Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
போதைப் பொருள் பாவனையும் திசை மாறும் இளம் சமூகமும் 

போதைப் பொருள் பாவனையும் திசை மாறும் இளம் சமூகமும்

  • 20

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வளர்ந்து வருகின்ற இந் நவீன காலத்தில் அனைத்திலுமே ஒரு மாறுதல் காணப்படுகின்றது. இவ்வாறு மாற்றமே இல்லாமல் இன்றைய சமூகத்தில் இழையோடிக் கொண்டிருக்கும் ஒரு நச்சுக்கிருமி என்னவெனில் நிச்சயமாக அது போதைப்பொருள் பாவனைதான். வயது வித்தியாசமின்றி ஆண், பெண் வித்தியாசமின்றி தற்காலத்தில் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஒரு அரக்கன் என்றே இவற்றைக் கூறலாம்.

எதிர் கால அழகிய சந்ததிகளை ஒட்டு மொத்தமாக சீரழிப்பதில் முழுப் பங்கையுமே இவை வகிக்கின்றன என்றால் அது மிகையல்ல. எமது நாட்டைப் பொறுத்த வரையில் மது விற்பனை நிலையங்களில் மதுவிற்காக ஏங்கி நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும் போதே இப் பழக்க வழக்கங்கள் எம் கலாசாரத்துடன் எவ்வாறு பிண்ணிப் பிணைந்துள்ளது என்பது புலனாகிறது.

இவ்வாறு சிறிது சிறிதாக உயிரையே உருக்குலையச் செய்யும் போதைப் பொருட்களுல் விலை உயர் மது பானங்கள், ஹெரோயின், அபின், கஞ்சா, மாவா, போதை தரும் இன்ஹேலர்கள், சிகரெட்டுக்கள் என்பன உள்ளடங்குகின்றன.

வெளி நாடுகளில் மட்டுமின்றி இலங்கையிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இவ்வாறு போதைப் பொருள் கடத்தல் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர் பாரியளவில் பணம் சம்பாதிக்கின்றனர் என்பதே நிதர்சனம்.

அதிகளவு பணத்தை செலுத்தி நோயை விலைக்கு வாங்கும் சமூகம் நிலைத்திருக்கும் காலமெல்லாம் போதைப்பொருள் கடத்தல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பது வெள்ளிடை மலை தான்.

ஐ.நா சபையின் ஆய்வின்படி உலகம் முழுவதும் 200 மில்லியன் மக்கள் போதைப் பொருள் பாவனைக்கு உட்பட்டுள்ளனர். 1000:1 என்ற விகிதத்தில் மாணவர்கள் புகைத்தலில் ஈடு படுவதோடு, 13-15 வயதிற்கு இடைப் பட்ட மாணவர்களில் 11% ஆனோர் புகைத்தலில் ஈடுபடுவதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் போதைப் பொருள் பாவனையானது 30% மாக காணப்படும் அதே நேரம் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அது 50% மாக காணப் படுகின்றது. அத்தோடு போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் அதிகமானோர் திருமணம் ஆகாதவர்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இன்றைய சிறுவர்கள் தான் நாளைய தலைவர்கள் என்ற கூற்றை இக் காலத்துடன் ஒப்பிடுகையில், கல்வி கற்று, சாதனைகள் படைத்து வெற்றியின் உச்சத்தை தொட வேண்டிய இளம் மொட்டுக்கள் அதாவது நாளைய தலைவர்கள் தான் இந்த போதைப்பொருள் பாவனையால் அதிகம் சீரழிந்து போகின்றனர், என்பதே கசப்பான உண்மை. அத்தோடு இத்தகைய போதைப்பொருட்கள் மிகவும் சூட்சுமமான முறைகளில் பாடசாலைகளில் விற்கப்படுகின்றன என்பதும் வேதனை தரக் கூடிய விடயமே.

இளம் வயதினரை போதைப் பொருட்களுக்கு அடிமைப் படுத்துதல் இலகு என்பதனாலேயே போதைப் பொருள் கடத்தல் காரர்களின் இலக்கு இளம் சமூகத்தினரையே குறி பார்க்கிறது எனலாம்.

இளம் வயதினர் இவ்வாறு போதைக்கு அடிமையாவதற்கு முக்கிய பங்குவகிப்பது திரைப்படங்களின் தாக்கமாகும். இன்றைய திரைப்படங்களில் கவலைகளை மறக்கவும், அதிக மகிழ்ச்சியின் மது அருந்துவதில் தப்பில்லை என்பதை பிரபலங்கள் மூலம் சித்தரிக்கின்றனர். திரைப்படம் ஓடும் போது மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும் என என்னதான் வாசகங்கள் போடப்பட்டாலும், வாசகங்களை விட காண்பிக்கப்படும் காட்சிகள் தான் மனதில் ஆழமாக பதியும் என்பது மறுப்பதற்கில்லை.

இது தவிர மேலை நாட்டு கலாசாராமானது உல்லாசப் பயணிகளின் வருகையால் இன்று இலங்கை மக்களுடன் பிணைந்துள்ளது. உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வந்து பல தரப்பட்ட போதைப்பொருட்களை இங்குள்ள மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

இன்றைய இளம் சமூகம் அவற்றையே உயர்வாக கருதுவதால் அவற்றிலிருந்து விடுபட முனைவதில்லை.

அத்தோடு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் மற்றொரு காரணியாக தீய சகவாசங்கள் காணப்படுகின்றன. ஒருவன் போதைப் பொருட்களை உபயோகிகும் போது தன் நண்பனுக்கும் ஒரு முறை சிறிதளவில் சுவைத்து பார்ப்பதில் தப்பில்லை என்ற மன நிலையை உருவாக்கி அவர்களையும் அதில் ஈடு படுத்துகின்றனர்.

இன்று ஒரு மூடியளவு குடிப்பது தான் நாளடைவில் ஒரு போத்தலாக மாறும் என்பதை அறியாதோராய் உள்ளனர்.

போதைப் பொருள் பாவனையால் தனி மனிதன் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகமுமே பாதிக்கப் படுகின்றது. ஒரு குடும்பத் தலைவன் போதைப் பொருள் உபயோகிக்கும் பட்சம் அவனுக்கும் குடும்பத்திற்கும் இடையில் விரிசல் உண்டாகும். அவன் சம்பாதிக்கும் காசையெல்லாம் போதைப் பொருட்களுக்கே செலவளிப்பான்.

எனவே நாளடைவில் குடும்பம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படும். அதே வேளை படிக்கும் வயதில் ஒரு மாணவன் போதைப் பொருட்கள் உபயோகிக்கும் போது முதலில் படிகும் ஆர்வம் முற்றிலுமாக குறைந்து விடும். அத்தோடு தன்னைச் சுற்றியுள்ள சக நண்பர்களையும் தன் பக்கம் ஈர்த்து விடுவான். இவை தவிர வாகன ஓட்டுனர்கள் பலர் போதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புக்கள் ஏராளம். இவ்வாறு நம்மைச் சுற்றியுள்ளோரில் ஒருத்தர் போதைப் பொருள் உபயோகித்தாலும் அதன் தாக்கம் அனைவரையுமே வந்து சேரும் என்பதே நிதர்சனம்.

அத்தோடு ஆரம்பத்தில் சிறிது சிறிதாக பாவிக்கத் தொடங்கி நாளடைவில் அதிகமாக பாவிக்கத் தோன்றும் அளவிற்கு இன்றைய சமூகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி காணப்படுகின்றனர். அடிக்கடி போதை வேண்டுமென்று தோன்றுதல், எதை இழந்தேனும் தனக்கு போதை தரக் கூடிய பொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் இதற்கு அடிமையாகி காணப்படுவதால் கொலை, கொள்ளை, திருட்டு, கடன் மற்றும் ஏனைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டேனும் பணம் சம்பாதிக்க முனைகின்றனர்.

அத்தோடு இவற்றைப் பாவிக்கும் இன்றைய தலைமுறையினர் இதன் விளைவுகள் பற்றியும் தன் எதிர் காலத்தைப் பற்றியும் துளியளவேனும் சிந்திக்காமல் இவற்றிற்கு அடிமையாகி விடுகின்றனர்.

போதைப்பொருள் பாவனையால் முதலில் பாதிக்கப் படுவது நரம்பு மண்டலம் ஆகும். அடுத்ததாக மூளை, ஈரல், இதயம், சிறுநீரகம் என பாவிக்கும் அளவிற்கேற்ப உடல் உறுப்புக்களைச் சிதைக்கக் கூடியனவாக போதைப் பொருட்கள் காணப்படுகின்றன.

இவை தவிர உறக்கமின்மை, பதகளிப்பு, சோர்வு என பல்வேறு மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பலவாறாக கஷ்டப்பட்டு உழைத்து குடும்பத்தையும் கவனிக்காமல் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் போதைப் பொருட்களுக்காக இறைத்துவிட்டு, எந்தவொரு பயனுமே இல்லாத போதைப் பொருட்களை உபயோகிப்பது இறுதியில் இது போன்ற நோய்களை வாங்குவதற்கு தான் என்பதேனும் அறியாத வண்ணம் போதைப் பொருள் பாவனையானது இன்றைய சமூகத்தினரின் கண்களை மறைத்து விட்டது எனலாம்.

போதைப் பொருள் கடத்தலானது சட்ட விரோதமாயினும் மிகவும் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் திறந்த பொருளாதாரக் கொள்கை முறையினாலும் இவற்றை இலகுவில் ஒழிக்க முடியாதுள்ளது. அத்தோடு வர்த்தக ரீதியில் நோக்கினால் இவை அதிக பணத்தை ஈட்டுத் தரக் கூடியதாக இருப்பதால் இவற்றின் மூலம் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் சில பெரும் புள்ளிகள் இருப்பதாலும் இவற்றை முற்றிலும் இல்லாமலாக்குவது சற்று கடினமாக உள்ளது.

ஐ. நா சபையானது ஜூன் மாதம் 26 ம் திகதியை போதைப்பொருள் ஒழிப்பு தினமாக பிரகடனம் செய்துள்ளது. போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள், அதனால் ஏற்படும் சமூக விளைவுகள் போன்றவற்றை போதைப்பொருள் ஒழிப்பு திணைக்களம் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஊட்டினாலும் இன்றைய சமூகத்தின் மத்தியில் அது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே காணப்படுகின்றது. இவற்றை எல்லாம் ஒவ்வொருவரும் தானாக உணர்ந்து இவற்றில் இருந்து மீண்டாலே அன்றி வேறு முறைகளில் மீள்வது என்பது கானல் நீராகவே காணப்படும்.

Mishfa Sadhikeen
SEUSL

வளர்ந்து வருகின்ற இந் நவீன காலத்தில் அனைத்திலுமே ஒரு மாறுதல் காணப்படுகின்றது. இவ்வாறு மாற்றமே இல்லாமல் இன்றைய சமூகத்தில் இழையோடிக் கொண்டிருக்கும் ஒரு நச்சுக்கிருமி என்னவெனில் நிச்சயமாக அது போதைப்பொருள் பாவனைதான். வயது வித்தியாசமின்றி…

வளர்ந்து வருகின்ற இந் நவீன காலத்தில் அனைத்திலுமே ஒரு மாறுதல் காணப்படுகின்றது. இவ்வாறு மாற்றமே இல்லாமல் இன்றைய சமூகத்தில் இழையோடிக் கொண்டிருக்கும் ஒரு நச்சுக்கிருமி என்னவெனில் நிச்சயமாக அது போதைப்பொருள் பாவனைதான். வயது வித்தியாசமின்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *