Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஈமான் 

ஈமான்

  • 88

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எம்.ஏ.ரஹ்மான்

இக்கதைக்கு மொகலாயருடைய வரலாறே ஆதாரம். மொகலாயர் இரத்தத் தூய்மையும் குலப்பெருமையும் பேசத் துவங்கிய ஒளரங்கஸிப் காலம். தற்கால பர்மாவின் ஒரு பகுதியாக விளங்கும் அரக்கோண நாடு பகைப்புலம். அந்த மண்ணிலே இஸ்லாத்திலே ஈமான் பூண்ட ஒரு பேதையின் போராட்டமே கதை. முரண்பட்ட மனித இயல்புகள் கதையிலே மறைந்திருக்கும் ஊடுபா -எம்ஏஆர்

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடி மூலம் உணவருந்தி, சயனத்திலே உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு. தாய்மைப் பாசத்தை முகையவிழச் செய்யும் அப்பஞ்சு மெத்தை உதை, அவள் உள்ளத்தில் சம்மட்டியடியாகவே விழுகின்றது.

சிந்தனை மத்து வேதனைத் தயிரைக் கடைகின்றது. தந்தையை இழந்து ஓராண்டு காலங்கூட ஆகவில்லையே! அதற்கிடையில்…

“அக்கா!”

செவிப்பறையில் அந்த வார்த்தைகளின் உச்சரிப்புத் தெளிவாக விழுந்தும், அதனைக் கிரகிக்க அவள் மூளை மறுக்கின்றது. மனம் எங்கேயோ – இறந்தகால இரை மீட்டலிலேயோ, எதிர் காலக் கற்பனையிலேயோ – ஊர்ந்து தடுமாறுகின்றது.

“அக்கா!”

இந்தத் தடவை அந்த அவலக்குரலை அவளுடைய மூளை பற்றிக் கொள்ளுகின்றது. நிமிரும் விழிகள். தசையின் நீர் உலர்ந்து, எலும்புகள் புட்டியிட்டுக் காட்ட, அழகில் அவலட்சணம் பூக்கின்றது. மொட்டிலேயே கசக்கி முகரப்பட்டு, அரக்கோண மிலேச்ச அந்தப்புரத்திலே சோரம் போய்க் கொண்டிருக்கும் அவளுடைய பரிதாபக் கோலம் விழிகளை நிறைக்கின்றது.

தந்தையின் உருவத்திலே மேய்ந்த பார்வையை எங்கேயோ செலுத்துகின்றாள். இடப்பக்கமிருக்கும் நிலைக்கண்ணாடியிலே தன் பிம்பம் பிரதிபலிக்கப்படுவதைக் காண்கின்றாள். ஓராண்டுக் காலச் சூழற்சி அவளுடைய அழகு முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிட்டது. தன்னையே தன்னில் காணமுடியாத தவிப்பு. குல்ரூஹ் பேகம் என்னும் அழகியை அந்தப் பிரதிபிம்பத்திலே இனங் கண்டு பிடிக்குந் தவிப்பு.

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஒர் உதையின் உணர்வு.

“குல்ரூஹ் பேகம்! என் அன்பு மகளே! என் தந்தையார் ஷாஜஹான் பாதுஷா, என்றென்றும் உலக மக்களாற் போற்றப் படப் போகும் அதியற்புத அழகு வாய்ந்த தாஜ்மஹாலை அன்னை மும்தாஜின் ஞாபகார்த்தமாக ஆக்ரா நகரிலே நிர்மாணித்துள்ளார். அதன் அழகுக்கு ஈடாக எந்த வொரு கட்டடமும் நிறுவப்படவில்லை; நிறுவப்படமுடியாது என்று கலைஞர்களும் கவிஞர்களும் ஒரு முகமாக விதந்தேத்துகின்றார்கள். ஆனால், எனனைக் கேட்டால், உன் பேரெழிலின் ஒரு துகளுக்குத்தானும் அந்தச் சலவைக் கல் கோரி ஈடாக மாட்டாது என்று சொல்வேன்…உன் அழகை இந்த மிலேச்ச அரசனுடைய மிருகப் பசிக்கு இரையாக்கி…”

“தந்தையே…!”

“ஆம் மகளே, இரையாக்கி அந்த ஈனச் செயலுக்குப் பரியமாகக் கிடைக்கும் கப்பலிலே, புனித மக்கமாநகர் செல்வதை என்றுமே நான் ஒப்பமாட்டேன். பாபர்-ஹுமாயூன்-அக்பர்-ஜஹாங்கீர்-ஷாஜஹான் ஆகிய மொகலாயப் பேரரசர்களின் வழிவழிவந்த இந்த சூ-ஜா இளவரசன், குலப்பெருமையை ஈடுவைத்து, இந்த உயிரை உடலுடன் பிணைத்து வைக்க விரும்பமாட்டான்.”

“தந்தையே! பெருமானார் பிறந்த மகத்தான புனிதம் பெற்ற மக்கமாநகர் சென்று இறுதி நாள்களை அமைதியாக, நற்கருமங்களில் ஈடுபடுவதிலும், திருக்குர் ஆனை மனனஞ் செய்வதிலுங் கழிக்கவேண்டு மென்று உறுதி பூண்டிருந்தேன். அல்லாஹ்வின் பாதையிலேயே எனது கடைசி நாள்களை அர்ப்பணிக்கப் பூண்டிருந்த உறுதியும், நம்பிக்கையும், தணியாத ஆசையும்… என் ஆசைகளெல்லாம்….”

“மனிதனுடைய கற்பனை வளத்திற் பூக்கும் ஆசைகள். அவனுடைய ஆசைகள் அத்தனையும் நிறைவேறிவிட்டால், அவன் அல்லாஹ்வையும் அவனது தூதர் ரசூர் (ஸல்) அவர்களையும் மறந்து விடுகின்றான். பாரத உப கண்டத்தில்-மொகலாயப் பேரரசில்-எனக்குள்ள பங்கினைப் பெறுவதற்கு அங்குலம் அங்குலமாகப் போரிட்டேன். தந்தை உயிரோடு இருக்கும்பொழுது, வாரிசுகளாக அண்ணன்மார்களாம் தாராஷ்கோவும், நானும் இராசப் பிரதிநிதிகளாக இருக்கும்பொழுது, தம்பி ஒளரங்கஸிப் தில்லியிலே தன்னை ஆலங்கீர் பாதுஷாவாகப் பிரகடனப்படுத்திய செயலுக்காகவே அவனுடன் போராடினேன். இந்த ஞாலம் கண்டு நடுங்கிய ஷாஜஹான் பாதுஷாவின் மாபெரும் மதிப்பை நிலை நாட்டவே போராடினேன். நான் தோற்றுவிட்டேன். ஆனாலும் இதையும்அறிந்து கொள் மகளே! நான் போரிலே தோற்றவன்தான்…நான் பிறந்த மண்ணில், என் கப்றுஸ்தான் நிலத்திற்குத்தானும் உரித்தற்றவனாகிவிட்டேன். இந்நிலையிலும் நான் மனங்குன்றினேனல்லன். என் தோல்வி, இன்னொரு மொகலாயனையே வெற்றி வீரனாக்கியிருக்கின்றது… மொகலாயன் என்றுமே தோற்கமாட்டான்!”

“மொகலாயன் மாற்றானிடந் தோற்க மாட்டான்…ஆனால், இந்த மிலேச்ச அரசனிடம் அடைக்கலம் புகுந்து, மீள முடியாத சகதிக்குள் இறங்கிவிட்டோம்.”

“அல்லாஹ்வில் பூரண நம்பிக்கையுள்ளவன் நான். அதனால் வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவன். என் அருமை மகளின் கற்பை வியாபாரப் பொருளாகப் பேரம் பேசியவன், இன்று அமர்ந்து ஆர்ப்பரிக்கும் அதே அரியாசனத்தில் நான் நாளை அமர்ந்திருந்து, பௌத்தம் வேரூன்றியுள்ள இந்த நாட்டிலே இஸ்லாத்தையும் வளர்ப்பேன். அல்லாஹ் எனக்கு அதற்கு வேண்டிய வலிமையைத் தருவான்…”

தந்தையே! நீங்கள் என்றுமே தோற்றவரல்லர். மொகலாயன் என்றுமே தோற்கமாட்டான். தோல்வி ஏற்பட்டபொழுதும் அதனை வெற்றியின் இன்னொரு நிலைக்களனாகவே கருதினீர்கள். நம்மை அவமதித்த அரக்கோண நாட்டு மிலேச்சன் ஸம்டதுதம்மவை நூற்றைம்பது வீரர்களுடன் வெற்றிகொள்ள முடியுமென்று செருக்கோலம் பூண்டீர்கள். எம்பெருமான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பதுறு யுத்தத்தை முந்நூற்றுப் பதின்மூன்று வீரர்களுடன் மட்டுமே நடத்திப் பெரு வெற்றிகொண்டார்கள். ஆனால், ஆயிரம் வீரர்களுடன் ஈடுபட்ட உஹது யுத்தத்தில் ஆரம்பத்தில் தோல்வி கிட்டிற்று. வீரமும் வெற்றியும் அல்லாஹ்வின் நம்பிக்கையிலேயே உறுதிப்படுகின்றது. அந்த அடிப்படையான இஸ்லாமிய நம்பிக்கையிலே, கெட்டியான நம்பிக்கை வைத்த சுத்த இஸ்லாமிய வீரனாக வாழ்ந்து மாண்டீர்கள். உங்கள் மகளாம் குல்ரூஹ் பேகம், மொகலாய ரத்தமுங் கெடாது, நமது மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவளாகவே வாழவேண்டுமென்பதற்காகத் தங்களுடைய மேலான உயிரைப் பணயம் வைத்தீர்கள். வங்கத்திலே நடைபெற்ற ஆயிரம் போர்களிலே தங்களுடைய உயிரைப் பலியிட்டிருக்கலாம். அச் செருக்களங்களிலே அந்த உயிரைக் காப்பாற்றியது, எனக்காக அதனைத் தியாகஞ் செய்யவா? யா, அல்லாஹ்! இதுவும் உன் திருவுளமோ? தந்தையே! ஆயிரம் வண்ண எண்ணங்களினால் உங்களுடைய உள்ளத்தை நிறைத்து வைத்தீர்கள். அத்தனை கோல நினைவுகளும் உங்களுடன் மரித்தே விட்டன. புண்ணிய பூமியாம் மக்கா சென்று, நான் ஒரு தூய அரபியனின் மனைவியாக வாழ்வதைக் கண்ணாரக் கண்டு மகிழவேண்டுமென்று நினைத்தீர்கள் – ஆனால், இங்கே -அரக்கோணத்தில் – நான் மிலேச்ச அரசனின் ஆசைநாயகியாக வாழ்கின்றேன். என் சகோதரிகளும் அவ்வாறே…இதோ எதிரில் நிற்கும் இவள்…யா அல்லாஹ்!

சிறுகதைகள் வாசிக்க 

“என்னவேண்டும் தங்காய்! உன் பரிதாப நிலையைக் கண்டு தினமும் மனமுருகிச் சாகின்றேன். ஆனாலும், நான் என்றுமே நம்பிக்கையை இழந்தவளல்லள்…காலம் மாறும். பூவுக்கும் முகைக்கு வித்தியாசந் தெரியாது, காமக் களியிலே புரளும் இந்த மிலேச்சனின் அந்தப்புரச் சிறையிலிருந்து உங்களைக் காப்பாற்றியே தீருவேன். இவ்விடமிருந்து சென்று, ஒளரங்கஸ“ப் சிற்றப்பாவிடம் முறையிட்டு, இந்த அரக்கோண இராச்சியத்தை நிர்மூலமாக்குவேன். என் மனப்புயலை மறைத்து, வீசுந்தென்றலாக அபிநயித்து, அரக்கோண மிலேச்சனின் காமக் கழிவை என் புத்திரச் சுமையாகச் சுமக்கின்றேன்…அந்த இரும்புப் பிடிக்குட் சிக்கி இரையாகிய பொழுது, உங்களையாவது மானத்துடன் வாழவைக்கலாமென்று நினைத்தேன்.

தங்களுக்காகவே இத்தனை ஆக்கினைகளையுஞ் சகிக்கும் அக்காள் குல்ரூஹ் பேகத்தின் துன்பங்கள் அவளுடையவைகளாகவே இருப்பதைத் தங்கை நன்கறிவாள். தன்னுடைய விழிகளிலிருந்து பிரவகிக்கும் கண்­ரை, தங்கை கவனிக்கக் கூடாது என்பதற்காக, அவள் வேறு பக்கந் திரும்புகின்றாள்.

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு.

“தந்தையே! போரை ஒழித்து, சிற்றப்பா ஒளரங்கஸிப்புடன் சமாதானஞ் செய்து கொண்டாலென்ன?”

“மொகலாய வீராங்கனையின் உதடுகளா இந்த வார்த்தைகளை உச்சரிக்கின்றன?”

“உங்களுக்காகவோ, அன்றி எனக்காகவோ அல்ல. என் பிஞ்சுச் சகோதரிகளின் நிலையைப் பாருங்கள். தாயன்பை இழந்து, செருக்களப் பாசறைகளிலேயே வாழ்ந்து…”

“தெரியும் மகளே, குல்ரூஹ் பேகம்… சதா கவச மணிந்து வாழும் இந்த மார்பிற்குள் கரைந்து வாழும் தந்தையுள்ளம் படும் வேதனைகளை நீ அறிய மாட்டாய். ஒளரங்கஸிப்பின் உடலிலோடும் அதே இரத்தந்தான் என் உடம்பிலும் ஓடுகின்றது. அந்த இரத்தத்திற்குக் கைகட்டிச் சேவகஞ் செய்யும் பழக்கம் வரவே மாட்டாது…”

தந்தையே! உங்களுடைய மகளுடைய உடம்பிலும் அதே இரத்தந்தான் ஓடுகின்றது. அந்த உறுதியுடன்தான் இந்த அரசியற் சதியில் குதித்தேன். இதோ, பாத்திமா வந்து கொண்டிருக்கின்றாள். நான் எதிர் பார்க்கும் அந்த செய்தியுடன் தான் வருகின்றாளா?

“அம்மா, குல்ரூஹ் பேகம்!”

எதிரில் பாத்திமா நிற்கின்றாள். அவளுடைய முகம், கலவரக் காங்கையில் வரண்டு கிடக்கின்றது. பயத்தின் சவக்களை இரேகைகள் கிடங்கிட்டிருக்கின்றன. சொல்லக் கூடாதது எதையோ சொல்ல அச்சப்படுபவளாகக் காணப்படுகின்றாள்.

தங்கையின் முகம், பாத்திமா சொல்லப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றது.

தந்தையே! உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய தளபதி அமீன் துணையுடன், அரக்கோண் மிலேச்சனின் அடாத செயல்களுக்குப் பழிவாங்கி, எங்கள் மிடிமையைப் போக்கி, மொகலாயப் பெருமையை நிலைநாட்டலாமென்றிருக்கின்றேன். அல்லாஹ்! கருணை நிறைந்த இறையே! உன்னை நம்பியே இந்தக் காரியத்தை மேற்கொண்டேன். ‘உன்னையே வணங்கி, உன்னிடமே உதவி தேடுபவளாக இருக்கிறேன்.’

“பாத்திமா! செய்தி கொண்டு வந்தாயா?”

“ஆம், எல்லாமே பாழ்.”

“என்ன?!”

“நீங்கள் வெகு கவனமாகப் பின்னிய சதித் திட்டம், எப்படியோ அரக்கோண மகாராசாவுக்குத் தெரிந்து விட்டது. தளபதி அமீன் கைது செய்யப்பட்டு விட்டான். எந்த நேரமும் மிலேச்ச அரசன் ஸம்டதுதம்ம இங்கு வரலாம்.”

தலையிலிருந்து பூகம்பம் வெடித்து, அக்கினிக் குழம்புகளைக் கொட்டிய மாதிரி துன்பச் சிதறல். சிலையாக, அசைவற்று, விரல் நொடிப்பு நேரம் மோனக் கோலம்.

மறுகணம்-

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு.

“இந்தத் துன்பங்களுக்கு விடிவே கிடையாதா? சில சமயங்களில், என் உயிரையே போக்கிக் கொள்ளலாமென்று தோன்றுகின்றது.”

“மகளே” என் அன்பு குல்ரூஹ் பேகம் எனக்கு இன்றே சத்தியஞ் செய்து தா. என்றுமே தற்கொலை எண்ணம் உன் உள்ளத்தைத் தீண்டக் கூடாது. அது நமது இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறானது. இறைவன் நம்மை, தன்னை அஞ்சலி செய்வதற்காகவே படைத்தான்.”

“சதா துன்பப் பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருக்கும் உள்ளத்தால் இறைவனை எப்படி அஞ்சலி செய்வது?”

“முள்ளில் வாழும் ரோஜா, தன் புன்னகையால் இறைவனை அஞ்சலி செய்யும் பொழுது, மனிதனால் முடியாதா? மகளே, குல்ரூஹ் பேகம்! அல்லாஹ் மனிதனைப் படைத்தான். கோழைகளையும், நம்பிக்கையற்றவர்களையுமல்ல. இஸ்லாத்தை நம்பும் ஒவ்வொருவனும் மனிதனாக வாழ்கின்றான். மனிதனாக வாழ்பவன் இறைவனை நம்புகின்றான்; அவனை அஞ்சலி செய்கின்றான். நான் உலகின் சகலவற்றிலும் இஸ்லாத்தையே அதியுந்நதமானதாக விரும்புகின்றேன்; நம்புகின்றேன். நான் ஒரு சுத்த இஸ்லாமியன் என்று வாழ்ந்து மடிவதிலும் பார்க்க வேறு எதையும் என் பாக்கியமாகக் கருதமாட்டேன். என் அருமை மகள் குல்ரூஹ் பேகம் இஸ்லாமிய மகளாகவே இறப்பாள் என்னும் உறுதியை நான் மொகலாய சாம்ராச்சியத்தினும் மேலாகக் கருதுகின்றேன்.”

“தங்களுடைய சித்தப்படியே…”

“அல்லாஹ் சித்தப்படி; அவனுடைய தூதுவரும் இறுதி நபியுமான முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் சொல்லியபடி…”

“நான் எந்த இன்னலிலும், என் உயிரை நானே மாய்த்துக் கொள்ளமாட்டேன்.”

“அம்மா! எங்களை ஆயிரம் ஆக்கினைகளுக்குட்படுத்தி, ஈற்றிலே தலையைக் கொய்தெறியாது மிலேச்சனுடைய சினம் தணியப் போவது கிடையாது…அதிலும் பார்க்க நம் உயிரை நாமே மாய்த்துக் கொள்வதுதான் சிறந்தது…”

“பாத்திமா! நீ என் அருமைத் தோழி. என் சகோதரிகளைத் தாய்க்குத் தாயாக வளர்த்தவள். நன்றிகளை வெறும் வார்த்தைகளிலே அடக்க முடியாது…ஆனால், நான் எத்துயர் அநுபவிப்பினும், தூய இஸ்லாமிய நெறிகளைக் கடைப்பிடித்தவளாகச் சாவதிலேயே பெருமை அடைவேன்.”

“தந்தையே! நான் தங்களுக்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றியே தீருவேன் என்பது உறுதி. நான் தந்த சத்தியஞ் சத்தியமே.”

அவளுடைய தங்கையும், பாத்திமாவும் பின் அறையை நோக்கிக் கலவரத்துடன் ஓடுகின்றார்கள். பரவி வரும் தீக்காட்டிலிருந்து தப்பும் அவசரம்.

குல்ரூஹ் பேகத்தின் உள்ளத்திலே புதிய உறுதி. அதனாலேற்படுஞ் சாந்தம். அது நம்பிக்கை; இஸ்லாம் ஊட்டிய நம்பிக்கை.

மிலேச்ச அரசன் ஸம்டதுதம்ப வருகின்றான். அருவருப்பின் திரள். கோபத்தில் நெருப்புக் கங்குகளைச் சுமக்கும் விழிகள்.

“கள்ளி!”

“…..”

“பரத்தை!”

“…..”

“அன்றே நினைத்தேன். என் சோற்றைத் தின்று, எனக்கு எதிராக வாள்தூக்கிய அந்த சூ-ஜாவின் மகள் எனக்கு விசுவாசமுள்ள மனைவியாக நடக்கமாட்டாளென்று…அழகின் வெறி மயக்கம்…போதை இன்று தெளிந்துவிட்டது.”

“நான் நம்புவது ஏக இறைவன் அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையுமே. நான் ஒழுகுவது என்றென்றும் மனித சமுதாயத்திற்குக் கலங்கரை விளக்கமாக விளங்கும் திருமறையாம் திருக்குர் ஆனையே.”

“உன் பேச்சு எனக்கு விளங்கவில்லை.”

“மூடனுக்கு ஞானிகளின் தீர்க்கதரிசனங்கள் விளங்கமாட்டாது. பன்றிகளுக்கு முத்துகளின் மதிப்புத் தெரிவதில்லை.”

“என் மதிப்பையும் அதிகாரத்தையும் உங்கள் வம்சத்தினருக்கே உணர்த்துகின்றேன்.. உன் சிற்றப்பன் ஒளரங்கஸிப்பின் படை உதவியுடன் என் இராச்சியத்தை நிர்மூலமாக்கச் சதித் திட்டந் தீட்டிய உன்னையும் உன் சகோதரிகளையும் அணு அணுவாகச் சாகடிப்பேன். இன்றுமுதல் ஒரு பருக்கை உணவோ, ஒரு துளி நீரோ வழங்கப் படமாட்டாது.”

அல்லாஹ் சாகும்வரை நோன்பா?

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு.

“மகளே! நான் என் உயிரைப் பணயம் வைப்பது, இஸ்லாமிய கர்ப்பப்பை, மிலேச்ச உதிரத்தில் உதிக்குஞ் சிசுவைச் சுமக்கக் கூடாது என்பதற்காகத்தான்…”

தந்தையே! என்னை மன்னியுங்கள். வைரத்திம் பார்க்கக் கடினமான நெஞ்சுறுதி தங்கள் மகள் குல்ரூஹ் பேகத்திடம் இருக்கின்றது. தளிர் உடலினால், மிருகபலத்தை எகிற முடியவில்லை. மன்னியுங்கள்.

“கூண்டோடு மரிக்கப்போகும் உங்களுடைய மொகலாய சரித்திரம் இந்த அரக்கோண மண்ணிலிருந்து சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டுவிடும்.”

“இல்லை. அப்படி மட்டும் நினைக்கவேண்டாம். ஒரு மொகலாயனாம் தந்தை சூ-ஜா இறந்திருக்கலாம். ஆனால், இன்னொரு மொகலாயனாம் என் சிற்றப்பன் ஒளரங்கஸிப் ஆலம்கீர் பாதுஷா உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றான்…அவர் பாரத உப கண்டத்தின் பெரும் பகுதியை அரசாளும் ஷா-இன்-ஷா…அல்லாஹ்வில் மாறாத நம்பிக்கை வைத்துள்ள குல்ரூஹ் பேகம் பேசுகின்றேன்…உன் நாடு மொகலாய சாம்ராச்சியத்தின் அங்கமாக நிச்சயம் மாறும்.”

“ஹஹ்ஹஹ்ஹா…” பிரளயச் சிரிப்பு. “ஆணவக்காரி, மொகலாயப் பெருமையையும் இஸ்லாத்தின் மேன்மையையும் நெஞ்சில் இருத்திக்கொண்டே அணுவணுவாக, உடல்வற்றி, நா உலர்ந்து செத்துத் தொலை…ஹஹ்ஹஹ்ஹா…”

அவன்-அந்த மிலேச்ச அரசன் ஸம்டது தம்ம-சென்று பல நாழிகை நேரமாகியும் அந்தச் சொற்கள் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன…செவிப் பறைகளைப் பிரளயச் சிரிப்புக் குடைகின்றது.

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்திலே உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றில் ஓர் உதையின் உணர்வு. தாய்மைப் பாசத்தை முகையவிழச் செய்யும் அப்பஞ்சுமெத்தை உதை, அவள் உள்ளத்தில் சம்மட்டியடியாகவே விழுகின்றது.

சிந்தனை மத்து வேதனைத் தயிரைக் கடைகின்றது.

“அல்லாஹ் மனிதனைப் படைத்தான். கோழைகளையும் நம்பிக்கையற்றவர்களையுமல்ல. இஸ்லாத்தை நம்பும் ஒவ்வொருவனும் மனிதனாக வாழ்கின்றான். மனிதனாக வாழ்பவன் இறைவனை நம்புகின்றான்; அவனை அஞ்சலி செய்கின்றான்.”

தந்தையே! உங்களுக்குத் தந்த வாக்குறுதியை மட்டும் எந்த நிலையிலும் உங்கள் மகள் குல்ரூஹ் பேகம் காப்பாற்றுவாள். அவள் இஸ்லாமிய மகளாகவே மரிப்பாள்.

“இக்கணந் தொடக்கம் உங்களுக்கு எவ்வித உணவோ, நீரோ வழங்கப்பட மாட்டாது. இவ்வறையை விட்டு யாரும் எங்கும் போகவும் முடியாது.” என, பிரதம சிறைக்காவலாளி பெருந் தொனியிலே அறிவிக்கின்றான்.

அவளுடைய உள்ளத்தில் எவ்வித சலனமுமில்லை. நம்பிக்கையின் நிறைவு.

எழுந்து சென்று, ‘வுழூ’ச் செய்து குர் ஆனை எடுக்கின்றாள்.

கர்ப்ப வீட்டில், கொப்பூழ்க் கொடிமூலம் உணவருந்தி, சயனத்தில் உயிர்வாழுஞ் சிசுவின் அசைவினால் அடிவயிற்றிலே ஓர் உதையின் உணர்வு.

(குறிப்பு: 1666 ஆம் ஆண்டளவில் அரக்கோணம், மொகலாய சாம்ராச்சியத்தின் ஓர் அங்கமாக மாறியது என்பது வரலாறு)

 சிறு கை நீட்டி, முதற் பதிப்பு: அக்டோபர் 1998, மித்ர வெளியீடு, சென்னை.

எம்.ஏ.ரஹ்மான் இக்கதைக்கு மொகலாயருடைய வரலாறே ஆதாரம். மொகலாயர் இரத்தத் தூய்மையும் குலப்பெருமையும் பேசத் துவங்கிய ஒளரங்கஸிப் காலம். தற்கால பர்மாவின் ஒரு பகுதியாக விளங்கும் அரக்கோண நாடு பகைப்புலம். அந்த மண்ணிலே இஸ்லாத்திலே ஈமான்…

எம்.ஏ.ரஹ்மான் இக்கதைக்கு மொகலாயருடைய வரலாறே ஆதாரம். மொகலாயர் இரத்தத் தூய்மையும் குலப்பெருமையும் பேசத் துவங்கிய ஒளரங்கஸிப் காலம். தற்கால பர்மாவின் ஒரு பகுதியாக விளங்கும் அரக்கோண நாடு பகைப்புலம். அந்த மண்ணிலே இஸ்லாத்திலே ஈமான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *