Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தேர்தல் கால வெறுப்பும் பிரசாரம் பற்றிய ஹாஷ்டெங் தலைமுறையின் ஆய்வறிக்கை 

தேர்தல் கால வெறுப்பும் பிரசாரம் பற்றிய ஹாஷ்டெங் தலைமுறையின் ஆய்வறிக்கை

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்து பாராளுமன்ற அமர்வுகளும் ஆரம்பமாகிவிட்ட போதிலும், தேர்தல் தொடர்பான ஆய்வுகளும் அவதானிப்புகளும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. அந்த வகையில் தேர்தல் பிரசார காலத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வெறுப்புப் பிரசாரங்கள் தொடர்பில் ‘ஹேஷ்டெக் தலைமுறை’ அமைப்பு நடாத்திய ஆய்வின் இறுதி அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

“இலங்கை: சமூக வலைத்தளங்கள் மற்றும் தேர்தல் நேர்மை”

எனும் தலைப்பிலான இவ்வறிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் பொது மக்களின் பார்வைக்காகவும் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஹேஷ்டெக் தலைமுறை அமைப்பின் ஸ்தாபகர் செனல் வன்னியாராச்சி, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் இவ்வறிக்கையின் பிரதியைக் கையளித்தார்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலானது கொவிட் 19 நெருக்கடி நிலையினுள் பல்வேறு மட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற போதிலும் வேட்பாளர்களின் பிரசாரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் போன்றவர்கள் வாக்காளர்களை அறிவூட்டவும் சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவியாக அமைந்தன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் தேர்தல் காலத்தில் வெறுப்புப் பேச்சு, போலிச் செய்திகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பிரசாரங்களுக்கு சமூக வலைத்தளங்கள் அதிகளவு துணை போயுள்ளன என்பதை இவ்வறிக்கையை முழுமையாக வாசிக்கும் போது உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்த ஆய்வானது 2020 ஜுன் 15 முதல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரையான காலத்தை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக் காலப்பகுதியில் முஸ்லிம் சிறுபான்மையினரையும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இலக்கு வைத்து அதிகமானளவு வெறுப்புப் பிரசாரங்கள் இடம்பெற்றதாக இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கமைய அறிக்கையிடப்பட்ட பதிவுகளில் 66 வீதமானவை முஸ்லிம்களுக்கு எதிரானவை என்றும் தமிழர்களை இலக்கு வைத்து 9 வீதமும் சிங்களவர்களை இலக்கு வைத்து 3 வீதமும் வெறுப்புப் பிரசார பதிவுகள் இடம்பெற்றிருந்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இக் காலப்பகுதியில் அதிகம் பகிரப்பட்ட 60 போலிச் செய்திகள் கண்டறியப்பட்டதுடன் இவற்றில் அதிகமானவை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக அமைந்துள்ளன. மேலும் துன்புறுத்தலுக்குள்ளாக்கும் வகையிலான 80 பதிவுகள் இக் காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டதாகவும் அவற்றில் அதிகமானவை பெண் வேட்பாளர்களை பால்நிலை அடிப்படையில் துன்புறுத்துவதாக அமைந்திருந்தன என்றும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

தேர்தல் பிரசாரங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட இறுதி 48 மணித்தியாலங்கள் கொண்ட மௌனிப்புக் காலத்தில் இம்முறை சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அதிகளவு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டமையும் இந்த ஆய்வின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்போது தேர்தல் விதிமுறைகளை மீறும் 4454 பதிவுகள் தொடர்பாக ஹேஷ்டெக் தலைமுறை நிறுவனம் பெப்ரல் கண்காணிப்புக் குழு ஊடாக, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டது. இவற்றில் 4314 பதிவுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து இவற்றில் 74 வீதமான பதிவுகள் பேஸ்புக்கினால் அகற்றப்பட்டன. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தைவிடவும் இம்முறை அதிகமானளவு பதிவுகள் பேஸ்புக் நிறுவனத்தினால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக முறையிடப்பட்ட பதிவுகளில் 48.5 வீதமானவை பொது ஜன பெரமுன ஆதரவாளர்களாலும் 21.2 வீதமானவை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களாலும் 13.7 வீதமானவை ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களாலும் இடப்பட்டவையாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளையடுத்து குறிப்பிடத்தக்க பதிவுகள் பேஸ்புக் நிறுவனத்தினால் நீக்கப்பட்ட போதிலும் வெறுப்புப் பேச்சுக்கள் மற்றும் போலிச் செய்திகளை அகற்றுவதில் பேஸ்புக் நிறுவனத்தின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்றும் ஹேஷ்டெக் தலைமுறை நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் மதுமாதவ அரவிந்தவினால் முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட வீடியோ பதிவை அகற்றுமாறு பல தடவைகள் வேண்டுகோள்விடுத்தும் குறித்த பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கவில்லை. குறித்த வீடியோ பதிவு சிங்களத்தில் இருந்தபோதிலும் அதன் உள்ளடக்கத்தை நிமிடத்திற்கு நிமிடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்து வழங்கியும் கூட பேஸ் புக் நிறுவனம் அதனை அகற்றாமை கவலைக்குரியது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாசவை தனிப்பட்ட வகையில் தாக்கும் பதிவு குறித்து முறையிட்டபோதிலும் அதுவும் பேஸ்புக்கினால் அகற்றப்படவில்லை என இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இவ்வறிக்கையின் தொகுப்பாளர்களுள் ஒருவரான ஜோய் ஜெகர்த்தன், “இலங்கைச் சூழலில் நாம் வெறுப்புப் பேச்சு என வகைப்படுத்தும் சில பதிவுகளை பேஸ்புக் நிறுவனத்தினர் தமது சமூக தரநிலைகளுக்கு ஏற்ப அதனை கருத்துச் சுதந்திரமாகக் கருதுகின்றனர். இதன் காரணமாகவே நாம் முறையிட்டும் அவர்கள் இவ்வாறான பதிவுகளை அகற்ற மறுக்கின்றனர். இதற்குத் தீர்வாக இலங்கையின் அரசியல், சமூக சூழல்களுக்கேற்றவாறான சமூகதர நிலைகள் உருவாக்கப்பட்டு அதற்கென பிரத்தியேக ஊழியர்கள் உள்ளூரிலிருந்தே நியமிக்கப்பட்டு இவற்றை அகற்ற எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையே எமது இவ்வறிக்கை ஊடாக எதிர்பார்க்கிறோம்” என்றார்.

பேஸ்புக் மூலமாக இனவாத பிரசாரங்களை மேற்கொண்டு வன்முறைகளைத் தூண்டக்காரணமாக அமைந்ததாக கருதப்படும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மஹசொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க ஆகியோருக்கு ஏற்கனவே பேஸ் புக் தடைவிதித்துள்ளது.

இதன்காரணமாக இவர்கள் இம்முறை பேஸ் புக் ஊடாக பிரசாரங்களை முன்னெடுக்க அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் இவர்களது இனவாதத்தை தூண்டும் பிரசாரங்கள் வழமைபோல யூ டியூப் வலைத்தளம் ஊடாக முன்னெடுக்கப்பட்டதாகவும் இது குறித்து தாம் அந்நிறுவனத்துக்கு அறிவித்தும் அவர்கள் அதனை நீக்கவில்லை என்றும் இவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

இவ்வறிக்கையானது மேற்படி விடயங்களை விரிவாக கண்காணித்து அறிக்கையிட்டுள்ள போதிலும் இத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பேசும் பெண் வேட்பாளர்களுக்கு எதிராக தமிழ் மொழி மூலம் முன்வைக்கப்பட்ட வெறுப்புப் பேச்சுக்கள், பகிரப்பட்ட போலிச் செய்திகள் தொடர்பில் இவ்வறிக்கை கவனம் செலுத்தாமை ஒரு குறைபாடாகும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஸ்தாபகருமான ஷிரீன் சரூர் குறிப்பிடுகிறார்.

“பெரும்பாலும் தமிழ் மொழி மூலம் பெண் வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களே. அவர்கள்தான் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த, போட்டியிட்ட தமிழ் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள். இந்த முக்கிய விடயம் கண்காணிக்கப்பட்டு இவ்வறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.

போலிச் செய்திகள், வெறுப்புப் பேச்சுக்கள், பாலியல்சார் அவதூறுகள் என மிகவும் மோசமான தாக்கத்தை விளைவிக்கும் பதிவுகளை புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் பதிவிட்டிருந்தனர். எனினும் இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தேர்தல்கள் திணைக்களமும் பேஸ்புக் நிறுவனமும் உள்ளமை கவலைக்குரியது” என்றார்.

தேர்தல் ஆணைக்குழுவைப் பொறுத்தவரை சமூக வலைத்தளங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான விடயமாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கான ஆளணியோ தொழில்நுட்ப வளமோ தேர்தல் திணைக்களத்திடம் இல்லை என்பதும் சமூக வலைத்தளங்கள் தொடர்பான சட்டங்கள் இயற்றப்படாமையும் இவ்வாறான வெறுப்புப் பேச்சுக்களுக்கும் தேர்தல் விதிமுறை மீறல்களுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகையில், நாம் தேர்தல் காலங்களில் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வந்தோம். அத்துடன் அதன் மூலமாக தேர்தல் விதிமுறைகளை மீற வேண்டாம் என்றும் நாம் கோரிக்கைவிடுத்திருந்தோம். எனினும் சமூக ஊடக பாவனையாளர்களை எதையும் பதிவிட வேண்டாம் எனக் கோருவதற்கு எமக்கு சட்ட ரீதியாக அதிகாரமில்லை. இதற்கிருக்கும் ஒரே வழி சமூக ஊடகங்களைத் தடை செய்வதாகும். அப்படித் தடை செய்தாலும் மக்கள் வி.பி.என் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதனைப் பயன்படுத்துவார்கள்.

எனவே சமூக வலைத்தள கணக்குகளை நிர்வகிப்போர் எவ்வாறு தமது மதங்களை மதிக்கிறார்களோ அதேபோன்று தேர்தல் விதிமுறைகளையும் மதிக்க வேண்டும். எம்மால் கோரிக்கைகளையே முன்வைக்க முடியும். ஆனால் நடவடிக்கை எடுக்க சட்டங்கள் இல்லை என்றார்.

தற்போது அரசாங்கம் 20 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவது தொடர்பில் ஆர்வம் காட்டுகின்ற நிலையில், புதிய திருத்தங்கள் அரசாங்க நிறுவனங்களும் ஆணைக்குழுக்களும் எதிர்நோக்கும் சமகால சவால்களுக்கு சட்ட ரீதியான தீர்வைத் தருவதாக அமைய வேண்டியது அவசியமாகும்.

“நவீன சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் தேர்தல் விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கு தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அது பற்றி முன்மொழிவுகளை நாம் சமர்ப்பித்து 5 வருடங்களாகின்றன. எனினும் சட்டங்கள் இயற்றப்படவில்லை. 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலாவது புதிய சட்டத்தின் கீழ் நடக்குமாயின் மகிழ்ச்சிக்குரியதே”

என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் குறிப்பிடுகிறார்.

தேர்தல் ஆணைக்குழு தலைவரின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில் அரசாங்கம் புதிய சட்ட சீர்திருத்தங்களை வரைய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

எம்.பி.எம்.பைறூஸ்
Vidivelli

ஹாஷ்டெங் தலைமுறையின் “இலங்கை: சமூக வலைத்தளங்கள் மற்றும் தேர்தல் நேர்மை” பற்றிய அறிக்கை.

SRI LANKA SOCIAL MEDIA AND ELECTORAL INTEGRITY-Findings from Sri Lanka’s 2020 Parliamentary Election

[pdfjs-viewer url=”http%3A%2F%2Fyouthceylon.com%2Fwp-content%2Fuploads%2F2020%2F10%2FSRI-LANKA-SOCIAL-MEDIA-AND-ELECTORAL-INTEGRITY-Findings-from-Sri-Lankas-2020-Parliamentary-Election.pdf” viewer_width=100% viewer_height=8000px fullscreen=true download=true print=true]

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்து பாராளுமன்ற அமர்வுகளும் ஆரம்பமாகிவிட்ட போதிலும், தேர்தல் தொடர்பான ஆய்வுகளும் அவதானிப்புகளும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. அந்த வகையில் தேர்தல் பிரசார காலத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக…

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்து பாராளுமன்ற அமர்வுகளும் ஆரம்பமாகிவிட்ட போதிலும், தேர்தல் தொடர்பான ஆய்வுகளும் அவதானிப்புகளும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. அந்த வகையில் தேர்தல் பிரசார காலத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *