உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரதி ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கியதால் சபையில் சர்ச்சை

  • 12

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரதி ஆங்கிலத்தில் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடிய போது, வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ஒழுங்குபிர்ச்சனையை முன்வைத்த ஆளுங்கட்சி உறுப்பினரான கவிந்து குமாரதுங்க, நீங்கள் வழங்கிய நீதிமன்ற தீர்ப்பு ஆங்கில மொழியில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னரும் 20 ஆவது  திருத்தம் மற்றும் துறைமுக நகரம் தொடர்பான தீர்ப்பின் பிரதியும் ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டது. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலாகும். இதற்கு முன்னர் இது தொடர்பில் அறிவித்துள்ளோம். தாய் மொழியில் பிரதியை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு கேட்கின்றோம் என்றார்.

இதன்போது பதிலளித்த சபாநாயகர், நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பை அவ்வாறே பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்குவதே வழமையாகும் என்றார்.

இதன்போது எழுந்த சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, இந்த விடயத்தில் ஏற்கனவே நீதி அமைச்சர் அறிவித்துள்ளார். வழமையாக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அவ்வாறே வழங்கப்படும். எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி நடவடிக்கையெடுப்போம் என்றார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே கூறுகையில், சட்டமூலம் ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்றுக்கு மத்தியில்  திருட்டுவழியில் நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றது. பெரும்பாலானவர்கள் சிங்கள மொழியையே பயன்படுத்துகின்றனர்.

இந்த சட்ட மூலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய விடயங்களும் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் மொழிகளில் வழங்குவதற்கு நிலையியல் கட்டளையில் ஏற்பாடுகள் உள்ளன. இப்படி இருக்கையில் தொற்று நிலைமையில் ஏன் வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றீர்கள். இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று கேட்கின்றேன்.

அதனைத்தொடர்ந்து எழுந்த  எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவிக்கையில், இந்த விடயங்களை தமிழ், சிங்களத்திலும் வழங்க வேண்டும். இந்த சட்டமூலத்தில் ஆபத்தான விடயங்களை அரசாங்கம் உள்ளடக்கியுள்ளது. திருட்டு வழியில் அதனை உள்ளடக்கியுள்ளது. மக்கள் அறிந்துகொள்ளவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமாறு கேட்கின்றேன் என்றார்.

இந்நிலையில், சட்டமூலம் மீதான விவாதத்தின் போது இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, இதுதொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்கள் மூன்று மொழிகளிலும் உள்ளன. ஆங்கில மொழியில் மட்டும் இல்லை என்பதை குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கூற விரும்புகிறேன்.

நீதிமன்றின் தீர்ப்பைதான் ஆங்கிலத்தில் சமர்ப்பித்துள்ளோம். இந்தச் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டுமென்றால் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரதி ஆங்கிலத்தில் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல்…

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரதி ஆங்கிலத்தில் மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல்…