மங்கைக்கும் மனம் உண்டு

  • 12

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பச்சைக் கம்பளம் போர்த்திய குளிர் காட்சி. அதன் நடுவே அருவியில் நீர் சலசலக்கும் இசையின் மொழி ராகம். கவிதையாய் ஒலிக்கும் இனிய கச்சேரி நிகழ்த்தும் பறவைகளின் பங்கும் கலந்து ஒரு மண்ணுலக சொர்க்கத்தை இயற்கை அன்னை வரமாக கொடுத்திருந்தாள். இவ்வினிய கிராமத்தை நோக்கி நகரத்திலிருந்து ஒருத்தி பேரூந்தில் வந்து இறங்கினாள்.

இரு புறமும் செழித்திருந்த வயல் வெளிகளில் நின்றிருந்த தங்க மணி நெற் கதிர்கள் அவளை தலை அசைத்து வரவேற்றது. நகர வெப்பத்தில் ஒடுங்கிக் காய்ந்து போன அவள் மேனிக்கும் மனதுக்கும் ஒரு மாற்றமாய் வழி தோறும் நின்றிருந்த மரங்களின் அரவணைப்பு நிழல் இன்பம் அளித்தது.

அப் பெண்ணின் மனதிற்குள் பல மின்னல்கள் பாய்ந்து தான் கடந்து வந்த பாதையை நினைவூட்டிடும் வகையில் ஒரு குயில் கூவியது. அவளும் தன் இளமைக் கால நினைவலைகளுள் சென்றாள். பாதை நெடுங்கிலும் நடந்தவளாகவே.

“லா… லா… லா… லலா லா… லா… லா… லலா… சின்னக் குயில் பாடும் பாட்டு கேக்குதா. குக்குக்கூ… குக்குக்கூ… கூ… கூ… குக்குக்கூ… குக்குக்கூ… கூ… கூ… தம்பிகளே! தங்கைகளே! தேரில் என்னை ஏற்றுங்கள். உற்சாகமாய் உள்ளாசமாய், ஊறைச் சுற்றிக் காட்டுங்கள்”

என்ற பாடல் வரிகளைப் பாடிக் கொண்டே அருவிப் பக்கமாய் ஓடி விளையாடும் அந்த இளம் பெண் குயிலுடன் சேர்ந்து “குக்கூ… குக்கூ…” எனக் கூவினாள்.

“பவித்ரா என்ன இது சின்ன புள்ள மாதிரி அங்கயும் இங்கயும் ஓடிகிட்டு என்ன பண்ணுற. பாரு பாறைங்க எல்லாம் இருக்கு. தடுக்கி விழுந்தா. அப்பரம் பல்லு ஒடஞ்சிடும். அப்பரமா யாரு உன்னைய கட்டிக்குவான். சொல்லு” என்றாள் தமக்கை.

“நான் இன்னும் சின்னப் பொண்ணு தான். இன்னும் நெரய படிக்க இருக்குது அதுகுள்ள இந்தக் கல்யாணம் கத்திரிக்கா என்டெல்லாம் பேசாதக்கா.” எனப் பவித்ரா கூறிய மறு கனமே.

“ஆமா பொட்டப் புள்ள உன்னய படிக்க வெச்சி எம் புள்ள சொத்தையெல்லாம் அழிச்சது போதும். கூறுகெட்ட சிருக்கி உன்ட வாலுத் தனத்த எல்லாம் மூட்ட கட்டி வைய்யி. இன்டக்கி சாயங்காலமா டவுன்ல இருந்து உன்னய பொண்ணு பார்க்க வாறாங்க. உன்ட அப்பா சொல்லலயா?” என பிஞ்சவள் கனவுகளை ஒரு நொடியில் உடைத்தாள் பாட்டி கனகா.

பாட்டியின் வார்த்தைகளைக் கேட்ட பவித்ராவின் தமக்கை சித்ரா,

“இல்ல பாட்டி அப்பா என்ட தான் சொன்னாரு. பவிக்கிட்ட பக்குவமா சொல்ல சொல்லி. அதுக்குள்ள எல்லாதயும் இப்படி போட்டு ஒடச்சிட்ட” என்றாள்.

“என்னக்கா சொல்ற, எனக்கு இப்போ தானே பதினேழு வயசு. அதுக்குள்ள கல்யாணமா?” என அழுகை வந்த குரலில் வாடிய மலரென அவள் முகமிருக்க, தன் தமக்கையை தன் மொத்த கவலையும் ஏக்கமுமம் சேர பார்த்தாள் பவித்ரா.

“ஆமா வந்துட்டா சொல்லுறதுக்கு. எனக் கெல்லாம் அந்தக் காலத்துல வயசுக்கு வந்து கொஞ்ச நாள்டயே கல்யாணம் ஆயிடுச்சி. அத இத பேசிகிட்டு இருக்காம சட்டுபுட்டுன்னு கெளம்பி வீட்டுக்கு வாங்க.” எனக் கூறிய பாட்டி தன் தாங்கு தடியைக் குற்றி மெல்ல நடையாக வீட்டிற்குச் சென்றாள்.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை சற்றும் அறியாத குடும்பத்தில் பிறந்தது அவள் சாபமோ. நல்ல முறையில் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த போதும் இன்று பவித்ராவின் கல்விப் பாதையில் திருமணம் என்ற பாறையொன்று தடையானது.

தன் தமக்கையும் பாவம் என்ன செய்வாள். அவளுக்கும் இதே அநியாயம் தானே சில ஆண்டுகளுக்கு முன் நடந்தேறியது. சிறகொடிந்த சிட்டாய் மனமுடைந்து நின்றாள் பவித்ரா. அவளுக்கு நல்ல ஆசிரியராக வர வேண்டும் என்ற கனவு. இனி அந்தக் கனவு கானல் நீரானது அவள் வாழ்வில்.

சூரியக் கதிர்கள் மெல்ல தன் நிறம் மாற்றி; பறவைகளும் கூடு திரும்பி; பொழுதும் மாலையெனக் கூறிட மணமகன் குடும்பம் பவித்ரா வீட்டின் முன்னே இருந்தனர்.

“அடடடா வந்துடிங்களா? ஐயோ வாங்க வாங்க உக்காருங்க. எவ்ளோ பெரிய சம்பந்தம். எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. பவிம்மா எல்லாருக்கும் காப்பி போட்டு எடுத்து வா.” என்றான் பவித்ராவின் தந்தை.

“சம்பந்தி அதெல்லாம் தேவல்ல. எங்க வீட்டு மருமகள கூப்புடுங்க. சட்டுபுட்டுன்னு பார்த்துடுவோம்.” என்றாள் மணமகனாக இருக்கும் சிவாவின் தாயார்.

பெண் மென்மையானவள் என்பதாலோ அவளை அதிகம் ஆண்கள் அடக்கியே வைக்கிறார்கள். தன் மனைவியைப் பறி கொடுத்த பின்னும் கூட தன் அதிகாரத் திமிரைக்  காட்ட இரு புதல்விகள் உள்ளனர் என நினைத்தான் பவித்ராவின் தந்தை.

குழந்தை முகம் கூட மாறாத வட்ட முகத்தழகி பவித்ரா. தந்தையை எதிர்த்துப் பேசும் வலு அற்ற புழுவென வாழ்ந்தவள். இப்போது மட்டும் என்ன செய்து விட முடியும். அவள் மனதில் சற்றும் சிவாவிற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் ஒரு பொம்மையை அலங்காரம் செய்வதைப் போல அவளையும் செய்து நிறுத்தினர் சபை நடுவே.

“அம்மாடி மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கா. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நீ என்னப்பா சொல்லுற” என்றாள் சிவாவின் தாய். அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சேது என வாழ்பவன் சிவா. இன்றல்ல எப்போதுமே அவனுக்கு அம்மாவின் முடிவு தான் சரியாகத் தோன்றும்.

“நீங்களே சொன்னப்பரம் வேற என்னம்மா ரொம்ப புடிச்சிருக்கு” என்றான் சிவா.

ஆணிடம் சம்மதமா? எனக் கேட்கும் சமூகம் அதே கேள்வியை பெண்ணிடம் கேட்டு விடுவதில்லை சில நேரம். மங்கையிவள் வாழ்கையும் முடிவானது. சில நாட்களிலேயே திருமணமும் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த சூடு தனியும் முன்பே பவித்ராவையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்கு சென்றர். சொந்தங்களையும் சொந்த மண்ணையும் பிரிந்து தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல பவித்ரா அடுக்கு மாடித் தொடரில் இருந்த ஒரு வீட்டிற்குள் அடைக்கப்பட்டாள். அடைக்கப்பட்டது அவள் மட்டும் இல்லை. அவளது இனிய வாழ்வின் கதவும், கனவுகளுக்கும் சுய முடிவுகளுக்குமான சுதந்திரமும் தான்.

காலத்தின் வேகம் அவளுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுக்க மறந்தது. மாமியாரும் எரிமலையாய் தினம் தினம் வெடித்து பவித்ராவைக் காயப்படுத்தினாள். இதற்கு மேல் சிவாவிடம் பலதையும் கூறி அவனை தடுமாறிடவும் செய்தாள் அவனின் தாய். பவித்ராவின் வாழ்வும் நரகமாய் மாறியது. அடியும் உதையும் தாங்கியே அவளின் மெல்லிய யாக்கையும் மரத்துப் போனது.

மரத்தால் விழுந்தவனை மாடு மோதியது போல. அவள் வாங்கி வந்த சாபம் வாகன விபத்தில் திடீரென சிவா உயிர் நீத்தான். கோடை இடி விழுந்த மரத்தை போல அவள் வாழ்வும் இன்று கருகியது. பதினேழில் திருமணக் கோலம் பூண்டு; இருபத்து இரண்டில் விதவையென்ற பெயர் சூடி; கண்ணீரை சொந்தமாக்கி வெண்ணாடை போர்திக் கொண்டாள் பவித்ரா.

“மூதேவி வந்த நேரம் என் புள்ளய பறி கொடுத்துட்டேனே” என பவித்ராவைச் சுட்டிக் காட்டி கதறினாள் சிவாவின் தாய்.

“என்ட புள்ளயே இல்ல, இனிமே நீ இங்க இருக்க கூடாது போய்டு. மூதேவி தொலஞ்சி போ.” என சில நாட்களிலேயே வீட்டை விட்டும் விரட்டினாள் சிவாவின் அன்னை.

கல்வியை சரிவர நிறைவேற்றி இருந்தால் இன்று பவித்ராவின் வாழ்க்கை இன்பச் சோலையாய் மாறி இருக்கும். இன்றோ சுடுகாடாய் சுடர் விட்டு எறிகிறது அவள் மனம்.

பாதை நெடுங்கிலும் நடையாக வந்தவள் மேனியை திடீர் என தூறிய மழைச் சாரல் தொட்டிட தன் சுய நிலைக்கு வந்தாள் பவித்ரா. தற்சமயம் தன் தாய் வீட்டீற்குள் ஒரு புதிய மங்கையாய் அவள் வரவு. கண்ணீருடன் குடும்பமே கலங்கி நிற்க; கண்ணீர் வற்றிய அவள் விழிகள் மட்டும் மெல்லென புன்னகைத்தது.

பல இன்னல்களையும் தாங்கிய சிற்பம் அவள் விழிப் புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள். இனி பவித்ராவின் மனம் போல் வாழ்ந்திட காலம் பதில் சொல்லும். குடும்பம் துணை நிற்கும். பார் பேச சிறகு விரித்து அவள் பறக்கும் காலம் வெகு தூரமில்லை.

முற்றும்

Rafeeul
ANURADHAPURA
SEUSL

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பச்சைக் கம்பளம் போர்த்திய குளிர் காட்சி. அதன் நடுவே அருவியில் நீர் சலசலக்கும் இசையின் மொழி ராகம். கவிதையாய் ஒலிக்கும் இனிய கச்சேரி நிகழ்த்தும் பறவைகளின் பங்கும்…

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் பச்சைக் கம்பளம் போர்த்திய குளிர் காட்சி. அதன் நடுவே அருவியில் நீர் சலசலக்கும் இசையின் மொழி ராகம். கவிதையாய் ஒலிக்கும் இனிய கச்சேரி நிகழ்த்தும் பறவைகளின் பங்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *