Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வாக்குரிமை தவிர்க்க முடியாத ஒரு மார்க்கக் கடமை 

வாக்குரிமை தவிர்க்க முடியாத ஒரு மார்க்கக் கடமை

  • 33

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நாட்டில் அசாதாரண ஒரு சூழலின் நிழலில் ஜனாதிபதி தேர்தல் களைகட்டியுள்ளது. வாழையடி வாழையாக பச்சைக்கும் நீலத்திற்கும் புள்ளடியிடும் அடிமை அரிசியலில் இருந்து விடுதலை பெறும் அடையாளமாக மக்கள் அரசியல் சக்தி களத்தில் அலைபாய்ந்து வருவதை காணமுடிகிறது. இத்தருணத்தில் வாக்காளர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து எமது வாக்கை பயன்படுத்துவது ஒரு தார்மீகக் கடமையாகும். எனவே நாட்டை கட்டியெழுப்பும் மகத்தான பணிக்கு வாக்குரிமை மூலம் எமது பங்களிப்பை வழங்குவதற்கு நாம் கடமைப் பட்டுள்ளளோம். வாக்குரிமை பற்றிய ஷரீஆவின் நிலைப்பாட்டை இந்த ஆக்கம் விளக்குகிறது.

ஷரீஆவின் பார்வையில் வாக்குரிமை

பொதுவாக தேர்தலில் வாக்களிப்பது என்பதன் பொருள் சாட்சி சொல்வதாகும். நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதென்பது குறித்த அபேட்சகரின் தகைமை, நேர்மை, நம்பகத்தன்மையில் அவர் மிகவும் பொருத்தமானவர் என்றும் சமூகத்தின் பிரதிநிதியாக அல்லது நாட்டின் தலைவராக வருவதற்கு தகுதியானவர் என்றும் வாக்காளர் வழங்கும் சாட்சியாகும்.

இஸ்லாமிய சட்டப்பரப்பில் அதன் அந்தஸ்தை நோக்கும் போது, தேசத்தினதும் பொதுமக்களினதும் நலன்கள் தேர்தல்களில் தங்கியிருப்பதால் வாக்குரிமையுள்ள சகலரும் தகுதியான வேட்பாளருக்கு சாட்சி பகர்வது அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமை என்றே இஸ்லாமிய சட்டவல்லுனர்கள் குறிப்பிடுவர்.

தேசத்தின் பொது நலனைக் கருத்திற் கொண்டு சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் குடிமகன் மிகப் பொருத்தமான தகுதிவாய்ந்த ஒருவருக்கு வாக்களிப்பது அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்யும் கடமையாகும் என்ற தரத்தில் வைத்தே நோக்கப்படும். காரணம் அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ள ‘சாட்சி பகர்தல்’ என்ற வார்த்தையானது வாக்களித்தல் என்பதற்கு சமனானதாகும். அதாவது வாக்குரிமை என்பது சாட்சியமாகும். இந்தப் புரிதலில் இஸ்லாமிய சட்டத்துறை மற்றும் அரசியல் துறை அறிஞர்களிடம் கருத்தொற்றுமை நிலவுகிறது.

தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் அட்டை என்பது சாட்சி பகர்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பாகும். ‘சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டால் மறுக்கக் கூடாது’ (பகரா:282) என அல்குர்ஆன் பணிக்கிறது. அவ்வாறே வாக்குரிமையை பகிஷ்கரிப்பதும் மறைப்பதும் குற்றம் என்ற கருத்தை அல்குர்ஆன் மேலும் வலியுறுத்துகிறது. ‘சாட்சியத்தை நீங்கள் மறைக்கவும் வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால் நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றது’ என அல்லாஹ் கூறுகிறான். (பகரா:283) பாவத்திற்கு உள்ளாகும் இடமாக உள்ளம் குறிப்பிடப்பட்டுள்ளதானது இந்த பாவத்தின் பாரதூரத்தை எடுத்துக்காட்டப் போதுமாகும்.

தேர்தலில் வாக்களித்தல் என்பதற்கு பிரதிநிதியாக நின்று குரல் கொடுப்பவரை நியமித்தல் என்றும் சிலர் அர்த்தம் கொடுத்துள்ளனர். அதாவது வாக்காளர் தன் சார்பாக குரல் கொடுப்பதற்கும், உரிமைகளை பாதுகாப்பதற்கும் தேச நலன்களையும், மக்கள் நலன்களையும் அவதானிப்பதற்கும் ஒரு முகவரை அல்லது பிரதிநிதியை தெரிவு செய்கிறார் என்பது இதன் பொருள். இதுவும் வாக்குரிமை குறித்த சட்டபூர்வமான ஒரு பார்வையாகும்.

இந்தப் பின்புலத்தில் தேர்தல்களின் போது தகுதியான, மிதவாத சிந்தனைப் போக்கு கொண்ட அல்லது தீமைகளை குறைப்பதற்கு உதவுவார் என்று கருதப்படும் ஒருவருக்கு ஆதரவாக வாக்குரிமையை பயன்படுத்துவது கட்டாயக் கடமை எனவும் நியாயமான காரணமின்றி வாக்களிக்காமல் ஒதுங்குவது குற்றம் எனவும் பேரறிஞர் முஹம்மத் அஹ்மத் ராஷித் வலியுறுத்திக் கூறியுள்ளார். இலங்கை போன்ற பௌத்த நாடுகளில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இந்த பத்வா செல்லுபடியாகும் என அவர் மேலும் உறுதிப்படுத்தி குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தை இஸ்லாமிய அறிஞர்களான அப்துல் கரீம் ஸைதான், அப்துல் ரகுமான் அல்-பர், அறிஞர் ஸலாஹ் ஸுல்தான், கலாநிதி யூஸுப் கர்ளாவி போன்ற பல அறிஞர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அவ்வாறே பல நாடுகளில் உள்ள உலமா சபை தீர்மானங்களும் வாக்குரிமையை பயன்படுத்துவது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கடமை என்று தெரிவித்துள்ளன. எனவே சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள், அங்கு வாழும் முஸ்லிம்களதும் தேசத்தினதும் நலன்களை முன்னுரிமைப்படுத்தி தேர்தல் காலங்களில் தமது வாக்குப் பலத்தை பயன்படுத்துவது ஷரீஆவின் பார்வையில் வாஜிப் என்பதே இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் பலர் வெளியிட்டுள்ள தீர்ப்பாகும்.

தேர்தலில் பங்கு கொள்வதற்கான ஷரீஆ ஆதாரங்கள்

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தாம் வாழும் தேசத்தின் நலன்களை அடைந்து கொள்வதற்கும், தீமைகளை தவிர்ப்பதற்கும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவது வாஜிபாகும் என அறிஞர் அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் குறிப்பிடுகிறார். ‘காபிரான அரசிடமிருந்து நலன்தரும் பகுதிவாரியான பயனை பெறுவது ஆகும்’ என்ற சட்ட விதியின் அடிப்படையில் அதற்கு அவர் ஆதாரம் காட்டுகிறார்.

இவ்வாதாரத்தை அவர் தெளிவுபடுத்தி கூறும் போது ஸீராவில் இருந்து பல நிகழ்வுகளை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார். நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் எதிரிகளிடமிருந்து தங்களது உயிரை பாதுகாக்கும் வகையில் குறைஷிக் காபிர்களின் தலைவர்களிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்ற பல சம்பவங்கள் ஸீராவில் உள்ளன. அதன் பொருள் செல்வாக்குள்ள, உயர் அந்துஸ்த்துள்ள குறைஷிக் காபிர் ஒருவர், இன்னாருக்கு நான் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று அறிவித்தால் அவருடைய சமூகம், பாதுகாப்பு வழங்கப்பட்ட நபருக்கு முழுமையான உயிர் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.

அந்த பாதுகாப்பு அறிவிப்பு ஒரு உடன்படிக்கையாகவே அன்று கருதப்பட்டது. அப்படி பாதுகாப்பு கொடுக்கப்பட்டவருக்கு யாரும் எத்தகைய தீங்கும் செய்ய முடியாது. யாராவது அதனை மீறி பாதுகாப்பு வழங்கப்பட்டவருக்கு தீங்கு செய்தால் அது உடன்படிக்கையை முறித்ததாகவே கருதப்பட்டது. அதற்காக அந்த கோத்திரமே போர் செய்ய களம் இறங்கிவிடுவர்.

அன்று ஜாஹிலிய்யா கால மரபில் இருந்த இந்த பாதுகாப்பு முறைமையை இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அவரது தோழர்களும் தேவையான போது தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தினர். அது ஈமானை பாதிக்கும் ஒரு விடயமாக நோக்கப்படவில்லை. மாறாக உலக விவகாரத்தில் பரஸ்பர ஒத்துழைப்பை பயன்படுத்தியதாகவே கருதப்பட்டது. உலகவாழ்வில் தேச  நலன்களை அடைவதில் ஒரு வழிமுறையாகவே அதனை நாம் காண்கின்றோம்.

நபிகளார் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது முஷ்ரிகான முத்இம் பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருந்தும் கூட அவர்களை இறை தூதர் (ஸல்) அவர்கள் நாடவில்லை. காரணம் நபிகளார் சுதந்திரமாக மக்கா திரும்ப முடியாத அளவிற்கு எதிர்ப்பும் கொலை அச்சுறுத்தலும் அவர்களுக்கு இருந்தது. எனவே உயிர் பாதுகாப்பு பெறாமல் மக்காவினுல் நுளைவது அழிவை தன் கையால் தேடிக்கொண்டதாகவே அமையும் என்று கருதியே அன்றிருந்த பாதுகாப்பு மரபை நபிகாளர் தனக்கு சார்பாக பயன்படுத்த முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முஷ்ரிகான முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாள்களுடன் மக்காவில் நுளைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஸுப்யான் (அந்த சமயம் இஸ்லாத்தின் பரம எதிரியாக இருந்தவர்) எதிரிலே வந்து நீர் முஹம்மதின் பின்னால் அவரைத் தொடர்ந்து வருவது ஏன்? அவருக்கு நீர் பாதுகாப்பு வழங்கியுள்ளீரா எனக் கேட்டார். ஆம், நான் சும்மா வரவில்லை. முஹம்மதுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை தலைவர் அபூ ஸுப்யானும் அங்கீகரித்தார். இதுபோன்ற ஏராளமான நம்பகமான நிகழ்வுகளை ஸீராவில் அதிகமாகவே காணமுடியும்.

இவை சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகளை கையாள்வதற்கான வழிகாட்டல்களாகும். அநீதி நிலவும் அரசாங்கத்தில் தேர்தல் என்பது தீமையை குறைப்பதற்கான அல்லது நாட்டு நலனில் பங்களிப்பதற்கான அல்லது சத்தியத்தை பரப்புரைப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். சர்வதிகாரிகளின் கொடுமைகளை எதிர்ப்பதற்கான சாத்வீகமான அரசியல் போராட்ட சாதனமே தேர்தல் அரசியலாகும். மேற்குறித்த சம்பவம் இறைதூதர் (ஸல்) அவர்கள் உலக அரசியல் நலன்களை அடிப்படையாக கொண்டு ஒரு காபிரின் பாதுகாப்பை வேண்டுவது தவறல்ல என்பதையே சுட்டுகிறது.

இதனைத்தான் அறிஞர் அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் ‘காபிரான அரசிடமிருந்து நலன்தரும் பகுதிவாரியான பயனை பெறுவது ஆகும்’ என்ற சட்டவிதியின் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒப்பிட்டு நோக்கும் போது இது தேர்தலில் பங்கு பற்றுவதற்கான தெளிவான ஆதராமாகும். அந்நிய அரசாங்கத்தில் சில நலன்களை பெறுவதற்காக அதனை ஆதரித்து வாக்களிப்பது ஷரீஆ அங்கீகாரம் கொண்ட ஒரு செயலே என்பது இதனால் தெளிவாகின்றது. அதனை பகிஷ்கரிப்பது சீர்கேடும், தீமைகளும் பரவுவதற்கு உடைந்தையாக இருந்ததாகவே அர்த்தம். இந்தப் பின்புலத்தில் தான் வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என்ற கருத்தை நவீனகால இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

இதனை சிலர் குப்ருக்கான விசுவாசம் என மறுதளிப்பதற்கு இடமுண்டு. ஆனால் வாக்குரிமை என்பது நிராகரிப்புக்கு விசுவாசம் தெரிவிப்பதன்று. முஸ்லிம்களின் நலனுக்கான விருப்ப வாக்கை கொடுப்பதாகும். இதற்கு பல இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகள் சான்றாக உள்ளன. உதாரணமாக மக்கா காலப் பிரவில் பாரசீகத்துக்கு எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள். காரணம் ரோமர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். பாரசீரகத்தில் வாழும் நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே அந்த மகிழ்ச்சிக்கு காரணம். மாறாக அது கிறிஸ்தவர்கள் மீதான விசுவாசமாக நோக்கப்படவில்லை. இது குறித்து ஸுரா ரூமின் ஆரம்ப வசனங்கள் பேசுகின்றன.

அவ்வாறே ஹபஷாவில் நஜ்ஜாசியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோசமடைந்தார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜுத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அது போன்ற ஒரு சமூக செயற்பாட்டிற்காக இன்று அழைக்கப்பட்டாலும் நான் நிச்சயமாக பதில் அளிப்பேன் எனக் கூறினார்கள். இவை உலக விவகாரங்களில் நபிகளார் (ஸல்) அவர்கள் தேச மற்றும் மக்கள் நலன் கருதி பற்றோடும் விசுவாசத்தோடும் அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளார்கள், ஒத்துழைத்துள்ளார்கள் என்பதையே காட்டுகின்றன. எனவே இத்தகைய செயற்பாட்டை குப்ருக்கான விசுவாசமாக ஆதாரம் காட்டி மக்களை திசை திருப்புவது ஒரு அரசியல் துரோகமாகவே நோக்கவேண்டும்.

எனவே நாம் எதிர்காலங்களில் வரும் தேர்தல்களில் வாக்களிப்பது என்பது ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றப் போகின்றோம் என்பதுதான் அர்த்தம். அது ஒரு வணக்கம். அதற்கான வழிகாட்டல் ஸீராவில் தெளிவாக உள்ளது என்பதை புரிந்து கொண்டோம்.

ஊழல் நிறைந்த அரசில் வாக்குரிமைக்கு என்ன பெறுமானம்

நாட்டு நலன் கருதி நாம் வாக்களித்து என்ன பயன்? அங்கு ழுழுக்க முழுக்க ஊழலும் மோசடியும் தானே நடைபெறுகிறது. இப்படி இருக்கும் போது ஓட்டுப் போட்டா என்ன போடா விட்டால் என்ன என்று சலிப்புடன் ஒதுங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு வேளை அவர்கள் எண்ணுவது போல் தேர்தல் ஊழல், மோசடி நிறைந்த நிலையில் அமையும் என்றிருந்தாலும் வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என்றே இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். காரணம் அநியாயங்களுக்கு முன்னால் எடுக்கவேண்டிய நிலைப்பாடு குறித்து ஸுன்னாவின் வழிகாட்டல் கடமையை நிறைவேற்றுமாறே பணிக்கிறது. ‘உனது கடமையை நிறைவேற்று, உனது உரிமையை அல்லாஹ்விடம் கேள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே எமது பொறுப்பில் உள்ள வாக்குப் பலத்தை பிரயோகிப்பது ஒரு அடிப்படைக் கடமை. முதலில் அதனை நிறைவேற்றுவோம். பின்னர் அநியாயத்திற்கு எதிராக வல்ல அல்லாஹ்விடம் முறையிடுவோம். இதுதான் சுன்னா காட்டித்தரும் வழிமுறை என மேற்கூறிய ஹதீஸ் எமக்கு கூறுகிறது. அநீதிக்கு எதிராக போராடுகின்ற அதே சமயம் தேர்தலின் போது பொருத்தமான ஒருவரை தெரிவு செய்வதற்கு வாக்களிப்பதும்; முதன்மைப் படுத்தப்பட வேண்டிய ஒரு கடமையாகும்.

மாற்றத்திற்கான சாத்வீக போராட்டத்தின் ஒரு ஆயுதமே வாக்குரிமை. மோசடி என்ற காரணம் காட்டி அந்தக் கடமையை பாழ்படுத்தக் கூடாது. தீமையை தடுப்பதற்கு அடுத்த தரப்பின் ஒப்புதல் தேவையில்லை. கடமையை செய்தால் அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும். வாக்குரிமையை விட்டுக் கொடுப்பது என்பது மோசடிக்கு நாம் உடந்தையாக இருக்கிறோம் என்பதே அர்த்தம். சாட்சி சொல்லாம் மௌனம் காப்பதானது நடக்கின்ற அநீதிகளை அங்கீகரிப்பது என்றே பொருள். மேலும் சரியோ பிழையோ நீ விரும்பியதை செய்வதற்கு நான் பூரண ஆதரவு என்று கூறுவதாக அது அமைந்துவிடும். எனவே தான் எந்நிலையிலும் வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என்றும் அலட்சியமாக விடுவது பாவம் என்று கூறுகின்றோம்.

பெண்களும் வாக்குரிமையில் சம பொறுப்புள்ளவர்களே

மேற்கூரிய அனைத்து சான்றுகளும் பெண்களுக்கும் சேர்த்தே ஷரிஆ கடமையாக்கியுள்ளது. ஆண்களைப்போன்றே பெண்களும் சமபொறுப்புள்ளவர்களே. சட்டரீதியான நியாயமான காரணம் இன்றி பெண்கள் வாக்குரிமையை பயன்படுத்தாமல் விடுவது குற்றம் என்ற ஷரீஆவின் பார்வை பெண்களுக்கும் சேர்த்தே கூறப்பட்டுள்ளது. எனவே ஆண்கள் இது குறித்து மிகுந்த கவனம் எடுக்க வேண்டும். பெண்கள் அந்தக் கடமையை செய்வதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவதும் அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். ஓட்டுப் போடுவதற்கான போக்குவரத்து வசதிகளையும் தேவையான ஏனைய ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது ஆண்களின் கடப்பாடாகும்.

அத்துடன் நாட்டில் உள்ள தேர்தல் ஒழுங்குகள் மற்றும் சட்ட திட்டங்களை பேணுவது ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் பொதுவானதே. எனவே ஒரு வாக்காளர் அவருக்குரிய ஒழுங்குகளைப் பேணி நடப்பது குடிமகன் என்ற வகையில் கடமையாகும். வாக்களித்தல் ஒரு சாட்சியாகும். சாட்சியாளர் தான் யார் என அடையாளம் காண்பதற்கு தடையாக இருக்கக் கூடாது என்பது ஷரீஆ அங்கீகரிக்கும் அடிப்படை விதியாகும். எனவே குறிப்பாக நமது சகோதரிகள் வாக்காளர்களுக்குரிய ஒழுங்குகளை மீறாமல் நடந்து கொள்வதும் தேச நலன் சார்ந்த கடமை என்பதை புரிந்து நடந்து வேண்டும். கடமையொன்றை நிறைவேற்றும் ஒரு நல்ல பிரஜை ஒரு போதும் வீணான பிரச்சினைகளுக்கு வித்திடமாட்டான்.

வாக்களிப்பது காலத்தின் தேவை

வாக்குரிமையை பயன்படுத்துவது எப்படி ஷரீஆவின் பார்வையில் கடமையோ அவ்வாறே அது காலத்தின் கட்டாயத் தேவையுமாகும். நாட்டில் அரசியல் அராஜகம் வித்தியாசமான ஒரு வடிவம் எடுத்துள சூழலில் நாம் வாழுகின்றோம். இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்காக சில சக்திகள் பகிரங்கமாகவே வேலை செய்கின்றன. சியோனிச சக்திகள் நாட்டை குட்டிச் சுவராக்க வந்துள்ள இந்த நிலையில் முகம் போன போக்கில் வாழமுடியாது. எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று ஒரு முஸ்லிம் வாழ முடியாது. நன்மையை ஏவி தீமையை தடுப்பது ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கடமையாகும். வாக்குரிமை தீமை தடுப்பதற்கான மிகப் பலமான சாதனம். இந்த தருணத்தில் வாக்குரிமையை பாவிப்பது நமது நாட்டை அபிவிருத்தி நோக்கி தள்ளுவதற்கும் சகல இன மக்களுக்கும் மத்தியில் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்த அரிய அருமையான சந்தர்பத்தை மிகக் கவனமாக பயன்படுத்த வேண்டும். அதனை  கைநழுவ விட்டால் இம்மையிலும் மறுமையிலும் கைசேதம்தான் மிஞ்சும். வேண்டுமென்று விட்டால் பாவமும் பலியும் சேர்ந்தே பின் தொடரும். காலத்தின் தேவை தேர்தல் என்ற வடிவில் வந்து அழைக்கிறது. அதற்கு பதில் கூர்வது ஒவ்வொரு பிரஜையினதும் தார்மீகப் பொறுப்பாகும்.

நலன்களை முற்படுத்தி தீமைகளை தவிர்ப்பதற்கோ அல்லது அழிவுகளை, சேதங்களை குறைப்பதற்கோ தேர்தல் ஒரு சிறந்த ஆயுதம். அந்த வகையில் ஷரீஆ அங்கீகாரம் கொண்ட வாக்குரிமையை மிகச்சரியாக பயன்படுத்தவது ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் முன்னால் உள்ள சமனான பொறுப்பாகும்.

எனவே நாட்டில் நடைபெறவுள்ள எத்தகைய தேர்தல்களிலும் அசட்டையாக இருப்பது ஆராஜகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் உதவியதாக அமையும். அதாவது மிகப்பெரிய தீமையை தடுப்பதற்கான வாய்ப்பு இருந்தும், வாக்கட்டை கிடைத்தும் அலட்சியம் செய்த பாவம் என்றே கருதப்படும். ஒரு தவறை தெரிந்து செய்தால் அது கொடிய குற்றமாகும். சிறுபான்மைக்கான அரசியல் போராட்டத்தில் வாக்குரிமை என்பது மாற்றத்திற்கான மிக முக்கிய சாதனம் என்ற உணர்வோடு நம் வாக்குப் பலத்தை பிரயோகிக்க வேண்டும்.

அவ்வாறே வாக்குரிமை ஒரு சாட்சியம். பொய் சாட்சி சொல்லுவது பெரும்பாவமாகும். எனவே எமது சாட்சியம் நேர்மையானதாக இருக்க வேண்டும். பொருத்தமானவர் ஒருவர் இருக்க தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி பொருத்தமற்றவருக்கு வாக்களிப்பது மாபெரும் தவறும் பாவமுமாகும்.

தாய் நாட்டின் குற்றச் செயல்களை ஒழித்து நீதி, நேர்மை, இனங்களுக்கு இடையிலான சௌஜன்யம், சமாதானம், பொருளாதார சுபீட்சம் போன்றவற்றை உருவாக்குவதற்கு அதிகபட்சம் இவர் உழைப்பார் என்று கருதும் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும். அந்த வாக்கு நாட்டின் பெருந் தீமையொன்றை ஒழிப்பதற்காக நீங்கள் செய்யும் உதவியாகும். தூய எண்ணத்துடன் அது நடந்தால் கூலி நிச்சயம். அல்லாஹ் விளைவுகளை பார்த்து கூலி வழங்குவதில்லை. எண்ணத்திற்கே வெகுமதி தருகின்றான்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

முஹம்மத் பகீஹுத்தீன்
வியூகம் வௌியீட்டு மையம்

[totalpoll id=”6618″]

நாட்டில் அசாதாரண ஒரு சூழலின் நிழலில் ஜனாதிபதி தேர்தல் களைகட்டியுள்ளது. வாழையடி வாழையாக பச்சைக்கும் நீலத்திற்கும் புள்ளடியிடும் அடிமை அரிசியலில் இருந்து விடுதலை பெறும் அடையாளமாக மக்கள் அரசியல் சக்தி களத்தில் அலைபாய்ந்து வருவதை…

நாட்டில் அசாதாரண ஒரு சூழலின் நிழலில் ஜனாதிபதி தேர்தல் களைகட்டியுள்ளது. வாழையடி வாழையாக பச்சைக்கும் நீலத்திற்கும் புள்ளடியிடும் அடிமை அரிசியலில் இருந்து விடுதலை பெறும் அடையாளமாக மக்கள் அரசியல் சக்தி களத்தில் அலைபாய்ந்து வருவதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *