காதர் காக்கா

  • 11

அந்த ஒரு நாள் சூரியனின் வருகை கண்டு பனித்துளிகள் அஞ்சி ஓட்டம் எடுத்தன. சுள்ளென தன் மேனி தொட்ட கதிர்களின் உணர்வில் கண்ணைத் திறந்தார் காதர் காக்கா. ஸுபஹ் தொழுது விட்டு வந்தவர் அப்படியே கண்ணயர்ந்து விட்டது கொட்டாவியினூடே அவருக்குப் புரிந்தது.

“காதர் காக்கா, உங்கள மர்யம் ஹாஜூம்மா தேடிக்கொண்டிருக்கின்றா” என்று, சொல்லிச்சென்றான் இர்பான்.

“ஓ! ஹாஜும்மாவுக்கு கடைக்குப் போக வேண்டுமே” என்று அவசர அவசரமாக முகம் கழுவிக் கொண்டு ஓடினார் அவர்.

திரும்பி வரும் வழியில் ஊராரின் சின்னச் சின்ன தேவைகளை முகமலர்ச்சியுடன் நிறைவேற்றி முடிந்தவராக தன் இருப்பிடம் வந்தமர்ந்தார். அகவை ஐம்பதை எட்டிய காதர் காக்கா இவ்வூருக்கு வந்து இருபது வருடங்கள் கடந்திருந்தன.

காலையில் தன்னால் இயன்ற வேலைகளை மற்றவர்களுக்கு செய்து கொடுத்து விட்டு, பக்கத்து ஊருக்கு பணிக்குச் சென்று விடுவார். அங்கே அவருக்கு அலுவலம் ஒன்றில் பியோன் வேலை என்று தகவல். வறுமை வட்டமடிக்கும் அவ்வூரில் காதர் காக்காவின் தேவை இன்றியமையாததாக இருந்தது.

அன்று பௌர்ணமி நிலவு அவ்வூர் குடிசைக்கெல்லாம் ஒளியூட்டிக்கொண்டிருந்தது. “கிரீச்” என்று கேட்ட வாகனத்தின் ஓசை அவ்வூர் மக்களுக்கு புதிதாக இருந்தது. மெதுவாக வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த ஆண்கள் அவ்விடத்தை வந்தடைந்தனர். வாகனம் நிறைய உணவுப்பொட்டலங்கள் காணப்பட்டன. அதில் வந்திருந்தவரோ ஸலாம் சொன்னவராக.

“என்னுடைய இந்த சிறிய அன்பளிப்பை நீங்கள் எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொன்னவராக பங்கிட்டு முடித்து வந்த வேகத்தில் சென்று விட்டார்.

ஆளுக்காள் கைகளில் எதிர்பாராமல் கிடைத்த உணவுக்காய் வந்தவரிற்கு துஆ இறைஞ்சினார்கள். ஒவ்வொருவராக கலைந்து செல்லும் போது ஸாலிம் நாநா சொன்னார்

“அய்யோ காதர் காக்கா இல்லையே. இன்னிக்கு வர லேட் ஆகிட்டாரோ? அவருக்கும் ஒரு பொதி வாங்கி வெச்சிருக்கலாமே” என்றார். அப்போது தான் அங்கே காதர் காக்கா இல்லாததை உணர்ந்தனர் எல்லோரும்.

பௌர்ணமி நிலவு மேல்வானில் ஜொலித்துக் கொண்டிருந்தது. காதர் காக்கா தான் வந்த வாகனத்தை உரியவரிடம் ஒப்படைத்து விட்டு, பணக்காரன் வேடம் கலைத்து விட ஊர் எல்லையைத் தாண்டிக் கொண்டிருந்தார். பௌர்ணமி நிலவை விட பிரகாசமாய் மின்னியது காதர் காக்காவின் வதனம்.

மக்கொனையூராள்.
FARHANA ABDULLAH.
MAGGONA.

அந்த ஒரு நாள் சூரியனின் வருகை கண்டு பனித்துளிகள் அஞ்சி ஓட்டம் எடுத்தன. சுள்ளென தன் மேனி தொட்ட கதிர்களின் உணர்வில் கண்ணைத் திறந்தார் காதர் காக்கா. ஸுபஹ் தொழுது விட்டு வந்தவர் அப்படியே…

அந்த ஒரு நாள் சூரியனின் வருகை கண்டு பனித்துளிகள் அஞ்சி ஓட்டம் எடுத்தன. சுள்ளென தன் மேனி தொட்ட கதிர்களின் உணர்வில் கண்ணைத் திறந்தார் காதர் காக்கா. ஸுபஹ் தொழுது விட்டு வந்தவர் அப்படியே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *