அரச ஊழியமும் பொருளாதாரமும் எதிர்காலமும்

  • 10

என்.கே. அஷோக்பரன்

இன்று இலங்கையின் ஏறத்தாழ 1.3 மில்லியன் (13 இலட்சம்) அரச ஊழியர்கள் சேவையில் இருக்கிறார்கள். இதைவிட அரச ஓய்வூதியம் பெறுவோர் கிட்டத்தட்ட 659,000 பேர் இருக்கிறார்கள்.

இன்றைய இலங்கையின் பாதீட்டில் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் மீளெழும் செலவுகளில் கணிசமான விகிதம் அரச ஊழியர்களின் ஊதியத்துக்கும் வருடாந்த ஊதிய உயர்வுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கும் செலவாகின்றன.

இதைத் தவிர, அரச நிறுவனங்களையும் திணைக்களங்களையும் நடத்துவதற்கான செலவுகள் வேறானவை. அரச வருமானத்தின் பெரும்பகுதி இந்த மீளெழும் செலவுகளுக்கே செலவிடப்படுவதால், அரச வருமானத்தில் மூலதனச் செலவுக்கான பங்கு மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

அரச ஊழியம் மீதான பற்று என்பது, பிரித்தானியர் ஆட்சியிலிருந்த இந்திய உபகண்டத்தில் அதீதமாகவே உருவாகிவிட்டதொன்று! பிரித்தானிய சிவில் சேவைக்கென இருந்த சமூக அந்தஸ்து, இங்கும் தொற்றிக்கொள்ள, அன்றைய காலத்தில் சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர்வதற்கான வழிமுறையாக, சிவில் சேவை உருவெடுத்தது.

ஆனால், பிரித்தானியர் ஆட்சியில் கல்வியறிவு பெற்ற மிகக் குறைந்தோருக்கே வாய்ப்பானதாக அமைந்த இந்தச் சிவில் சேவை, சுதந்திரத்துக்குப் பின்னர் விரிவடையத் தொடங்கியது. காலப்போக்கில் அரச சேவையாக அது மாற்றம் பெற்று, அரச ஊழியம் என்பது பரவலடைந்தது. சிவில் சேவையும் பின்னர் அரச சேவையும் சமூக முக்கியத்துவம் பெறுவதற்கு, பிரித்தானியர் காலத்தில் நிலவிய வணிகக் கட்டுப்பாடுகள், அனுமதிப்பத்திர தேவைகள், வணிகத்தை செல்வாக்கு மிக்கவர்களுக்கானதாகச் சுருக்கியது. இது, ஒருவகையில் நிலப்பிரபுத்துவத் தன்மைகளைக் கொண்டதாகவே அமைந்தது.

இவ்வாறு பிரித்தானிய ஆட்சியில் செல்வாக்குப் பெற்று வணிகம் செய்தவர்களே, நிலவுடைமையாளர்களாகவும் செல்வந்தர்களாகவும் ஆகியதோடு, அன்றைய ஆட்சியிலும் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தார்கள். ஆகவே, தனியார்துறை, இவர்களாக இருந்தபோது, இவர்களிடம் வேலை செய்வதை விட, அரச சேவையில் இருப்பது கௌரவமானதாகவும் சமூக அந்தஸ்து மிக்கதாகவும் இருந்தது.

மேலும், சமூக அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வழியாகவும் அதுவே இருந்தது. அத்தோடு, ஓய்வுபெறும் வரை உத்தியோக நிச்சயத்தன்மை அரச ஊழியத்தில் இருந்தது. அரச ஊழியத்தின் மீது, இந்திய உபகண்டத்தினர் கொண்டிருக்கும் ஈர்ப்புக்கு, இது ஒரு பிரதான காரணம் எனலாம். அடுத்தது, அரச ஊழியத்தின் மூலம், ஓய்வுகாலத்துக்குப் பின்னரான சமூகப் பாதுகாப்பாக, ஓய்வூதியம் கிடைத்தமை, பலரும் அரச ஊழியத்தை விரும்பக் காரணமானது.

மறுபுறத்தில், பிரித்தானிய கொலனித்துவம், தமது நலன்களுக்காக உருவாக்கி, பின்னர் விட்டுச்சென்ற கட்டுப்படுத்தப்பட்ட வணிகம், ‘லைசன்ஸ் ராஜ்’ நடைமுறைகள், சுதந்திரத்துக்குப் பின்னரும் தொடர்ந்தமை காரணமாக,  வணிகம் என்பது, அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு என்று ஆகிப்போனது. இந்த வணிகக் கட்டுப்பாடுகள், ஊழலுக்கும் வழிவகுத்தன. இதுவே, அரச ஊழியர்களிடையே இலஞ்சம், ஊழல் அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது.

1970களில் மூடிய பொருளாதாரமாக சிறிமாவோவும் அவரது ‘தோழர்’களும் இந்த நாட்டை மாற்றியபோது, அன்றிருந்த சொற்ப தனியார்துறை நிறுவனங்களில் பலவும் அரச மயமாகின. எல்லாவற்றையும் அரசே நடத்தும் என்பது தோல்விகண்ட, வினைத்திறனற்ற, மிகப்பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும், அறிவுக்கு முரணான ஒரு சித்தாந்தமாகும்.

வணிகத்தில் போட்டி இருக்கும் போதுதான், புத்தாக்கம் நிகழும். வினைத்திறனான வளர்ச்சியும் அதன் பயன்கள் மலிவாகவும் மக்களுக்குக் கிடைக்கும். இதனால்தான் தனியார்துறையில் கூட, தனியுடைமை வந்துவிடக்கூடாது; போட்டித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான ‘போட்டிச் சட்டங்கள்’, வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுகின்றன.

மூடிய பொருளாதாரமும் அரசே எல்லாத்துறைகளையும் ஏற்று நடத்துதலும் எத்தகைய தோல்வியில் முடியும் என்பதற்கு, உள்ளூர் சாட்சியாக 1970 – 1977 வரையான சிறிமாவோவினதும் அவரது தோழர்களினதும் ஆட்சி இருக்கிறது.

அரிசி வாங்குவதற்குக் கூட, வரிசையில் நின்றமை; உடுப்புத்தைக்க துணி வாங்கக் கூட பலமாதங்கள் காத்திருக்கும் நிலைமை; சோறுங்கறியும் உண்ட இலங்கையர்கள், மரவள்ளிக்கிழங்கு தின்னும் சூழல் என்று, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்கள் ஆகும். எல்லாவற்றையும் உள்ளூரிலேயே உற்பத்தி செய்வது போன்ற, அடி முட்டாள்தனமான பொருளாதாரச் சிந்தனைகளின் தோல்விக்கு, இந்த மூடிய பொருளாதாரம் சாட்சி சொல்லும்.

1977இன் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் திறந்து, தனியார்துறை வளர்ந்து, நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகமாகி, மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரித்திருந்தாலும், அரச ஊழியத்தின் மீது, இலங்கையர்கள் கொண்டுள்ள ஈர்ப்பு குறையவில்லை. அதன் விளைவாக, தேர்தல் காலத்தில், “அரச உத்தியோகம் வழங்குவோம்” என்ற உறுதிமொழி அளிக்கவேண்டிய கட்டாய நிலையில்தான், அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

தேர்தலில் வென்ற பிறகு, ஏதோ ஒரு தொழிலை அரச துறையில், தமது வாக்காளர்களுக்கு வழங்கிவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆகவே, சஜித் பிரேமதாஸ அமைச்சராக இருந்த போது செய்ததுபோல, வேலை கேட்டு வந்தவர்களை வரிசையில் நிற்கவைத்து, உயரமானவனென்றால் ‘செக்யூரிட்டி’ (காவலாளி), குள்ளமானவனென்றால் தொழிலாளி என்று மக்கள் பணத்தில், அவசியமில்லாமல் பயனற்ற வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதன் விளைவு, அரச ஊழியத்துக்கான அரச செலவு அதிகரிக்கிறது. மறுபுறத்தில், அவசியமே இல்லாத அரச நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஓர் அரச நிறுவனம் கவனித்துக்கொள்ளக் கூடிய வேலைக்கு, நான்கைந்து அரச நிறுவனங்களும் திணைக்களங்களும் உருவாக்கப்படுகின்றன. தனியாரிடம் கொடுத்து இலாபம் பெறும் நிறுவனங்களாக நடத்தப்படக் கூடியவை, மக்கள் பணத்தில் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

தனியாரிடம் அதனை ஒப்படைத்து, அவை இலாபம் பெறும் நிறுவனங்களாக இயங்கும் போது, அதிலிருந்து வரிவருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்வதுடன் அதைச் செயற்பட வைக்கும்  செலவுகள் தவிர்க்கப்படுகின்றன.  இது இரட்டை நன்மை. இதன் மூலம் அரசின் மீளெழும் செலவுகள் குறைந்து, மூலதனச் செலவுக்கான பங்கு அதிகரிக்கும். இதன் மூலம், நாட்டின் எதிர்காலத்துக்குப் பயன்தரும் திட்டங்களில் அரசால் முதலிட முடியும். ஆனால், வாக்குவங்கி அரசியலின் காரணத்தாலும், அந்த வாக்கு வங்கி அரச ஊழியத்தில் கொண்டுள்ள மோகத்தாலும், நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

கஜூ, தென்னை, கடதாசி, இரும்பு என ஒவ்வொன்றுக்கும் ஒரு கூட்டுத்தாபனம் இன்னும் எமக்குத் தேவையா? இந்த நிறுவனங்களை நடத்தவும், அதன் ஊழியர்களுக்கு ஊதியமளிக்கவும் மக்கள் பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. இவற்றால் மக்களுக்கு எந்த நன்மையுமில்லை. இந்தப் பணம், அரச வைத்தியசாலைகளை அமைக்கவும், வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்பட்டால், அது மக்களுக்கு எவ்வளவு நன்மையானதாக அமையும்.

இலங்கை போன்ற ஒரு தீவுக்கு அரச செலவில் ஒரு சர்வதேச விமான சேவை தேவையா? பல பில்லியன் டொலர்கள் நட்டத்திலுள்ள நிறுவனம் அது. ரயில் திணைக்களம் இன்றும் நட்டத்தில்தான் இயங்குகிறது. உண்மையில் ரயில்வேத்துறை இன்னும் வினைத்திறனாகச் செயற்பட முடியும். ஆனால், அரச சேவையும் அதனோடிணைந்து வரும் தொழிற்சங்க அரசியலும், ரயில்வே சேவையை நட்டத்தில் இயங்கவைத்துக் கொண்டிருக்கின்றன.

தேவையில்லாத, காலத்துக்குப் பொருந்தாத அரச நிறுவனங்கள் கலைக்கப்பட வேண்டும்; அரச துறை சுருக்கப்பட வேண்டும்; தேவைக்கதிகமான ஊழியர்களால் நிரம்பிவழியும் அரச துறையின் ஆட்சேர்ப்பு, கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, தனியார்துறை முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவை, பிரித்தானியர் ஆட்சிக்காலத்தைப் போல, செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும் தனியார்துறை வாய்ப்புகள் வழங்கப்படாது, திறந்த போட்டித்தன்மை மிக்க சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

அரச ஊழியம் மீதான மோகம், நகர்ப்புறங்களில் பெருமளவுக்குக் குறைந்துள்ளது. தனியார்துறை வளரவளர, அவை புதிய வாய்ப்புகளை நாடு முழுவதும் ஏற்படுத்தும் போது, நகர்ப்புறத்தைத் தாண்டிய ஏனைய பிரதேசங்களிலும், அரச ஊழியம் மீதான மோகம் குறைவடையும்.

ஆகவே, அத்தியாவசியமற்ற துறைகளைத் தனியார் மயமாக்கலும், தனியார் துறையை ஊக்குவிப்பதும்தான், அரசாங்கம் மேற்கொள்ளக் கூடிய முக்கிய பொருளாதாரத் திட்டமாக அமையும்.

என்.கே. அஷோக்பரன் இன்று இலங்கையின் ஏறத்தாழ 1.3 மில்லியன் (13 இலட்சம்) அரச ஊழியர்கள் சேவையில் இருக்கிறார்கள். இதைவிட அரச ஓய்வூதியம் பெறுவோர் கிட்டத்தட்ட 659,000 பேர் இருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் பாதீட்டில் பெரும்பகுதியை…

என்.கே. அஷோக்பரன் இன்று இலங்கையின் ஏறத்தாழ 1.3 மில்லியன் (13 இலட்சம்) அரச ஊழியர்கள் சேவையில் இருக்கிறார்கள். இதைவிட அரச ஓய்வூதியம் பெறுவோர் கிட்டத்தட்ட 659,000 பேர் இருக்கிறார்கள். இன்றைய இலங்கையின் பாதீட்டில் பெரும்பகுதியை…