சனிக்கிழமை ராத்தா

  • 12

அது ஒரு வரட்சிக்காலம் மண்ணுக்கு அல்ல; அவனுக்கு…..

வானில் உறங்கும் விண்மீனை அதிகம் அவன் ரசிப்பதுண்டு; அது போல் அவனும் ஒரு நாளாவது மிளிர வேண்டுமென்று…

அவன் தன் கடந்த கால நினைவோடு நிலவாய் தேயலானான்…

மெல்ல மெல்ல…..

அவனுக்கு சுமாராக பண்ணிரெண்டு வயது இருக்கும். இந்த விசித்திர உலகை வியந்த படியாய் பார்க்கும் பட்சியாய் திரிந்த நேரம்.

மற்றவர்களது தேவை இவனுக்கோ ஆசையாய் தென்பட்டது.

அவனது உலக புத்திக்கு கொஞ்சம் சிறகுகள் முளைக்காத காலமது.

அப்பொழுது நோன்பு பெருநாளை எதிர்பார்த்து சொற்ப நாட்கள் ஊர்ந்துகொண்டிருந்தது. பெருநாள் வருகை குசியுடன் அவன் தன் சகாக்களை தேடி பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள பசுமையே பொறாமை கொள்கின்ற புற்தரிசி நிலத்தில் கூடி பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களது பார்வை எதர்ச்சியாக இவன் கால் மீது பட, தன் கருமேனியை அம்பலப்படுத்தும் காற்சட்டை ஓட்டையை கையால் பொத்திய வண்ணம் பேசிக்கொண்டிருக்கின்றான். இருந்தும் முதன்முதலாய் இரு கைகள் தனக்கு போதாதென்று இறைவனிடம் முறையிடுகின்றான்…

சிலரது ஏளன முகப்பாவனையே அவனை எரிக்கக்கூடியதாக இருந்தது. அத்தோடு பல கதைகளை நேரம் தெரியாமல் பேசுகின்றனர்.(பட்டினியால் மடிந்த எறும்புதான் உண்டா) நோன்பு பெருநாளை எவ்வாறு கொண்டாடுவதை பற்றியும் மற்றும் தம் பெருநாள் உடைகளையும் பற்றியும் பேசி அங்கலாய்கின்றனர். இவன் மட்டும் அலையற்ற கடலாய் அமைதியானான். இவனது அமைதியின் இரகசியம் அவர்களுக்கோ பரகசியம் தான்.

அவ்வாறு இருக்கையில் ஆதவன் மறைய மஹ்ரீப் தொழுதுவிட்டு வீடு புகுகின்றான்; உம்மா என்ற தாரக மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே……

அவனது தாயையும் கொஞ்சம் விபரிக்க க தான் வேண்டும்.அவள் இன்பத்தின் பரம எதிரி; வசதி வாய்ப்பெல்லாம் அவளது வீட்டு படியேராத விருந்தாளி போல தான்… அவளோடு அதிகம் கஷ்டங்களும் நஷ்டங்களும் தான் இரத்தபந்தம் போல் உறவாடும்…

அவனும் வீட்டின் சூழ்நிலை தெரிந்து இலேசாக பேச்சை கொடுத்தான்; “உம்மா பெருநாள் வருதுமா புது உடுப்பு வாங்குரையா” என்று கேட்க தாய் மகனுக்காவது பெருநாள் வரட்டுமே என்பதற்காக தேற்றலானாள் “கொஞ்சம் சல்லி ஈக்கி, உனக்கு சனிக்கிழமை ராத்தாட காற்சட்டை மட்டும் வாங்கிதாரன்” என்றாள் இதயப்பூரிப்போடு..

அவனும் அதன் உண்மைதன்மையை புரிந்தவனாய் சந்தோஷத்தில் வானத்திலே பறக்க முயற்சி செய்கின்றான். அவள் சனிக்கிழமை ராத்தாவிடம் அந்நிய தொலைப்பேசி ஊடாக இச்செய்தியை பாய்ச்சினாள். சனிக்கிழமை ராத்தாவும் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தாள்.

பக்கத்து வீட்டு தொலைப்பேசியாக இருப்பதால்; அது அவளுக்கு தொ(ல்)லை பேசியாக காட்சியளிக்க, அடுத்த கணமே தன் மகனிடம் கொடுத்து அனுப்பினாள்.

அவனும் தாயும் சனிக்கிழமையை எதிர்பார்த்துக்கொண்டிருத்தனர். சனிக்கிழமை ராத்தா என்பவள் நகரத்தில் உடுப்புக்களை வாங்கி அருகில் உள்ள கிராமத்திற்கு போய் உடுப்பை விற்று வயிறு நிரப்பும் ஏழைவீட்டு பாவை அவள்.

இவனுக்கு தனக்கு இந்தமுறையாவது பெருநாளை நல்லப்படியாக கூட்டாளிகளுடன் கொண்டாட முடியும் என நம்பிக்கை மேலிட்டது.

இவன் அதே மாலைப்பொழுதில் தன் சகாக்களை கண்டு “சனிக்கிழமை ராத்தாட உடுப்பு எடுப்பன்டா.செம்மையா பெருநாளை கொண்டாடலாம். பெருநாளைக்கி நம்ம எங்கே எல்லாம் போவம்” என திட்டமிட ஆரம்பித்தான் மனகிளர்ச்சியின் புதுதெம்புடன்…

இவன் வழமைக்கு மாறாக சனிக்கிழமை தினத்தை ஒட்டி வழிமேல் விளிவைத்தான்….

இவனை போன்று யாரும் சனிக்கிழமையை நேசித்து இருக்க மாட்டார்கள் என்பது இவனது ஜதீகம். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை பெருநாள் மூழயிருந்தது.

இவன் “என்ன பூமிக்கு யாரும் செய்வினை செய்தார்களா? சனிக்கிழமை சீக்கிரம் வருவதாய் இல்லை ” என்று புலம்பினான்.

“எனக்கு நல்லது நடந்து விடக்கூடாது என்பதற்காக பூமி சுழல்வதை நிறுத்திக்கொண்டதா என பூமி மீதே சந்தேகம் கொண்டான்.

இவனுக்கு மட்டும் நாட்கள் நகர மறுப்பதாய் தோன்றியது. சனிக்கிழமையை தாமதிக்கும் ஒவ்வொரு நொடிகளிலும் அந்த நாளின் வருகையை நாடியே கனாக்கொண்டிருந்தான். நிலவு தன் முகம் காட்ட சில நாழிகைகளே இருக்கும் பட்ஷத்தில் சனிக்கிழமை ராத்தா இவர்களது வீட்டு கதவை தட்டிகொன்டு உள்ளே வருகின்றாள். இவனோ சனிக்கிழமை ராத்தாவை கண்டதும் வேற்றுகிரகத்திலிருந்து வந்த வேற்றுகிரகவாசி போன்ற நயப்புடன் வீடே அதிரும் படியாக “உம்மா” என்று அழைத்தான்…
தாயும் வர சனிக்கிழமை ராத்தா காற்சட்டையை காண்பிக்கின்றாள்.

தேர்ந்து எடுத்தல் எனும் வாய்ப்பு இவனுக்கோ ஆடம்பர செலவு போல தான். அந்த ஒரே காற்சட்டை இவன் கண்ணை கவ்வியது..அளவு சரியாக இருக்க தாய்க்கு பிடித்து போயிற்று.

இவன் “நீரைக்கண்ட பாலைவனத்து பறவை போல காற்சட்டையை உள்ளே எடுத்துக்கொண்டு உடுத்துகின்றான்.. வந்த வேலை இலகுவாக முடிந்து விட்டது என்று எண்ணி சனிக்கிழமை ராத்தா பணத்தை கேட்க “உங்களுக்கு சல்லி வைச்சன்,ஆனா அது அவசர சோலிக்கு செலவாயிட்டு; மறுகா அடுத்த வாரம் வாங்க தாரன்” என்றாள் திண்ணத்தோடு.

சனிக்கிழமை ராத்தா “இதெல்லாம் சரிபட்டு வரா,வரக்கல நெறைய பேரு காற்சட்டை நல்லா ஈக்கி தாங்க கூடயாச்சு சல்லி தாரோம் சொன்னாங்க.. ஆனா நான் கொடுக்கல “என்றாள்.

தாய் ” நீங்களே பாத்திங்க தானே; அவன் எவ்ளோ சந்தோசமா ஈக்கான். பாவம் அவன் உங்களுக்கு கட்டாயம் அடுத்த சனிக்கிழமை தந்துருவன்” என்றாள்..

ஆனால் அவள் மனம் இறங்குவதாய் இல்லை.. இறுதியாக அவளது வார்த்தையிலான மன்றாட்டம் தோற்றே போனது…

கனவுலகத்தில் மூழ்கிய இவனுக்கு தன் தாயின் கெஞ்சல் சொற்கள் சற்றென்று செவி துவாரத்தை அடைகின்றது… தாய்படும் வேதனையை பொறுக்க முடியாத அவன் முன்னே. வந்து “உம்மா இந்த காற்சட்டை எனக்கு பிடிக்கவில்லை” என்கிறான் தாயிடம் கனவின் கலைவோடு….

சேய் மனம் அறியா தாய் மனம் இல்லையே!!!

தாய் மெளனமாய் திகைத்தாள்…

அத்தோடு சனிக்கிழமை ராத்தா காற்சட்டையை வாங்கிக்கொண்டு விடைபெறுகின்றாள் சூரியனும் மறைக்கின்றது……

அன்று மறைந்தது சூரியனும் மட்டுமல்ல இவனது அவாவும் தான்……

இதன்பின் நடந்த அவனுக்கும் தாய்க்குமான பாஷை அற்ற விழிநீர் உரையாடலை விபரிக்க;

“பேனாத்துளியை விட: கண்ணீர் துளியே உகந்தது”

ஸரா அஹமட்

அது ஒரு வரட்சிக்காலம் மண்ணுக்கு அல்ல; அவனுக்கு….. வானில் உறங்கும் விண்மீனை அதிகம் அவன் ரசிப்பதுண்டு; அது போல் அவனும் ஒரு நாளாவது மிளிர வேண்டுமென்று… அவன் தன் கடந்த கால நினைவோடு நிலவாய்…

அது ஒரு வரட்சிக்காலம் மண்ணுக்கு அல்ல; அவனுக்கு….. வானில் உறங்கும் விண்மீனை அதிகம் அவன் ரசிப்பதுண்டு; அது போல் அவனும் ஒரு நாளாவது மிளிர வேண்டுமென்று… அவன் தன் கடந்த கால நினைவோடு நிலவாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *