நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பாதுகாத்த இறைவன் எம்மையும் பாதுகாப்பான்

இன்று இலங்கையில் நாங்கள் அனைவரும் எமது மரணித்த உடல்களை புதைக்க வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியவர்களாக உள்ளோம்.

‘எமது உரிமைகள் அத்துமீறப்படுகின்றது’ என்ற உண்மைக்கு அப்பால் ‘எமது உடல்களை குறிவைத்து ஏதோவொரு விடயம் நடாத்தப்படுகின்றது’ என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இதற்கான தீர்வை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்று பல்வேறு தரப்பினரும் சிந்தனை செய்து வருகின்ற இச் சந்தர்ப்பத்திலே சட்ட ரீதியாக இந்த விடயம் அணுகப்பட வேண்டுமென்றும் அனூடாக எமக்கான தீர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டது.

அதன் பின்னர் அன்று தொடக்கம் இன்று வரை சட்ட ரீதியாக முயற்சிகள் எடுக்கப்பட்டு அவை அனைத்தும் எமக்கான ஒரு தோல்வியாகவே காணப்படுகின்றது.

இதன் பின்னர் நாங்கள் என்ன செய்வது ?

அல்லாஹ்விடத்தில் அதிகமாக எமது நெருக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதனூடாகவே எமது தேவைகளை நாம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற விடயத்தை யாராலும் மறுக்க முடியாது.

அதிகமாக துஆக்களில் ஈடுபாடு கொண்டவர்களாக மாற வேண்டும். அதிகமாக தான தர்மங்கள் செய்ய வேண்டும். அதேபோல் அதிகமாக இஸ்திஃபாரிலே ஈடுபட வேண்டும். மிக அதிகமாக பாவமன்னிப்புத் தேட கூடியவர்களாக நாம் மாற வேண்டும்.

இவ்வாறான விடயங்களை நாங்கள் அதிகமதிகமாக செய்யும் சந்தர்ப்பத்திலே அல்லாஹ்வின் உதவி எங்களை வந்தடையும். அதேபோல் எங்களுடைய கஷ்ட துன்பங்கள் எங்களை விட்டும் நீங்கி விடும். இதை தவிர்ந்த ஒரு விடயத்தின் மூலமாகவும் எங்களுடைய காரியங்களை சரிசெய்ய முடியாதென்பது நாம் அறிந்த உண்மையாகும்.

எங்களுக்கு முன் இருந்தவர்களும் சோதிக்கப்பட்டார்கள். அப்போது அவர்களும் இவ்வழிமுறையைத் தான் செய்து தமது வெற்றியை உறுதி செய்து கொண்டார்கள்.

நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இவ்வாறான சோதனை ஒன்றை தமது வாழ்க்கையில் எதிர் கொண்டார்கள். அப்போது அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது எமக்கான சிறந்த படிப்பினையாக காணப்படுகின்றது.

நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்ட போது அவர்களுக்கு என்ன நடந்தது?

ஒரு திருவிழா வந்த போது மக்கள் அனைவரும் ஊருக்கு வெளியே சென்று விட்டனர். அத்தருணத்தில் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சிலைகள் இருக்கும் இடத்திற்கு வந்து கோடாரியைக் கொண்டு அங்கிருந்த ஒரு பெரிய சிலையைத் தவிர்த்து மற்ற எல்லாச் சிலைகளையும் அடித்து உடைத்து நொறுக்கினார்கள். நடுவில் நின்ற பெரிய சிலையின் கழுத்தில் அந்தக் கோடாரியை மாட்டினார்கள். திருவிழா முடிந்து திரும்பி வந்த மக்கள் சிலைகள் உடைந்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தனர். நம் தெய்வங்களைப் பற்றி அவதூறாகப் பேசித் திரிந்த இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று உணர்ந்து அவரை அழைத்தார்கள்.

அவரிடம் “எங்கள் தெய்வங்களை உடைத்தது நீர் தானே?” என்று கேட்டார்கள். அவர் மிகவும் தன்மையாக “இந்தப் பெரிய சிலை கழுத்தில் தானே கோடாரியுள்ளது, அதுதான் உடைத்திருக்கக் கூடும். அந்தச் சிலையிடமே கேட்டுக் கொள்ளுங்கள்” என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தார்.

அவர்கள், அவர் சொல்ல வரும் விஷயத்தைப் புரிந்து கொண்டார்கள். “நாம்தான் இவற்றை தெய்வங்களாக நம்பி தவறு இழைத்துவிட்டோம்” என்று சிலர் சொன்னாலும் அவர்களால் நேரடியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை.

அவமானப்பட்டதை மறைக்கும் விதமாக, அதனைத் தவிர்ப்பதற்காக “சிலைகள் பேசாது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா?” என்று கேட்டனர்.

“ஓ! அப்படியானால் சிலைகள் பேசாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி எந்த நன்மையும் தீமையும் அளிக்காதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்? இவ்வாறு செய்வதன் மூலம் இறைவனுக்கு இணை வைக்கிறீர்கள். அது உங்களுக்குக் கேடுதான் என்று உணர்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய நாடினால் இவைகளை நெருப்பிலிட்டு எரியுங்கள்” என்று கூறினார்.

அவர் பேசியதை மக்கள் ஏற்க முடியாமல் அவர் மீது கோபம் கொண்டனர். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைத் தீர்த்துக் கட்ட முயற்சித்தான் நம்ரூத்.

இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவரை நெருப்புக் குண்டத்தில் தூக்கியெறிய வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். அப்படியான தண்டனை என்று கேட்டதும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்), தான் கூறியது தவறு என்று மன்னிப்புக் கேட்பார் என்று எதிர்பார்த்தார்கள்.

நெருப்புக் குண்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் குண்டுக்கட்டாகக் கட்டி நெருப்பில் தூக்கி எறிந்தார்கள். அவர்கள் தீயில் கருகி சாம்பலாகிவிடுவார், பொசுங்கியவுடன் அவர் பிரச்சாரம் செய்த விஷயங்களும் மறைந்துவிடும் என்று ஆவலுடன் நம்ரூத் எதிர்பார்த்தான். ஆனால் அங்கு காட்சி மாறியது. அல்லாஹ் அந்த நெருப்புக் குண்டத்தையே இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குக் குளிர்ச்சியாகவும் சுகமளிக்கக் கூடியதாகவும் மாற்றினான்.

“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்” என்று இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நெருப்பிலிருந்தபடி கூறினார்கள்.

இச்சமயத்தில் நம்ரூத் இறை நிராகரிப்பை விட்டுவிட எண்ணினான். ஆனால் அவனை ஏதோ தடுத்தது. நம்ரூத் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான். அவ்வாறே இவர்கள் ஸாரா, லூத் (அலைஹுமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்) ஆகியோருடன் வெளியேறினார்கள். அதன் பிறகு ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை பின்னாட்களில் மணம் முடித்துக் கொண்டார்கள். லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இறைவனின் கட்டளைப்படி வேறு நாட்டுக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் தம் மனைவி சாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடன் மிஸ்ர் நாட்டுக்கு சென்று அங்கு தங்கினார்கள்.

திருக்குர்ஆன்: 19:46, 2:130, 2:258, 21:58-69, 6:76-83 ஸஹிஹ் புகாரி 4564.

(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள். (குர்ஆன் 21:60-67)

இதன்காரணமாக அம் மக்கள் இவர்கள் மீது வெறுப்புக் கொள்ள, அதனைப் பயன்படுத்தி அவர்களைத் தீர்த்துக் கட்டவும் முயற்சித்தான் நம்ரூத்.

ஊருக்கு வெளியே நெருப்பு குண்டத்தை வளர்த்து ஓர் இயந்திரத்தின் உதவியால் இவர்களை அதன் நடுவே தூக்கி எறிந்தான். அவர்கள் தீயில் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்று நம்ரூத் எண்ணினான். ஆனால் அல்லாஹ் அந்த நெருப்புக் குண்டத்தை குளிர்ச்சியாக மாற்றி விட்டான். ஆனால் அவர்களைப் பிணைத்திருந்த கயிறு மட்டும் எரிந்து சாம்பலாகிவிட்டது.

قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். (குர்ஆன் 21:69)

இந்நெருப்பு குண்டம் 50 நாட்கள் எரிந்து அதில் அவர்கள் இருந்தார். நெருப்புக்குள் இருந்த நாட்களே தமக்கு இன்பத்தை அதிகம் தந்தது என்று இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இச்சமயத்தில் நம்ரூத் இறை நிராகரிப்பை விட்டுவிட எண்ணினான்.

அந்த நெருப்பை மூட்ட பல நாட்கள் விறகு சேமிக்கப்பட்டது. அந்தகாலத்தில் ஒரு பெண் நோய்வாய்ப்பட்டால் “நான் குணமானால் இப்ராஹீமை எறிக்க விறகை சுமப்பேன்” என்று நேர்ச்சை செய்வாளாம். இறுதியில் நெருப்பு கொழுந்துவிட்டெறிய ஆரம்பித்ததும் மிஞ்ஜனீக் எனும் கருவிமூலம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தூக்கி வீசினார்கள். நெருப்பில் தூக்கி எறியப்பட்ட இப்ரஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் எந்த சலனமுமில்லை, கவலையுமில்லை, பயமுமில்லை. ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் என்று அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அமைதியானார்கள். நெருப்பில் வீசப்பட்டபோது, “யா அல்லாஹ்!வானத்தில் வணங்கப்படுபவன் நீ ஒருவன் தான். பூமியில் உன்னை வணங்கும் நான் ஒருவன் தான்” என்று துஆச் செய்தார்கள் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகிறார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் காற்றில் தோன்றி “இப்ராஹீமே! உனக்கு ஏதேனும் தேவை உண்டா? நான் நிறைவேற்றுகிறேன்” என்ற போது உம்மிடம் “எனக்கு எந்த தேவையும் இல்லை, படைத்தவனிடம் தான்” என்று பதில் கூறியதாக நல்லோர்களில் சிலர் கூறுகின்றனர். இறுதியில், அந்த நெருப்பை சுகம் தரும் பூஞ்சோலையாக அல்லாஹ் மாற்றினான் என்பது நாமறிந்த உண்மைச் செய்தி. இந்த வரலாற்றின் மூலம் ஒரு செய்தி அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அது யாதெனில் அல்லாஹ்வுக்காக நாம் எந்தத் தியாகத்தை செய்தாலும் அதற்கு மிகச்சிறந்த பகரத்தை அல்லாஹ் தருவான். ஆடையின்றி நெருப்பில் வீசப்பட்ட இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குத்தான் நாளை மறுமையில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படும் என பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். மேலும் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நெருப்பில் போடப்பட்டபோது எல்லா உயிரினங்களும் நெருப்பை அணைக்க முயற்சித்தன. ஆனால் பல்லி மட்டும் அதை ஊதி அதிகப்படுத்தியது. ஆகவே பல்லியை பார்த்தால் கொல்லுங்கள் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (புகாரி)

தன் பொருளில் சோதிக்கப்பட்டார்கள்: அல்லாஹ்வுக்காக உடல் வணக்கம் செய்யும் பலர் பொருள் என்று வரும்போது பின்வாங்கிவிடுவர். இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அவர்களது வாழ்க்கை அமைந்தது.

தனது உடலை அல்லாஹ்வுக்காக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நபி இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு வர அல்லாஹ் அவர்களை எவ்வாறு பாதுகாத்தான்.

எனவே எறிந்த உடல்களையும் அல்லாஹ் நாடினால் அவனது சக்தியைக் கொண்டு அவர்களுக்கான மாற்றீட்டை வழங்கி அவர்களை மேலான சுவனத்தில் இடம் பிடிக்கச் செய்வான்.

அவனை மிகைத்த ஞானமிக்கவன் இவ்வுலகில் யாரும் இல்லை. அல்லாஹு அக்பர்.

NAFEES NALEER (IRFANI)

One Reply to “நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பாதுகாத்த இறைவன் எம்மையும் பாதுகாப்பான்”

Leave a Reply

Your email address will not be published.