இரு சமூகம் இணைவெழுச்சி – சாதகமா? பாதகமா?

  • 14

நீண்டகால இடைவேளைக்குப் பிறகு தமிழ் தரப்பினர் நடாத்திய ஒரு மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்களும் கணிசமான ஆதரவினை வழங்கியிருக்கின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஒரு முஸ்லிம்கட்சித் தலைவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இன்னுமொரு முஸ்லிம்கட்சித் தலைவர் இவ்விடயத்தில் மௌனம் சாதித்தது சற்று ஆச்சரியமாகவே இருந்தது. தூபி உடைப்பு விடயத்தில் நடந்த ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டுமென இரு கட்சித் தலைவர்களுமே வேண்டுகோள் விடுத்திருந்தனர். மட்டுமல்லாமல் தமிழர் விடயத்தில் எப்பொழுதும் ஒரு நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கும் அத்தலைவர் இப்போராட்டத்தில் மௌனம் காத்தது சிந்திக்க வைக்கின்றது.

சிலவேளை குடியுரிமை பறிக்கப்படுவது தொடர்பாக பேசப்படும் பெயர்ப்பட்டியலில் இவரது பெயரும் குறிப்பிடப்படுவதால் ஏற்பட்ட ஒரு அச்ச நிலையா? என்பது புரியவில்லை. அதுதான் உண்மையென்றால் முஸ்லிம் அரசியலில் இன்னுமொரு திருப்புமுனை காத்திருக்கின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

அது அவ்வாறிருக்க, குறித்த போராட்டத்திற்கு கணிசமான முஸ்லிம்கள் வழங்கிய ஆதரவை “ஜனாசாவை எரித்தால் என்ன? உயிரோடு எரித்தாலென்ன? நாம் அரசுக்கே ஆதரவு என்பவர்களும்”, ‘கையுயர்த்தியவர்களின்’ சில ஆதரவாளர்களும் விமர்சிக்கத் தயங்கவில்லை.

இவ்விமர்சனத்திற்கு இவர்கள் முன்வைக்கும் வாதமாக, கடந்தகால தமிழ்த்தரப்பினரின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள்; முஸ்லிம்களுக்கு முரணான தமிழ்த்தரப்பின் நிலைப்பாடுகள் (உதாரணமாக வட கிழக்கு இணைப்பு), தமிழ்த்தரப்பினர் முஸ்லிம்களை இச்சந்தர்ப்பத்தில் அரவணைக்கத் துடிப்பதில் உள்ள, உள்நோக்கம் என்று பல விடயங்களைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

இவர்களின் எஜமானர்கள் அரசுக்கு கையுயர்த்தாமல் இருந்திருந்தால் சிலவேளை இவர்களும் இவர்களின் எஜமானர்களும் இப்போராட்டத்தில் முக்கிய பங்குதாரியாக இருந்திருக்கலாம்; என்பது ஒரு புறம் இருக்க, இவர்கள் சுட்டிக்காட்டும் விடயங்களில் சில உண்மைகள் இல்லாமலில்லை.

வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பேரினவாதத்திடமிருந்து என்றால் வட கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சிற்றினவாதத்திடமிருந்தாகும்; என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

முஸ்லிம்களும் தமிழ்பேசும் சமூகத்தின் ஓர் அங்கம் எனத்தேவையானபோது கூறுகின்றவர்கள்; அதிகாரப்பகிர்வை முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும்; என எதிர்பார்ப்பவர்கள் கிழக்கில் ஓர் முஸ்லிம் ஆளுனரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அம்பாறையும் திருகோணமலையும் தமிழ்பேசும் மக்களைப் பொதுவாகவும் முஸ்லிம்களைக் குறிப்பாகவும் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக்கொண்ட மாவட்டங்களானபோதும் முஸ்லிம் அரச அதிபர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தென்கிழக்கில் கரையோர மாவட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; கல்முனையில் ஒரு சில தமிழர்கள் வாழ்கிறார்கள்; என்பதற்காக கல்முனை நகரத்தையே கூறுபோட கேட்பார்கள். முஸ்லிம்களையும் தமிழ்பேசும் சமூகத்தின் ஓர் அங்கமென அவர்கள் பேச்சளவில் கூறினாலும் நடைமுறையில் அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர்களின் மனோநிலைக்கு இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமேயாகும்.

இந்நிலையில் இப்போராட்டத்தில் முஸ்லிம்களின் இணைவு சரியா?

என்பதுதான் இவ்வாக்கத்தின் ஆய்வுப் புள்ளியாகும்.

தேசியக்கட்சிகளில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட விரக்திநிலைதான் தனித்துவக்கட்சிகள் உருவாகக் காரணம். ஆனால், தலைவரின் மரணத்தின்பின் அவைகளும் பெரும்பாலும் பிரயோசனமற்ற கட்சிகளாக மாறிவிட்டன; என்பதுதான் நம் அனுபவமாகும்.

தனித்துவக் கட்சிகளின் கையாலாகாத்தனம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட சந்தர்ப்பம்தான் நல்லாட்சி காலமாகும். வரலாற்றிலேயே, தனித்துவக்கட்சிகள் யதார்த்தத்தில் அதீத பலமாக இருந்த சந்தர்ப்பம்தான் நல்லாட்சிக் காலமாகும். ஆனால் முஸ்லிம்களின் ஏதாவதொரு பிரச்சினைக்கு இவர்களால் தீர்வுகாண முடிந்ததா?

இவர்களால் சமூகம் அடைந்த நன்மை என்ன?

திகன கலவரத்தின் சூத்திரதாரிகள் யாராக இருந்தபோதும் இவர்களின் பலத்தில் ஆட்சி செய்த நல்லாட்சி அரசாங்கம் ஐந்து நாட்களாகியும் கட்டுப்படுத்த முடியாமல் போனதேன்? இவர்கள் அந்த அரசில் குந்தியிருந்து எதைச் சாதித்தார்கள்?

இந்தப் பின்னணியில்தான் எரிப்புப் பிரச்சினையும் ஆராயப்பட வேண்டும். எதிர்க்கட்சியில் இரு முஸ்லிம் தலைவர்களையும் முதலில் எடுப்போம். இவர்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்; இந்த எரிப்புத் தொடர்பாக இவர்கள் இதய சுத்தியோடு செய்த போராட்டம் என்ன?

மருத்துவத்துறையைச் சேர்ந்த சர்வதேச, மற்றும் உள்நாட்டு நிபுணர்கள் அனைவரும் உறுதிப்படுத்திவிட்டார்கள்; “அடக்கம் செய்வதால் பாதிப்பெதுவுமில்லை என்று”. பிரதமர் கூறுகிறார் ‘அது முடிந்த விடயம்; எரிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை; என்று. மட்டுமல்ல, உலக சுகாதார ஸ்தாபனம் கூறியிருக்கிறதாம், ‘அடக்கலாம் அல்லது எரிக்கலாம்’ என்று; எனவே, எரிப்பதுதான் சிறந்தமுடிவு; என்று தீர்மானித்துவிட்டார்களாம்’.

இத்தனை விஞ்ஞானிகளும் மருத்துவ நிபுணர்களும் அடக்குவதில் பாதிப்பில்லை; என்று கூறியிருக்க, எந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் ‘எரிப்பதுதான் சிறந்தது’ என்று கூறுகின்றீர்கள்? என்றாவது ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தி கேட்டதலைவர் யார்? தேர்தல் வந்தால் மேடைகளில் எப்படி உரிமைக் கோசம் முழங்குவார்கள்!!! தேர்தலின்பின்? இது இவர்கள் நிலை

அடுத்த தரப்பினர்: தேர்தலின்போது தனித்துவம் என்றனர். உரிமைக் கோசம் எழுப்பினர். அந்தரங்கத்தில் கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்தனர். வெற்றிபெற்றனர். இப்பொழுது எங்கே அவர்கள். முழு அமைச்சோ, அரை அமைச்சோ எப்போது கிடைக்கும்; என இலவுகாத்த கிளியாய் காத்திருக்கின்றனர்.

அவர்களுக்கு எரித்தாலும் ஒன்றுதான்; அடக்கினாலும் ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்கள் போராடிவிடக்கூடாது; அதை அவர்களால் பொறுக்கமுடியாது.

இவர்களில் ஒருவர்: அவர் கிழக்குத்தலைவராம்; (மற்றவர்கள் தேசியத்தலைவர்கள்; கிழக்கிற்கு ஒரு தலைவர் இருந்தால் மற்றவர்கள் எவ்வாறு தேசியத் தலைவர்கள் ஆகமுடியும்? கிழக்கைக் கழித்துவிட்டு, வேண்டுமானால் ஏனைய பிரதேசங்களுக்கு முக்கால் தேசியத் தலைவர்களாக இருக்கலாம்)

அந்தக் கிழக்குத் தலைவர் கூறுகின்றார்; நீதிமன்றம் சென்றதும் பிழையாம்; சர்வதேசத்திடம் செல்வதும் பிழையாம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டுமாம். ஏன் இவர்கள் இதுவரை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவில்லை? பிரதமரே ‘அது முடிந்துபோன விடயம்’ என்று கதவை மூடிவிட்டார். இவர்கள், ‘இன்னும் பேசவேண்டுமாம்’ எப்பொழுது பேசப்போகிறீர்கள்? அடுத்த நூற்றாண்டிலா?

நீங்கள் பேசி நல்லடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுத் தந்திருந்தால் ஏன் முஸ்லிம்கள் தமிழர் போராட்டத்தில் இணையப்போகிறார்கள்? இவர்களுக்கு கொஞ்சமாவது ஈமானிய உணர்வு இருந்தால் இப்படிப் பேசுவார்களா? ‘அடக்கம் செய்வதென்பது பர்ளு கிபாயா? ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. ஒரு முஸ்லிமாவது அந்தக் கடமையை நிறைவேற்றிவிட்டால் ஏனையவர்களின் கடமை நீங்கிவிடுகிறது.

200 இற்குமேல் ஜனாசாக்கள் எரியூட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தனை மையத்துக்களையும் அடக்கம் செய்யாததற்காக நாம் மறுமையில் பதில் சொல்லவேண்டும். நமது சக்திக்கு அப்பாற்பட்டதனால் நமக்கு மன்னிப்புக் கிடைக்கலாம்; ஆனாலும் நமது சக்திக்குட்பட்ட வரையில் அந்த உரிமையைப் பெற்றுக்கொள்ள நாம் போராடினோமா?

போராடத்தான் முடியவில்லை. போராடுபவனையாவது விட்டுவிடாமல் போராடுவதே பிழை என்கிறீர்களே! உங்களுக்கு மறுமையைப்பற்றிய அச்சமே இல்லையா? இவர்களுக்கும் வாக்களிக்க, வக்காலத்துவாங்க ஒரு கூட்டம் இருக்கிறதே! நாளை மறுமையில் அவர்கள் நிலை எவ்வாறு இருக்குமோ!

மட்டுமல்ல, இன்று ஒரே நாடு, சட்டம் என்பது சிறுபான்மைகளின் தனியார் சட்டம் உட்பட அவர்களின் தனித்துவங்களை இலக்கு வைப்பதுதான்; என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த எரிப்புக்கூட, இந்த ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோட்பாட்டின் அடைப்படையில்தான்.

எங்களது சமய, கலாச்சாரத்தில் ‘எரிப்பது’ தடையல்ல. எனவே, அதுதான் உங்களுக்கும் சட்டம் என்கிறார்கள். உங்களது சமய, அடிப்படை உரிமை என்ற கதைக்கெல்லாம் இடம் கிடையாது. அது முடிந்த விடயம்; என்கிறார்கள். இந்த பேரறிஞர், ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை எல்லோரும் பிழையாக விளங்கிக் கொண்டார்களாம். ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமாம்.

இப்படியெல்லாம், சமூகம் எதை ஆபத்து என்கிறதோ அதை ஆதரித்துப்பேசுகின்றவர்களையும் இந்த சமூகம்தான் தெரிவுசெய்கிறது.

இந்தப் பின்னணியில் முஸ்லிம் சமூகம் தமது மரணித்த உறவுகளை (கொரோனாவினால்) அடக்கம் செய்யப்படுகின்ற உரிமைகூட மறுக்கப்பட்ட நிலையில் தமக்காக போராட தலைமைத்துவங்களும் இல்லாத நிலையில் அடுத்த சமூகம் தனது போராட்டத்தில் நமது உள்ளக்குமுறலையும் சேர்த்துக் குரல் கொடுக்கின்றார்கள். அந்தப் போராட்டத்தில் முஸ்லிம்கள் இணைந்துகொண்டது தவறா?

அவர்களது உரிமையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு நீங்கள் இப்படியெல்லாம் பேசினால் நியாயம். உங்களால் அவர்களின் அடிப்படை உரிமையைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாது. அவர்களுக்காக போராடவும் முடியாது. உங்களால் இந்த எரிப்புக்கெதிராக இப்படி ஒரு போராட்டத்தை வட கிழக்கிலாவது செய்யமுடிந்ததா?

இந்நிலையில் இன்னுமொரு சமூகம் தனக்காக ஒரு போராட்டத்தைச் செய்கிறது. அவர்களின் நோக்கம் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். நமது பிரச்சினையும் ஓங்கி ஒலிக்கும்போது அதற்கு ஆதரவு வழங்குவதைக்கூட உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; என்றால் நீங்கள் யார்?

எனவே,தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து ஒற்றுமையாக வாழமுடியுமானால் அதுவே சிறந்தது. அதற்கு மனமாற்றங்கள் தேவை. இந்த இணைவு அவ்வாறான மனமாற்றங்களைக் கொண்டுவருமா? என்பது தற்போது கூறமுடியாது. இந்த விடயத்தில் தமிழ்த்தரப்பிலேயே பிரதான மனமாற்றம் தேவை. தமிழர்களின் எந்த நிலைப்பாட்டையும் முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை; அதிகாரப்பகிர்வில் அவர்களது சில தனிப்பட்ட நிலைப்பாடுகளைத்தவிர. ஆனால் முஸ்லிம்களின் பல நிலைப்பாடுகளில் தமிழர் எதிர்ப்பு அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இருக்கிறது. அதற்கான ஒரு சில உதாரணங்கள்தான் மேலே கூறப்பட்டவை.

இவ்வாறான முரண்பாடுகள் பொதுவான போராட்டத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இன்று, இந்த ஆட்சியில் இரு சமூகங்களும் சில பொதுவான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. அவற்றிற்காக, ஜனநாயக வழியில் இரு சமூகங்களும் இணைந்துபோராடுவதில் தவறில்லை.

ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் முடியுமானால் முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவையுங்கள், அதன்பின் யாராவது போராடினால் உங்களால் தைரியமாக கேட்கமுடியும் எதற்காக போராடுகிறீர்கள்; என்று.

மாறாக, உரிமை இழந்த வலியில் உளலும் ஒரு சமூகத்தின் வலி தீர்க்க வக்கில்லை. சமூகமும் போராடக்கூடாதென்கிறீர்களே! அதுதான் வேதனையாக இருக்கிறது. எப்படிப்பட்ட மனம் உங்களுக்கு.

YLS Hameed

 

நீண்டகால இடைவேளைக்குப் பிறகு தமிழ் தரப்பினர் நடாத்திய ஒரு மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்களும் கணிசமான ஆதரவினை வழங்கியிருக்கின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஒரு முஸ்லிம்கட்சித் தலைவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். இன்னுமொரு…

நீண்டகால இடைவேளைக்குப் பிறகு தமிழ் தரப்பினர் நடாத்திய ஒரு மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முஸ்லிம்களும் கணிசமான ஆதரவினை வழங்கியிருக்கின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஒரு முஸ்லிம்கட்சித் தலைவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். இன்னுமொரு…

One thought on “இரு சமூகம் இணைவெழுச்சி – சாதகமா? பாதகமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *