பயங்கரவாதத்தை அழிக்க இலங்கையனாக ஒன்றுபடுவோம்!

  • 19

அஸ்ஸலாமு அலைக்கும்.
வணக்கம்.

இன்று,
29. 04. 2019.
ஞாயிற்றுக்கிழமை..

ஒரு வாரத்திற்கு முன்,
21. 04. 2019.
ஞாயிற்றுக்கிழமை.
ஈஸ்டர் திருநாள்.

இலங்கைத் திருநாட்டின் வரலாற்றில் பதிவான ஒரு கறுப்பு நாள். ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்த நாள். நமது இலங்கைத் திருநாடு, 15 நிமிட இடைவெளியில் 10 வருடம் பின்னோக்கி நகர்ந்த மிகக் கொடூரமான நாள்.

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவர்களின் இழப்பால் துயரத்தில் வாடிப்போயுள்ள அவர்களின் உறவினர்களுக்கு மன உறுதியும் நிம்மதியும் தைரியமும் கிடைக்கட்டும். காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் சீக்கிரம் குணமடைந்து சுகதேகிகளாக வீடு திரும்பட்டும். இவ்வாறான ஏக்கங்கள் நிறைந்த பிரார்த்தனைகளுடன் இப்பதிவை எழுத துவங்குகிறேன்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவற்ற அருளாளனும் நிகரில்லா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமம் கொண்டு ஆரம்பிக்கிறேன்)

நடைபெற்ற பயங்கரவாத, தீவிரவாத தாக்குதல், துளியும் அனுமதிக்க முடியாத மிருகத்தனமான ஒன்றே.  இதனை யார் எவர் எங்கு செய்திருந்தாலும் அனுமதிக்க முடியாது. அப்பாவி பொது மக்களை குறி வைத்து நடாத்தப்பட்ட கீழ்த்தரமான கேவலமான தீவிரவாத செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பயங்கரவாதிக்கு இனமில்லை, மதமில்லை, நாடுமில்லை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கில் நாமில்லை. (இங்கு நாம் : முஸ்லிமல்லாத இலங்கை வாழ் சகோதரர்கள்)

சஹ்ரான் ஹாசிம் என இஸ்லாமிய பெயர்களை சூட்டிக்கொண்டு மிகத்தெளிவான அல்குர்ஆனை தவறாக புரிந்து கொண்டு முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக புனிதப்போர் என பெயரும் சூட்டி படு கேவலமான அட்டகாசத்தை செய்த பின்னர் இனமில்லை, மதமில்லை என்று சொன்னால், உண்மையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலையிலேயே சகோதர இன மக்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் இல்லையே. வெளிநாட்டில் தாக்குதல் செய்யவும் இல்லையே. எங்களில் இருந்தே உருவாகி எம்முடன் ஒற்றுமையாக வாழ்ந்த சகோதர இன அப்பாவி மக்களையே குறி வைத்து எமது நாட்டினுள்ளே இத்தீவிரவாதிகளினாள் நடாத்தப்பட்ட இத்தாக்குதலினால் முஸ்லிம்களாகிய நாம் தலைகுனியத்தான் வேண்டும்.

ஆனால் நிச்சயமாக, இப்பயங்கரவாத படுகொலையினால், இலங்கை வாழ் ஒவ்வொரு சாதாரண முஸ்லிமும் இன்று தீவிரவாதியாக நோக்கப்படுகிறான். இந்நிலைமை தொடரக் கூடாது. தொடர முடியாது. முஸ்லிம்கள் பயங்கரவாதிகளோ தீவிரவாதிகளோ இல்லை என்பதை நிரூபிப்போம். தேடப்படுபவர்களை பிடித்துக் கொடுப்போம். Facebook, Whats App என posts உம் Comments உம் share உம் செய்வதோடு நிறுத்தி விடாமல் செயலிலும் காட்டுவோம். இப்பயங்கரவாதிகள் மிகச்சீக்கிரமாக பூண்டோடு அழிய வல்ல நாயன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திப்போம். இராணுவத்துடன் இணைந்து அழகிய ஒற்றுமையான நாட்டை வென்றெடுப்போம். அல்லாஹ் இதற்கு துணை புரிவானாக.

மக்களே!

அவன் புனித குர்ஆன் வசனங்களை சொன்னான். அதில் அணுவளவும் பிழை இல்லை. ஆனால் அதனை சரியாக புரிவதில் ஏற்பட்ட பிழையே அத்தீவிரவாதிகள் உருவாக காரணம். புனித அல் குர்ஆனில் உள்ள 6666 வசனங்களும் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ்வினால் ஒரே முறையில் மொத்தமாக அனுப்பி வைக்கப்படவில்லை. நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் 40 வயது முதல் 63 வயது வரை 23 வருட இடை வெளியில் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்ட செய்திகளே புனித அல்குர்ஆன். எனவே இங்கு வரும் யுத்தம் செய்வது சம்பந்தமான வசனங்கள் அக்காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக படையெடுத்து வந்தவர்களுக்காக அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம். (வைக்கப்பட்டிருக்கலாம் என முடித்தது : நான் மார்க்க கல்வி கற்கவில்லை, அல்குர்ஆன், இஸ்லாம் சம்பந்தமாக பேச என்னை விட தகுதியான அறிஞர்கள் நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு தெரிந்ததை வைத்து சொல்கிறேன்.)

அண்மையில் ஒரு Facebook பதிவைக் கண்டேன். எல்லா இன மதத்தவர்களும் தத்தமது இனத்தின் நிலைத்திருப்புக்காக யுத்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் செய்த யுத்தத்திற்கு “புனிதப்போர்”  என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் யுத்தத்தின் போது, அநியாயமாக மரங்களை வெட்டக் கூடாது, கட்டடங்களை இடிக்கக்கூடாது. மதஸ்தலங்களை சேதப்படுத்தக்கூடாது. சிறுவர்களை, பெண்களை, நோயாளிகளை, புறமுதுகு காட்டி ஓட்டுபவர்களை கொள்ளல் கூடாது இன்னும் சிலவும் தொடர்ந்தன. இவ்வளவும் அன்று இஸ்லாத்திற்கு எதிராக படையெடுத்து வந்தவர்களுக்கு எதிராக செய்த போரிற்கு சொல்லப்பட்டவையே. அதை விட்டு அநியாயமாக அப்பாவி பொது மக்களை கொன்றொழிக்குமாறு எங்கும் எப்போதும் சொல்லப்படவில்லை.

இந்தளவு தெளிவாக சொல்லியும் ஏற்றுக்கொள்ள முடியாத சகோதரர்கள் இருப்பார்களேயானால்,  உண்மையில் அல்குர்ஆனில் சொல்லியுள்ளதைத் தான் இத்தீவிரவாதிகள் செய்தார்கள் என எண்ணுவீர்களானால், அவர்களுக்கு முன்னரே எப்பொழுதோ நாமே இந் நாசகார செயல்களை செய்ய துணிந்திருப்போம். ஏன், நாங்கள் எங்கும் எப்போதும் அல்குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் (முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள்) மாற்றம் செய்ய மாட்டோம். இப்போது தெரிந்து கொள்ளுங்கள், அப்படுபாவிகள் செய்தது, முழுதும், இஸ்லாத்திற்கு புறம்பானவையே.

இலங்கை முஸ்லிம்களாகிய நாம் இத்தாக்குதலை இந்தளவு கண்டித்ததும் வெறுத்ததும் இக்காரணத்தினாலேயாகும். மாறாக யாருக்கும் பயந்து கோழையாக வாழ வேண்டிய எந்த அவசியமும் நமக்கில்லை. இவ்வுலகில் பிறந்த நாம் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். அந்த மரணத்தை நாம் எப்போதும் சந்திக்க தயாராகவே உள்ளோம். ஆனால் மரணம் அழகிய முறையில் இஸ்லாம் விரும்பிய முறையில் அமைந்தால் மட்டுமே மறுவுலகம் சிறப்பாக அமையும். சுவர்க்கம் கிடைக்கும். இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட தற்கொலை செய்தவர்களுக்கு, அநியாய தாக்குதல்கள் நடத்தியவர்கள், நரகமே அன்றி வேறொன்றுமில்லை.

எவ்வளவு தான் இருந்தாலும் இவ்விடயங்கள் தொடர்பில் என்ன சொன்னாலும் அதற்கு மாற்றுக்கருத்து தெரிவிக்கும் வகையிலும், ஏற்றுக்கொள்ளாத நிலைப்பாட்டிலுமே இன்று சகோதர இன மக்கள் இருக்கிறார்கள். பரவாயில்லை. ஏசுங்கள் பேசுங்கள், பொறுத்திருப்போம். எப்போது நாம் சொல்வது உண்மை என்று தோன்றுகிறதோ அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

எனது முகநூல் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம், எங்கும் எந்த இடத்திலும் எந்தப் பதிவிலும் எந்த comment இலும் புனித இஸ்லாம் மார்க்கத்தை கொச்சைப் படுத்தும் விதமாக பேசுவதை (புனித அல் குர்ஆனையோ, முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையோ கேவலமாக பேசுவதையோ, எமது இறைவன் அல்லாஹ் வின் பெயரால் கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பதையோ) தவிர்ந்து கொள்ளுங்கள். அன்பாக வேண்டிக் கொள்கிறேன். மீறி நடப்பீர்களேயானால் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாம் எப்போதும் தயங்கப் போவதில்லை.

இத்தாக்குதலினால் இறந்து போன என் உறவுகளுக்காக என்னால் தற்போது செய்ய முடியுமான ஒன்றாக நான் கருதுகின்ற, “இலங்கை தேசிய கொடி அரைக் கம்பத்தில் சோகத்துடன் பறப்பதை profile picture ஆக 21. 04. 2019 அன்று மாற்றியதுடன், இலங்கையிலிருந்து முற்றுமுழுதாக எப்பொழுது இப்பயங்கரவாதம் துரத்தியடிக்கப்படுமோ அன்று வரை அதனை பேணி வர வேண்டும் என்று என் மனதால் நினைத்ததை” உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்ற ஒரே குறிக்கோள் மற்றும் ஆவலுடன் இன மத வேறுபாடுகளை மறந்து, இலங்கையராக ஒன்று படுவோம்

M.I. Firzy Yoosuf
Weligama

அஸ்ஸலாமு அலைக்கும். வணக்கம். இன்று, 29. 04. 2019. ஞாயிற்றுக்கிழமை.. ஒரு வாரத்திற்கு முன், 21. 04. 2019. ஞாயிற்றுக்கிழமை. ஈஸ்டர் திருநாள். இலங்கைத் திருநாட்டின் வரலாற்றில் பதிவான ஒரு கறுப்பு நாள். ஈடு…

அஸ்ஸலாமு அலைக்கும். வணக்கம். இன்று, 29. 04. 2019. ஞாயிற்றுக்கிழமை.. ஒரு வாரத்திற்கு முன், 21. 04. 2019. ஞாயிற்றுக்கிழமை. ஈஸ்டர் திருநாள். இலங்கைத் திருநாட்டின் வரலாற்றில் பதிவான ஒரு கறுப்பு நாள். ஈடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *