகளுக்கான பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை உள்வாங்குவதற்காக 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதற்கமைய சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்தல்

கொவிட் 19 தொற்று நிலைமையில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத பொருளதார நிலைமைகளால் வெளிநாட்டு நாணய இருப்பு மற்றும் நிதிச் சந்தையின் மீது ஏற்பட்ட அழுத்தங்களைக் குறைப்பதற்காக பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு 2020 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும், உள்ளூர் கைத்தொழில்களைப் பாதுகாப்பதற்கும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காகவும் தொடர்ச்சியான வசதிகளை வழங்குவதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்ட இறக்குமதி வரியை நியமிக்கும் குழுவின் பரிந்துரைகளுக்கமைய கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • விநியோகத்தர்களின் கடன்வசதிகளின் அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பொருட்களை வழக்கமான முறையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கல்
  • தெரிவு செய்யப்பட்ட சில விவசாய உற்பத்திகள், பிளாஸ்ரிக் பொருட்கள், செரமிக் பொருட்கள், வாகனங்கள் மற்றும் மரத்தாலான உற்பத்திகளுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் பேணுதல்
  • தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பரிந்துரைக்கமைய மாத்திரம் ஒட்சிசன் மற்றும் சுவாச உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கல்
  • இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப் பத்திர முறைமையின் கீழ் இறக்குமதி செய்த தங்கம் மற்றும் முகக் கவசங்களையும் உள்வாங்கல்

அதற்கமைய, 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2021 யூன் மாதம் 11 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள 03 ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

இம்முறை சிறுபோகச் செய்கையில் 1,500,000 மெட்ரிக் டொன் மொத்த நெல் அறுவடை கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறுவடையின் குறிப்பிடத்தக்களவு நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கீழ்வரும் வகையில் 2021 சிறுபோக நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • நாடு நெல் ஒரு கிலோ 50/= ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோ 52/- ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் ஒருகிலோ 55/= ரூபாவுக்கும் நிர்ணய விலையின் கீழ் விவசாயிகளிடம் கொள்வனவு செய்தல்
  • நிர்ணய விலைக்கு மேலதிகமாக தரமான நெல்லை, விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்வனவு செய்யும் போதும் போக்குவரத்திற்காகவும் ஒரு கிலோவுக்கு 1.50 ரூபாவை விவசாயிகளுக்கு செலுத்துதல்
  • பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள விவசாயிகளின் தரமான நெல்லை, கமக்கார அமைப்புக்கள் மூலம் கொள்வனவு செய்யும் போது நிர்ணய விலைக்கு மேலதிகமாக பதனிடல் மற்றும் போக்குவரத்திற்காக ஒரு கிலோவுக்கு 1.50 ரூபாவை விவசாயிகளுக்கு செலுத்துதல்
  • ஈர நெல் உலர்த்தும் வசதிகளைக் கொண்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கமக்கார அமைப்புக்கள் மூலம் நெல் கொள்வனவு செய்யும் போது ஈரப்பதன் 14% தொடக்கம் 22% வரை ஒரு கிலோவுக்கு 8/= ரூபாவைக் கழித்து விவசாயிகளுக்கு செலுத்துவதற்கும், அவ்வாறான நெற்தொகையை உலர்த்தி நியமமாகத் தயாரித்துக் கொள்வதற்காக ஒரு கிலோவுக்கு 4/- ரூபாவும், போக்குவரத்திற்காக 2/- ரூபாவும் குறித்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் கமக்கார அமைப்புக்களுக்கும் செலுத்துதல்
  • 2021 சிறுபோக நெல் கொள்வனவுக்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு திறைசேரியின் தலையீட்டில் நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கும்ஃஅரசாங்க அதிபர்களுக்கும் அதிகாரம் வழங்கல்

15. எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கான இழப்பீடுகளை செலுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்றை நியமித்தல்

எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயால் கடல்சார் அழிவுகளின் பாதிப்புக்களுக்குள்ளாகிய தரப்பினர்களுக்கு இழப்பீடு செலத்துவதற்காக இடைக்கால இழப்பீட்டின் முதலாம் கட்டமாக 720 மில்லியன் ரூபாய்களுக்கான அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த நிதியில் கடற்றொழிலாளர்களுக்கான இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக பரிந்துரைகளை முன்வைப்பதற்காக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் மற்றும் ஏனைய குறித்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும், கடற்றொழில் துறை தவிர்ந்த ஏனைய துறைகளில் அழுத்தங்களுக்கு உள்ளாகிய தரப்பினர்களுக்கு இழப்பீடுகளை செலுத்துவதற்காக பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிதி அமைச்சின் செயலாளர் தலைமையில் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கியதான குழுவொன்றை நியமிப்பதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. DGI

 

2021.07.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னக்குடாதுணி உற்பத்திக்காக நிறுவப்படவுள்ள விசேட வலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கருத்திட்டங்களுக்காக 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின்…

2021.07.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னக்குடாதுணி உற்பத்திக்காக நிறுவப்படவுள்ள விசேட வலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள கருத்திட்டங்களுக்காக 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின்…